தரமான தென்னங்கன்றை உற்பத்தி செய்வது எப்படி?

தென்ன dsc02605 e1612292647697

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020

தென்னை, சத்தான இளநீர், எண்ணெய், நார், ஓலை என, மதிப்புமிகு பொருள்களைத் தருகிறது. எண்பது ஆண்டுகள் வரையில் பயனைத் தரும் தென்னையின் காய்க்கும் திறன், நட்டதில் இருந்து பத்து ஆண்டுகள் கழித்தே தெரிய வருகிறது.

எனவே, தரமில்லாக் கன்றுகள் மரங்களானால் அவற்றால் விவசாயிகளுக்கு இழப்பே ஏற்படும். அதனால், விதைக்காய்த் தேர்வில் கவனம் வேண்டும். சிறப்பான தென்னை சாகுபடிக்கு நாற்றங்காலே அடித்தளமாக இருப்பதால், தென்னை நாற்றுகள் உற்பத்திக் குறித்த விழிப்புணர்வு அவசியமாகும்.

தென்னங்கன்று உற்பத்தி

தோப்புத் தேர்வு: அதிகக் காய்ப்புத் திறனுள்ள மரங்களில் இருந்து விதைகளை எடுக்க வேண்டும். வீடு, கொட்டில், எருக்குழி போன்ற, வளர்ச்சிக்கு உகந்த சூழல்களில் உள்ள மரங்களின் காய்களை விதைக்கக் கூடாது. பூச்சி, நோயுள்ள தோப்புகளில் இருந்தும் விதைக்காய்களை எடுக்கக் கூடாது.

தாய்மரத் தேர்வு: தாய்மரம் 25-60 வயதில் இருக்க வேண்டும். நிலையான மகசூலைத் தரும் நிலையில், 15 வயது மரங்களையும் தாய்மரமாகக் கொள்ளலாம். எடுத்துக்காட்டு: சாவக்காடு குட்டை. அறுபது வயதைக் கடந்த மரங்களைத் தாய்மரமாகக் கொள்ளக் கூடாது.

தாய்மரம் மாதம் ஓர் ஓலையும் பாளையும் விட்டுச் சீரான மகசூலைத் தர வேண்டும். ஆண்டு முழுவதும் பல்வேறு முதிர்வு நிலைகளில் 12 குலைகள் இருக்க வேண்டும். இயல்புக்கு மாறான உருவம் மற்றும் ஒல்லிக்காய்களைக் காய்க்கக் கூடாது.

நேராக வளர்ந்து, நெருக்கமான ஓலைகளுடன் இருக்க வேண்டும். கொண்டைப்பகுதி முப்பதுக்கும் மேற்பட்ட ஓலைகளுடன் குடையாக விரிந்திருக்க வேண்டும்.

குலைகளைத் தாங்கிப் பிடிக்கும் வகையில் அடிமட்டைகள் இருந்தால், குலைகள் சரிவதையும், குரும்பைகள் உதிர்வதையும் தடுக்கலாம். ஒரு பாளையில் 25க்கு மேற்பட்ட பெண் பூக்கள் இருக்க வேண்டும். இறவையில் ஓராண்டில் ஒரு மரம் சராசரியாக 100 காய்களையும், மானாவாரியில் 80 காய்களையும் தர வேண்டும்.

மட்டை உரிக்கப்பட்ட காயின் எடை குறைந்தது 600 கிராம், கொப்பரையின் எடை 150 கிராம் இருக்க வேண்டும்.

விதைக்காய் முதிர்வு

பாளைகள் வெடித்து 11-12 மாதங்களில் நெட்டை வகைகளிலும், 10-11 மாதங்களில் குட்டை வகைகளிலும் காய்கள் முதிரும். நன்கு முதிர்ந்த குலையில் ஏதேனும் ஒரு காய் காய்ந்திருந்தால், அந்தக் குலை அறுவடைக்கு ஏற்றதாகும்.

விதைக் காய்கள் காயம் படாமல் இருக்க, குலையைக் கயிற்றில் கட்டி இறக்க வேண்டும். பிப்ரவரி-ஆகஸ்ட் காலத்தில் விதைக் காய்களை அறுவடை செய்தால் நன்கு முளைக்கும்.

