கறவை மாடுகளில் சினை வாய்ப்புகளை அதிகரித்தல்!

கறவை மாடு p1010390.width 1400

கட்டுரை வெளியான இதழ்: மே 2021

ன்றைய சூழலில் கறவை மாடுகளின் இனவிருத்திக்குப் பெரும்பாலும் செயற்கை முறை கருவூட்டலையே பயன்படுத்துகிறோம். ஆனாலும், இம்முறையிலும் சினைப் பிடிப்புக்குக் காலதாமதாகிறது, சில நேரங்களில் மாடுகள் சினையாவதே இல்லை. இதற்கான காரணங்களையும் தீர்வுகளையும் தீர்வுகளை இங்கே காணலாம்.

கறவை மாடுகளின் இனப்பெருக்க உறுப்புகள்

முதலில் கறவை மாடுகளின் இனப்பெருக்க உறுப்புகள் பற்றிய தெளிவு அவசியம். இனப்பெருக்க உறுப்பானது பிறப்புறுப்பில் தொடங்கிச் சூலகம் அல்லது அண்டகத்தில் முடிகிறது. அதாவது, பிறப்புறுப்பு, யோனி, கருப்பை வாய், கருப்பை, கருக்குழாய் மற்றும் சூலகம் அல்லது அண்டகம் வரை இதில் அடங்கும். இதில் பெண்முட்டை எனப்படும் சினை முட்டை அண்டகத்தில் தோன்றும். இந்த முட்டையுடன் ஆண் விந்தணு சேர, கருக்குழாயில் கருத்தரித்தல் நடக்கும். கருப்பையில் இப்படி உருவான கரு, கருப்பைச் சுவரில் ஒட்டி, கன்றுக் குட்டியாக வளரும்.

முழு வளர்ச்சியடைந்த பின் கருப்பை வாய் நன்கு திறந்து யோனி மற்றும் பிறப்புறுப்பு நன்கு தளர்வுற்ற பின் பசுவானது கன்றை ஈனுகிறது. இதில், கருப்பை வாயானது இரு சமயங்களில் மட்டுமே திறந்திருக்கும். அதாவது, கன்றை ஈனும்போது கன்றின் அளவில் பெரிதாகவும், சினைப்பருவத்தில் சினையூசி உட்செல்லும் அளவில் சிறிதாகவும் திறந்திருக்கும். எனவே, கருப்பை வாய் திறந்திருந்தால் மட்டுமே கருப்பைக்குள் சினையூசி செல்ல முடியும்.

சினைப்பருவச் சுழற்சி மற்றும் சினைப்பருவ அறிகுறிகள்

கறவை மாடு வளர்ப்போர் சினைப்பருவ சுழற்சியை நன்கு அறிந்திருக்க வேண்டும். ஒரு மாடு கன்றை ஈன்ற பின்பு 30-45 நாட்களில் முதல் சினைப்பருவத்தைக் காட்டும். அதிலிருந்து ஒவ்வொரு 18-21 நாட்களுக்கு ஒருமுறை சினைப்பருவத்தை வெளிப்படுத்தும். அண்டகத்தில் தரமான சினை முட்டை நன்கு வளர்ந்த நிலையில் இருந்தால் மட்டுமே, சினைப்பருவம் வெளிப்படும். அண்டகத்தில் இருந்து சினை முட்டை வெளியேறி, கருக்குழாய்க்குள் சென்று விட்டால் சினைப்பருவம் அடங்கி விடும். இந்தச் சினைப்பருவம் 18-24 மணி நேரம் இருக்கும்.

இந்தச் சமயத்தில் மாடுகளில் சினைப்பருவ அறிகுறிகள் வெளிப்படும். மற்ற மாட்டின் மீது தாவுதல், கத்துதல், குறைவாக தீவனம் உண்ணுதல், பால் சுரப்புக் குறைதல், மற்ற பசுக்களுக்குத் தொல்லை கொடுத்தல், மற்ற மாடுகளைத் தன் மீது தாவ அனுமதித்தல், பிறப்பு உறுப்பிலிருந்து கண்ணாடி போன்ற திரவம் வடிதல், பிறப்புறுப்பு தடித்திருத்தல், அதன் உட்பகுதி சிவந்திருத்தல் ஆகிய அறிகுறிகளையோ இவற்றில் சிலவற்றையோ வெளிப்படுத்தும்.

இவற்றில் சிறந்த அறிகுறியாக இருப்பது, பிறப்பு உறுப்பிலிருந்து கண்ணாடியைப் போன்ற திரவம் வடிதலாகும். இந்தத் திரவத்தின் பெரும்பகுதி, கருப்பைவாய்ச் செல்களில் இருந்து சுரக்கிறது. இதன் முக்கியப் பணி, இயற்கை முறை இனப்பெருக்கத்தில் காளையின் ஆணுறுப்பு, பெண்ணுறுப்பில் செல்லும்போது, வழவழப்புத் தன்மையை ஏற்படுத்தி, யோனியைப் பாதுகாப்பதும், இறந்த விந்தணுக்களை நீக்குவதுமாகும்.

