கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019
அசோலா
நீரில் வாழும் ஒருவகைப் பெரணித் தாவரம் அசோலா. மிகச்சிறிய இலைகளையும், வேர்களையும் கொண்டது. இதில் தண்டுப்பகுதி கிடையாது. இலைகள் நீரில் மிதந்தும், வேர்கள் நீரில் அமிழ்ந்தும் இருக்கும். இலையின் மேல்பகுதி நல்ல பச்சையாகவும், கீழ்ப்பகுதி வெளிரிய பச்சையாகவும் இருக்கும். இலைகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்ததைப் போல நெருக்கமாக இருக்கும். வேர்கள் பழுப்பு நிறத்தில் நெற்பயிரின் வேரைப் போலவும், மிகச் சன்னமான சல்லிவேர் அமைப்பிலும் இருக்கும்.
அசோலா என்றால் தாவரத்தையும், அதன் இலைக்குழியில் தங்கி வாழும் நீலப்பச்சைப்பாசி என்னும் நுண்ணுயிரியையும் குறிக்கும். அசோலா இலையின் மேற்புறத்தின் உட்பகுதியில் அனாபினா அசோலா என்னும் நீலப்பச்சைப்பாசி வளர்ந்து, காற்றுவெளியில் உள்ள தழைச்சத்தைக் கிரகித்து அசோலாவுக்குக் கொடுக்கும். அசோலா தன்னிடமுள்ள பச்சயத்தின் மூலம் ஒளிச்சேர்க்கை செய்து அந்த உணவுப்பொருளை நீலப்பச்சைப் பாசிக்குக் கொடுக்கும். இப்படி, அசோலாவும், நீலப்பச்சைப் பாசியும் இணைந்து வாழ்ந்து தழைச்சத்தைக் கிரகித்து நெற்பயிருக்குக் கொடுக்கும்.
பொதுவாக நீர் நிலைகளில் வளரும் அசோலா, சேற்றுடன் கலந்த நெல் வயலில் நன்கு வளரும். இதிலுள்ள இரகங்களில் சில, தமிழ்நாட்டுத் தட்ப வெப்ப நிலைக்கு உகந்தவை. நம் நாட்டில் அசோலா மைக்ரோபில்லா என்னும் இரகம் நன்கு வளர்ந்து, அதிகத் தழைச்சத்தைக் கிரகிக்கிறது. அசோலா இலைகளில் 1.96-5.3% தழைச்சத்து, 0.16-1.59% மணிச்சத்து, 0.31-5.9% சாம்பல் சத்து, 0.45-1.7% சுண்ணாம்புச் சத்து உள்ளன.
நெல் வயலில் அசோலாவை இட்டு மிதித்து விட்டால், இந்தச் சத்துகள் பயிருக்குக் கிடைக்கும். கோடையைத் தவிர மற்ற பருவங்களில் அசோலா நன்கு வளரும். மழைக் காலத்திலும், வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் போதும், நெற்பயிரின் நிழலிலும் நன்றாக வளரும். நீர் வற்றி வறண்டு விட்டால் காய்ந்து விடும். காரத் தன்மையுள்ள மண்ணில் வளர்ச்சி சற்று பாதிக்கும். அசோலாவை நாற்றங்காலில் வளர்த்து, நெற்பயிருடன் வளர்த்து, நடவு வயலில் வளர்த்து உரமாக்கலாம்.
நாற்றங்காலில் வளர்த்தல்
நாற்றங்காலில் உற்பத்தி செய்வதற்கு நிலத்தை ஒரு சென்ட் பாத்திகளாகப் பிரிக்க வேண்டும். பாத்தியின் அகலம் 2 மீட்டருக்கு மேல் இருக்கக் கூடாது. இது, வளர்ந்த அசோலாவை பாத்திகளுக்கு வெளியில் இருந்தபடியே எடுக்க வசதியாக இருக்கும். பாத்திக்குள் இறங்கி எடுத்தால் அசோலா மிதிபடும். பாத்தியின் நீளம் எவ்வளவும் இருக்கலாம். 20 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலமுள்ள பாத்திகளாக நாற்றங்கால் இருப்பது சிறந்தது. பின்பு பாசனம் செய்ய ஏதுவாக, பாத்திகளுக்கு இடையில் வாய்க்காலை அமைக்க வேண்டும். பாத்திகளில் எப்போதும் 3-5 அங்குல நீர் இருக்க வேண்டும்.
