தென்னையைத் தாக்கும் நோய்கள்!

தென்னை Coconut

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020

லகத்தில் பயிரிடப்படும் பனை வகைகளுள் முக்கியமானது தென்னை. இதன் அனைத்துப் பாகங்களும் மனிதனுக்குப் பயன்படுவதால் தான் இம்மரம் கற்பக விருட்சம், அதாவது, சொர்க்கத்தின் மரம் எனப்படுகிறது. இந்தியாவில் கேரளம், தமிழ்நாடு, ஆந்திரம் மற்றும் கர்நாடகத்தில் தென்னை அதிகளவில் பயிரிடப்படுகிறது. இதைப் பல்வேறு நோய்கள் தாக்கிப் பொருளாதார இழப்பை ஏற்படுத்தி வருகின்றன. அந்த நோய்கள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

தென்னைக் குருத்தழுகல் நோய்

அறிகுறிகள்: இந்நோயானது பைட்டோப்தோரா பால்மிவோரா என்னும் பூஞ்சையால் ஏற்படும். இது அனைத்து வயது மரங்களையும் தாக்கும். இளம் குருத்தை முதலில் தாக்கும். இதனால் அப்பகுதியானது பச்சை நிறத்தை இழந்து மஞ்சளாக மாறிவிடும். குருத்தின் அடியிலுள்ள திசுக்கள் அழுகி, ஓரிரு வாரங்களில் பழுப்பாக மாறிவிடும். அழுகிய நடுக்குருத்து எளிதில் தனியாக வந்துவிடும். இதைத் தொடர்ந்து கீழேயுள்ள இலைகளும் தாக்கப்படும். நோய் தீவிரமாகும் போது, சில மாதங்களில் மரத்திலுள்ள மட்டைகள் எல்லாமே அழுகிக் காய்ந்து விடும். இறுதியில் மரம் பட்டுவிடும்.

இந்நோயானது, தொடர்ந்து மழை பெய்யும் போதும், காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் போதும், வெப்பநிலை 18-20 செல்சியஸ் இருக்கும் போதும் அதிகமாகப் பரவுகிறது. நோய்க்காரணி, அழுகிய இலைகள், குருத்தில் இருக்கும் பூசண இழைகள், பூசண வித்துகள், ஊஸ்போர் என்னும் உறங்கும் வித்துகள் போன்றவற்றின் மூலம் பரவுகிறது. கற்று மற்றும் மழைச்சாரல் மூலம் ஸ்பாரஞ்சியா வித்துப்பைகள் ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்துக்குப் பரவுகிறது.

கட்டுப்படுத்துதல்: நோய் தோன்றியதும் தடுப்பு முறைகளை எடுத்தால் இந்நோயை எளிதில் கட்டுப்படுத்தலாம். முதலில், நோயுற்ற குருத்து மற்றும் அதைச் சுற்றி நோயுற்ற மட்டைகளையும் அடியோடு அறுத்து அகற்றி அழித்துவிட வேண்டும். பின்னர் ஒரு சத போர்டோ கலவையைத் தயாரித்து, குருத்து மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும். அடுத்து, ஒரு சத போர்டோ பசையைத் தயாரித்து, அறுபட்ட பாகங்களில் நன்கு பூச வேண்டும். பின்பு அப்பகுதியில் மழைநீர் படாமலிருக்க, அகலமான வாயுள்ள பாத்திரத்தால் நன்கு மூடிவிட வேண்டும்.

மரத்தின் உட்குருத்து முழுவதும் தாக்கப்படாமல் இருந்தால், சில மாதங்களில் புதுக் குருத்து மறுபடியும் தோன்றும். ஒரு மரத்தில் நோய்த்தொற்று இருந்தாலும் கூட, எல்லா மரங்களுக்கும் ஒரு சத போர்டோ கலவையைத் தெளிக்க வேண்டும். போர்டோக் கலவையைத் தயாரிக்க இயலாத நிலையில், 0.25% தாமிர ஆக்சி குளோரைடு மருந்தைத் தயாரித்துத் தெளிக்க வேண்டும்.

தஞ்சாவூர் வாடல் நோய்

இதற்கு அடித்தண்டு அழுகல் நோய், கேனோடெர்மா வாடல் நோய் என்னும் பெயர்களும் உண்டு. இந்நோய் கேனோடெர்மா லூஸிடம் என்னும் பூஞ்சையால் உருவாகும். இந்தியாவில் முதன் முதலில் கர்நாடகத்தில் 1913 ஆம் ஆண்டில் பட்லர் என்பவரால் கண்டறியப்பட்டது. தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 1952 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. அதனால் தஞ்சாவூர் வாடல் நோய் எனப்படுகிறது.

