கட்டுரை வெளியான இதழ்: மே 2019
வில்லியம் ப்ரையாண்ட் லோகன் என்னும் அறிஞர், பூமியின் தோல் என்றும், முடிவிலா வாழ்வின் ஆன்மா என்றும் மண்ணை அருமையாக வர்ணிக்கிறார். பூமியின் மெல்லிய தூசுப் படலத்துக்கு இத்துணை மகத்துவம் ஏனெனில்,
வளிமண்டலமும் நீர்க்கோளமும் சந்திக்கும் முக்கிய இடமாக; உயிரினங்கள் வாழ்வதற்குத் தேவையான எரிபொருள்களின் உற்பத்திக் கூடமாக; நீர், ஊட்டம், கரிமம் மற்றும் வாழ்வியல் சுழற்சிகள் நிகழும் ஆய்வகமாக; ஊட்ட நிலை மாற்றங்கள், கனிம, கரிம வினைகள் நடைபெறும் விந்தைமிகு ஆய்வகமாக மண் திகழ்வது தான்.
நீரோட்டத்தைச் சீர்படுத்தி, கழிவுகளை மறுசுழற்சி செய்து, சுற்றுச்சூழல் காப்பில் மண் முக்கியப் பங்காற்றுகிறது. மண் சிறந்த பொறியியல் ஊடகமாகும். ஆப்பிரிக்காவின் பழங்கால மண் குடிசைகள், நூற்றாண்டுப் பாரம்பரியம் உள்ள இங்கிலாந்து அரண்மனைக் கட்டடங்கள் முதல் நவீன மாட மாளிகைகள் வரையிலான கட்டடக் கலையில் மண்ணின் பங்கு மிக முக்கியமானது.
உணவு உற்பத்தி, உணவுப் பொருள்களின் தரம், மனிதவளம் ஆகியவற்றில், நேரடியாகவும், மறைமுகமாகவும் மண் வினையாற்றுகிறது. வளங்குன்றிய மண்ணில் விளையும் பொருள்களின் தரம் குறைந்திருப்பதை நன்கறிவோம்.
மனிதனைத் தாக்கும் சில நோய்களுக்குப் புவியின் தொடர்புகள் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இரும்பு, துத்தநாகக் குறையுள்ள மண்ணில் வசிக்கும் மக்கள் இரத்தச் சோகைக்கு உள்ளாகின்றனர்.
உலகின் 130 நாடுகளில் வசிக்கும் 29% மக்கள், அயோடின் குறையால் ஏற்படும் முன்கழுத்துக் கழலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடற்கரை ஓரங்களில் அயோடின் குறை இருப்பதில்லை. ஆனால், இமயமலை, ஆல்ப்ஸ் மற்றும் ஆண்டஸ் மலைப் பகுதிகளில், உறைபனி மற்றும் வெள்ளத்தால், மண்ணிலுள்ள அயோடின் அடித்துச் செல்லப்படுவதால், இப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இந்நோய்க்கு உள்ளாகின்றனர்.
உலகெங்கிலும் தழைச்சத்துக்கு அடுத்தபடியாகத் துத்தநாகக் குறை உள்ளது. இந்தக் குறையுள்ள மண்ணில் வசிக்கும் மக்கள், குழந்தையின்மை, நரம்புக் கோளாறு, நோயெதிர்ப்பு ஆற்றல் இல்லாமை போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
புவியுடன் ஒப்பிட்டால் மண் இளமையானது. ஆனால், மனித வாழ்வுடன் ஒப்பிட்டால் அது புதுப்பிக்க இயலாத ஆதாரம். நம் ஒவ்வொருவரின் பாதங்களுக்குக் கீழும் வாழ்வு சாவுகளை நடத்திக் கொண்டு, மண் உணவு வலை என்னும் மறைமுக உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
மண்ணுக்கு உணவளிப்பது என்பது, மண்ணிலுள்ள பெரிய உயிரினங்கள் மற்றும் நுண்ணுயிர்களுக்கு உணவளிப்பதாகும். ஒரு தேக்கரண்டி மண்ணில் பல பில்லியன் பாக்டீரியாக்கள், பல மீட்டர் நீளமுள்ள பூசணங்கள், ஒரு செல் உயிரிகள், நூற்புழுக்கள் என, பல நூறு வகையான உயிரினங்கள் உள்ளன. இனி, இவற்றுக்கு உணவளிக்கும் முறைகளைப் பார்க்கலாம்.
மூடுபயிர்கள்
நீடித்த வேளாண்மையில் மூடுபயிர்களுக்கு முக்கியப் பங்குண்டு. மண்ணரிப்பைத் தடுப்பதுடன், களைகளையும் கட்டுப்படுத்தி, மண்ணில் நோய் மற்றும் பூச்சிகளின் எதிரிகளுக்குப் புகலிடமாக விளங்குகின்றன.
அதிகப் பரப்பில் பயறு வகைகளைச் சாகுபடி செய்யும் போது, மண்ணின் தழைச்சத்துக் கிடக்கை அதிகமாகிறது. தட்டைப்பயறு, சோயா மொச்சை, பாசிப்பயறு, கொள்ளு, கலப்பக்கோனியம், ம்யூக்கனாய்ட்ஸ் ஆகியன முக்கியமான மூடுபயிர்களாகும்.
மூடாக்கு
அங்கக மூடாக்குகள் மண்ணின் ஈரப்பதத்தைக் காத்து மண்ணின் தட்ப வெப்பத்தை நிலைப்படுத்தும். மழைக்காலத்தில் மண்ணரிப்பைத் தடுத்து, மண் இறுக்கத்தைப் போக்கும்.
