மழைக் காலத்தில் கோழிகளைத் தாக்கும் நோய்கள்!

கோழி Egg

ழைக் காலத்தில் ஏற்படும் அதிகளவு ஈரம் மற்றும் குளிரால் கோழி வளர்ப்பில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, உற்பத்திப் பாதிப்பு உண்டாவதுடன், கோழிகள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி இறக்கவும் நேரிடுகிறது. எனவே, மழைக்காலத்தில் கோழிகளைத் தாக்கும் நோய்களைப் பற்றியும், அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

சாதாரணமாக, காற்றிலுள்ள கூடுதலான ஈரப்பதம், குறைவான வெப்பநிலை, சுற்றுப்புற ஈரத்தன்மை போன்றவை, கோழிகளைத் தாக்கும் மழைக்கால நோய்களுக்கு உகந்தவையாக உள்ளன.

சுவாச நோய்கள்

கொரைசா, சி.ஆர்.டி நோய், மேல் மூச்சுக்குழல் நோய் போன்றவை கோழிகளை அதிகமாகத் தாக்குகின்றன. இவற்றால் பாதிக்கப்படும் கோழிகளின் மூச்சுக்குழாயில் சளி நிறைய இருப்பதால், மூச்சு விடும் போது, சப்தமும், கண்கள் மற்றும் நாசித்துளைகளைச் சுற்றி வீக்கமும் ஏற்படும். இந்நோய்களால் பெருமளவில் இறப்பு ஏற்படும். எனவே, மழை பெய்யும் போது திரைச் சீலைகளைப் போட்டுவிட வேண்டும். பகலில் திரைச் சீலைகளை விலக்கி விட வேண்டும். மேலும், சுவாச நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகளை, கால்நடை மருத்துவர் மூலம் போட்டுவிட வேண்டும்.

இறக்கை அழுகல் நோய்

இந்நோய், கிளாஸ்டிரிடியம் மற்றும் ஸ்டைபைளோகாக்கஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கோழிகளின் இறக்கைகள் அழுகிப் போவதுடன், விரல்களுக்கு இடையில் புண்களும் ஏற்படும். இதைத் தவிர்க்க,  மழைக்காலக் கோழித்தீவனத்தில் எதிர் உயிரி மருந்துகளைக் கொடுக்க வேண்டும். கொட்டகையில் கிருமிநாசினியைத் தெளிப்பதுடன், பண்ணையில் நோய்க்கிருமிகள் இருப்பையும் சோதனை செய்து கொள்ள வேண்டும்.

அப்ளாடாக்சிகோசிஸ்

இது, மழைக்காலத்தில் ஈரப்பதம் மிகுந்த தீவனங்களில் பூசண வளர்ச்சியைத் தூண்டி, பெரியளவில் இறப்பை ஏற்படுத்துகிறது. கோழிகளில் நோயெதிர்ப்புச் சக்தியைக் குறைத்து, பல்வேறு நோய்களை ஏற்படுத்துகிறது. எனவே, தீவனக் கிடங்கில் மழைநீர் செல்லாமலும், ஒழுகாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.  தீவன மூட்டைகளைப் பலகையில் அடுக்கி வைக்க வேண்டும். தீவனப் பொருள்களில், அப்ளாடாக்சிஸ் நச்சு ஆய்வைச் செய்து கொள்ள வேண்டும்.

கோலிபேசில்லோசிஸ்

ஈகோலை நோய்க்கிருமியால், இளம் குஞ்சுகள் முதல் முட்டையிடும் கோழிகள் வரை நோய்க்கு உள்ளாகின்றன. இளங் குஞ்சுகளில் தொப்புள் வீக்கம் ஏற்பட்டும், மஞ்சள் கருவில் நோய்க்கிருமிகள் வளர்ந்தும் கோழிக்குஞ்சுகள் உடனே இறந்து போகும், இந்நோய், குடிநீர் மூலம் கோழிகளுக்கு எளிதில் பரவுகிறது. எனவே, குடிநீரை ஈகோலை ஆய்வுக்கு உட்படுத்திப் பயன்படுத்த வேண்டும். குடிநீரில் ஈகோலைக் கிருமி இருப்பின், கால்நடை மருத்துவரின் உதவியுடன், கிருமிநாசினியைக் குடிநீரில் கலந்தும், எதிர் உயிரி மருந்தை அளித்தும் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

இரத்தக் கழிச்சல் நோய் 

காக்சிடியோசிஸ் நோயின் தாக்கம் 3 முதல் 18 வார வயதுள்ள கோழிகளில் அதிகளவில் இருக்கும். சுத்தமில்லாத தீவனம், நீர் போன்றவற்றின் மூலம் எளிதில் பரவும். இந்நோய்க்கு உள்ளான கோழிகளில், இரத்தக் கழிச்சல், உடல் மெலிவு, வளர்ச்சிக் குறைவு, சோர்வு, அதிக இறப்பு போன்றவை ஏற்படும்.

இத்தகைய கோழிகளுக்குக் கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும். கோழிப்பண்ணையில் ஆழ்கூளத்தை நன்றாகக் குவித்து வைத்து, சில நாட்களுக்கு அப்படியே விட்டு விட வேண்டும். நோயினால் இறந்த கோழிகளை ஆழமான குழிகளில் கிருமிநாசினியையும் தெளித்துப் புதைத்து விட வேண்டும். அல்லது எரித்து விட வேண்டும்.

குடல் திசு அழுகல் நோய்

இந்நோய் 2 வாரக் குஞ்சுகள் முதல் 6 மாத வயதுள்ள கோழிகள் வரை தாக்குகிறது. இரத்தக் கழிச்சல் நோயால் பாதிக்கப்பட்ட கோழிகளை அதிகளவில் தாக்குகிறது. மழைக்காலத்தில் ஈரப்பதம் மிகுந்த தீவனம், தீவன மூலப் பொருள்களைச் சரியாகக் காய வைக்காமல் பயன்படுத்தல், ஈரமான கருவாடு போன்றவற்றால் இந்நோய் ஏற்படுகிறது.

இத்தகைய கோழிகள் உண்ணாமல் இருப்பதால் சோர்ந்து காணப்படும்.  நோய் அறிகுறிகள் ஏற்படுவதற்கு முன்பே கோழிகள் இறந்து விடும். எனவே, தீவனத்தில் நுண்ணுயிரி எதிர்ப்பு மருந்துகளை, கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி கொடுத்தால், இந்நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.


கோழி VISHA 1

முனைவர் .விஷா,

இணைப் பேராசிரியர், அ.இளமாறன், உதவிப் பேராசிரியர், 

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!