கோகோவில் ஒருங்கிணைந்த நோய் நிர்வாகம்!

கோகோ 81fvO7Cb4qL

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019

கோகோ எனப்படும் தியோபுரோமா கோகோ உலகின் பணப் பயிர்களில் மிக முக்கியமானது. அமேசான் காடுகளைத் தாயகமாகக் கொண்ட இப்பயிர், பெருமளவில் தென்னந் தோப்புகளில் ஊடுபயிராகப் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு மற்றும் ஆந்திரத்தில் 82,940 எக்டரில் விளர்வதன் மூலம், 18,920 மெட்ரிக் டன் உலர் விதைகள் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் 29,205 எக்டரிலுள்ள கோகோ மூலம் 1,650 மெட்ரிக் டன் விதைகள் கிடைக்கின்றன. இந்த விதைகள், மிட்டாய், உணவுப் பொருள்கள் மற்றும் சுவைமிகு பானங்கள் தயாரிப்பில் பயன்படுகின்றன.

தரமிக்க விதைகள் மற்றும் அதிக மகசூலைப் பெற, நோய்களிலிருந்து கோகோவைப் பாதுகாக்க வேண்டும். இப்பயிரைப் பலவிதமான பூசணங்கள் தாக்கி மகசூல் இழப்பை ஏற்படுத்துகின்றன. இவற்றில் மிக முக்கியமானது பைட்டோப்தொரா பால்மிவோரா என்னும் பூசணமாகும். இது, நாற்றுக் கருகல், தண்டுச் சொறிநோய் மற்றும் கருங்காய் நோயை ஏற்படுத்துகிறது. மேலும், பூசண நோய்களான செரிலி வாடல், மரக்கறிக்காய் அழுகல், பிங்க் நோய், குழற்கோடு கருகல், நுனிக்கருகல் ஆகியனவும் கோகோவைத் தாக்குகின்றன.

நாற்றுக்கருகல்

அறிகுறிகள்: நோய்க்காரணியான பைட்டோப்தொரா பால்மிவோரா பூசணம்,  1-4 மாத நாற்றுகளின் இலைகள் மற்றும் தண்டுகளைத் தாக்கும். இந்த இலைகளில் தோன்றும் சிறிய புள்ளிகள், பிறகு முழுமையாகப் படர்வதால் இலைகள் காய்ந்து விடும். நோய் முற்றிய நிலையில் நாற்றுகள் முற்றிலும் வாடிக் கருகி விடும்.

மேலாண்மை: நோயுற்றுக் கருகிய நாற்றுகளை அழித்துவிட வேண்டும். நாற்றங்காலில் வடிகால் வசதியை மேம்படுத்த வேண்டும். நோயுற்ற செடிகள் மீது ஒரு சத போர்டோ கலவை அல்லது 0.2 சத காப்பர் ஆக்சிகுளோரைடு கரைசலை, பருவமழைக்கு முன்னும் பின்னும் அவ்வப்போது தெளிக்க வேண்டும்.

தண்டுச்சொறி நோய்

அறிகுறிகள்: நோய்க்காரணியான பைட்டோப்தொரா பால்மிவோரா பூசணம்,  சாம்பல் நிற நீர்ப்புள்ளிகளை, முதன்மை மற்றும் விசிறித் தண்டுகளில் ஏற்படுத்தும். இந்தப் புள்ளிகளிலிருந்து சிவப்பு அல்லது பழுப்புத் திரவம் கசிந்து ஒழுகும். பின்னர் தண்டு பிளந்து மரம் முழுதும் காய்ந்து விடும்.

மேலாண்மை: தொடக்க நிலையில், பாதிக்கப்பட்ட தண்டின் பட்டைகளை நீக்கி விட்டு, போர்டோ பசையைத் தடவ வேண்டும். நோய்க்காரணி மண் மற்றும் பாதிக்கப்பட்ட காய்களிலிருந்து எளிதில் பரவுவதால், துப்புரவுக் கவாத்தைச் செய்ய வேண்டும். எக்டருக்கு 2.5 கிலோ வீதம் சூடோமோனாஸ் புளூரோசன்சை எடுத்து, தொழுவுரத்துடன் ஊட்டமேற்றி நிலத்தில் இட்டால் நோயின் தீவிரம் குறையும்.

கறுப்புக்காய் அழுகல்

அறிகுறிகள்: பைட்டோப்தொரா பால்மிவோரா பூசணம், தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் இந்நோயைப் பெருமளவில் ஏற்படுத்துகிறது. மேலும், அறுவடையின் போது எலி, அணில் போன்றவற்றால் காய்களில் ஏற்படும் காயங்கள் மூலம் இந்நோய் பரவுகிறது. நோயின் முதல் அறிகுறியாக, காய்களில் சாக்லெட் நிறத்தில் புள்ளிகள் தோன்றும். பிறகு, காய்கள் முழுதும் படர்ந்து விடும். நோய் முற்றினால், காய் முழுவதும் கறுப்பாக மாறுவதுடன், உள்ளிருக்கும் விதைகளும் நிறமாறி அழுகி விடும்.