விதைக்காய்த் தேர்வு

உருண்டை அல்லது நீளவடிவில் நடுத்தரமாக இருக்க வேண்டும். பருப்புச் சீராகவுள்ள காய்கள் நீரில் நேராக மிதக்கும். குறைந்த மட்டைப் பெருக்கம் அல்லது நீள்வட்டக் காய்கள் வீரியமான கன்றுகளாக முளைக்கும்.

சீரான எடையில், வாடிய மட்டையுடன், போதிய நீருடன், தட்டிப் பார்த்தால் உலோக ஓசையுடன் விதைக்காய் இருக்க வேண்டும். நீரில்லாக் காய் முளைக்காது.

விதைக்காய்ச் சேமிப்பு

அறுவடை செய்து 1-2 மாதங்களில் நெட்டை விதைகளையும், 10-15 நாட்களில் குட்டை விதைகளையும் விதைத்து விட வேண்டும். காய்களைத் திடப்படுத்தி விதைத்தால், நல்ல முளைப்புத் திறனுடன் தரமான கன்றுகளாக அமையும்.

திடப்படுத்தும் போது மட்டையின் பச்சை அல்லது பழுப்பு நிறம் மங்கி, காயின் எடை குறையும். அதனால், நெட்டை மற்றும் வீரிய ஒட்டுக் காய்களை ஒரு மாதமும், குட்டைவகைக் காய்களை 15 நாட்களும், மணலில் பரப்பி ஓலைகளால் மூடிக் காயவிட வேண்டும்.

காம்பு மேலே இருக்குமாறு, காய்களை 8 செ.மீ. உயரமுள்ள மணலிடுக்கில் வைத்து மூடிவிட வேண்டும். இப்படி ஒன்றின் மேல் ஒன்றாக ஐந்து காய்களை அடுக்கலாம். இதனால், காய்களில் உள்ள நீர் வற்றாமல் இருக்கும். தேவைக்கேற்ப, மணலில் நீரைத் தெளிக்க வேண்டும். நிழல் மற்றும் மணல் சார்ந்த நிலத்திலும் விதைக் காய்களைச் சேமித்து வைக்கலாம்.

நாற்றங்கால்

நல்ல வடிகால் மற்றும் மணல் சார்ந்த அல்லது வண்டல் மண்ணாக இருக்க வேண்டும். மணல் சார்ந்த இடத்தில் கன்றுகளை எளிதாக எடுக்க முடியும். செம்பொறை மண்ணில் நாற்றங்கால் அமைக்க, நிறைய மணலைக் கொட்ட வேண்டும்.

பாறை நிறைந்த, மண்கண்டம் குறைந்த மற்றும் களிமண், சதுப்பு மண் நாற்றங்காலுக்கு ஆகாது. 4.5-8.5 கார அமில நிலையில் கன்றுகள் வளரும் என்றாலும், இது 5.5-7.0 அளவில் இருப்பதே நல்லது.

தென்னை வரிசைகளுக்கு இடையிலும் நாற்றங்காலை அமைக்கலாம். திறந்த வெளியெனில், 50-75% நிழல் வலையைப் பயன்படுத்தலாம். ஆயிரம் காய்களைப் பதியம் போட, 120 ச.மீ. இடம் தேவை. நெகிழிப் பைகளில் ஆயிரம் கன்றுகளை உற்பத்தி செய்ய 200 ச.மீ. நிலம் தேவை.

பாசனம் மற்றும் போக்குவரத்து வசதியுள்ள இடத்தில் நாற்றங்கால் இருக்க வேண்டும். மர ஆலை, எருக்குழி போன்ற, நோய்கள், பூச்சிகளின் புகலிடங்களுக்கு அருகில் நாற்றங்கால் இருக்கக் கூடாது. நல்ல வேலியுடன், தேவைப்படும் பொருள்களை வைப்பதற்கான கொட்டகையும் இருக்க வேண்டும்.

