நினைவாற்றலை வளர்க்கும் வல்லாரை சாகுபடி!

வல்லாரை vallarai for health

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2019

ல்லாரை, நெடுநாட்கள் வாழும் தன்மையும், செழிப்பான அல்லது ஈரமிக்க வெப்பப் பகுதியில் வளரும் தன்மையும் உள்ள மூலிகை. இதன் தாயகம் இந்தியா, சீனா, இந்தோனேஷியா, மடகாஸ்கர் மற்றும் ஆப்பிரிக்கா ஆகும். அருமணமும் கசப்புத் தன்மையும் மிக்க இது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வளர்ந்து, சட்னி, ஊறுகாய், புத்துணர்வு பானம் தயாரிக்கவும், நினைவாற்றலைப் பெருக்கவும், நரம்பு நோய், தொழுநோய், தோல் நோய்கள், வயிற்றுப்போக்கு மற்றும் குடற்புண் மருந்தாகவும் பயன்படுகிறது. பூச்சிக் கொல்லியாகவும் விளங்குகிறது.

மண் மற்றும் காலநிலை

ஈரப்பதமான நிலம், சதுப்பு நிலம் மற்றும் நீர் நிலைகளைச் சுற்றி வளரும். அமில மண்ணில், உவர் மண்ணில் வளரும். ஈரமும் அங்ககத் தன்மையும் உள்ள களிமண்ணில் நன்கு வளரும். மிதமான கால நிலையில் நல்ல வளர்ச்சி இருக்கும். நிழலான பகுதிகளில் நன்கு வளரும். 50% நிழலில் நன்கு வளர்ந்து அதிக மகசூலைக் கொடுக்கும்.

இனப்பெருக்கம்

சில இலைகள் மற்றும் கணுக்கள் உள்ள தண்டுத் துண்டுகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. எக்டருக்கு ஒரு இலட்சம் துண்டுகள் தேவைப்படும். இவற்றை நேரடியாக நிலத்தில் நடலாம். அல்லது நாற்றங்கால் படுக்கையில் நட்டு வளர்த்து நிலத்துக்கு மாற்றலாம். நிலத்தை நன்கு உழுது பண்படுத்தி, 30×30 செ.மீ. இடைவெளியில், அக்டோபர் மாதத்தில் நட வேண்டும்.

உரம்

கடைசி உழவுக்கு முன் எக்டருக்கு 5 டன் தொழுவுரத்தை அடியுரமாக இட வேண்டும். மேலும், 100:60:60 கிலோ, தழை:மணி:சாம்பல் சத்துகளையும் இட வேண்டும்.

பாசனம்

நடவு முடிந்ததும் தண்டுகள் நன்கு வேர்ப்பிடிக்க, 1-2 நாட்களுக்குச் சிறிதளவு நீர் பாய்ச்ச வேண்டும். தண்டுகள் நன்கு வளரும் வரையில், 4-6 நாட்கள் இடைவெளியில் மிதமான அளவில் நீரை விட வேண்டும். பிறகு, பயிரின் தேவைக்கு ஏற்ப பாசனம் செய்யலாம்.

களை

களைகள் இருந்தால் பயிர்கள் வளர்வதில் இடையூறு ஏற்படும். எனவே, களையெடுத்தல் மிகவும் அவசியம். பயிரின் தொடக்கக் காலத்தில் 15-20 நாட்கள் இடைவெளியில் களைகளை அகற்ற வேண்டும்.

அறுவடை

வளரும் கிளைகளில் இருந்து 15 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம். ஜூன் மாதத்திலிருந்து அதிக மகசூல் கிடைக்கும். செடிகளை முழுதாக அறுக்காமல், மீண்டும் வளர்வதற்கு ஏற்ற வகையில் அடித்தண்டை விட்டு விட்டு அறுவடை செய்ய வேண்டும். சராசரியாக எக்டருக்கு 5,500 கிலோ ஈர மூலிகை கிடைக்கும். இதை உலர்த்தினால் 2,000 கிலோ உலர் மூலிகை, 20 கிலோ ஆசியடிக்கோசிட் கிடைக்கும்.