மூட நம்பிக்கைகள்

சினையூசியைப் போட்ட பிறகு, இறந்த விந்தணுக்கள் மட்டும் கண்ணாடி போன்ற திரவத்துடன் வழிந்து விடும். இந்த நிகழ்வை, சினையூசியின் விந்தணுக்கள் முழுவதும் இந்தத் திரவத்துடன் வெளிவந்து விட்டதெனத் தவறாகப் கருதி, சினையூசியைப் போட்டதும், மாட்டைப் படுக்க விடாமல், மரத்தில் தூக்கிக் கட்டி விடுகின்றனர். இதனால் சினையூசியில் உள்ள விந்தணுக்கள் வெளியே வராது என மனக்கணக்குப் போடுகின்றனர். ஆனால், இந்தச் செயலால் தேவையில்லாத மன உளைச்சல் பசுவுக்கு ஏற்பட்டு, சினை தங்காது போகலாம்.

இதுமட்டுமின்றி, சினையூசியைப் போட்ட பின்பு அன்று மாலை வரை தீவனம் தராமல் விட்டு விடுகின்றனர். தீவனத்தைக் கொடுத்தால் வயிறு பெரிதாகி விந்தணுக்களை வெளித்தள்ளி விடும் என எண்ணுகின்றனர். ஆனால் இறந்த விந்தணுக்கள் அவ்வளவும் இந்தத் திரவத்தினால் வெளியேற்றப்படும் என்பது தான் உணமை. உயிருள்ள, தரமான விந்தணுக்கள் எக்காரணம் கொண்டும் வெளியே தள்ளப்படுவதில்லை. எனவே, மாட்டை மரத்தில் தூக்கிக் கட்டுவது, தீவனம் கொடுக்காமல் மாட்டைப் பட்டினி போடுவது போன்ற செயல்களைத் தவிர்த்து, மாட்டை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும்.

சினையூசி போடும் நேரம்

சினைப்பருவம் 18-21 நாட்களுக்கு ஒருமுறை வரும். பசு சினையாக வேண்டுமென்றால் அதன் சினை முட்டையும், ஆணின் விந்தணுவும் சேர வேண்டும். பொதுவாகச் சினையூசி போட்ட பின் விந்தணு 24 மணி நேரம் வரை பசுவின் இனப்பெருக்க உறுப்பில் உயிருடன் இருக்கும். சினைப்பருவம் முடிந்து 12 மணிநேரம் கழித்துத் தான் அண்டகத்தில் இருந்து சினைமுட்டை வெளியேறும். அப்படி வெளியேறிய சினை முட்டையானது 6 மணி நேரம் மட்டுமே தரமானதாக மற்றும் கருத்தரித்து வளரும் தன்மையில் இருக்கும்.

விந்தணுவானது 6-10 மணி நேரம் பசுவின் இனப்பெருக்க உறுப்பில் நீந்திச் செல்ல வேண்டும். ஏனெனில், அப்போதுதான் அந்த விந்தணுக்கள் சினை முட்டையைத் துளைக்கும் சக்தியைப் பெறும். எனவே, சினைப்பருவம் தொடங்கியதும் சினையூசியைப் போட்டால், சினை முட்டையைக் கருத்தரிக்கச் செய்யும் காலத்துக்கு முன் விந்தணுக்கள் அனைத்தும் இறந்து விடும். இதைப் போலவே, சினைப்பருவம் முடியும் போது அல்லது முடிந்தபின் சினையூசியைப் போட்டால், விந்தணுக்கள் சினை முட்டையைத் துளைக்கும் சக்தியைப் பெறாததால் பசு சினையாகாமல் போகலாம்.

எனவே, கறவை மாட்டில் சினைப்பருவம் தொடங்கி 12-18 மணி நேரத்துக்குள் சினையூசியைப் போடுவதே சரியாக இருக்கும். காலையில் சினைப்பருவம் தெரிந்தால் மாலையிலும், மாலையில் அறிகுறிகள் தெரிந்தால் மறுநாள் காலையிலும் சினையூசியைப் போடலாம். அதிகாலை அல்லது அந்திமாலை சினையூசியைப் போட உகந்த காலமாகும்.

சில மாடுகள் சினைப்பருவ அறிகுறிகளை ஒன்றுக்கு மேற்பட்ட நாட்கள் காட்டும். அத்தகைய மாடுகளுக்கு 12 மணி நேரத்துக்கு ஒருமுறை சினையூசியைப் போட வேண்டும். இப்பிரச்சினை கணநீர்க் குறையால் ஏற்படுகிறது. இத்தகைய பசுக்களைப் பண்ணையில் இருந்து நீக்கிவிட வேண்டும். நிறையப் பாலைத் தரும் மாடாக இருப்பின், தகுந்த கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை தரலாம். அல்லது பருவம் முடியும் வரை 12 மணி நேரத்துக்கு ஒருமுறை சினையூசியைப் போட வேண்டும். எனினும், சினைப்பிடிக்கும் வாய்ப்புக் குறைவாகவே இருக்கும். காரணம், இத்தகைய பசுக்களின் சினை முட்டைகள் நாட்பட்டு அண்டகத்திலிருந்து வெளி வருவதால் தரம் குறைந்திருக்கும். மேலும், அமாவாசை, பௌர்ணமி என்று காத்திருக்காமல் சினைப்பருவ அறிகுறிகள் தென்பட்டதும் 12 மணி நேரம் கழித்துச் சினையூசியைப் போட்டுவிட வேண்டும்.

