கத்தரியைத் தாக்கும் பூச்சிகள், நோய்கள்!

கத்தரி

கட்டுரை வெளியான இதழ்: மே 2018

மிழ்நாட்டில் கத்தரி முக்கியப் பயிராகச் சாகுபடி செய்யப்படுகிறது. காய்கறி உற்பத்தியில் இந்தியாவானது உலகளவில் இரண்டாம் இடம் வகிக்கிறது. மற்ற பயிர்களைக் காட்டிலும் காய்கறி பயிர்களில் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் மிகுதியாக உள்ளது. காய்கறி உற்பத்தியில் 25-30 சதம் சேதத்தை ஏற்படுத்திச் சுமார் 1000 கோடி அளவுக்குப் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. எனவே, கத்தரிச் செடிகளைத் தாக்கும் முக்கியப் பூச்சிகளையும் நோய்களையும் பற்றித் தெரிந்து கொள்வோம்.

தண்டு மற்றும் காய்த்துளைப்பான்

நடவு செய்த 15-20 நாட்களில் கத்தரிச் செடியின் நுனித்தண்டுகள் இலைகளுடன் காய்ந்து தலை சாய்ந்து தொங்கிக் காணப்படும். இவற்றைக் கிள்ளி உள்ளே பார்த்தால் உட்புறத் திசுக்கள் புழுக்களால் உண்ணப்பட்டும், அந்தப் புழுக்களின் கழிவுகளால் நிரப்பப்பட்டும் இருக்கும். இவ்வகைப் புழுக்கள், காய்கள் பிஞ்சாக இருக்கும் போதும், வளர்ந்து வரும் சமயத்திலும் காய்களைக் குடைந்து உட்திசுக்களை உண்டு சேதப்படுத்தும்.

இவற்றைக் கட்டுப்படுத்த, பாதிக்கப்பட்ட செடிகளின் நுனித்தண்டுகள் மற்றும் காய்களைப் பறித்து எறிந்துவிட வேண்டும். எக்டருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கை இட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். ஏக்கருக்குப் பத்துப் பறவைத் தாங்கிகளை அமைத்தும், 5 சத வேப்பங்கொட்டைக் கரைசலைத் தெளித்தும் கட்டுப்படுத்தலாம். ஏக்கருக்கு 100 எல் அளவு என்.பி.வி வைரசைத் தெளித்தும் கட்டுப்படுத்தலாம். ஏக்கருக்கு 10 இனக்கவர்ச்சிப் பொறிகளை அமைத்து ஆண் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். ஏக்கருக்கு முட்டை ஒட்டுண்ணியான டிரைக்கோகிரம்மா பிரேசியன்சிசை 40,000 என்னுமளவில் ஒரு வார இடைவெளியில் ஆறுமுறை வெளியிடலாம். பூச்சித் தாக்குதல் தீவிரமானால், ஏக்கருக்கு இமாமெக்டின் பென்சோயேட் 5 சதவீத மருந்து 80 கிராம் அல்லது ப்ளுபென்டமைடு 20 WDG 150 கிராம் என்னுமளவில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

வெள்ளை ஈக்கள்

கோடைக் காலத்தில் கத்தரிச் செடிகளில் வெள்ளை ஈக்களின் தாக்குதல் மிகுதியாகக் காணப்படும். இலைச் சாற்றை உறிஞ்சிக் குடிப்பதால் இலைகள் பச்சை நிறத்தை இழந்து மஞ்சளாக மாறிவிடும். நாளடைவில் அந்த இலைகள் காய்ந்து உதிர்ந்து விடும். இவற்றைக் கட்டுப்படுத்த, மஞ்சள் நிற ஒட்டுப் பொறியை ஏக்கருக்கு 5 என்னுமளவில் வைக்க வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு வேப்ப எண்ணெய் 3 மில்லி, டீப்பால் ஒட்டுப்பசை 1 மில்லி என்னுமளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

புள்ளி வண்டுகள்

புள்ளி வண்டுகள் இலைகளின் பச்சையத்தைச் சுரண்டி விடுவதால் இலைகள் சல்லடையைப் போலக் காணப்படும். மேலும், ஒளிச்சேர்க்கை பாதிக்கப்படுவதால் செடிகள் வளர்ச்சிக் குன்றி இருக்கும். நாளடைவில் இலைகள் காய்ந்து உதிர்ந்து விடும். இவற்றைக் கட்டுப்படுத்த, இலைகளில் உள்ள வண்டினப் புழுக்களையும், முட்டைக் கூடுகளையும் சேகரித்து அழிக்க வேண்டும். ஏக்கருக்குப் பத்துப் பறவை தாங்கிகளை வைக்க வேண்டும். பூச்சித் தாக்குதல் தீவரமானால், ஒரு லிட்டர் நீருக்கு புரோபனோபாஸ் 1 மில்லி என்னுமளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

