மிளகாய் சாகுபடியில் மகசூலைப் பெருக்க என்ன செய்யலாம்?

மிளகாய் HP 4

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2021

லகளவில் காரச் சுவையைக் கொடுப்பது மிளகாய். காரமற்ற உணவைப் பெரும்பாலான மக்கள் விரும்புவதில்லை. இப்படி, உணவில் அவசியமாக உள்ள மிளகாய் 6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உணவில் பயன்பட்டு வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 17 ஆம் நூற்றாண்டில் தான் இந்தியாவுக்கு மிளகாய் வந்தது. அதற்கு முன், மிளகு தான் காரத்துக்குப் பயன்பட்டது. இது உணவில், சுவை, மணம், நிறம் ஆகியவற்றைச் சேர்க்கிறது.

சிவப்பு மிளகாயில் வைட்டமின் சி-யும், கொஞ்சம் கரோட்டீனும் உள்ளன. மஞ்சள் மற்றும் பச்சைநிற மிளகாயில் இந்த இரண்டும் குறைவாக உள்ளன. புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் பலர், அங்குள்ள நாகரிகம், பண்பாட்டுக்கு ஏற்ற வகையில் தங்களை மாற்றிக் கொண்டாலும், உணவை மட்டும் மாற்றிக்கொள்ள முடியவில்லை. தங்களின் ஊர்களிலிருந்து பொட்டலம் பொட்டலமாக மிளகாய்ப் பொடியை வரவழைத்து, சமையலில் பயன்படுத்தி வருவதைப் பார்க்கிறோம்.

காய்கறிப் பயிர்களில் முக்கியமானது மிளகாய்ப் பயிர். இது, சோலனேசியே என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. மானாவாரிக் கரிசல் பயிர்களில் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிளகாய் விளைகிறது. பச்சை மிளகாய் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதியில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது.

நிலம்

மானாவாரிக் கரிசலில் சம்பா இரகங்களை விட மானாவாரி இரகங்களே அதிகமாக சாகுபடி செய்யப்படுகின்றன. இதில், விதை முளைத்தல், இளம் செடிகளின் வளர்ச்சி, நாற்றங்காலில் ஏற்படும் பயிரிழப்பு ஆகியன முக்கியச் சிக்கல்களாகும். நல்ல வடிகால் வசதியுள்ள இருமண், 6.5-7.5 கார அமிலத் தன்மையுள்ள நிலம் மிளகாய் சாகுபடிக்கு ஏற்றது.

இரகங்கள்

மிளகாயில், கே. 1, கே. 2, பிகேஎம் 1, கோ. 1, கோ. 3, கோ. 4 ஆகிய சம்பா இரகங்களும், கோ. 2, பிஎம்கே 1, பிஎல்ஆர் 1 ஆகிய குண்டு இரகங்களும் உள்ளன.

கோ 1: இது, சாத்தூர் சம்பா இரகத்தின் மறு தேர்வாகும். பழங்கள் நீளமாக, இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இதன் வயது 210 நாட்கள். எக்டருக்கு 2.1 டன் காய்ந்த வற்றல் கிடைக்கும். கேப்சிசின் அளவு 0.72 மி.கி/கி. ஆகும்.

கோ 2: உருண்டையான நம்பியூர் நாட்டு இரகம் மூலம் பெறப்பட்டது. பழங்கள் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். அதிக விதைகள் மற்றும் காரத்தன்மை கொண்டது. இதன் வயது 210 நாட்கள். காயாகவும் பழமாகவும் அறுவடை செய்யலாம். எக்டருக்கு 2.2 டன் காய்ந்த வற்றல் கிடைக்கும்.

கோ 3: இது, திறந்த மகரந்தச் சேர்க்கை வகையில் இலங்கையில் இருந்து தெரிவு செய்யப்பட்டது. 30×15 செ.மீ. என நெருக்கமாகப் பயிரிட ஏற்றது. அதிகக் காற்றைத் தாங்கக் கூடியது. இதன் வயது 165 நாட்கள். எக்டருக்கு 15-18 டன் பச்சைக் காய்களும், 3.00-3.5 டன் காய்ந்த வற்றலும் கிடைக்கும். பழத்தில் 13% ஒலியோரசின் இருக்கும்.

கோ 4: இது, திறந்த மகரந்தச் சேர்க்கை வகையில் இலங்கையில் இருந்து தெரிவு செய்யப்பட்டது. சட்னி, பொரியல் மற்றும் ஊறுகாய் செய்ய உகந்தது. இதன் வயது 165 நாட்கள். காரத்தன்மை 0.29% இருக்கும். எக்டருக்கு 23 டன் பச்சை மிளகாய் கிடைக்கும்.