நன்கு பண்படுத்தப்பட்ட நிலத்தில், 10-20 செ.மீ. உயரம், 1.5 மீ. அகலம், 2 மீ. நீளத்தில் மேட்டுப் பாத்திகளை அமைக்க வேண்டும். மட்டப் பாத்திகளாகவும் அமைக்கலாம். பராமரிக்க ஏதுவாக, பாத்திகளுக்கு இடையில் 0.75-1.0 மீ. அகலத்தில் பாதை இருக்க வேண்டும்.

கரையான் தாக்கும் நிலத்தில் 0.05% குளோர்பைரிபாஸ் கரைசலை, பாத்திகள் நனையும்படி ஊற்றிய பிறகு, காய்களை 30×30 செ.மீ இடைவெளியில் 20-25 செ.மீ. ஆழத்தில் கிடைமட்டமாக விதைத்து, காயின் மூன்றில் 2 பாகத்தை மண்ணால் மூட வேண்டும்.

செங்குத்தாக நட்டால், தொடக்கத்தில் வளர்ச்சி மந்தமாக இருந்தாலும் பின்னர் விரைவாக வளரும். தொலைவில் கன்றுகளைக் கொண்டு செல்வதற்கு, செங்குத்து விதைப்பே சிறந்தது.

இளம் நாற்றுகளில் குருத்தழுகலைத் தவிர்க்க, நாற்றங்காலில் 1% போர்டோ கலவையை ஊற்றலாம். விதைக்காயின் இரகம், விதைப்பு நாள், காய்களின் எண்ணிக்கை, காய்களை அறுவடை செய்த நாள் ஆகிய விவரங்கள் அடங்கிய பலகை நாற்றங்காலில் இருக்க வேண்டும்.

சாதகமான தட்ப வெப்பம், போதிய பாசன வசதி இருந்தால் விதைக்காய்களை ஆண்டு முழுவதும் விதைக்கலாம். பாசனம், களைநீக்கம், மிதமான நிழல், முறையான கவனிப்பு ஆகியன நாற்றங்காலுக்கு மிகவும் அவசியம்.

இதற்குத் தெளிப்புப் பாசனமும், இரப்பர் குழாய்ப் பாசனமும் மிகவும் ஏற்றவை. மண்ணின் ஈரப்பதத்தைக் காக்க, மூன்று நாட்களுக்கு ஒருமுறையும், கோடையில் ஒருநாள் விட்டு ஒருநாளும் பாசனம் செய்ய வேண்டும்.

நிலப்போர்வை

மழைக்காலம் முடிந்த பின் ஈரப்பதத்தைக் காக்க, முன் முளைப்புப் பருவத்தில் களையைக் கட்டுப்படுத்த, ஓலை, வைக்கோலால் மூடாக்கை அமைக்கலாம். படுக்கையைச் சுற்றி அகத்தி அல்லது சவுண்டலை நட்டு மிதமான நிழலை ஏற்படுத்தலாம்.

காய்கள் முளைத்தல்

விதைத்த 60-130 நாட்களில் நெட்டை இரகங்களும், 30-95 நாட்களில் குட்டை இரகங்களும் முளைத்து விடும். விதைத்த ஐந்து மாதங்களில் முளைக்கும் காய்களை மட்டுமே நட வேண்டும். சிறந்த விதைக்காய்க் குவியலில் 80-90% முளைப்புத்திறன் இருக்கும். சரியாக முளைக்காத அல்லது வளராத கன்றுகளை நீக்கிவிட வேண்டும்.

உர மேலாண்மை

கன்றுகளின் முளைப்புக்கும் வளர்ச்சிக்கும் தேவையான ஊட்டம் காயின் கருவிலேயே இருப்பதால் நாற்றங்காலில் உரமிடத் தேவையில்லை. மேலும், நாற்றங்காலில் இரசாயன உரங்களை இட்டால், நாற்றுகளின் உண்மையான மரபியல் பண்புகளை அறிய முடியாது.

நெகிழிப் பைகளில் கன்று உற்பத்தி

நல்ல வேர் வளர்ச்சியுள்ள வீரியமான கன்றுகளை உற்பத்தி செய்ய, இடமாற்ற அதிர்ச்சியைக் குறைக்க, எளிதாகப் பராமரிக்க, தேவையற்ற கன்றுகளைக் கண்டறிந்து நீக்க, விரைவாகக் காய்க்க, நெகிழிப்பை முறை கைகொடுக்கும்.