முதலில் 10 கிலோ சாணத்தை 20 லிட்டர் நீரில் கரைத்து ஒரு சென்ட் பாத்தியில் பரவலாகத் தெளிக்க வேண்டும். மண்ணில் மணிச்சத்துக் குறை இருந்தால் 100 கிராம் சூப்பர் பாஸ்பேட்டை மூன்றாகப் பிரித்து 4 நாட்கள் இடைவெளியில் ஒவ்வொரு பாத்திக்கும் இட வேண்டும். பின்பு 8 கிலோ அசோலாவை இந்தப் பாத்தியில் பரவலாக இட வேண்டும். பாத்திகளில் பூச்சிகளின் தாக்கம் இருந்தால், ஒரு பாத்திக்கு 25 கிராம் கார்போபியூரான், கார்டாப் குருணைகளை, அசோலாவை விட்ட ஏழாம் நாள் இட வேண்டும். இப்படிச் செய்தால், 15-21 நாட்கள் கழித்து 100-120 கிலோ அசோலா ஒரு சென்ட் பாத்தியிலிருந்து கிடைக்கும்.
ஒரு ஏக்கருக்குத் தேவையான 100 கிலோ அசோலாவை, நெற்பயிரை நட்ட ஒரு வாரத்தில் நிலத்தில் இட வேண்டும். 20-25 நாட்களில் நெற்பயிரோடு வளர்ந்து வயல் முழுதும் பரவும் அசோலாவின் அளவு 10 டன்னாகும். முதல் களையெடுப்பின் போது நீரை வடிகட்டி விட்டு, அசோலாவை வயலில் மிதித்து விட்டால் அது மட்கி, தழையுரமாக நெற்பயிருக்குக் கிடைக்கும். முதல் களையெடுப்பில் மிதிபடாத அசோலா, மீண்டும் வளர்ந்து வயல் முழுதும் பரவிவிடும். இதை இரண்டாம் களையெடுப்பின் போது மிதித்து விட்டால் மண்ணில் மட்கித் தழையுரமாகும். ஒரு சென்ட் பாத்தியில் அசோலாவை உற்பத்தி செய்ய ரூ.100-120 செலவாகும். ஆனால், ரூ.1,000-1,200 மதிப்புள்ள அசோலா கிடைக்கும்.
நெற்பயிருடன் வளர்த்தல்
தனியாக நாற்றங்கால் அமைக்க நிலமில்லா நிலையிலும், நாற்றுகள் நடவுக்குத் தயாராகிவிட்ட நிலையிலும், வயலில் நடவு முடிந்து விட்ட நிலையிலும், அசோலாவை நாற்றங்காலில் வளர்த்து வயலில் இட முடியாது. இந்த நிலையில், நடவு முடிந்த ஒரு வாரம் கழித்து ஏக்கருக்கு 100 கிலோ அசோலாவை இடலாம். 20-25 நாட்களில் இது நன்கு வளர்ந்து வயல் முழுதும் பரவிவிடும். பிறகு இந்த அசோலாவை முன்பு குறிப்பிட்டதைப் போல மிதித்துவிட வேண்டும்.
தழையுரமாக இடுதல்
பசுந்தாள் உரங்களை நெல் வயலிலேயே வளர்த்து மடக்கி உழுவதைப் போல, அசோலாவையும் நடவு வயலில் வளர்த்து, நடவுக்கு ஒரு வாரம் முன்பு மடக்கி உழுது விடலாம். அசோலா வேர்கள் முதிர்ச்சியடைந்து செடியிலிருந்து விடுபட்டு, சேற்றில் மட்கித் தழைச்சத்தாகப் பயிருக்குக் கிடைக்கும்.
நெற்பயிருக்குக் கிட்டும் பயன்கள்
அசோலா குறைந்த விலையில் கிடைக்கும் உயிர் உரம். ஒரு கிலோ அசோலா பத்து ரூபாய் விலையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக ஆராய்ச்சி நிலையங்களில் கிடைக்கிறது. தழைச்சத்தின் தேவையில் 25 சதம் வரை ஈடு கட்டுகிறது. வேகமாக வளர்வதால் குறைந்தளவில் வயலில் இட்டால் போதும். நீரின் மேற்பரப்பு முழுதும் படர்வதால் களைகள் பெருமளவில் கட்டுப்படும். மேலும், நீர் அதிகளவில் ஆவியாவது தடுக்கப்படும். விளைச்சல் 15-20% கூடும். விவசாயத்துடன், மீன், கோழி, கால்நடை வளர்ப்பில் இருப்பவர்கள், அவற்றின் உணவில் 5 சதத்தை அசோலாவாகக் கொடுக்கலாம்.
