கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019
இன்றைய நவீன வேளாண்மையில் இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு மிகுதியாக உள்ளது. இதனால், உணவில் நச்சுத்தன்மை, சுற்றுச்சூழல் மற்றும் மண்வளப் பாதிப்பு போன்ற தீமைகள் விளைகின்றன. எனவே, பூச்சிகளைக் கட்டுப்படுத்த, ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு உத்திகள் கையாளப்படுகின்றன.
வேளாண்மையில் பூச்சிக் கட்டுப்பாடு மிக முக்கியமாகும். ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, விளக்குப்பொறி தொன்று தொட்டுப் பயன்படுகிறது. ஒளியின் மூலம் பூச்சிகளைக் கவர்ந்து பொறியின் அடியிலுள்ள பூச்சிக்கொல்லிக் கரைசலில் விழச்செய்து அழிப்பதே விளக்குப்பொறி. வயலில் பூச்சிகளின் நடமாட்டத்தை அறியவும், அவற்றைக் குறைக்கவும் விளக்குப்பொறி பயன்படுகிறது.
சாதாரண விளக்குப் பொறியில் உள்ள சிக்கல்கள்
சாதாரண விளக்குப் பொறியை நிலத்தில் வைப்பதில் பல சிரமங்கள் உள்ளன. இதை இயக்க, மின்சாரம் அல்லது எரிபொருள் தேவை. இரவு முழுவதும் விளக்குப்பொறி எரிவதால் நன்மை செய்யும் பூச்சிகளும் இதனால் அழியும். மாலை மற்றும் முன்னிரவில் தான் தீமை செய்யும் பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். அப்போது மின்சாரம் இல்லையெனில் விளக்குப்பொறி செயல்படாது. எனவே, பொறியின் முழுப்பயன் கிடைக்காது. இதற்கு மாற்றாக, தீமை செய்யும் பூச்சிகளை மிகுதியாகக் கவரும் சூரிய விளக்குப்பொறி அமைக்கப்பட்டுள்ளது.
சூரிய விளக்குப் பொறியின் சிறப்புகள்
இதில் புற ஊதா ஒளித் தொழில் நுட்பம் பயன்படுகிறது. விளக்குப் பொறியில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர் எனப்படும் நுண் கட்டுப்படுத்தி இருள் சூழும் மாலை நேரத்தில் செயல்படத் தொடங்கி 4-5 மணி நேரத்தில் தானாகவே நின்று விடும். விளக்குப் பொறியில் நல்ல ஒளியைத் தரும் எல்ஈடி விளக்குத் தொழில் நுட்பம் உள்ளதால், நீண்ட தொலைவிலும் உள்ள தாய் அந்துப் பூச்சிகள் கவர்ந்து அழிக்கப்படும். இதைத் தேவையான இடத்துக்கு மாற்றிக் கொள்ள முடியும்.
சூரிய விளக்குப் பொறியின் நன்மைகள்
பூச்சிகள் சிறந்த முறையில் கட்டுப்படுத்தப்படும். இதன் மூலம், இலைப்பேன், வெள்ளை ஈ, தத்துப்பூச்சி, காய்த் துளைப்பான், நெல் தண்டுத் துளைப்பான், இலைச்சுருட்டுப்புழு தாய் அந்துப்பூச்சி, பழ ஈ மற்றும் பலவகை வண்டுகள் கவர்ந்து அழிக்கப்படும். ஒரு தாய் அந்துப்பூச்சியை அழிப்பதன் மூலம் 300க்கும் மேற்பட்ட புழுக்கள் பிறப்பது தடுக்கப்படும். இது தானாக இயங்கி 4-5 மணி நேரத்தில் நின்று விடுவதால், நன்மை செய்யும் பூச்சிகள் நிலத்தில் கூடும். மகரந்தச் சேர்க்கையும் சிறப்பாக நடக்கும்.
சூரிய விளக்குப் பொறியை இயக்க, மின்சாரமோ மனிதனோ தேவையில்லை. தேவைப்படும் இடத்துக்கு எளிதாக மாற்றலாம். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும். இதன் மூலம் நாளொன்றுக்கு 20-50 பட்டாம் பூச்சிகள், நூற்றுக்கும் மேற்பட்ட இலைப்பேன்கள், தத்துப்பூச்சிகள் மற்றும் பல்வேறு வண்டுகள் அழிக்கப்படும். நெல், கரும்பு, நிலக்கடலை, அனைத்துக் காய்கறிப் பயிர்கள், தோட்டக்கலைப் பயிர்கள், எண்ணெய் வித்துப் பயிர்கள் உள்ள நிலங்களில் வைத்து எளிய முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
ப.நாராயணன்,
தொழில் நுட்ப வல்லுநர், வேளாண்மை அறிவியல் நிலையம்,
கீழ்நெல்லி, திருவண்ணாமலை மாவட்டம்.