இம்முறையில் கன்றுகளை உற்பத்தி செய்ய, மேட்டுப் பாத்திகளில் விதைத்து, 8-10 செ.மீ. முளை வந்த, அதாவது, விதைத்த காய்களில் 80% முளைத்த பிறகு அல்லது விதைத்த 5 மாதங்களில், படுக்கையிலிருந்து நெகிழிப் பைகளுக்கு மாற்றலாம்.

இதற்குப் புற ஊதாக்கதிர் எதிர்ப்புத் திறனுள்ள 500 காஜ் கனமுள்ள கறுப்பு நெகிழிப் பைகள் தேவை. பெரிய காய்களுக்கு 60 செ.மீ. உயரம், 45 செ.மீ. விட்டமுள்ள பைகளும், சிறிய காய்களுக்கு 45 செ.மீ. உயரம், 45 செ.மீ. விட்டமுள்ள பைகளும் உதவும்.

பையின் மூன்றில் இரண்டு பங்கை நிரப்ப, 13-15 கிலோ வளர் கலவை தேவை. நீர் தேங்காமலிருக்க, பையின் அடியில் 8-10 துளைகளை இட வேண்டும்.

முளைத்த காய்களை, பாதியளவு வளர் கலவையுள்ள பைகளின் நடுவில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். பின்னர் பைகளை இரண்டடி இடைவெளியில் தெற்கு வடக்காக வைக்க வேண்டும். கன்றுகளுக்குப் போதிய சூரியவொளி கிடைக்க, விரைவாக வளரும் பைகளை, கிழக்கில் முதல் வரிசையிலும், முளைக்கத் தாமதமாகும் பைகளை மேற்கிலும் வைக்க வேண்டும்.

வளர் கலவைத் தயாரிப்பு: வயல் மண் மற்றும் மணல் 3:1 அல்லது வயல் மண், மணல், தொழுவுரம் அல்லது மண்புழு உரம் 3:1:1 அல்லது செம்மண், மணல், தொழுவுரம் 1:1:1 என்னுமளவில் வளர் கலவை இருக்க வேண்டும்.

நட்ட இரண்டு மாதங்கள் கழித்து ஒரு பைக்கு 20 கிராம் அம்மோனியம் சல்பேட் மற்றும் 25 கிராம் பொட்டாசும், அடுத்த இரண்டு மாதங்கள் கழித்து ஒரு பைக்கு 45 கிராம் அம்மோனியம் சல்பேட் மற்றும் 45 கிராம் பொட்டாசும் இடப்பட வேண்டும். உரமிட்ட பிறகு பாசனம் அவசியம்.

தரமான கன்றுத் தேர்வு

விதைத்த ஐந்து மாதங்களில் முளைக்காத காய்களையும், சரியாக வளராத கன்றுகளையும் நீக்கிவிட வேண்டும். நல்ல முளைப்பு, வேகமான வளர்ச்சி மற்றும் வீரியமுள்ள, 9-12 மாதக் கன்றுகளை நட வேண்டும். 10-12 மாதக் கன்றுகளில் 6-8 இலைகளும், 9 மாதக் கன்றுகளில் நான்கு இலைகளும் இருக்கும்.

தண்டின் சுற்றளவு 10-12 செ.மீ. இருப்பது, இலைகளின் முன்பிரியும் பண்பு, கன்றுகளின் விரைவான வளர்ச்சி ஆகியன, மரங்கள் விரைந்து காய்ப்பதன் அறிகுறிகளாகும்.

குட்டை மற்றும் ஒட்டுக் கன்றுகளை இனங்காண, தண்டின் நிறமும் வீரியத் தன்மையும் பயன்படும். தாய்மரக் காம்பின் நிறத்தைப் போல, குட்டை வகைக் கன்றுகளின் நிறம் இருக்கும். இளம் பருவத்திலேயே வீரியமாக இருக்கும்.

முன் முளைப்புத் திறன், குட்டையான இயல்பு, குட்டையான, திடமான மட்டைகள் மற்றும் குறுகிய ஓலைகள் ஆகியன, குட்டை வகைகளின் பண்புகளாகும். நெட்டைக் கன்றுகள் நீண்ட இலைகள், இணுக்குகளைக் கொண்டிருக்கும்.