தத்துப்பூச்சிகள்

இவை, இலைகளின் சாற்றை உறிஞ்சிச் சேதத்தை ஏற்படுத்தும். தாக்குதலுக்கு உள்ளான இலைகள் மஞ்சளாக மாறிக் காய்ந்து சருகாகி விடும். மேலும், இப்பூச்சிகள் சிற்றிலை நோயை ஏற்படுத்தும் நச்சுயிரியையும் பரப்பும். இவற்றைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 5 மஞ்சள் ஒட்டுப்பொறிகளையும் 2 விளக்குப்பொறிகளையும் அமைத்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்க வேண்டும். பூச்சிகளின் எண்ணிக்கை அதிகமானால், ஒரு லிட்டர் நீருக்கு இமிடாகுளோபிரிட் 0.5 மில்லி அல்லது தையோமித்தாக்சாம் 0.4 கிராம் என்னுமளவில் தெளித்துத் தத்துப்பூச்சியின் தாக்குதலில் இருந்து செடிகளைப் பாதுகாக்கலாம்.

நோய்கள்

நாற்றழுகல் நோய்: இந்நோய் நாற்றங்காலில் தோன்றி மிகுதியான சேதத்தை ஏற்படுத்துகிறது. இது இரண்டு முறைகளில் செடிகளைத் தாக்கும். முதலில் விதை முளைத்து வெளிவருவதற்கு முன் தாக்கி, விதையுறைகளை அழுகச் செய்து சேதத்தை ஏற்படுத்தும். இரண்டாவதாக, நாற்றுகள் வெளிவந்த பின் மண் பரப்புக்கு மேலுள்ள தண்டுப்பகுதியை அழுகச் செய்யும். இதனால் நாற்றுகள் திட்டுத் திட்டாக ஒடிந்து கீழே சாய்ந்து காணப்படும். நாற்றங்காலில் இருக்கும் அதிக ஈரப்பதம் நோய்த் தாக்குதலுக்கு முக்கியக் காரணமாகும்.

இதைக் கட்டுப்படுத்த, ஒரு கிலோ விதைக்கு கார்பன்டசிம் 2 கிராம் அல்லது டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 10 கிராம், 1 கிலோ என்னுமளவில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.  நோயின் அறிகுறி நாற்றங்காலில் தெரிந்ததும், ஒரு லிட்டர் நீருக்கு கார்பன்டாசிம் 2 கிராம் அல்லது காப்பர் ஆக்ஸி குளோரைடு 2.5 கிராம் என்னுமளவில் கலந்து வேர்ப்பகுதி நன்கு நனையுமாறு ஊற்ற வேண்டும்.

வாடல் நோய்: இந்த நோயால் தாக்கப்பட்ட செடிகளின் இலைகள் மற்றும் காய்கள் வாடிக் காணப்படும். நோய் தீவிரமாகும் போது செடி முழுவதும் காய்ந்து விடும்.  செடியைப் பிடுங்கி நீளவாக்கில் வெட்டிப் பார்த்தால் உட்புறத் திசுக்கள் கரும் பழுப்பு நிறமாக மாறிக் காணப்படும். இதைக் கட்டுப்படுத்த, ஒரு கிலோ விதைக்கு கார்பென்டாசிம் 2 கிராம் அல்லது டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம், என்னுமளவில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஏக்கருக்கு ஒரு கிலோ பிளீச்சிங் பௌடரை மணலுடன் கலந்து தெளிக்கலாம். ஒரு லிட்டர் நீருக்கு கார்பன்டசிம் 2 கிராம் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு 2.5 கிராம் என்னுமளவில் கலந்து, நோய்க்கு உள்ளான செடிகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள செடிகளின் வேர்ப்பகுதி நனையுமாறு ஊற்ற வேண்டும்.

சிற்றிலை நோய்: இந்நோய் தாக்கிய செடிகள் வளர்ச்சிக் குன்றிக் குட்டையாகக் காணப்படும்.  இலைகள் சிறுத்தும் வெளிர் பச்சையாகவும் மாறிக் காணப்படும். செடிகள் பூக்காமல் மலடாக இருக்கும். செடிகளின் பக்கக் கிளைகள் வளர்ந்து கொத்தாகக் காணப்படும். இந்நோயானது தத்துப்பூச்சிகளால் பரப்பப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த, நோயுற்ற செடிகளை வேருடன் பிடுங்கி அழிக்க வேண்டும். மேலும், ஸ்ரெப்டோசைக்ளின் 200-250 பிபிஎம் மருந்தைத் தெளிக்க வேண்டும். தத்துப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 80 மில்லி இமிடாகுளோபிரிட் என்னுமளவில் தெளிக்க வேண்டும். மேலும், தகவல்களுக்கு 04182-201525, 293484 ஆகிய எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்.


கத்தரி Narayanan e1645014878842

.நாராயணன்,

தொழில் நுட்ப வல்லுநர், வேளாண்மை அறிவியல் நிலையம்,

கீழ்நெல்லி, திருவண்ணாமலை மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!