த.வே.ப.க. வீரிய ஒட்டு கோ. 1: காய்கள் இளம் பச்சையாக 10.5-12 செ.மீ. நீளத்தில் இருக்கும். கேப்சிசின் மற்றும் ஒளியோரசின், 0.58% மற்றும் 14.0% இருக்கும். காயழுகல் நோயைத் தாங்கி வளரும். இதன் வயது 195-205 நாட்கள். எக்டருக்கு 28.10 டன் பச்சை மிளகாயும், 6.74 டன் காய்ந்த வற்றலும் கிடைக்கும்.

கே 2: இது, கே 1 மற்றும் சாத்தூர் சம்பா மூலம் பெறப்பட்டது. இதன் வயது 210 நாட்களாகும். எக்டருக்கு 2.1 டன் உலர் வற்றல் கிடைக்கும்.

கே.கே.எம் (சி.எச் 1): எக்டருக்கு 3.03 டன் வற்றல் கிடைக்கும். 0.54% கேப்சிசின் இருக்கும். 92 நாட்களில் காய்களை அறுவடை செய்யலாம். காய வைத்த பின் சுருங்காமல் இருப்பதால் ஏற்றுமதிக்கு உகந்ததாக உள்ளது.

பி.கே.எம் 1: இது AC1797xCO1 இன் நான்காம் தலைமுறைக் கலப்பு மற்றும் தன் மகரந்தச் சேர்க்கை மூலம் பெறப்பட்ட இரகம். இதன் வயது 180 நாட்கள். காய்கள் கருஞ்சிவப்பாக இருக்கும். எக்டருக்கு 30-32 டன் மிளகாய் கிடைக்கும்.

பி.எல்.ஆர் 1: இது கண்டான் காடு வகையில் இருந்து பெறப்பட்ட இரகம். இதன் வயது 210 நாட்கள். எக்டருக்கு 18.4 டன் பச்சை மிளகாய் கிடைக்கும். பழமானது மணியைப் போல, மிதமான அளவில், கூரற்ற நுனியுடன், குண்டாக, பளபளப்பாக இருக்கும். மோர் வற்றல் மற்றும் ஊறுகாய்த் தயாரிப்பில் பயன்படுகிறது.

பி.எம்.கே 1: இது, கோ. 2 மற்றும் இராம்நாடு முண்டு மூலம் பெறப்பட்டது. மானாவாரி சாகுபடிக்கு ஏற்றது. எக்டருக்கு 2.3 டன் மிளகாய் வற்றல் கிடைக்கும். இதில் 0.36% கேப்சிசின் இருக்கும்.

பருவமும் விதைப்பும்

ஜனவரி- பிப்ரவரி, ஜூன்- செப்டம்பர் ஆகிய பருவங்கள் மிளகாய் சாகுபடிக்கு ஏற்றவை. எக்டருக்கு ஒரு கிலோ விதை தேவைப்படும். கோ.3 இரகத்தை 30-15 செ.மீ. இடைவெளியிலும் மற்ற இரகங்களை 45-30 செ.மீ. இடைவெளியிலும் விதைக்க வேண்டும்.

நேரடி விதைப்பு

கடைசி உழவுக்கு முன் ஏக்கருக்கு 10 டன் தொழுவுரத்தை அடியுரமாக இட வேண்டும், மேலும், 52 கிலோ யூரியா, 75 கிலோ சூப்பர் பாஸ்பேட், 32 கிலோ பொட்டாசையும் இட வேண்டும். நன்கு புழுதியாக உழுத நிலத்தில், பருவமழைக்கு முன், கைவிதைப்பாக வரிசையில் விதைக்க வேண்டும்.

மேலும், நடவு முறையில் இட வேண்டிய உரங்களில் பாதியை மட்டுமே மானாவாரி மிளகாய்க்கு இட வேண்டும். விதைத்த பிறகு, இரண்டு கிலோ அசோஸ்பைரில்லம் அல்லது சூடோமோனாசை 20 கிலோ தொழுவுரத்தில் கலந்து, நிலத்தில் போதுமான ஈரம் இருக்கும் போது தூவ வேண்டும்.

நடவு முறை

நாற்றங்கால்: ஒரு ஏக்கர் நடவுக்கு 100 ச.மீ. நாற்றங்காலை அமைக்க வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மாவிரிடி அல்லது 2 கிராம் கேப்டான் திரவம் வீதம் கலந்து விதைநேர்த்தி செய்து, மேட்டுப் பாத்திகளில் 10 செ.மீ. இடைவெளியில் சீராக விதைக்க வேண்டும். 40-50 நாட்களில் பறித்து நடலாம்.

உரமிடுதல்: எக்டருக்கு 25 டன் தொழுவுரம், 30:60:30 கிலோ தழை: மணி: சாம்பல் சத்தை அடியுரமாக இட வேண்டும். நடவு செய்த 30, 60, 90 நாட்களில், 30 கிலோ தழைச்சத்தை மேலுரமாக இட்டுப் பாசனம் செய்ய வேண்டும்.

