கால்நடை ஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்தும் வீட்டு வைத்தியம்!

ஒட்டுண்ணி ColustrumFeeding

ந்தியா ஒரு விவசாய நாடு. விவசாயமும் கால்நடை வளர்ப்பும் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் முக்கிய அங்கங்கள். ஆனால், தற்போது படித்த பட்டதாரிகள் விவசாயம் செய்வதையும், கால்நடைகளை வளர்ப்பதையும் தாழ்வாக நினைக்கிறார்கள். வெறும் பத்தாயிரம் ரூபாய் மாதச் சம்பளத்தில் ஏதோ ஒரு முதலாளியிடம் அடிமைகளாக வாழ்க்கையை ஓட்டும் எத்தனையோ படித்த இளைஞர்களைக் காண முடிகிறது.

நன்கு படித்த இளைஞர்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்டினால் தான் புதிய கண்டுபிடிப்புகளை விவசாயத்தில் செலுத்தி, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும். தற்போது ஏழைப் பெண்கள் மற்றும் கிராமப்புற நிலமில்லா கூலித் தொழிலாளிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் கணிசமான வருமானத்தை ஈட்டி வருகின்றனர்.

கால்நடைகளைத் தாக்கும் நோய்கள், சில சமயம் இழப்பையும் ஏற்படுத்துவதால் கால்நடை வளர்ப்போரின் ஆர்வம் குறைந்து விடுகிறது. கால்நடைப் பெருக்கத்தைக் குறைக்கும் தொற்று நோய்களைப் போல, ஈக்கள், கொசுக்கள் போன்ற புற ஒட்டுண்ணிகள் தாக்கம் இன்னொரு புறம் இருக்கிறது. இதனால், கால்நடைகள் போதுமான ஓய்வு எடுக்க முடியாமல் மன அழுத்தத்துக்கு உள்ளாவதால், உற்பத்தியும் குறைந்து விடுகிறது.

இந்தப் புற ஒட்டுண்ணிகளை அழிக்க நிறைய இரசாயன மருந்துகள் உள்ளன. ஆனால், அவை விலை அதிகமாக இருப்பதுடன், கால்நடைகள் தங்களின் உடல்களை நாக்கால் தேய்க்கும் போது இந்த இரசாயன, செயற்கை மருந்துகள் அவற்றின் உடலுக்குள் சென்று பாதிப்பை உண்டாக்கும். இதைத் தடுக்க, எளிமையான இயற்கை மருத்துவ முறை உள்ளது.

கற்பூரம், மஞ்சள், வேப்பிலை, எலுமிச்சை, தேங்காய் எண்ணெய் ஆகியவற்றின் கலவையைக் கொண்டு மிக எளிதாக, இயற்கை முறையில் குறைந்த செலவில் புற ஒட்டுண்ணிகளின் தாக்கத்தைக் குறைக்கலாம். ஒரு மாட்டுக்கு ஆகும் செலவு ரூ.30 மட்டுமே. இந்தக் கலவையை ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.

மூன்று கற்பூர வில்லைகள், ஒரு எலுமிச்சம் பழம், 15 கிராம் மஞ்சள் தூள், ஒரு கைப்பிடி வேப்பிலை, 15 மில்லி தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். நீரைச் சேர்க்கக் கூடாது.

பிறகு, இந்தக் கலவையை 30 மில்லி தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து நன்கு கலக்கி அடைத்து வைத்துக் கொண்டால் ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம். இந்தக் கலவையைச் சிறிதளவு பஞ்சில் எடுத்து, மாலை நேரத்தில் மாடுகளின் பின்பகுதி, அடிப்பகுதி, காது மடல்களில் தேய்த்துவிட வேண்டும்.

இந்த மருந்து, உண்ணிகளையும், பிற கொசு, ஈக்களையும் உடலில் ஒட்ட விடாமல் செய்து விடும். இது மிகவும் எளிதாகச் செய்யக்கூடிய வீட்டு மருத்துவம். கால்நடைகளை உறங்க விடாமல் செய்யும் ஒட்டுண்ணிகளை இந்த மருந்தைக் கொண்டு அழித்து கால்நடைகளைக் காக்கலாம்; வளம் பெருக்கலாம். 


ஒட்டுண்ணி DR.G.KALAISELVI e1616350379131

மரு. கோ.கலைச்செல்வி,

மரு. எம்.வித்யா, மரு. என்.தானியேல் ஜாய் சந்திரன், மரு. அ.தங்கவேலு,

கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading