கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020
குறைந்த நாட்களில் குறைந்த முதலீட்டில் அதிக இலாபந்தரும் தொழில்களில் முயல் வளர்ப்பும் ஒன்றாகும். நன்கு தெரிந்து கொண்ட பிறகு தான் முயல் வளர்ப்பில் ஈடுபட வேண்டும். பசுந்தீவன உற்பத்திக்கு நிலம் இருப்பது அவசியம். தோலுக்காக, இறைச்சிக்காக, உரோமத்துக்காக முயல்களை வளர்க்கலாம்.
முயல் இனங்கள்
நியூசிலாந்து வெள்ளை, வெள்ளை ஜெயிண்ட், சோவியத் சின்செல்லா, சாம்பல் ஜெயிண்ட், டட்சு போன்றவை இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன.
கொட்டகை
முயல் வளர்ப்புக்குப் பெரியளவில் இடம் தேவையில்லை. முயல்கள் 20-35 டிகிரி செல்சியஸ் வெப்பத்தைத் தாங்கி வளரும். கொட்டகை காற்றோட்டமாக, வெளிச்சமாக இருக்க வேண்டும். தென்னை, பனையோலைகளால் அமைக்கலாம். தகரத்தில் அமைத்தால் வெய்யில் காலத்தில் தகரக்கூரை மீது தென்னை ஓலைகளை பரப்பி வைக்கலாம்.
ஒரு தாய் முயலுக்கு நான்கு சதுரடி இடம் வேண்டும். இவ்வகையில், தரையிலிருந்து ஒன்றரை அடி உயரத்தில் நான்கடி அகலம் பத்தடி நீளத்தில் கூண்டை அமைக்க வேண்டும். இக்கூண்டை 2 அடி நீளம், 2 அடி அகலத்தில் தடுப்புகள் அமைத்து, 10 அறைகள் வரும்படி பிரித்துக்கொள்ள வேண்டும். தாய் முயல்கள், ஆண் முயல்கள், பாலூட்டும் முயல்கள், குட்டிகள், விற்பனை நிலையில் உள்ள முயல்கள் என ஐந்தாகப் பிரித்து வளர்க்க வேண்டும். குட்டி முயல்களை வளர்ப்பதற்குச் சிறிய கூண்டை அமைத்து, அதில் தேங்காய் நாரைப் பரப்பி வைக்கலாம்.
தீவன மேலாண்மை
தினமும் காலை 6-8 மணிக்குள் கோ-4, அசோலா, வேலிமசால் ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும். பெரிய முயலுக்கு 300 கிராம், சிறிய முயலுக்கு 150 கிராம் வீதம் இவற்றைக் கொடுக்க வேண்டும். காலை 10 மணியளவில் முட்டைக்கோசு இலை, கேரட் இலை, நூக்கல், ஆல இலை, வேலிக்காத்தான் இலை, வாழையிலை, முள்ளங்கி இலை, அகத்திக்கீரை, வேலிமசால் என, கிடைக்கும் பசுந்தீவனத்தைக் கொடுக்கலாம். ஒரு முயலுக்கு ஒரு கைப்பிடி அளவு கொடுத்தால் போதும். தினமும் ஒரே இலையைக் கொடுக்காமல் மாற்றி மாற்றிக் கொடுப்பது நல்லது.
மாலை 4-5 மணிக்குள் அடர் தீவனத்தைக் கொடுக்க வேண்டும். கம்பு 30 கிலோ, மக்காச்சோளம் 30 கிலோ, கோதுமைத் தவிடு 25 கிலோ, கடலைப் புண்ணாக்கு 13 கிலோ, தாதுப்புகள் 1.5 கிலோ, உப்பு அரை கிலோ எடுத்து, அனைத்தையும் ஒன்றாகக் கலந்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். தீவனம் வைக்கும் போது குடிநீரையும் வைக்க வேண்டும். ஒரு கிலோ அடர் தீவனத்தில் ஒரு லிட்டர் நீரை ஊற்றிப் பிசைந்து, பெரிய முயலுக்கு 50 கிராம், சிறிய முயலுக்கு 30 கிராம் வீதம் கொடுக்க வேண்டும்.