பூச்சி, நோய் மேலாண்மை

குருத்தழுகல்: இதனால் பாதிக்கப்பட்ட கன்றுகள் வெளிரியிருக்கும். குருத்தை மெதுவாக இழுத்தாலும் கையோடு வந்து விடும். அதிலிருந்து துர்நாற்றம் வீசும். பாதிக்கப்பட்ட கன்றுகளை அகற்றி விட்டு, அருகிலுள்ள கன்றுகளின் மீது 1% போர்டோ கலவையைத் தெளிக்க வேண்டும். விதைக் காய்களை, 0.25% காப்பர் ஆக்ஸி குளோரைடில் நனைத்து விதைக்க வேண்டும்.

செதில் பூச்சி: இலைகள் வெளிரியிருக்கும். இலைகளின் அடியில் பூச்சிகள் தென்படும். இதனால் பெரியளவில் பாதிப்பு இல்லையெனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டைமீத்தோயேட் 0.05% கரைசலை நாற்றங்காலில் ஊற்ற வேண்டும்.

கரையான்: இதன் பாதிப்பால் முளைகளும் இலைகளும் காய்ந்து விடும். கரையான் உள்ள மண்ணை 15 செ.மீ. ஆழத்துக்கு அகற்றி விட்டு, மண் மற்றும் காய்களின் மீது கார்பரில் குருணை அல்லது 0.05% குளோர்பைரிபாஸ் கரைசலைத் தெளிக்க வேண்டும்.

வெள்ளை வண்டு: இதன் தாக்கம் மணற்பாங்கான மண்ணில் அதிகமாக இருக்கும். இதனால், வேர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, இலைகள் வாடிக் கன்றுகள் காய்ந்து விடும். இதைக் கட்டுப்படுத்த, போரேட் குருணையை, கன்றுக்கு 15 கிராம் வீதம் இடலாம்.

கன்றுகளை எடுத்தல்

கடப்பாரை அல்லது மண்வெட்டியால் கன்றுகளைத் தோண்டி எடுத்து வேர்களை நீக்க வேண்டும். இலைகளைப் பிடித்தோ, தண்டைப் பிடித்தோ இழுக்கக்  கூடாது. எடுத்ததும் வயலில் நட்டுவிட வேண்டும். மண்ணை விட்டு எடுத்த பின் நான்கு வாரம் வரை கவனமாகப் பாதுகாக்கலாம்.

ஆயினும், நாற்றங்காலில் இருந்து எடுத்த பத்து நாளில் நெட்டைக் கன்றுகளையும், இரண்டு நாளில் குட்டைக் கன்றுகளையும் நட்டு விடுதல் நல்ல பலன்களைத் தரும்.

நடுவதற்குத் தாமதமானால் கன்றுகளை நிழலில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். தொலைவில் கொண்டு செல்ல, தென்னை நார் அல்லது ஈரப்பதமுள்ள பொருளில் கன்றுகளை வைக்க வேண்டும். நெகிழிப் பைகளில் உள்ள கன்றுகளை அப்படியே எடுத்துச் சென்று, பையின் அடிப்பகுதியை வெட்டி விட்டு நட்டு விடலாம்.

வேலையாட்கள் பற்றாக்குறையால், தமிழ்நாட்டில் தென்னை போன்ற பல்லாண்டுப் பயிர்கள் சாகுபடி அதிகமாகி வருகிறது. தென்னங் கன்றுகள் மிகுதியாகத் தேவைப்படும் இச்சூழலில், முறையான தென்னை நாற்றுப் பண்ணைகளுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.

எனவே, கிராமப்புற இளைஞர்கள், தென்னை நாற்றுப் பண்ணைகளை அமைத்தால், நல்ல இலாபத்தை அடையலாம்.


தென்ன C.SUDHA LAKSHMI

முனைவர் சி.சுதாலட்சுமி,

முனைவர் வெ.சிவக்குமார், முனைவர் க.வெங்கடேசன், 

தென்னை ஆராய்ச்சி நிலையம், ஆழியார் நகர், கோவை மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!