எள்ளில் மகசூலைக் கூட்டுவது எப்படி?

வடுவூர் புதுக்கோட்டை குபேந்திரன் சாதனை

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019

மிழ்நாட்டில் மானாவாரி மற்றும் இறவையில் எள் பயிரிடப்படுகிறது. இதற்கு அதிகளவில் நீர் தேவையில்லை. மேலும், அதிக வெப்பத்தையும் தாங்கி வளரும். பொதுவாக எள்ளானது விதைப்பு முறையில் பயிரிடப்படும். இம்முறையில் ஏக்கருக்கு 1-3 குவிண்டால் மகசூல் கிடைக்கும். இது மிகவும் குறைவான மகசூலாகும். இந்நிலையில், திருவாரூர் மாவட்டம், வடுவூர் புதுக்கோட்டையைச் சேர்ந்த முன்னோடி விவசாயி குபேந்திரன், நடவு முறையில் எள்ளைப் பயிரிட்டு, ஏக்கருக்கு 6 குவிண்டால் மகசூலைப் பெற்றுள்ளார். இது எப்படி முடிந்தது?

குபேந்திரன் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தொடர்பு விவசாயி ஆவார். தனக்குத் தேவைப்படும் சாகுபடி உத்திகளை இங்குள்ள விஞ்ஞானிகளிடம் கேட்டு அதன்படி செயல்படுவது இவரது வழக்கம். இவ்வகையில், எள் சாகுபடிக்குத் தேவையான உத்திகளைக் கேட்டுத் தெரிந்து கொண்ட குபேந்திரன், பிப்ரவரி மார்ச் மாதங்களில் வரும் மாசிப் பட்டத்தில் நாற்று முறையில் ஒரு ஏக்கரில் சாகுபடி செய்யத் திட்டமிட்டார்.

நாற்றங்கால் தயாரிப்பு

இதையடுத்து ஒரு ஏக்கருக்குத் தேவையான ஐந்து சென்ட் நாற்றங்காலைத் தயாரித்தார். அதில் நன்கு மட்கிய 200 கிலோ தொழுவுரத்தை அடியுரமாக இட்டார். ஒரு ஏக்கர் எள் சாகுபடிக்கு நாற்றுவிட 300-500 கிராம் விதை போதும். இதற்காக டி.எம்.வி.7 என்னும் எள் இரகத்தைத் தேர்வு செய்தார்.

விதை நேர்த்தி

இந்த விதைகளை முதலில், ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் எடுத்து, சூடோமோனாஸ் பூசணக்கொல்லியில் கலந்து விதைநேர்த்தி செய்தார். அடுத்து, ஒரு பொட்டலம் அசோஸ்பயிரில்லத்துடன் கலந்து விதைநேர்த்தி செய்தார். உயிர் உரத்துடன் நேர்த்தி செய்த பிறகு பூசணக்கொல்லியுடன் விதைநேர்த்தி செய்யக்கூடாது என்பதில் அவர் மிகக் கவனமாக இருந்தார்.

விதைநேர்த்தியின் பயன்கள்

இப்படி, பூசணக்கொல்லியில் விதைநேர்த்தி செய்தால், விதை மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தலாம். அதைப்போல, நுண்ணுயிர் உரமான அசோஸ்பயிரில்லத்தில் விதைநேர்த்தி செய்தால், இட வேண்டிய தழைச்சத்தில் கால் பாகத்தைக் குறைத்தே இடலாம். எனவே, குபேந்திரன், இந்த முறைகளில் விதைநேர்த்தி செய்து நாற்றங்காலில் விதைக்க, அந்த விதைகள் திடமாகவும் வளமாகவும் வளர்ந்தன.

நிலத் தயாரிப்பு

இதையடுத்து, ஏக்கருக்கு ஐந்து டன் தொழுவுரத்தை அடியுரமாக இட்டு நிலத்தை நன்கு உழுது தயார் செய்தார். மேலும், 30 கிலோ யூரியா, 60 கிலோ சூப்பர் பாஸ்பேட், 15 கிலோ பொட்டாசையும் அடியுரமாக இட்டார். பிறகு 18 நாள் நாற்றுகளைப் பறித்து நடவு செய்தார். பயிருக்குப் பயிர், வரிசைக்கு வரிசை 30 செ.மீ. இடைவெளியில் நட்டு முடித்தார்.