இனப்பெருக்க முயல் தேர்வு
ஆறு மாதங்களில் பெண் முயலும், எட்டு மாதங்களில் ஆண் முயலும் பருவத்துக்கு வரும். பெண் முயல் பருவத்துக்கு வந்து விட்டால் மூலையில் வலையைத் தோண்டுவதைப் போல கால்களால் பறிக்கும். அமைதியில்லாமல் சுற்றிக்கொண்டே இருக்கும். இந்நிலையில் இணையைச் சேர்க்கலாம்.
இனப்பெருக்கம்
முயலின் சினைக்காலம் ஒரு மாதம் மட்டுமே ஆகும். ஒரு தடவையில் 6-12 குட்டிகளைப் போடும். ஆண்டுக்கு 5-8 முறை ஈனும். நான்கு பெண் முயல்களுக்கு ஓர் ஆண் முயல் வீதம் வளர்க்க வேண்டும். ஆண், பெண் முயல்களைத் தனித்தனியாக வளர்க்க வேண்டும். இனப்பெருக்க நேரத்தில் மட்டும் ஆண் முயலிடம் பெண் முயலை விட வேண்டும். ஐந்து நிமிடங்கள் கழித்துப் பெண் முயலைப் பிரித்து விடலாம். இணை சேர்ந்த 28-30 நாட்களில் ஈன்று விடும். ஈனுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன், சினை முயல் தன் ரோமங்களை உதிர்த்துக் குவித்து அதில் தான் குட்டிகளை ஈனும்.
குட்டி வளர்ப்பு
பிறந்த குட்டிகள் கண் விழிக்க 15 நாட்கள் ஆகும். எட்டுக் குட்டிகளுக்கு மேல் இருந்தால், ஒவ்வொரு குட்டியாக எடுத்துப் பாலூட்ட வேண்டும். 12ஆம் நாளில் கண்ணைத் திறக்கும் வரையில், ஒரு பெட்டிக்குள் மெல்லிய படுக்கையில் குட்டிகளைப் பாதுகாப்பாகப் படுக்க வைக்க வேண்டும். குளிர் இருக்கக் கூடாது. பிறந்து 22 நாள் வரை தாய் முயலிடம் பாலைக் குடித்து வளரும். அதன்பிறகு இலைகளை உண்ணத் தொடங்கி விடும். ஒரு மாதம் கழித்துக் குட்டிகளைத் தாயிடமிருந்து பிரித்து விடலாம். பிறகு தாய் முயலை மீண்டும் இணை சேர்க்கலாம். நான்கு மாதங்களில் தான் பாலினத்தை அறிய முடியும். அப்போது, ஆண், பெண் முயல்களைத் தனித்தனிக் கூண்டுகளில் அடைக்க வேண்டும்.
முயல் பராமரிப்பு
முயல்களைப் பெரும்பாலும் காதைப் பிடித்துத் தூக்காமல், இடுப்பைப் பிடித்துத் தான் தூக்க வேண்டும். அடிக்கடி தூக்கினால் ரோமங்கள் உதிரும். அதனால், தேவையின்றித் தூக்கக் கூடாது. முயல்களுக்கு 45 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவர் ஆலோசனைப்படி குடற்புழுக்களை நீக்க வேண்டும். சொறிநோய் தாக்கினால், வேப்பெண்ணெய்யைத் தடவலாம். கொட்டிலில் சிதறிக் கிடக்கும் தீவனங்கள், கழிவுகளைத் தினமும் அகற்ற வேண்டும். கிண்ணங்களைச் சுத்தப்படுத்திய பிறகே, நீர் மற்றும் உணவை வைக்க வேண்டும். முயல்கள் சரியாக சாப்பிடுகின்றனவா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.
மருத்துவக்குணம்
முயல் இறைச்சியில் குறைவான கொழுப்பும், அதிகப் புரதமும் உள்ளன. அதனால், இது உடல் நலத்துக்கு ஏற்றது. இதைச் சாப்பிட்டால், குடற்புண், மலச்சிக்கல் ஆகியன தீரும். முயல் இறைச்சியில் சோடியம் குறைவாக உள்ளதால், இதய நோய் உள்ளவர்களுக்கும், வயதானவர்களுக்கும் ஏற்றது.
முனைவர் சு.உஷா,
முனைவர் ந.குமாரவேலு, மரு.தெ.திவ்யலட்சுமி, கால்நடை உற்பத்தி மேலாண்மைத் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை-07.