மாமரம் வளர்ப்பில் இத்தனை விஷயங்களா?

மாமரம் grow mang from seed getty 0723 aebdd875c4e141e2b5183f8f4bccda55

கட்டுரை வெளியான இதழ்: மே 2020

ம் நாட்டில் சுமார் நான்காயிரம் ஆண்டுகளாக மா சாகுபடி நடந்து வருகிறது. வெப்பப் பகுதிகளில் விளையும் மாவின் தாயகம், இந்தியா, பர்மா மற்றும் பிலப்பைன்ஸ் எனக் கருதப்படுகிறது. பழங்களின் அரசனான மா, தமிழ் இலக்கியத்தில் கூறப்படும் முக்கனிகளில் முதலிடத்தை வகிக்கிறது. உலகின் மொத்த மா உற்பத்தியில் 65% வரை நம் நாட்டில் விளைகிறது.

தமிழ்நாட்டில் சுமார் 1,30,000 எக்டரில் உள்ள மா சாகுபடி மூலம், சுமார் 6,73,000 டன் பழங்கள் கிடைக்கின்றன. அதாவது, எக்டருக்கு 5.18 டன் பழங்கள் விளைகின்றன. தமிழகத்தில் பெரும்பாலும் தர்மபுரி, சேலம், மதுரை, தேனி, திண்டுக்கல், வேலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் மா உள்ளது.

மண் மற்றும் தட்பவெப்பம்

வெப்ப, மிதவெப்பப் பகுதிகளில் கடல் மட்டத்திலிருந்து 1,400 மீட்டர் உயரம் வரை நன்கு வளரும். வெப்பநிலை 21-27 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டும். பூக்கும் போது பனியோ, மழையோ, மூடுபனியோ கூடுதலாக இருந்தால், பூ உதிர்தல், காய்கள் கறுப்பாக மாறுதல், பூச்சி, பூசண நோய்கள் தாக்குதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். மாமரங்கள் நன்கு பூக்க, வறண்ட ஈரப்பதம், இரவில் வெப்பநிலை இருக்க வேண்டும். பிஞ்சு விட்டுக் காயாகும் போது, வெப்பநிலை அதிகமாக இருந்தால், பிஞ்சுகள் கருகும்; காய்கள் வெம்பிப் போகும். ஆண்டு மழையளவு 400 மி.மீ.க்குக் குறையாமல் உள்ள பகுதிகளில் நன்கு வளரும்.

நிலத்தின் கார அமிலத் தன்மை 5.5-7.8 இருத்தல் நல்லது. மண்கண்டம் குறைந்தது 6 அடியும் நல்ல வடிகால் வசதியும் இருக்க வேண்டும். அதிக உவரும், சுண்ணாம்பும் உள்ள நிலம், வேகமாகக் காற்றடிக்கும் பகுதிகளில் மா சாகுபடியைத் தவிர்க்க வேண்டும்.

இரகங்கள்

மா வகைகள் நூற்றுக்கணக்கில் இருப்பினும் 15-20 வகைகளே அதிகளவில் சாகுபடியில் உள்ளன. இவற்றில், செந்தூரம், சுவர்ணரேகா, அல்போன்சோ ஆகியன முன்பருவ இரகங்கள். பங்கனப்பள்ளி, நடுசாலை, இமாம்பசந்த், மல்கோவா, ஜகாங்கீர், சின்ன சுவர்ணரேகா, கேசர், சேலம் பெங்களூரா ஆகியன மத்திய பருவ இரகங்கள். பெரியகுளம் 1, 2, இரத்னா, அம்ரப்பாலி, மஞ்சீரா, அர்க்கா அருணா, அர்க்கா புனீத், அர்க்கா நீல்கிரண், சிந்து, நீலேசான், மல்லிகா ஆகியன வீரிய ஒட்டு இரகங்கள்.

