கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020
சிறு தானியங்கள் உலகின் தலைசிறந்த உணவுப் பொருள்களாகும். இவற்றில் இதயத்தைக் காக்கும் பண்புகள் நிறைந்துள்ளன. இவற்றிலுள்ள கரையாத நார்ச்சத்து இதயப் பாதுகாப்புக்கு ஏற்றதாகும். உடல் திசுக்களைப் புதுப்பிக்கும் திறன் சிறுதானியங்களில் உண்டு.
சிறு தானியங்களில் மிகவும் குறைந்த நாட்களில், அதாவது, 70-75 நாட்களில் விளைவது பனிவரகு. சிறு தானியங்களில் ஓரளவு பெரிய தானிய மணிகளைக் கொண்டது. இப்பயிர், பனி ஈரத்திலேயே விளைந்து விடும் என்பதால், இப்பெயரைப் பெற்றுள்ளது. மிகக் குறைந்த மழையில் முழுதாக விளைந்து பயன் தருவது பனிவரகு மட்டுமே. விதைப்புக்கு மட்டும் ஈரம் இருந்தால் போதும். மீதமுள்ள நாட்களில் பனி ஈரத்திலேயே விளைந்து விடும். காலநிலை மாற்றத்தால் மழையளவு குறைந்துள்ள சூழலில், சாகுபடிக்கு ஏற்றது பனிவரகு. மேலும், இது புரதம் மிகுந்த சிறுதானியமாக இருப்பதால், சத்துக்குறையைச் சரி செய்யவும் உதவும்.
நூறு கிராம் பனிவரகு அரிசியில், புரதம் 12.5 கிராம், கொழுப்பு 1.1 கிராம், நார்ச்சத்து 2.2 கிராம், இரும்புச்சத்து 0.8 மி.கி., சுண்ணாம்பு 14.0 மி.கி., தாதுப்புகள் 1.9 கிராம் உள்ளன.
இரகங்கள்
பனிவரகில், வறட்சியைத் தாங்கி வளர்ந்து அதிக மகசூலைத் தரக்கூடிய பல இரகங்கள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தால் வெளியிட்டப்படுள்ளன.
அத்தியந்தல் 1
இந்த இரகமானது, வறட்சியைத் தாங்கி நன்கு வளரும். 70-75 நாட்களில் விளைந்து விடும். அதிக தூர்களைத் தரும். சாயாத, திடமான தண்டு, பருமனான பொன்னிற விதைகளைத் தரும். சத்தான தானியத்தையும், சுவையான தட்டையையும் தரும்.
காலநிலை மற்றும் பருவம்
வெப்ப மற்றும் மிதவெப்பப் பகுதிகளில் பயிரிடச் சிறந்தது. வடகிழக்கு மற்றும் தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் விதைக்கலாம். சராசரி மழையளவு 450-500 மி.மீ. உள்ள இடங்கள் மிகவும் ஏற்றவை. தமிழகத்தில், மானாவாரியாக, ஜூலை, ஆகஸ்ட்டில் வரும் ஆடிப்பட்டம் மற்றும் செப்டம்பர் அக்டோபரில் வரும் புரட்டாசிப் பட்டத்திலும் விதைக்கலாம். பாசன வசதியிருந்தால் அனைத்துப் பட்டங்களிலும் பயிரிடலாம்.
கோடையுழவு
கோடை மழையைப் பயன்படுத்திப் பயிர் அறுவடைக்குப் பின்பு, சட்டிக் கலப்பையால் நிலத்தை ஆழமாக உழ வேண்டும். பிறகு, இரண்டு முறை மரக்கலப்பையால் உழ வேண்டும். இதனால், மண்ணரிப்பைத் தடுத்து, மழைநீரைச் சேமிப்பதுடன், கோடை மழையில் முளைக்கும் களைகள், பூச்சிகள் மற்றும் நோய்களையும் கட்டுப்படுத்தலாம்.
நிலத் தயாரிப்பும் விதைப்பும்
உளிக்கலப்பை அல்லது சட்டிக்கலப்பையால் நிலத்தைப் புழுதி புரள ஆழமாக 2-3 முறை உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன், எக்டருக்கு 12.5 டன் மட்கிய தொழுவுரத்தைச் சீராக இட வேண்டும். பிறகு, மானாவாரியாக, ஆடி மற்றும் புரட்டாசிப் பட்டத்தில், கோ (ப.வ.) 5, அத்தியந்தல் 1 ஆகிய இரகங்களையும், ஜனவரி பிப்ரவரியில் வரும் தைப்பட்டத்தில் இறவையாக, கோ (ப.வ.) 5, அத்தியந்தல் 1 ஆகிய இரகங்களையும் விதைக்கலாம்.
சதுர மீட்டருக்கு 33 பயிர்கள் வருமளவில் வரிசைக்கு வரிசை 30 செ.மீ., பயிருக்குப் பயிர் 10 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும். இவ்வகையில், வரிசையில் விதைக்க எக்டருக்கு 10 கிலோ விதையும், சாதா விதைப்புக்கு 12.5 கிலோ விதையும் தேவைப்படும்.
விதை நேர்த்தி
விதை மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த, விதை நேர்த்தி செய்வது அவசியம். அதனால், முதலில் உயிரியல் விதைநேர்த்தி செய்ய, ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி வீதம் எடுத்து விதைகளைக் கலந்து 24 மணிநேரம் வைக்க வேண்டும். பிறகு, மூன்று பொட்டலம் அசோஸ்பைரில்லம், மூன்று பொட்டலம் பாஸ்போபாக்டீரியா கலந்த அரிசிக்கஞ்சிக் கலவையில் இந்த விதைகளைக் கலந்து அரைமணி நேரம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.