நீலப்பச்சைப் பாசி
நீர் தேங்கியுள்ள இடங்களிலும், சூரியவொளி நன்கு படும் இடங்களிலும், நீலப்பச்சைப்பாசி நன்றாக வளரும். இது நீர்நிலை, நெல் வயலில் களையாக வளரும் சாதாரணப் பச்சைப்பாசியைப் போலில்லாமல், கருநீலம் கலந்த பச்சையாக இருக்கும். பச்சைப் பாசியைப் போல் நெருக்கமான நார் இல்லாமல், வழுவழுப்பாக இருக்கும். இது காலையில் மண்ணில் படிந்தும், பகலில் நீரில் மிதந்தும் காணப்படும். சூரியவொளி நன்கு படும் நீர்நிலையில் நன்றாக வளர்வதால், குறுவை, நவரைப் பட்டங்களில் நெற்பயிருக்கு இடலாம். களிமண் கலந்த மண்ணில் இதன் வளர்ச்சி மிகுந்தும், செம்மண் மற்றும் மணற்பாங்கான நிலத்தில் வளர்ச்சிக் குறைந்தும் இருக்கும். நடுநிலை முதல் அதிகக் காரத்தன்மை மிக்க இடங்களில் வளர்ச்சி மிகுந்தும், அதிக அமில நிலையில் வளர்ச்சிக் குறைந்தும் காணப்படும்.
உற்பத்தி முறை
நீலப்பச்சைப் பாசியை நாற்றங்காலில் வளர்த்து நடவு வயலில் இடலாம். சூரியவொளி நன்றாகப் படும் இடத்தில் நாற்றங்காலை அமைக்க வேண்டும். ஒரு சென்ட் அளவுள்ள பாத்திகளை அமைத்துச் சேறு கலக்கி 3-5 அங்குலம் வரை நீரை நிறுத்த வேண்டும். அசோலா நாற்றங்காலைப் போல, இதற்கும் உயர வரப்புகள் மற்றும் வாய்க்கால்களை அமைக்க வேண்டும். ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு 2 கிலோ சூப்பர் பாஸ்பேட்டை இட வேண்டும். நிலத்தில் அமிலத்தன்மை அதிகமாக இருந்தால், அதைச் சரிசெய்ய 200 கிராம் சுண்ணாம்பை இட வேண்டும். பிறகு 5 கிலோ நீலப்பச்சைப்பாசிக் கூட்டுக் கலவையைப் பொடி செய்து, அத்துடன் சம அளவில் தொழுவுரம் மற்றும் மண்ணுடன் கலந்து ஒரு சென்ட் பாத்தியில் இட வேண்டும்.
பூச்சிகளின் தாக்கம் இருந்தால் 25 கிராம் கார்போபியூரான் குருணையை இட வேண்டும். 20-30 நாட்களில் ஒரு சென்ட் பாத்தியிலிருந்து 15-30 கிலோ நீலப்பச்சைப்பாசி கிடைக்கும். நிலத்தை நன்கு காயவிட்டால், நீலப்பச்சைப்பாசி அடை அடையாகப் பெயர்ந்து விடும். இதை வெய்யிலில் காய வைத்துக் கோணிப்பையில் சேமித்து வைக்கலாம். அல்லது பாத்திகளில் உள்ள நீரை சல்லடை வழியாக வெளியேற்றி, நிலத்தைக் காய வைத்தும் எடுக்கலாம். நீரோடு சேர்ந்து நீலப்பச்சைப்பாசி வெளியேறி விடாமல் இருக்க, இந்தச் சல்லடை உதவும்.
முதல் அறுவடைக்குப் பிறகு, மீண்டும் 200 கிராம் சூப்பர் பாஸ்பேட், சுண்ணாம்பை இட்டு 15 நாட்கள் கழித்து மீண்டும் அறுவடை செய்யலாம். இந்த நீலப்பச்சைப்பாசி, மேற்புறத்தில் பச்சையாகவும், அடியில் மண் படிந்த ஏடுகளாகவும் இருக்கும். இவற்றை இரண்டு ஆண்டுகள் வரையில் சேமித்து வைக்கலாம். ஒரு சென்ட் பாத்தியில் இதை உற்பத்தி செய்வதற்கான செலவு நூறு ரூபாய்க்கும் குறைவு தான். இதை எக்டருக்கு 10 கிலோ வீதம் 7-10 நாள் நெல் வயலில் 25 கிலோ தொழுவுரம் அல்லது மண்ணுடன் கலந்து இட வேண்டும்.
முனைவர் கி.க.அனிதா,
முனைவர் வி.கோமதி, முனைவர் கு.சிவசுப்ரமணியம்,
வேளாண்மைக் கல்லூரி, குடுமியான்மலை, புதுக்கோட்டை.