அறிகுறிகள்: மரத்தின் தண்டு, இழை, வேர், பூ என எல்லாப் பாகங்களிலும் காணப்படும். மரத்தண்டில் தரையில் இருந்து 3 மீட்டர் உயரம் வரையில் இருக்கும். முதலில் சிறிய பிளவுகள் அப்பகுதியில் தோன்றும். பிறகு அவற்றில் இருந்து செம்பழுப்பு நிறத் திரவம் வடியத் தொடங்கும். அடுத்து, திரவம் வடிந்த பகுதியின் உள்ளிருக்கும் திசுக்கள் அழுகத் தொடங்கும். நோய் முற்றிய நிலையில் தண்டின் அடிப்பகுதி முழுவதும் அழுகிவிடும். நாளடைவில் அப்பகுதி மட்கியும் பட்டைகள் உறிந்தும் காணப்படும். மேலும், அப்பகுதியில் பழுப்பு நிறக் காளானைப் போன்ற பூஞ்சையும் வளரும்.

நோயுற்ற மரத்தின் வெளிச்சுற்றில் உள்ள ஓலைகள் மஞ்சளாக மாறித் தொங்கி விடும். பின்பு அடுத்த இலைகளும் இதே நிலைக்கு உள்ளாகி விடும். நாளடைவில் எல்லா மட்டைகளும் காய்ந்து விடுவதால், மரம் மொட்டையாக நிற்கும். நோயுற்ற சில மரங்களில் நுனியோலைகள் மட்டும் காயாமலும், நன்கு விரியாமலும் இருக்கும். புதிய பூக்கள் தோன்றாது. குரும்பைகள் அதிகமாக உதிரும். காய்கள் நன்கு வளராமல் வெறும் ஓட்டுடன் இருக்கும். இளம் வேர்கள் அழுகி விடும். நோய் முற்றினால் வேர்ப்பகுதியும் அழுகி விடும்.

கட்டுப்படுத்துதல்: நோயுற்ற மரத்தின் வழியாக மற்ற மரங்களுக்கு நீர் போகக்கூடாது. நூறு மில்லி நீரில் 2 கிராம் ஆரியோபஞ்சின்சால், ஒரு கிராம் தாமிரச் சல்பேட்டைக் கலந்து, ஒளி ஊடுருவும் நெகிழிப் பையில் ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்பு இளம் வேர் ஒன்றின் நுனியைச் சாய்வாகச் சீவி, மருந்துப் பையின் அடிவரையில் இருக்கும்படி இட்டுக் கட்டிவிட வேண்டும். இந்த மருந்துகள் கிடைக்காத நிலையில், 2 மில்லி காலிக்ஸின் மருந்தை 100 மில்லி நீரில் கலந்து பயன்படுத்தலாம்.

மேலும், மரத்தைச் சுற்றி ஒரு சத போர்டோ கலவையை, மண் நனையும்படி 1.5 மீட்டர் சுற்றளவில் தெளிக்க வேண்டும். அடுத்து, 200 கிராம் பாஸ்போபாக்டீரியாவை 10 கிலோ தொழுவுரத்தில் கலந்து மரத்தைச் சுற்றி இட வேண்டும். வாழையை ஊடுபயிராக இட்டால், இந்நோயின் தீவிரம் குறையும்.

சாம்பல் நிறக் கருகல் நோய்

அறிகுறிகள்: இது பெஸ்டலோஷியா பால்மாரம் என்னும் பூஞ்சையால் ஏற்படும். இலையில் தோன்றி இலை முழுவதையும் கருகச் செய்து விடும். முதலில் சிறிய மஞ்சள் நிறப் புள்ளிகள் இலைகளில் தோன்றும். பிறகு அவை பழுப்பு நிறமாக மாறும். நாளடைவில் இப்புள்ளிகள் பெரிதாகி, மையத்தில் சாம்பல் நிறமாகவும், ஓரத்தில் பழுப்பு நிறமாகவும் இருக்கும். புள்ளிகள் அதிகமாகத் தோன்றி, ஒன்றுடன் ஒன்று இணைந்து முழு இலையையும் கருகச் செய்து விடும். இப்பூஞ்சையால் உருவாகும் கொனிடியா வித்துகள் காற்றின் மூலம் ஒரு மரத்தில் இருந்து அடுத்த மரத்துக்குப் பரவும்.

கட்டுப்படுத்துதல்: இந்நோயைக் கட்டுப்படுத்த, 0.25% தாமிர ஆக்சி குளோரைடு அல்லது ஒரு சத போர்டோ கலவையை இலைப்பகுதி நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.