இனப்பெருக்கம் 

முன்பு, விதை நாற்றுகள் மூலம் இனப்பெருக்கம் நடந்தது. இப்படி உருவான மரங்களில் தாய் மரத்தின் குணங்கள் மிகக் குறைவாக இருந்தன. அதாவது, தாய் மரத்தைப் போல நன்கு விளையும் என்னும் நம்பிக்கையில் பல்லாண்டுகள் வளர்த்த நிலையில், விளைச்சல் கடுமையாகக் குறைவதால், விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். எனவே, இதைத் தவிர்க்க, விதையில்லா இனப்பெருக்க முறை உருவானது. இதிலுள்ள, நெருக்கு ஒட்டுக்கட்டுதல், குருத்து ஒட்டுக்கட்டுதல், இளந்தளிர் ஒட்டுக்கட்டுதல் ஆகிய முறைகளில் இப்போது கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

நடவும் பருவமும்

ஜூன் ஜூலை, அக்டோபர் நவம்பரில் நடலாம். ஒரு மீட்டர் நீள, அகல, ஆழத்தில் குழிகளை எடுத்துப் பத்து நாட்கள் வரை ஆறப் போட வேண்டும். அத்துடன், குழிகளுக்குள் காய்ந்த சருகுகளைப் போட்டு எரித்து, தீமை தரும் பூச்சிகள், அவற்றின் முட்டைகள், பூசண வித்துகள், நூற்புழு ஆகியவற்றை அழிக்கலாம். மட்கிய தொழுவுரம் 10 கிலோவுடன் மேல்மண்ணையும் சமகாகக் கலந்து குழிகளில் நிரப்ப வேண்டும். தொழுவுரத்துடன் 50 கிராம் நுண்ணுயிர்க் கலவையையும் கலந்து இட வேண்டும். மேலும், குழிக்கு 100 கிராம் வீதம் 1.3% லின்டேண் அல்லது 5% மாலத்தியான் தூளையும் இட வேண்டும்.

குழியின் மேல் பாகத்தில் 10 கிலோ தொழுவுரம், 100 கிராம் வேப்பம் புண்ணாக்கு, 100 கிராம் சூப்பர் பாஸ்பேட், 100 கிராம் ஜிப்சத்தை நல்ல வண்டல் மண்ணில் இட வேண்டும். பிறகு, குழிகளின் நடுவில் கன்றுகளை நட வேண்டும். நடவின்போது குழாய்த் தொட்டியில் உள்ள மண் உதிராமல், ஒட்டுக்கட்டிய பாகம் மேலே இருக்குமாறு நட வேண்டும். பிறகு, காற்றில் கன்று அசையாமல் இருக்க, அதன் இருபுறமும் வலுவான குச்சிகளை வைத்து, தண்டுப்பகுதி சேதப்படாமல், மெல்லிய கயிற்றால், 8 வடிவத்தில் கட்ட வேண்டும்.

நடவு செய்த மூன்றாம் நாளில் உயிர்நீர் விட வேண்டும். ஓராண்டு வரையில் வாரம் ஒருமுறை நீரை விட்டால் ஒட்டுக் கன்றுகளை நன்கு வளர்க்கலாம். வேர்ப்பகுதியில் நீர் தேங்கக் கூடாது. கன்றுகள் உயிர்ப் பிடித்ததும் பாலீத்தின் நாடா, சணல், துணி போன்றவற்றைக் கவனமாக அகற்றிவிட வேண்டும்.

இடைவெளி

முன்பு 10×10 மீட்டர் இடைவெளியில் மா சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், இப்போது அடர் நடவு முறையில் 5×5 மீட்டர் இடைவெளி பரிந்துரை செய்யப்படுகிறது. மேலும் நல்ல வளமான நிலத்தில் 7×7 மீட்டர் இடைவெளியில் எக்டருக்கு 204 கன்றுகள், மித வளமான நிலம் 6×6 மீட்டர் இடைவெளியில் எக்டருக்கு 278 கன்றுகள், வளம் குறைந்த நிலத்தில் 5×5 மீட்டர் இடைவெளியில் எக்டருக்கு 400 கன்றுகள் வீதம் நடுவதற்குப் பரிந்துரை செய்யப்படுகிறது.