மேலாண்மை: நோயுற்ற காய்களை அகற்ற வேண்டும். மேலும், செடிகளில் ஒரு சத போர்டோ கலவையை மழைக்காலத்துக்கு முன்னும் பின்னும் அவ்வப்போது தெளிக்க வேண்டும். வடிகால் வசதியை மேம்படுத்த வேண்டும். மண் மற்றும் இலையின் மீது 0.5 சத சூடோமோனாஸ் புளுரோசன்ஸ் கரைசலைத் தெளிக்க வேண்டும். துப்புரவுக் கவாத்து செய்ய வேண்டும்.

செரிலி வாடல் நோய்

அறிகுறிகள்: கொலிட்டோடிரைக்கம்  கிலியோஸ்பேரியாய்டஸ் பூசணத்தால் ஏற்படும் இந்நோய், பொள்ளாச்சிப் பகுதி கோகோவில் 30% அளவில் தென்படுகிறது. பிப்ரவரி முதல் மே மாதம் வரையில் இதன் தாக்கம் பரவலாக இருக்கும். அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த ஈரப்பதம் இந்நோய்க்குச் சாதகமான சூழலாகும். இளம் பழங்கள் காய்ந்து சுருங்கி விடும். தொடக்க நிலையில் பழங்கள் பொலிவிழந்து 4-7 நாட்களில் சுருங்கி விடும். பழங்கள் காய்ந்து உதிராமல் மரத்திலேயே இருக்கும். பூச்சிகள், நோய்கள், செடிகளுக்குப் போதிய சத்தின்மை போன்றவற்றால் வாடல் நோயின் வீரியம் கூடும்.

மேலாண்மை: நோயுற்ற காய்களை அகற்ற வேண்டும். முற்றிய காய்களை அறுவடை செய்து, செடிகளில் காய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும். பூசணக் கொல்லிகளான கார்பென்டசிம் 0.05 சதம் அல்லது மான்கோசெப் 0.2 சதக் கரைசலைத் தெளிக்க வேண்டும். இயற்கை முறையில், ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி சூடோமோனாஸ் வீதம் தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.

மரக்கறிக் காய் அழுகல் நோய்

அறிகுறிகள்: போட்ரிடிப்ளோடியா தியோபுரோமே பூசணம், காய்களின் அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் இந்நோயை ஏற்படுத்துகிறது. எனினும், கோடையில் தான் இதன் தாக்கம் மிகுதியாக இருக்கும். காய்களில் ஏற்படும் காயங்கள் மூலமும் இந்நோய் பரவும். சிறு கரும் புள்ளிகளாகத் தொடங்கும் இந்நோய், நாளடைவில் காய் முழுவதையும் கறுப்பாக மாற்றி விடும். இத்தகைய காய்கள் மரத்திலேயே தொங்கிக் கொண்டிருக்கும்.

மேலாண்மை: நோயுற்ற காய்களை அகற்ற வேண்டும். மேலும், அவற்றின் மீது ஒரு சத போர்டோ கலவையைத் தெளிக்க வேண்டும்.

காற்றுக்குழாய் கீற்று நுனிக்கருகல் நோய் 

அறிகுறிகள்: செரட்டோபேசிடியம் தியோப்ரோமே பூசணத்தால் இந்நோய் ஏற்படுகிறது. இதன் முதல் அறிகுறியாக நுனியில் இருந்து 2-3 கிளைகளின் கீழேயுள்ள இலைகளில் ஒன்றிரண்டு இலைகள் மஞ்சளாக மாறி விடும். பிறகு சில நாட்களில் இந்த இலைகள் உதிர்ந்து கிளைகளும் பாதிக்கப்படும். நோயுற்ற குருத்துகளைப் பிரித்துப் பார்த்தால், செம்பழுப்பு நிறத்தில் வரிசையாகக் கோடுகள் இருக்கும்.

மேலாண்மை: நோயுற்ற கிளைகளை நீக்குதல் மற்றும் படர்ந்த கிளைகளை வழக்கமாக வெட்டுதல் மூலம் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம். நோயுள்ள நிலத்தின் அருகில் நாற்றங்காலை அமைக்கக் கூடாது. ஒரு சத போர்டோ கலவை அல்லது 0.25 சத காப்பர் ஆக்சிகுளோரைடு கரைசலைத் தெளிக்க வேண்டும்.

இப்படி, கோகோவைத் தாக்கும் நோய்களை, தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, தகுந்த உத்திகள் மூலம் கட்டுப்படுத்தினால், நிறைந்த மகசூலைப் பெறலாம்.


கோகோ E.RAJESWARI e1631526206722

முனைவர் .இராஜேஸ்வரி,

முனைவர் சி.சுதாலட்சுமி, முனைவர் வெ.சிவக்குமார், முனைவர் க.வெங்கடேசன், 

தென்னை ஆராய்ச்சி நிலையம், ஆழியார் நகர், கோவை-642101.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!