விதை உற்பத்தியில் இறங்கினால் வருமானம் கூடும்!

விதை உற்பத்தி

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019

பெருகி வரும் மக்களின் உணவுத் தேவையை நிறைவு செய்ய, மகசூலைப் பன்மடங்கு பெருக்க வேண்டியுள்ளது. இதற்குத் தரமான விதைகள் தேவை. நல்ல விதைகளால் மட்டுமே 15-20 சத மகசூலைக் கூட்ட முடியும். இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு புறத்தூய்மை, வினையியல் திறன் எனப்படும் முளைப்புத் திறன், மரபுத் தூய்மையுள்ள வீரியமான விதைகளை நல்ல விதைகள் என்கிறோம்.

விதையின் புறத்தூய்மை என்பது, குறிப்பிட்ட பயிர் விதையைத் தவிர பிற பயிர் விதைகள், களை விதைகள், குப்பை, கூளம் இல்லாமல் தூய்மையாக இருப்பதாகும். வினையியல் திறன் எனப்படுவது, விதைக்கும் விதைகளில் முளைத்துத் தரமான செடிகளாக மாறும் விதைகளின் எண்ணிக்கையைக் குறிப்பதாகும். மரபுத்தூய்மை என்பது, விதைக்கும் விதைகளில் இருந்து உருவாகும் விதைகள், தங்கள் பெற்றோரின் குணங்களைக் கொண்டிருப்பது. விதை நலம் என்பது, பூச்சி, பூசணத் தாக்கமின்றி இருப்பதாகும். இத்தகைய தரமான விதைகளைப் பெற, விதைப்பயிர் உற்பத்தி அவசியமாகும்.

விதைகளின் தரவரிசை

விதை என்பது, கரு விதை, வல்லுநர் விதை, ஆதார விதை, சான்று விதையென நான்கு வகைப்படும். மேலும், உண்மை நிலை விதை என்பது, எவ்வித விதை அட்டையும் இல்லாமல் உற்பத்தியாளரின் ஒப்புதலோடு சந்தையில் விற்கப்படுவதாகும்.

கரு விதை உற்பத்தி

கரு விதை என்பது மூல விதையாகும். ஒரு இரகத்தை வெளியிட்ட ஆய்வாளர் அல்லது ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றும் அனுபவமிக்க ஆய்வாளரின் நேரடிக் கண்காணிப்பில் உருவாக்கப்படுவது. இதில், அந்த இரகத்தின் பாரம்பரியக் குணங்களைக் கொண்ட 500 செடிகளைத் தேர்வு செய்து, ஒரு கதிர் ஒரு வரிசை என்னும் முறையில் விதைத்து நடவு செய்வர். மேலும், சுத்தமான வரிசைத் தேர்வு, பாரம்பரியக் குணங்களைக் கொண்ட வரிசைகள் மற்றும் சமமான வளர்ச்சியுள்ள வரிசைகள் என, தனித்தனியாக அறுவடை செய்து, மணிகளின் தன்மைகளை ஆய்வகத்தில் அறிவர். இப்படிச் சுத்தமான வரிசைகளைத் தேர்ந்தெடுத்து ஒன்றாக்கி, வல்லுநர் விதை உற்பத்திக்குக் கொடுப்பார்கள்.

வல்லுநர் விதை உற்பத்தி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் விதை உற்பத்திக்கு எனச் சிறப்புத் துறை உள்ளது. இதன்கீழ், பயிர் மேம்பாட்டு ஆய்வாளர்களின் பார்வையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக ஆராய்ச்சி  நிலையங்கள் மற்றும் கல்லூரிகள் மூலம் வல்லுநர் விதை உற்பத்தி நடைபெறுகிறது. ஆடுதுறை 36, 37, 38, 39, 42, 43, 44, 45, 46, 47, 48, சி.ஆர்.1009, மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி ஆகிய நெல் வகைகளின் வல்லுநர் விதைகள், ஆடுதுறையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக நெல் ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் வெளியிடப்பட்டவை ஆகும்.

வல்லுநர் விதை உற்பத்திக் குறித்து, அதாவது, இரகம், சாகுபடிப் பரப்பு, விதைப்பு மற்றும் நடவுத் தேதி ஆகிய விவரங்களுடன், விதைச்சான்றுத் துறையில் முன்பதிவு செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து இவ்வயலை, பூக்கும் பருவம் மற்றும் அறுவடைக்கு முன், கண்காணிப்புக் குழுவினர் பார்வையிடுவார்கள். அப்போது, அந்த இரகத்தின் மரபுக் குணங்கள், பிறவகைச் செடிகள் மற்றும் கலவன்கள், தாமாக முளைத்த செடிகள், வயல் விதிமுறைகள் ஆகியவற்றைக் கணக்கிட்டு, மகசூல் மற்றும் வகை எண்ணை எழுதி, பயிர் இனத்தூய்மைச் சான்றைத் தருவார்கள்.