இம்முறையில் 15 ஆண்டுகள் வரை கூடுதலான மகசூல் கிடைக்கும். முறையான கிளைப்படர்வு மற்றும் உத்திகளைக் கடைப்பிடித்தால், மரங்களின் கிளைகள் ஒன்றுடன் பின்னி வளர்வதைத் தடுத்து, மரங்களின் மகசூல் திறனை அதிகரிக்கலாம். 15 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு மரம் விட்டு ஒரு மரத்தை வெட்டியகற்றி, முறையான இடைவெளியில் மரங்களைக் காக்கலாம்.

அடர் நடவின் நன்மைகள்

அதிகளவில் செடிகளை நடலாம். மரங்களை எளிதில் பராமரிக்கலாம். குறைந்த உயரத்தில் மரங்கள் இருப்பதால் எளிதாக அறுவடை செய்யலாம். இலைவழி உரமளித்தல் மற்றும் பயிர்ப் பாதுகாப்பு முறைகளை எளிதில் மேற்கொள்ளலாம். அறுவடைக்குப் பிறகு முறையாகக் கவாத்து செய்வதால்,  ஆண்டுதோறும் தரமான பழங்கள் கிடைக்கும். மரங்கள் அதிகமாக இருப்பதால் குறிப்பிட்ட பரப்பில் அதிகப் பழங்களை உற்பத்தி செய்யலாம்.

உர நிர்வாகம்

பருவமழை தொடங்கும் ஜூன் ஜூலையில் உரமிட வேண்டும். மழை பெய்வது தாமதமானால் ஆகஸ்ட்டில் உரமிடலாம். உரத்தை எடுத்துக் கொள்ளும் வேர்கள் மரத்தின் மையத்தண்டில் இருந்து கிளைப்பரப்பின் விளிம்பு வரை பரவியிருக்கும். எனவே, மரத்திலிருந்து 2-3 அடி தள்ளி, மரங்களின் வயதுக்கேற்ப அரையடி முதல் முக்கால் அடி ஆழத்தில் குழியை எடுத்து அல்லது வட்டப்பாத்தி அமைத்து உரத்தை இட வேண்டும். உரத்தை இரு பாகமாகப் பிரித்து ஜூன்-ஆகஸ்ட் மற்றும் அக்டோபர்-நவம்பரில் இட வேண்டும். இரசாயன உரங்களை இடுவதற்கு 15 நாட்களுக்கு முன் மரத்துக்கு 100 கிராம் வீதம் நுண்ணுயிர்க் கலவையை தொழுவுரத்தில் கலந்து இட வேண்டும்.

நுண்ணூட்டம்

சில மண் வகைகளில் நுண்ணூட்டக் குறை இருக்கும். இதைச் சரி செய்ய வேண்டும். செம்மண் நிலத்தில் மணிச்சத்து, துத்தநாகம், போரான், தாமிரம், சுண்ணாம்பு ஆகியன குறைவாகவே உள்ளன. இதற்குக் காரணம், பல ஆண்டுகளாகத் தழை, மணி, சாம்பல் சத்தை இரசாயன உரங்களாக மட்டுமே இட்டு வந்தது தான்.

நுண்ணூட்டங்களை இலைவழியாக அளிப்பதே உகந்தது. துத்தநாகக் குறையைப் போக்க, 0.3% துத்தநாகம் சல்பேட் கரைசலை, பிப்ரவரி, மார்ச், மேயில் தெளிக்கலாம். போரான் மற்றும் மாங்கனீசு குறையைப் போக்க, காய்கள் வந்த பிறகு, ஒரு மாத இடைவெளியில் 0.2-0.4% போராக்ஸ் கரைசல் மற்றும் பூத்த பின் 0.2-0.4% மாங்கனீஸ் கரைசலைத் தெளிக்கலாம். மக்னீசியம் மற்றும் இரும்புச் சத்துக் குறையைப் போக்க, பிப்ரவரி, ஏப்ரலில் 0.2-0.4% மக்னீசியம் சல்பேட் கரைசல் மற்றும் 0.2-0.3% பெரஸ் சல்பேட் கரைசலை ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்கலாம்.