மேலும், அங்கக மூடாக்குகள் மட்கும்போது அவை மண்ணிலுள்ள உயிரினங்களுக்குச் சிறந்த உணவு ஆதாரமாக விளங்கும். மரப்பட்டைகள், வைக்கோல், நிலக்கடலை மேலோடு, மரத்தூள், உமி ஆகியன இயற்கை மூடாக்குகளாகும்.
பயிர்ச் சுழற்சி
நிலையான மண்வளப் பாதுகாப்பில் பயிர்ச் சுழற்சி தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கிறது. இதனால், மண்ணில் அங்ககச் சத்தின் அளவு கூடுகிறது. வெவ்வேறு பயிர்கள் தங்களின் வேர் மண்டல மண்ணில் நன்மை செய்யும் பலவகை நுண்ணுயிர்களுக்குப் புகலிடம் அளிக்கின்றன.
இங்கே கிடைக்கும் வேர் வடிநீரும், கசிவுகளும் நுண்ணுயிர்களுக்குச் சிறந்த உணவாக உள்ளன. பொதுவாக, தானியப் பயிர்களுடன் பயறுவகைப் பயிர்கள் சுழற்சி செய்யப்படுகின்றன.
பயறுவகைப் பயிர்களின் வேர்முடிச்சுகள், காற்றிலுள்ள தழைச்சத்தை மண்ணில் நிறுத்தி மண்ணுக்கு வளம் சேர்க்கின்றன. நுண்ணுயிர்களும் வேர் முடிச்சுகளில் இணை வாழ்வு வாழ்கின்றன.
தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்துவதற்குப் பயிரிடமிருந்து மிகக் குறைந்த கூலியாக 5-10% உணவுப் பொருள்களைப் பெறுகின்றன. பயிர் சுழற்சியால் இன்னொரு பயனும் உள்ளது.
பூமியில் வாழும் சில நோய்க்கிருமிகள் குறிப்பிட்ட ஒரு பயிருடன் இணக்கமாக வாழும். பயிர்ச் சுழற்சியில் வேறு பயிர்களை ஒருங்கிணைக்கும் போது, பூச்சி மற்றும் நோய்க் காரணிகளுக்கான சூழல் இல்லாமல் போவதால், அவை இயல்பாகவே கட்டுப்படுத்தப்படுகின்றன.
காப்பு உழவு
காப்பு உழவு என்பது, முந்தைய பயிரின் கழிவுகள் நிலத்தில் இருக்கும் போதே, உழவு செய்யாமல் அடுத்த பயிரைச் சாகுபடி செய்வதாகும். இம்முறையில், மண்ணிலுள்ள உயிரிகளுக்குத் தேவையான அங்ககக் கரிமம் மற்றும் போதிய உணவு ஆதாரங்கள் மண்ணில் சேர்க்கப்படுகின்றன.
சமச்சீர் உரமிடல்
ஒரு பயிருக்குத் தேவையான 20 வகை ஊட்டங்களை மண் அளிக்கிறது. மனிதர்கள் உயிர்வாழச் சமச்சீர் உணவு தேவைப்படுவதைப் போல, மண்ணுக்கும் சமச்சீர் ஊட்டம் தேவைப்படுகிறது.
இதற்கு, மண்ணை ஆய்வு செய்து, ஊட்டக் குறைகளைக் கண்டறிந்து, தகுந்த இரசாயன உரங்களை இட வேண்டும். இயற்கை உரங்கள், இரசாயன உரங்கள், உயிர் உரங்கள் அடங்கிய ஒருங்கிணைந்த உர மேலாண்மையைப் பின்பற்ற வேண்டும்.
இயற்கை உரமிடல்
அதிகளவில் இடப்படும் இரசாயன உரங்கள், நீர் மற்றும் காற்றினால் விரயமாவதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. தொழுவுரம், பசுந்தாள் உரம் ஆகியவற்றை இடுவதால், மண்ணின் கட்டமைப்பும் பௌதிகப் பண்புகளும் மேம்படும்.
இயற்கை உரங்களிலுள்ள நொதிகள் மற்றும் புரதங்கள், மண் சீர்திருத்திகளாகச் செயல்பட்டு, மண்ணில் நுண்ணுயிர்களைப் பெருக்கி, மண்ணை வளமாக்குகின்றன.
இரசாயனத்தைக் குறைத்தல்
களைகள், பூச்சிகள் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த, அதிகளவில் இரசாயனப் பொருள்களைப் பயன்படுத்துவதால், மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள் பெருமளவில் குறைந்து மண்வளம் பாதிக்கப்படுகிறது.
எனவே, கோடையுழவு, சுகாதாரமான வேளாண்மை, இயற்பியல் மற்றும் உயிரியல் முறையிலான உத்திகளை ஒருங்கிணைத்து வேளாண்மை செய்து இரசாயனப் பொருள்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்.
மனித வளத்தை மேம்படுத்த வேண்டுமானால், கண்டிப்பாக மண்வளத்தை மேம்படுத்த வேண்டும். இதற்கு, மண்ணில் வாழும் நுண்ணுயிர்களுக்குப் போதிய உணவளித்து, அவற்றைக் கடுமையான வெப்பத்திலிருந்து காத்து, நிலையான வேளாண்மைக்கு வித்திட வேண்டும்.
முனைவர் சி.சுதாலட்சுமி,
முனைவர் ஈ.இராஜேஸ்வரி, முனைவர் வெ.சிவக்குமார், முனைவர் க.வெங்கடேசன்,
தென்னை ஆராய்ச்சி நிலையம், ஆழியார், கோவை மாவட்டம்.