தண்டு ஒழுகல் நோய்

இது செரடோஸ்டோமெல்லா பாரடோக்சா என்னும் பூஞ்சையால் உருவாகும். ஜூன் முதல் நவம்பர் வரையில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் தாக்கப்பட்ட மரங்களின் தண்டில் சிறிய பிளவுகள் தோன்றி, அவற்றின் வழியாக அடர் பழுப்பு நிறத்தில் திரவம் வடியும். நாளடைவில் திரவம் வடிந்த பகுதி கறுப்பாக மாறிவிடும். பின்பு அப்பகுதியின் உள்ளிருக்கும் திசுக்களும் அழுகி, முதலில் மஞ்சளாகவும், பிறகு கறுப்பாகவும் மாறிவிடும்.

இப்படி உட்புறத் திசுக்கள் அழுகி விடுவதால், மரமானது குழாயைப் போலாகி விடும். இத்தகைய மரங்கள் வேகமாக வீசும் காற்றினால் எளிதில் முறிந்து விடும். மரத்திலுள்ள காய்களும் வளராமல் கொட்டி விடும்.

கட்டுப்படுத்துதல்: கடுமையாகத் தாக்கப்பட்ட மரங்களைப் பிடுங்கி எரித்துவிட வேண்டும். ஐந்து கிலோ வேப்பம் புண்ணாக்கை 50 கிலோ தொழுவுரத்தில் கலந்து மரத்தைச் சுற்றி இட வேண்டும். மேலும், 200 கிராம் வீதம் டிரைக்கோடெர்மா விரிடியை எடுத்து மரத்தைச் சுற்றி, செப்டம்பர் மாதத்தில் இட வேண்டும். செம்பழுப்புத் திரவம் வடிந்த பகுதிகளை, கூர்மையான கத்தியால் சுரண்டி எரித்துவிட வேண்டும்.

சுரண்டிய பகுதியில் 5% காலிக்ஸின் அல்லது ஒரு சத போர்டோ பசையால் பூசிவிட வேண்டும். அடுத்த நாளில் அதன் மேல் தாரைப் பூசிவிட வேண்டும். மேலும் 5% காலிக்ஸின் மருந்தை, ஏப்ரல்-மே, செப்டம்பர்-அக்டோபர், ஜனவரி- பிப்ரவரியில் வேர் மூலம் செலுத்த வேண்டும்.

வேர் வாடல் நோய்

அறிகுறிகள்: இதற்குக் கேரள வாடல் நோய் என்னும் பெயரும் உண்டு. இந்நோய் பைடோபிளாஸ்மாவால் ஏற்பட்டு, ப்ரொடீஸ்டா மொயெஸ்டா என்ற தத்துப் பூச்சியால் பரவும். மரத்தின் தண்டு மிகவும் மெலிந்திருக்கும். இலைகள் மஞ்சளாகவும், அளவில் சிறுத்தும், வாடியும், மாட்டின் விலா எலும்பைப் போல வளைந்து தொங்கிக் கொண்டிருக்கும். நாளடைவில் மொத்த இலைகளும் கருகி விடும். மரங்கள் மிகவும் தாமதமாகப் பூக்கும். குரும்பைகள் அதிகளவில் கொட்டும். வேர்ப்பகுதி அழுகியிருக்கும்.

கட்டுப்படுத்துதல்: கடுமையாகப் பாதிக்கப்பட்ட மரங்களைப் பிடுங்கி எரித்துவிட வேண்டும். மரத்தைச் சுற்றித் தட்டைப்பயறு, கொளுஞ்சி போன்ற பசுமை உரப் பயிர்களை வளர்த்து அங்கேயே புதைத்து விட வேண்டும். வாரம் ஒருமுறை மரம் ஒன்றுக்கு, 250 லிட்டர் நீராவது விட வேண்டும். தென்னந்தோப்பில் அதிகளவில் நீர் தேங்காத வகையில் வடிகால் வசதி இருக்க வேண்டும். ஐந்து கிலோ வேப்பம் புண்ணாக்கை 50 கிலோ தொழுவுரத்தில் கலந்து மரத்தைச் சுற்றி இட வேண்டும். ஆண்டுதோறும் மரத்துக்கு 1.3 கிலோ யூரியா, 2 கிலோ சூப்பர் பாஸ்பேட், 3.5 கிலோ பொட்டாசை இட வேண்டும்.


முனைவர் வி..சீனிவாசன்,

உதவிப் பேராசிரியர், பயிர் நோயியல் துறை, தந்தை ரோவர் வேளாண்மைக் கல்லூரி

& ஊரக வளர்ச்சி நிறுவனம், வாலிகண்டபுரம் அஞ்சல், பெரம்பலூர்-621115.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!