இடைவெளியின் நன்மைகள்

இப்படி நடும்போது சதுர மீட்டருக்கு 11 செடிகள் இருக்கும். நமது பழமொழி சொல்வதைப் போல, முழத்துக்கு ஒன்று அடிக்கு ஒன்று என்று இடைவெளி விடுவதால், பயிர்களுக்குச் சூரியவொளியும் காற்றும் நன்றாகக் கிடைக்கும். இதனால், செடிகளின் அடியிலிருந்தே கிளைகள், பூக்கள், காய்கள் என உருவாகி விளைச்சல் பெருகும். அதனால், இந்த இடைவெளி உத்தியையும் குபேந்திரன் கடைப்பிடித்தார். நடவு முடிந்த சில நாட்கள் கழித்து ஒரு ஏக்கருக்குத் தேவையான 2 கிலோ மாங்கனீஸ் சல்பேட்டை 20 கிலோ மணலில் கலந்து தூவி விட்டார்.

களை நிர்வாகம்

மகசூலைக் குறைக்கும் காரணிகளில் களைக்கு முக்கியப் பங்குண்டு. பயிருக்கு இடும் உரத்தையும் நீரையும் போட்டிப் போட்டு உறிஞ்சுவதால், பயிர்களின் வளர்ச்சியும் விளைச்சலும் மிகவும் பாதிக்கும். மேலும், பூச்சிகள் நோய்கள் உருவாகவும் இக்களைகள் காரணமாக இருக்கும். எனவே, எள் செடிகள் முளைத்து நாற்பது நாட்கள் வரையில் களைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதைக் கவனத்தில் கொண்ட குபேந்திரன், செடிகள் முளைத்து 15-20 நாளில் ஒருமுறையும், அடுத்து, 35-40 நாளில் ஒருமுறையும் களையெடுத்தார்.

பாசனம்

எள் செடிகள் முளைத்து ஐந்து இலை விடும்போது ஒருமுறையும், பிறகு பூக்கள், காய்கள் தோன்றும் போது ஒருமுறையும் பாசனம் கொடுக்க வேண்டும். பொதுவாக எள் பயிருக்கு 3-5 முறை பாசனம் செய்தால் போதும். அதுவும் மண்ணின் தன்மைக்கு ஏற்ப, பாசனம் செய்ய வேண்டும். இதன்படி, நடவு நீருக்குப் பிறகு உயிர்நீரைக் கொடுத்த குபேந்திரன், தேவையான சமயத்தில் மட்டும் பாசனம் செய்தார்.

பயிர் ஊக்கிப் பயன்பாடு

எள்ளை விதைத்த 40 ஆம் நாள் ஏக்கருக்கு 150 மில்லி பிளானோபிக்ஸ் (40 பிபிஎம்) மற்றும் ஒரு சத டிஏபி கரைசலையும் சேர்த்து மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும். விளைச்சலைக் கூட்ட உதவும் இந்த உத்தியையும் குபேந்திரன் பயன்படுத்தினார்.

அறுவடை

நன்கு விளைந்து விட்டால் எள் செடிகளின் அடியில் இலைகள் உதிர்ந்து கிடக்கும். செடிகளில் இருக்கும் இலைகள் மஞ்சளாகி விடும். தண்டின் மத்திய பாகம் வரை காய்கள் மஞ்சளாக இருக்கும். தண்டின்  கீழிருந்து  பத்தாவது காயை உடைத்துப் பார்த்தால், எள் கறுப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் இருக்கும். வெள்ளை எள்ளுக்கு இந்த அடையாளம் பொருந்தாது.

இந்தச் சமயத்தில் செடிகளை அறுவடை செய்த குபேந்திரன், அவற்றைச் சுத்தமான களத்தில் காய்கள் உள்பக்கமும், தண்டுப்பகுதி வெளிப்பக்கமும் இருக்கும்படி வட்டமாக அடுக்கி ஆம்பல் பிடிக்க விட்டு, ஐந்தாம் நாள் அந்தக் குவியலைப் பிரித்து வெய்யிலில் நன்றாகக் காய வைத்து எள்ளைப் பிரித்து எடுத்தார். இதில் 6 குவிண்டால் எள் மகசூலாகக் கிடைத்தது.

வயலாய்வு

குபேந்திரனின் எள் வயலை ஆய்வு செய்த போது, ஒரு செடியில் 15-20 கிளைகளும், ஒரு கைப்பிடிக்குள் ஏழு காய்களும் இருந்தன. எனவே, வாய்ப்புள்ள விவசாயிகள் எள்ளை நாற்று விட்டு, சரியான இடைவெளியில் நடவு செய்து, மிக எளிமையான உத்திகளைக் கடைப்பிடித்தால், நல்ல விளைச்சலையும், அதன் மூலம் கூடுதல் வருமானத்தையும் பெற முடியும். மேலும் விவரங்களுக்கு 86374 44154 என்னும் எண்ணில் பேசலாம்.


DR.A.RAJESH KUMAR

முனைவர் ஆ.இராஜேஸ்குமார்,

முனைவர் மு.இராமசுப்ரமணியன், துரை.நக்கீரன், வேளாண்மை அறிவியல் நிலையம், 

நீடாமங்கலம், திருவாரூர்-614404.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!