சினையாகி விட்டால் பாலுற்பத்திக் குறையுமா?

பசு ஈன்று 45 நாட்களுக்குள் முதல் சினைப்பருவத்தை வெளிப்படுத்தும். இதற்கடுத்து வரும் இரண்டாம் சினைப்பருவத்தில் சினையூசியைப் போட்டால்  கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம். அதைத் தவிர்த்து, பசு ஈன்று இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை எனவும், இப்போதே பசு சினையாகி விட்டால் பால் குறைந்து விடும் எனவும் தவறாக நினைத்து, சினையூசி போடுவதை விவசாயிகள் தவிர்க்கின்றனர். பசு ஈன்று 5-6 மாதங்கள் கழித்துச் சினையூசியைப் போடுகின்றனர். இது தேவையில்லாத காலதாமதத்தை ஏற்படுத்தும்.

ஒவ்வொரு பசுவும் ஒவ்வொரு ஈற்றிலும் 305 நாட்களுக்குத் தரமான பாலைக் கொடுக்கும். ஈன்ற ஒன்றரை மாதத்தில் இருக்கும் பாலுற்பத்தி அடுத்த 7 மாதங்களுக்கு ஏறக்குறைய ஒரே அளவாக இருக்கும். இதற்குப் பின்னர் உற்பத்தி படிப்படியாகக் குறையும். பத்து மாதங்கள் கழித்துப் பாலுற்பத்தி வெகுவாகக் குறைவதுடன், பாலில் உப்புத் தன்மை அதிகமாகி விடும். இது பசு சினையானாலும் ஆகா விட்டாலும் ஏற்படும் நிலையாகும்.

பாலுற்பத்தி அதிகமாக இருக்கும் அந்த 45 நாளில் உடலில் அனைத்துச் சத்துகளும் தகுந்தளவில் இருக்கும். கருப்பைக்கும் வேண்டிய சத்துகள் கிடைக்கும். ஏனெனில், பசு ஈன்றதும் அதைச் சிறந்த முறையில் விவசாயிகள் பராமரிப்பார்கள். இந்தக் காலத்தில் பசுவைச் சினைப்படுத்துவது சாலச் சிறந்ததாகும். காலம் தாழ்ந்த பசுக்களில் தாதுப்புகள், வைட்டமின்கள் போன்ற சத்துக் குறைகள் அதிகமாகி, பசு சினைப் பிடிப்பது தள்ளிப் போகும். இதனால், பால் வற்றிய நிலையில் பசுவைப் பராமரிக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு கன்று என்னும் இலாப இலக்கை எட்ட முடியாது. எனவே, கறவை மாடுகள் வளர்ப்பில் இலாபத்தை ஈட்ட வேண்டுமானால், பசு ஈன்று 45-60 நாட்களில் மீண்டும் சினையாக வேண்டும்.

சினைப்பருவ அறிகுறிகளைக் காணத் தவறுதல்

கறவை மாடுகளை வளர்ப்போர், பாலைக் கறப்பதற்கு முன், காலை மாலையில் மாடுகளை நன்றாகக் கவனிக்க வேண்டும். மாடுகளின் பிறப்பு உறுப்பிலிருந்து கண்ணாடி போன்ற திரவம் வழிந்திருக்கிறதா எனவும், மற்ற சினைப்பருவ அறிகுறி உள்ளதா எனவும் கவனித்துப் பார்க்க வேண்டும். சினைப்பருவ அறிகுறிகளைக் கவனிக்கத் தவறினால், மாடுகள் சினையாவது தள்ளிக்கொண்டே போகும். இது பொருளாதார இழப்பை ஏற்படுத்தும்.

சினையூசி போடுபவரின் கடமைகள்

சினையூசியைப் போடுபவர் காலம் தாழ்த்தி வருவதைத் தவிர்க்க வேண்டும். நன்கு பராமரிக்கப்படும் திரவ நைட்ரஜன் குடுவையில் சினையூசியைக் கொண்டு வந்து சரியான முறையில், மிதமான வெந்நீரில் சினையூசியை 30 விநாடிகள் போட்டு உடனே பயன்படுத்த வேண்டும். ஏனெனில், திரவ நைட்ரஜன் குடுவையில் இருந்து எடுத்த 10 நிமிடங்களில் சினையூசியில் உள்ள விந்தணுக்கள் செயலிழந்து போகும்.

எனவே இதுவரை கூறிய வழிமுறைகளைப் பின்பற்றினால் ஆண்டுக்கு ஒரு கன்று என்னும் இலாப நிலையை விவசாயிகள் அடையலாம். 


முனைவர் .இலட்சுமிகாந்தன்,

முனைவர் வி.செ.வடிவு, முனைவர் அரங்க.மதிவாணன், 

பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், திருப்பூர்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!