களையெடுப்பு: எக்டருக்கு ஒரு லிட்டர் ஃபுளுகுளோரலின் என்னும் ஃப்ரிஎமர் ஜென்ஸ் களைக்கொல்லியைத் தெளிக்க வேண்டும். பிறகு, 45 நாட்கள் கழிந்து மண்ணை அணைக்கும் போது கொத்தால் களைகளை அகற்ற வேண்டும்.

வளர்ச்சியூக்கித் தெளிப்பு: நடவு செய்த 20, 40, 60, 80 நாட்களில் டிரைகான்டினால் என்னும் வளர்ச்சி ஊக்கியை 10 லிட்டர் நீருக்கு 12.5 மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும். காய்ப்பிடிப்பு அதிகரிக்க, என்.ஏ.ஏ. என்னும் வளர்ச்சி ஊக்கியை 10 பி.பி.எம். வீதம், நடவு செய்த 60, 90 நாட்களில் தெளிக்க வேண்டும்.

பயிர்ப் பாதுகாப்பு

இலைப்பேன்: இது இலையைச் சுருட்டிச் சாற்றை உறிஞ்சும். இதைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 200 மில்லி மீத்தைல் டெமட்டான் வீதம் தெளிக்கலாம்.

அசுவினி: இது, செடிகளின் குருத்துகள், பூ மொட்டுகள் மற்றும் காய்களில் கூட்டமாக இருக்கும். இதைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 200 கிராம் அசிப்பேட் அல்லது 200 மில்லி மாலத்தியான் வீதம் தெளிக்கலாம்.

மஞ்சள் சிலந்தி: இதனால் தாக்குண்ட செடிகளின் இலைகள் கீழ்நோக்கிச் சுருண்டு, சொரசொரப்பாகவும், இலைக்காம்புகள் நீண்டும் இருக்கும். இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 6 கிராம் நனையும் கந்தகத்தூள் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 3 மில்லி டைக்கோபல் அல்லது 4 மில்லி எத்தியான் வீதம் தெளிக்கலாம்.

காய்ப்புழு: புரட்டீனியாப் புழுவும், பச்சைக் காய்ப்புழுவும், இலைகளையும், காய்களையும் தின்று பெரும் சேதத்தை ஏற்படுத்தும். இவற்றைக் கட்டுப்படுத்த, வரப்பு ஓரத்தில் ஆமணக்குச் செடிகளைப் பொறிப்பயிராக வளர்த்து, புரட்டீனியாப் புழு முட்டைக் குவியல்களைச் சேகரித்து அழிக்கலாம். வேப்பெண்ணெய் 3% அல்லது வேப்பங்கொட்டைச் சாறு 5 % கரைசலை, சோப்பு போன்ற ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்கலாம்.

நாற்றழுகல் நோய்: விதைகளை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு 2.5 கிராம் காப்பர் ஆக்ஸிகுளோரைடு வீதம் கலந்து, சதுர மீட்டருக்கு 4 லிட்டர் கரைசல் வீதம் நாற்றங்காலில் ஊற்ற வேண்டும்.

சாம்பல் நோய்: ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் நனையும் கந்தகம் அல்லது ஒரு கிராம் கார்பன்டாசிம் வீதம் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.

இலைக்கருகல்-பழ அழுகல் நோய்: நோய் அறிகுறிகள் தெரிந்ததும் ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் மேங்கோசெப் அல்லது 2.5 கிராம் காப்பர் ஆக்ஸிகுளோரைடு வீதம் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.

மகசூல் மற்றும் அறுவடை

210-240 நாட்களில் எக்டருக்கு 10-15 டன் பச்சைக் காய்களும், 2-3 டன் காய்ந்த மிளகாய் வற்றலும் கிடைக்கும். செடியிலுள்ள காய்கள் முழுவதும் சிவப்பு நிறத்தில் பழங்களாக மாறியதும் பறிக்கலாம். பழங்களைக் காம்புடன் பறித்ததும் காயப்போட வேண்டும். மணலைப் பரப்பிய களத்தில் பழங்களைப் பரப்பி உலரவிட வேண்டும். வெய்யில் மிதமாக இருக்கும் காலை, மாலையில் நான்கு நாட்கள் உலர விட வேண்டும்.

பிறகு, காய்ப்புழுக்கள் தாக்கிய, பழ அழுகல் நோய் தாக்கிய, நிறமாறிய சண்டு வற்றல் மற்றும் உடைந்த வற்றல்களை நீக்கி, நல்ல வற்றலைப் பிரித்தெடுக்க வேண்டும். அறையின் ஈரப்பதம் வற்றலைத் தாக்காமல் இருக்க, தரையில் மணலைப் பரப்பி, அதன் மேல் சேமிக்க வேண்டும். இரவில் பனியால் பாதிக்கப்படாமல் இருக்க, வற்றல் மீது லேசான படுதாவைப் போட்டு மூடி வைக்கலாம். 


மிளகாய் MUTHU RAMU e1629361657342

முனைவர் செ.முத்துராமு,

முனைவர் தி.இராகவன், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், 

பரமக்குடி, இராமநாதபுரம் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!