ஆதார விதை, சான்று விதை

இந்த வல்லுநர் விதையானது ஆதார விதை உற்பத்திக்காக, அரசு விதைப் பண்ணைகள், தேசிய விதை உற்பத்தி நிறுவனம், கூட்டுறவு மற்றும் தனியார் விதைப் பண்ணைகளுக்கு வழங்கப்படும். இந்த ஆதார விதையிலிருந்து சான்று விதையை உற்பத்தி செய்து, சாகுபடிக்காக வழங்குகின்றனர். இந்தச் சான்று விதையும், அரசு விதைப் பண்ணைகள், தேசிய விதை உற்பத்தி நிறுவனம், கூட்டுறவு மற்றும் தனியார் விதைப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. 

விதை உற்பத்தி உத்திகள்

பயிர் வளர்ச்சியில் மாற்றங்கள், புறத்தூய்மைக் கெடுதல், சடுதி மாற்றம், அயல் மகரந்தச் சேர்க்கை, நுண்ணிய மரபணு மாற்றம், பூச்சி அல்லது நோயின் தாக்கம் மற்றும் ஆய்வாளர் பயன்படுத்தும் தேர்வு முறை ஆகியன, இனத்தூய்மையைப் பாதிக்கும் காரணிகளாக உள்ளன.  

பயிர் விலகு தூரம்

விதைப்பயிர் மற்ற இரகப் பயிர்களிலிருந்து குறிப்பிட்ட தூரத்தில் தள்ளியிருக்க வேண்டும். இதையே பயிர் விலகு தூரம் என்கிறோம். இது, பயிர்களின் மகரந்தச் சேர்க்கை, மகரந்தத்தூளின் எடை, காற்றால் மகரந்தத்தூள் எடுத்துச் செல்லப்படும் தூரம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். இப்படி ஒரே பயிரின் இருவேறு இரகங்களை, குறிப்பிட்ட தூரத்தில் தனியாகப் பயிரிட்டால் தான், விதை உற்பத்தியில் விதைகளின் இனத்தூய்மையை உறுதி செய்ய முடியும்.

பயிர் விலகு தூரம், தன் மகரந்தச் சேர்க்கைப் பயிர்களுக்கு 3-5 மீட்டரும், அயல் மகரந்தச் சேர்க்கைப் பயிர்களுக்கு 200-400 மீட்டரும் இருக்க வேண்டும். பயிர் விலகு தூரத்தைக் கையாள முடியாத நிலையில், விதைப்பயிர் சாகுபடிக்கும், பக்கத்தில் உள்ள பயிர் சாகுபடிக்குமான கால இடைவெளி 25 நாட்கள் இருக்க வேண்டும்.

கலவன்களைக் களைதல்

விதைப்பயிர் சாகுபடியில் எல்லாச் செடிகளும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இதனால், செடிகளில் பூப்பதும் காய்ப்பதும் சீராக நிகழும். விதை உற்பத்திச் செடிகளின் குணங்களில் இருந்து மாறுபட்ட செடிகள், பிற வகைச் செடிகள் கலவன்கள் ஆகும். இவற்றால் விதைப்பயிரின் இனத்தூய்மை பாதிக்கப்படும் என்பதால், செடிகள் பூப்பதற்கு முன், பூக்கும் போது, காய்க்கும் போது மற்றும் அறுவடைக்கு முன், இந்த மாறுபட்ட செடிகளை நீக்க வேண்டும். இதனால் தரமான விதைகள் கிடைக்கும்.

சரியான நேரத்தில் கலவனை அகற்றுதல் விதை உற்பத்தியில் மிகவும் முக்கியம். வளர்ச்சிப் பருவத்தில் அழிக்காத கலவன்களை, பூக்கும் பருவத்தில் அழிக்க வேண்டும். விதைகள் மூலம் பரவும் நோயுள்ள செடிகளை, பூசண வித்துகள் மற்ற செடிகளுக்குப் பரவாத வகையில் கவனமாக அகற்ற வேண்டும். தப்பும் கலவன்களை, பயிர்களின் முதிர்ச்சிப் பருவத்தில் அகற்ற வேண்டும்.

சேமிப்பு

உற்பத்தி செய்த விதைகளை உடனே விற்க முடியாத நிலையில் சேமித்து வைக்கலாம். விதை உற்பத்தியில் இருக்கும் கவனம், அதைச் சேமிப்பதிலும் இருக்க வேண்டும். விதைகளை நன்கு உலர்த்திய பின், ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் வீதம் பெவிஸ்டினைக் கலந்து, துணிப்பை அல்லது சாக்குப் பைகளில் சேமித்தால், விதையின் வீரியமும் முளைப்புத் திறனும் நெடுநாட்களுக்கு இருக்கும்.

சேமிக்கும் இடத்தில் பூச்சி, பூசணத் தாக்குதல் இருக்கக் கூடாது. விதை மூட்டைகளை வெறும் தரையில் அல்லது சுவரில்  சாய்த்து வைத்தால் அங்குள்ள ஈரப்பதம், விதைகளில் பரவிப் பாதிப்பை உண்டாக்கும். இதைத் தவிர்க்க, மரக்கட்டைகளின் மேல் விதை மூட்டைகளை அடுக்கி வைக்க வேண்டும். 


விதை உற்பத்தி BHARATHI.A e1614978922666

முனைவர் அ.பாரதி,

முனைவர் ஆ.கார்த்திகேயன், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், 

பட்டுக்கோட்டை, தஞ்சை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!