உயிர் உரங்கள்

முதலாம் ஆண்டு முதல் மரத்துக்கு 200 கிராம் வேர்ப்பூசணம், 50 கிராம் அசோஸ்பயிரில்லம், 50 கிராம் பாஸ்போபாக்டீரியா வீதம் ஆண்டுதோறும் இட வேண்டும். ஆறாம் ஆண்டு முதல் 1,000 கிராம் வேர்ப்பூசணம், 200 கிராம் அசோஸ்பயிரில்லம், 200 கிராம் பாஸ்போபாக்டீரியாவை இட வேண்டும்.

பாசனம்

ஒட்டுக் கன்றுகளுக்கு, மண்ணின் தன்மை மற்றும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, வாரம் ஒருமுறை பாசனம் அவசியம். சொட்டுநீர்ப் பாசன முறையைப் பயன்படுத்தலாம். இம்முறையில், வளரும் கன்றுக்குத் தினமும் 10-15 லிட்டர் நீரும், காய்ப்பு மரத்துக்கு 30-50 லிட்டர் நீரும் தேவைப்படும்.

மழைக்காலத்தில் பாசனம் தேவையில்லை. வளர்ந்த மரங்களுக்கு, பூப்பதற்கு 2-3 மாதங்களுக்கு முன்பும், பூக்கும் போதும் பாசனம் கூடாது. பிஞ்சுகள் உருவாகி முற்றத் தொடங்கும் வரை, 10-15 நாட்கள் இடைவெளியில் பாசனம் தரலாம். இதனால், பழங்கள் உதிர்வது குறைவதுடன் அவற்றின் அளவும் தரமும் மேம்படும்.

குளிர் காலத்தில் மொட்டு விடும் போது பாசனத்தை நிறுத்திவிட வேண்டும். ஏனெனில், பூப்பதற்குப் பதிலாக இலைகள் மட்டுமே வளரும். காய்கள் வளரும் போதும் முற்றும் போதும், நிலத்திலுள்ள ஈரப்பதத்தைப் பொறுத்தே பழங்களின் தரம் அமையும்.

கவாத்து

மரங்களில் சூரியவொளி நன்கு பட்டால் தான் காய்ப்பும் தரமும் அதிகமாகும். எனவே, தழை வளர்ச்சி அதிகமாக இருக்கும் போது கவாத்து செய்ய வேண்டும். ஒட்டுச்செடியில் ஒட்டுப்பகுதிக்குக் கீழே வேர்ச் செடியிலிருந்து வரும் புதுத் தளிர்களை நீக்கிவிட வேண்டும். தொடக்கத்தில் இருந்தே கிளைகளைச் சரி செய்தால், வாளிப்பான பக்கக் கிளைகளை உருவாகும். இதனால், காய்களின் எடை கூடும்போது கிளைகள் முறியாமல் இருக்கும்.

நட்டு மூன்று ஆண்டுகள் வரை காய்ப்பிடிப்பைத் தவிர்க்க, பூக்களைக் கிள்ளிவிட வேண்டும். வளர்ந்த மரங்களில் காய்ந்த மற்றும் நோயுற்ற கிளைகள், குறுக்கம் நெடுக்குமாக உள்ள கிளைகளை, ஆகஸ்ட், செப்டம்பரில் அகற்ற வேண்டும். முனைக்கொப்புகளில் குத்தாக வளர்ந்துள்ள மற்றும் நடப்பாண்டுக் கிளைகளில் திடமான 2-3-ஐ மட்டும் விட்டு விட்டு இதர கிளைகளை நீக்க வேண்டும்.