ஊடுபயிர்
தமிழகத்தில் தனிப்பயிராகவே பனிவரகு பயிரிடப்படுகிறது. உறுதியான விளைச்சல், அதிக இலாபம் மற்றும் மண்வளத்தைக் காக்க, ஊடுபயிர் இடுதல் அவசியம். பனிவரகில் ஊடுபயிராக, துவரை, அவரை, பேயெள், சோளம், கடுகு ஆகியவற்றில் ஒன்றை, எட்டு வரிசைப் பனிவரகுக்கு இரண்டு வரிசை ஊடுபயிர் வீதம் பயிரிடலாம்.
உர நிர்வாகம்
மண்ணாய்வு முடிவுக்கு ஏற்ப உரமிட வேண்டும். இது இயலாத நிலையில், எக்டருக்கு, 44:22:0 கிலோ தழை மற்றும் மணிச்சத்தை இட வேண்டும். இதற்கு, 48 கிலோ யூரியாவும், 138 கிலோ சூப்பர் பாஸ்பேட்டும் தேவைப்படும். இவற்றில், மணிச்சத்தான சூப்பர் பாஸ்பேட் முழுவதையும் அடியுரமாக இட வேண்டும். தழைச்சத்தான யூரியாவில் பாதியை அடியுரமாகவும், மீதியை, 30-45 நாட்களில் ஈரப்பதம் இருக்கும் போது மேலுரமாகவும் இட வேண்டும். மேலும், நுண்ணூட்டக் குறைகளைத் தவிர்க்க, எக்டருக்கு 12.5 கிலோ சிறுதானிய நுண்ணூட்டக் கலவையை, 50 கிலோ மணலுடன் கலந்து அடியுரமாக இட வேண்டும்.
பயிர்களைக் களைதல் மற்றும் களை நிர்வாகம்
விதைத்த 12-15 நாட்களில் நல்ல ஈரம் இருக்கும் போது, அதிகமாக உள்ள பயிர்களை எடுத்து, பயிர்கள் இல்லாத இடங்களில் நட்டு, பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும். விதைத்த 15 மற்றும் 30-35 நாட்களில் இரண்டு முறை கையினால் களைகளை அகற்ற வேண்டும். வரிசை விதைப்பில் களையெடுப்பான் மூலம் இருமுறை களைகளை அகற்ற வேண்டும்.
பயிர்ப் பாதுகாப்பு
குருத்து ஈ: இது 1-5 இலைகளுள்ள நாற்றுப் பருவப் பயிர்களைத் தாக்கும். இப்பூச்சி, கம்பு, சாமை, தினை மற்றும் வரகையும் தாக்கும். இது 19 நாட்கள் வாழும். இப்பூச்சியின் முட்டை, அரிசியைப் போல வெள்ளையாக, தட்டையாக இருக்கும். அந்துப்பூச்சி, காலை அல்லது மாலையில் முட்டைகளை இடும். தண்டின் அடியில் 2-3 முட்டைகளை 1-2 வரிசையாக இடும். இம்முட்டைகளில் இருந்து வரும் புழுக்கள் வெள்ளைப் புழுக்கள், தண்டைத் துளைத்துத் திசுக்களை உண்பதால் நடுக்குருத்துக் காய்ந்து விடும். கூட்டுப்புழுக்கள் பயிரின் அடிப்பாகத்தில் உருவாகும். இதிலிருந்து வெளிவரும் பூச்சி, அழுக்குச் சாம்பல் நிறத்தில் இருக்கும்.
தாக்குதல் அறிகுறி: புழுக்கள் தண்டுகளைத் துளைத்து உட்சென்று உண்பதால் நடுக்குருத்துக் காய்ந்து விடும். தாக்கப்பட்ட பயிர்களில் அதிகளவில் பக்கத் தூர்கள் உருவாகும்.
கட்டுப்படுத்துதல்: சரியான பருவங்களில் முன்பட்ட விதைப்பை மேற்கொள்ள வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் இமிடாகுளோபிரிட் 70 WS வீதம் எடுத்து நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை விதைக்க வேண்டும். முன்பட்டப் பயிர்க் கழிவுகளை நன்கு உழுது மட்க வைக்க வேண்டும்.
அறுவடை
நன்கு முற்றிக் காய்ந்த கதிர்களை அறுவடை செய்ய வேண்டும். பின்பு, களத்தில் காய வைத்து அடித்து விதைகளைப் பிரித்தெடுக்க வேண்டும். சிறந்த இரகம் மற்றும் சீரிய சாகுபடி மூலம் எக்டருக்கு 2150-2400 கிலோ தானியமும், 5500-5900 கிலோ தட்டையும் கிடைக்கும்.
சேமிப்பு
இதைத் தானியமாகப் பயன்படுத்த, ஈரப்பதம் 10-12% இருக்கும்படி காய வைத்துச் சாக்குப்பைகளில் சேமிக்கலாம். விதைக்காகச் சேமிக்க, 100 கிலோ விதைக்கு ஒரு கிலோ ஆக்டிவேட்டடு கயோலினைக் கலந்து வைக்க வேண்டும்.
மேலும் தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், சிறுதானிய மகத்துவ மையம், அத்தியந்தல், திருவண்ணாமலை மாவட்டம், தொலைபேசி: 04175-298011.
முனைவர் கி.ஆனந்தி,
முனைவர் அ.நிர்மலாகுமாரி, முனைவர் மா.ராஜேஷ், முனைவர் கு.சத்யா, முனைவர் க.சிவகாமி,
சிறுதானிய மகத்துவ மையம், அத்தியந்தல், திருவண்ணாமலை மாவட்டம்.