மருத்துவப் பயன்கள்

மன அழுத்தம்: நமது மூளையின் செயல் மேம்பட, நீண்ட மற்றும் குறுகிய கால நினைவாற்றல் மேம்பட, நினைவுகளைத் தக்க வைக்கும் திறன் கூட, வல்லாரை உதவும். வல்லாரையில் உள்ள குளிர்ச்சியானது, மனதுக்கு அமைதியைத் தரும். மன அழுத்தத்தைத் தரும் கார்டிசோல் ஹார்மோன் உற்பத்தியை வல்லாரை குறைக்கும். எனவே, இதை உணவில் சேர்த்து வந்தால் மன அழுத்தமும் அனிஸிட்டி சிக்கலும் தீரும்.

மறதி நோய்: மூளையைச் சேதமாக்கும் நியூரானில், அமிலாய்டு கலவை இருப்பதால் நினைவிழப்பு இழப்பும் அதனால் மறதி நோயும் உண்டாகும். பிராமியின் பாகோசைடுகள் என்னும் உயிர் வேதிப்பொருள், இந்தக் கலவையை நீக்கி, பாதிப்படைந்த மூளைச் செல்களைச் சரி செய்வதால், மறதி நோய் அறிகுறிகள் குறையும்.

நினைவாற்றல்: வல்லாரை நினைவாற்றலைப் பெருக்கும் அதிசய மூலிகை. நினைவாற்றல் மற்றும் செறிவுக்குக் காரணமான மூளையின் ஹிப்போகாம்பஸ் பகுதியில் இது நேர்மறை விளைவை ஏற்படுத்தி நினைவாற்றலைக் கூட்டும். எனவே, மாணவர்கள் இந்தக் கீரையை அடிக்கடி எடுத்து வந்தால் அவர்களின் நினைவாற்றல் பெருகும். பிராமி மூலிகையின் தோற்றம் மூளையைப் போலவே இருப்பது இதன் சிறப்பு.

நோய்களைத் தடுக்க: வல்லாரையில் நோயற்ற வாழ்க்கைக்குத் தேவையான நோயெதிர்ப்புச் சக்தி உள்ளது. இது, நோய்கள் தாக்காமல் இருக்கவும், செல்கள் பிறழ்ச்சி அடைந்து புற்றுநோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது.

ஒவ்வாமை சார்ந்த எலும்பு நோய்கள்: வல்லாரையில், ஆர்த்ரிட்ஸ், கெளட் போன்ற முழங்கால் வலியைப் போக்கும் பண்புகள் உள்ளன. மேலும் இவை, வாயு, குடற்புண், எரிச்சலுடன் மலம் வெளியேறுதல் போன்றவை அகலவும் உதவுகின்றன.

நீரிழிவைக் கட்டுப்படுத்த: இரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கச் செய்யும் ஹைப்போ கிளைசீமியாவைக் கட்டுக்குள் வைக்க வல்லாரை உதவுகிறது. எனவே, நீரிழிவு உள்ளோர், வல்லாரையை உணவில் சேர்த்து வரலாம்.

கூந்தல் வளர: வல்லாரையில் உள்ள நோயெதிர்ப்புக் கூறுகள், உரோமக் கால்களுக்கு உயிரூட்டிக் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும். எனவே, வறண்ட கூந்தல் மற்றும் தலைச்சருமம் அகல, வல்லாரை எண்ணெய்யைத் தேய்த்து வரலாம்.  மேலும், உடம்பிலுள்ள நச்சுகளை வெளியேற்றிச் சருமச் செல்களைப் புதுப்பிக்கும். எனவே, தலையில் அரிப்பு, பொடுகு, பிளவுபட்ட கூந்தல் நுனிகள் இருப்போர், வல்லாரை எண்ணெய்யைத் தலையில் தடவி வரலாம்.

வலிகள் தீர: இந்தக் கீரையை உலர்த்திப் பொடியாக்கி உண்டு வந்தால், பாலியல் செயல்திறன் மிகும்; மனநோய், முதுகுவலி, மூட்டுவலி அகலும்.


Pachai Boomi Dr.Tamil selvi

முனைவர் செ.தமிழ்ச்செல்வி,

உதவிப் பேராசிரியர், வேளாண்மைக் கல்லூரி, ஈச்சங்கோட்டை, தஞ்சாவூர்.

பகிருங்கள்:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!