மிகவும் வயதான மற்றும் சீராகக் காய்க்காத மரங்களில் கவாத்து அவசியம். நுனிக்கிளைகளில் இருக்கும் கொத்தான இலைத்தண்டுகளை நீக்கிவிட்டு, தண்டிலிருந்து திடமான கிளைகளை வளரவிட வேண்டும். கவாத்து செய்தால் மரத்தின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி, காய்களின் தரத்தைக் கூட்டலாம். மேலும், தேவையான இயற்கை மற்றும் செயற்கை உரங்களை இட்டு, போதுமான ஈரப்பதம் இருக்கும் வகையில் பாசனம் செய்ய வேண்டும். இல்லையேல் கவாத்தால் சிறந்த பலன் கிட்டாது.

பூக்களின் உற்பத்தியைச் சீரமைத்தல்

பிப்ரவரி வரை பூக்காத மரங்களில், ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் யூரியா வீதம் கலந்த கரைசல் அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் பொட்டாசியம் நைட்ரேட் வீதம் கலந்த கரைசலைத் தெளித்து அவற்றைப் பூக்க வைக்க வேண்டும். இடைப்பருவத்தில் காய்க்க வைப்பதால் நல்ல வருமானம் கிட்டும். பழங்கள் அதிகமாகக் கிடைக்கும் ஏப்ரல்-ஜூன் காலத்தைத் தவிர்த்து, மற்ற மாதங்களில் அறுவடை செய்யப்படும் காய்களுக்கு நல்ல விலை கிடைக்கும். இதற்கு, கல்டார் என்னும் பேக்லோபுட்ரசால் மருந்தை வேர்ப்பகுதியில் சேரும்படி குழியைத் தோண்டி ஊற்ற வேண்டும். இம்மருந்தை 2 லிட்டர் நீருக்கு ஒரு மில்லி வீதம் கலக்க வேண்டும். ஆறாண்டு மரத்துக்கு 3 மில்லி மருந்து போதும்.

பயிர்ப் பாதுகாப்பு: பூச்சிகள்

தத்துப்பூச்சி: இதைக் கட்டுப்படுத்த, பூங்கொத்து வெளிவரும் போது, ஒரு லிட்டர் நீருக்கு, சோலோன் அல்லது இமிடாகுளோபிரிட் 15 மில்லி வீதம் கலந்து ஒருமுறையும் அடுத்து 15 நாட்கள் கழித்து, ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி குயினால்பாஸ் வீதம் கலந்தும் தெளிக்க வேண்டும். இவற்றுடன் 5 மில்லி வேப்ப எண்ணெய்யும் கலந்து தெளிக்கலாம்.

தண்டுத் துளைப்பான்: இதைக் கட்டுப்படுத்த, தரை மட்டத்திலிருந்து 60-90 செ.மீ. உயரத்தில், மரத்தின் பட்டையைத் தலைகீழான ப வடிவத்தில் ஒரு செதுக்க வேண்டும். அதற்கிடையில் நனையும் பஞ்சை வைத்து அதில் 10 மில்லி மானோகுரோட்டாபாசை, சொட்டுச் சொட்டாக விட்டு நனைக்க வேண்டும். பின்பு, செதுக்கிய பட்டையை மரத்துடன் பொருத்தி நூலால் கட்டி, வெட்டப்பட்;ட பாகத்கைக் களிமண் குழம்பால் பூசிவிட வேண்டும். இதனால் பூச்சிக்கொல்லி மருந்து மரத்துக்குள் ஊடுருவிச் செல்லும் போது தண்டு மற்றும் கிளைகளில் இருக்கும் புழுக்கள் இறந்து விடும்.

தண்டுப் பகுதியில் ஓட்டை பெரிதாக இருந்தால் 5 கிராம் கார்போபியூரான் குருணையை இட்டுக் களிமண்ணால் மூடிவிட வேண்டும். இது பட்டையிலும் தண்டிலும் இருக்கும் அனைத்துப் பூச்சிகளையும் கொன்றுவிடும். துளைக்குள் இருக்கும் புழுவைக் கம்பிக் கொக்கியால் எடுத்த பிறகு இந்தப் பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

பழ ஈ: இதைக் கட்டுப்படுத்த, இதைக் கவரும் மெதைல் யூஜினால் திரவம் மற்றும் மாலத்தியான் மருந்தை, ஒரு லிட்டர் நீருக்கு ஒவ்வொரு மில்லி வீதம் எடுத்துக் கலக்க வேண்டும். பிறகு, 250 மில்லி பிடிக்கும் வாயகன்ற புட்டியில் 100 மில்லி அளவுக்கு நிரப்பி, மாந்தோப்பில் கட்டித் தொங்க விட்டால், ஆண் ஈக்கள் இதில் விழுந்து இறந்து விடும். இக்கலவையை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். இதை மார்ச் முதல் ஜூலை வரை செய்ய வேண்டும்.

மாங்கொட்டை வண்டு: இதைக் கட்டுப்படுத்த, காய்ப்பிடிப்புக் காலமான மார்ச் முதல் வாரத்தில் ஒருமுறையும், ஏப்ரல் முதல் வாரத்தில் ஒருமுறையும் என, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி பென்தியான் வீதம் கலந்து தெளிக்கலாம். அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 50% கார்பரில் நனையும் தூள் 2 கிராம் வீதம் கலந்து தெளிக்கலாம்.

நோய்கள்

இலைக்கருகல் நோய்: இலையின் விளிம்புகளில் கருஞ்சிவப்புப் புள்ளிகள் தோன்றி இணைந்து சுருகிச் சாம்பல் நிறத்தை ஏற்படுத்தும். இதைக் கட்டுப்படுத்த, நோயின் அறிகுறி தோன்றியதும், 0.25% காப்பர் ஆக்ஸி குளோரைடு அல்லது 1% போர்டோ கலவையை 10 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.

நுனிக்கருகல் நோய்: இந்நோய் தாக்கிய மரங்களில் இலைகள் உதிரும். கிளைகள் நுனியிலிருந்து பின்னோக்கிக் சுருகிக்கொண்டே வரும். நோயுற்ற பகுதியிலுள்ள பட்டைகள் கறுப்பாக மாறும். இந்நோய் முற்றினால் கிளைகளில் வெடிப்புகள் ஏற்படும். இவற்றில் இருந்து பிசின் போன்ற திரவமும் வெளிவரும். வெடிப்புள்ள தண்டும் கிளையின் உட்பகுதியும் கரும் பழுப்பாக இருக்கும்.

இதைக் கட்டுப்படுத்த, வெடிப்புள்ள இடத்தைச் சீவிச் செதுக்கி, போர்டோ கலவையை நன்கு தடவ வேண்டும். கார்பன்டசிம் 0.1% கலவையைத் தெளிக்க வேண்டும். இத்துடன் ஒட்டும் திரவமான டீபாலை 10 லிட்டர் நீருக்கு 5 மில்லி வீதம் கலந்து தெளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பாக்டீரியா இலைக் கரும்புள்ளி நோய்: இந்நோய் இலை, இலைக்காம்பு, தண்டு மற்றும் பழங்களில் தோன்றும். இலை நுனியில் நீர் கோர்த்துப் புள்ளிகள் தோன்றும். பின்பு, புள்ளிகள் இளஞ்சிவப்பாக, அவற்றைச் சுற்றி மஞ்சள் வளையம் தோன்றிக் கொப்புளங்களாக மாறும். பழங்களில் புள்ளிகள் தோன்றி வெடிப்புகளை உண்டாக்கும். இதனால் பழங்கள் உதிர்ந்து விடும்.

இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு, 100-200 மில்லி வீதம் கலந்த பிளான்டோமைசின் அல்லது அக்ரிமைசின் கலவையை, காப்பர் ஆக்ஸி குளோரைடு 0.25% கரைசலுடன் கலந்து, 15 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.

