கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2017
பார்த்தீனியச் செடிகள் விவசாயத்துக்குப் பெரும் பிரச்சனையாக உள்ளன. நிலங்களில் வளரும் இந்தச் செடிகள் 40% வரை சாகுபடிப் பரப்பைக் குறைக்கின்றன. தக்காளி, பீன்ஸ், கத்தரி போன்ற பயிர்களில் பூக்கும் தன்மை குறையக் காரணமாக இருக்கின்றன. அமெரிக்காவில் இருந்து கோதுமையை இறக்குமதி செய்யும்போது அதனுடன் கலந்து நம் நாட்டுக்கு வந்துவிட்ட இந்தப் பார்த்தீனிய விதைகள் முளைத்து விட்டால் மிக வேகமாக வளரும். இரண்டு மீட்டர் உயரம் வரை வளரும் இந்தச் செடிகள் உடலில் பட்டால், தோல்நோய், ஒவ்வாமை, ஆஸ்துமா போன்றவற்றையும் உண்டாக்கும்.
இந்தச் செடிகள் ஓரிடத்தில் வளர்ந்து விட்டால் அந்த இடத்தில் வளர்ந்த மற்ற செடிகளெல்லாம் சில நாட்களில் மடிந்து விடும். ஒரு பார்த்தீனியச் செடியில் 5,000 முதல் 25,000 விதைகள் வரையில் உற்பத்தியாகும். எனவே, இவற்றைக் கட்டுப்படுத்தா விட்டால் பல்கிப் பெருகிப் பல்வேறு சிக்கல்களை உருவாக்கும்.
கட்டுப்படுத்துதல்
பார்த்தீனியச் செடிகள் பூப்பதற்கு முன்பு, கையில் உறைகளை அணிந்து கொண்டு வேருடன் பிடுங்கி எரித்துவிட வேண்டும். இவை அதிகமாக வளரும் இடங்களில், ஆவாரை, அடர் ஆவாரை, துத்தி, நாய்வேளை போன்ற செடிகளை வளர்க்கலாம். செவ்வந்தியைச் சுழற்சி முறையில் பயிரிடலாம். மேய்ச்சல் நிலங்களில் இயற்கையாக வளரும் தாவரங்களை ஊக்கப்படுத்தலாம். ஒரு லிட்டர் நீருக்கு 200 கிராம், 2 மில்லி டீப்பால் என்னுமளவிலான கலவையைத் தயாரித்து, நல்ல வெய்யில் நேரத்தில் பார்த்தீனியச் செடிகள் நன்கு நனையும்படி கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.
கிளைபோசேட் (1-1.5) அல்லது 2,4,டி (1.5%) அல்லது மேட்ரிபூசின் (0.3-0.5%) களைக்கொல்லியை, செடிகள் முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும். பார்த்தீனியச் செடிகளைத் தின்று அழிக்கும் சைக்கோகிராமா பைக்கலரேட்டா என்னும் மெக்சிகன் வண்டுகளை விடலாம். பத்துப் பதினைந்து நாட்களில் வளரும் இந்தப் பூச்சிகள், பார்த்தீனிய இலைகளைக் கடித்து உண்டு அழித்து விடும்.
உரமாக்குதல்
கடினமான தரையாக இருக்கும் இடத்தில் மூன்றடி ஆழத்தில் 6க்கு 10 அடி குழியை எடுக்க வேண்டும். அதில் 50-100 கிலோ பார்த்தீனியச் செடிகளைப் பரப்ப வேண்டும். அதன்மேல் 50 கிராம் டிரைக்கோடெர்மா விரிடியைத் தூவ வேண்டும். அடுத்து ஓரடி உயரத்துக்குப் பார்த்தீனியச் செடிகளைப் பரப்ப வேண்டும். அதன்மேல் சாணத்தைப் பூசி வைத்து விட்டால், அந்தச் செடிகள் 4-5 மாதங்களில் நன்கு மட்கிய உரமாக மாறிவிடும். 100 கிலோ பார்த்தீனியச் செடிகளில் இருந்து 37-45 கிலோ உரம் கிடைக்கும்.
முனைவர் காயத்ரி சுப்பையா,
முனைவர் மா.விமலாராணி, முனைவர் க.வேல்முருகன், வேளாண்மை அறிவியல் நிலையம்,
காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்.