மா கரும்படல நோய்: பூசண இழைகள் மேலோட்டமாக வளர்ந்து கரும்படலமாக மாறும். நோய்க்காரணியான பூசண இழைகள், பூங்கொத்தைத் தேடிவரும் பூச்சிகள் சுரக்கும் தேன் போன்ற கழிவுப்பொருளில் வளர்ந்து இலை மற்றும் காய்களில் கரும்படலத்தைத் தோற்றுவிக்கும்.  இதைக் கட்டுப்படுத்த, ஒரு கிலோ மைதாவை 5 லிட்டர் நீரில் கரைத்து, பசைப்பதம் வரும் வரையில் கொதிக்க வைத்து, 15 லிட்டர் நீரை ஊற்றிக் கரைத்து, பாதிக்கப்பட்ட மரங்களில் தெளிக்க வேண்டும். பசை உலர்ந்ததும் பூசணக் கரும்படலமும் உதிர்ந்து விடும்.

அறுவடை 

வெப்பம் குறைவான காலை நேரத்தில் கையரிவாள் அல்லது வலைக்கூடை மூலம் அறுவடை செய்ய வேண்டும். மிகவும் உயரத்தில் இருக்கும் காய்களை ஏணியில் ஏறிப் பறித்தால் சேதம் இருக்காது. 10-20 செ.மீ. காம்புடன் அறுவடை செய்து, அதில் ஒரு செ.மீ. காம்புடன் 3-4 மணி நேரம் தலைகீழாகக் காய்களை நிழலில் அடுக்கி வைக்க வேண்டும். இதனால் காய்களில் இருக்கு பிசின் போன்ற பால் முழுமையாக வடிந்து விடும். பிறகு, ஓடும் நீரில் காய்களைக் கழுவிச் சுத்தம் செய்ய வேண்டும்.

அறுவடைக்குப் பிந்தைய நேர்த்தி

காய்களைச் சேமிப்பதற்கு முன் 52 டிகிரி செல்சியஸ் மித வெப்பச் சுடுநீரில் 5 நிமிடம் முக்கியெடுத்த பிறகு 8% தாவர மெழுகுத் திரவத்தில் முக்கியெடுக்க வேண்டும். இதனால், பழ அழுகல் நோயைத் தடுக்கலாம். 7-9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மற்றும் 90% ஈரப்பதத்தில் சேமித்து வைத்தால் ஏழு வாரம் வரை காய்கள் கெடாமல் இருக்கும்.

அறுவடை செய்யப்பட்ட காய்கள் சாதாரணமாகப் பழுக்க 5-6 நாட்களாகும். எத்திலீன் வாயு மூலம் பழுக்க வைத்தல், சுகாதாரமானது மற்றும் பழத்தின் நிறம், மணம், சுவையைக் கூட்டவல்லது. பல நாட்களுக்குப் பழங்கள் கெடாமலும் இருக்கும்.

இம்முறையில் பழுக்க வைக்க, காற்றுப்புகா அறையில் 75% காய்களை இட வேண்டும். 25% இடத்தைக் காலியாக வைக்க வேண்டும். இதற்குள், ஒரு பாத்திரத்தில் 5 லிட்டர் நீரில் 10 மில்லி எத்திரல் மற்றும் 2 கிராம் சோடியம் ஹைட்ராக்சைடு என்னும் எரிகாரத்தை இட்டு வைக்க வேண்டும். இதனால், எத்திலின் வாயு காய்களில் சீராகப் படுவதால், ஒரே நாளில் காய்கள் பழுத்து விடும்.

மகசூல்

இரகம், நடவு, இடைவெளி, மரங்களின் வயதுக்கேற்ப மகசூல் மாறுபடும். 5-15 ஆண்டு மரங்கள் மூலம் எக்டருக்கு 8-10 டன் மகசூல் கிடைக்கும். 16- 20 ஆண்டு மரங்கள் மூலம் எக்டருக்கு 15-20 டன் மகசூல் கிடைக்கும்.


மாமரம் DR.C.RAJA MANICKAM e1614637148865

முனைவர் சி.இராஜமாணிக்கம்,

உதவிப் பேராசிரியர், தோட்டக்கலைத் துறை, 

வேளாண்மைக் கல்லூரி, மதுரை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!