அத்தியந்தல் சிறுதானிய மகத்துவ மையம்!

சிறுதானிய DSC 5881 scaled e1629478706386 2048x1306 1

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021

ண்ணாமலையாரை நினைத்தாலே முக்தி என்னும் ஆன்மிகச் சிறப்பும், பௌர்ணமி கிரிவலம் என்னும் சொல்லை உலகளவில் பேச வைத்த பெருமையும் மிக்கது திருவண்ணாமலை.

இந்த மாவட்டத்தில், வறண்ட மற்றும் மண்வளம் குறைந்த நிலங்களில், மிகக் குறைவான நீரிலேயே வளர்ந்து நல்ல மகசூலைத் தரும், சிறுதானிய சாகுபடியைப் பற்றிய விழிப்புணர்வைப் பெருக்கி, விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், சிறுதானிய மகத்துவ மையத்தை, 10.10.2013 முதல் இயக்கி வருகிறது.

திருவண்ணாமலையில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில், பெங்களூரு புறவழிச் சாலையில் அமைந்துள்ள அத்தியந்தல் கிராமத்தில் இம்மையம் இயங்கி வருகிறது. மொத்த சாகுபடிப் பரப்பு 12.16 எக்டர்.

இங்கு, கேழ்வரகு, சாமை, தினை, பனிவரகு, குதிரைவாலி, வரகு ஆகிய சிறுதானியங்கள் குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

அகில இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின், சிறுதானியங்கள் மேம்பாட்டு நிதியுதவியில், பயிர் இனப்பெருக்கவியல், உழவியல், பயிர் நோயியல் ஆகிய துறைகள் மூலம், சிறுதானியப் பயிர்கள் சார்ந்த ஆய்வுகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மானாவாரியில், கேழ்வரகு, சாமை, தினை, பனிவரகு, குதிரைவாலி, வரகு ஆகிய சிறுதானியப் பயிர்கள், சமவெளியிலும் ஜவ்வாதுமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் பயிரிடப்படுகின்றன. 

மையத்தின் குறிக்கோள்கள்

சிறுதானியங்களில் உயர் விளைச்சலைத் தரவல்ல புதிய இரகங்களைக் கண்டறிதல். பயிர்களில் ஏற்படும் சத்துக் குறைகளைக் கண்காணித்து அவற்றுக்கான தீர்வுகளை எடுத்துரைத்தல் மற்றும் பயிர் வளர்ச்சியைப் பாதிக்கும் வறட்சி மற்றும் வெப்பத் தாக்கத்தில் இருந்து பயிர்களைக் காக்கும் உத்திகளைப் பயனுக்குக் கொண்டு வருதல்.

பருவநிலை மாற்றங்களால் விளைச்சலைப் பாதிக்கும், நோய் மற்றும் பூச்சித் தாக்குதல்களைக் கண்டறிதல். அவற்றைக் கட்டுப்படுத்தும் பயிர்ப் பாதுகாப்பு முறைகளை எடுத்துக் கூறுதல்.

வயல்வழி ஆய்வின் மூலம் சிறுதானியப் பயிர்களின் வளர்ச்சி மற்றும் சாகுபடியைப் பெருக்கும், நவீனத் தொழில் நுட்பங்களைக் கண்டறிதல்.

திருவண்ணாமலை மாவட்டச் சிறு, குறு விவசாயிகளின் சிறுதானிய விதைப்பை எளிமைப்படுத்த, சிறுதானிய விதைப்பானை அறிமுகப்படுத்துதல். விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோரை முன்னேற்ற, சிறுதானிய சாகுபடி மற்றும் மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிப்புக் குறித்துப் பயிற்சியளித்தல்.

சிறுதானியப் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக, சிறுதானியச் சுத்திகரிப்புக் குறித்துச் செயல்முறை விளக்கமளித்தல். புதிய சாகுபடி உத்திகளைப் பரவலாக்க, விவசாயிகள் மற்றும் வேளாண் விரிவாக்க அலுவலர்களுக்கு அனைத்துப் பயிர்களிலும் விளக்கவுரை மற்றும் செயல்முறை விளக்கமளித்தல்.

உழவர்கள் மற்றும் வேளாண் அலுவலர்களுக்கு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் மூலம் கண்டறியப்பட்ட நவீனத் தொழில் நுட்பங்கள், புதிய இரகங்கள் மற்றும் வேளாண்மைத்துறை சார்ந்த அனைத்து ஆலோசனைகளையும் வழங்குதல்.

வேளாண் வல்லுநர்கள்

சிறுதானிய மகத்துவ மையத்தில் பயிர் இனப்பெருக்கவியல், உழவியல், பயிர் நோயியல் மற்றும் பயிர் வினையியல் துறைகளைச் சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள், வேளாண் உதவி தொழில் நுட்ப வல்லுநர்கள் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் வேளாண் தொழிலாளர்கள், ஒருங்கிணைந்து தத்தம் பணிகளைச் செவ்வனே செய்து வருகிறார்கள்.

இதனால், இந்த ஆராய்ச்சி மையம், தொடங்கப்பட்ட குறுகிய காலத்திலேயே புதிய கண்டுபிடிப்புகள் பலவற்றை, உழவர்களின் பயன்பாட்டுக்குத் தந்துள்ளது.

சிறுதானிய சாகுபடி, விதை உற்பத்தி, அறுவடைக்குப் பிந்தைய தொழில் நுட்பங்கள் மற்றும் சிறுதானியங்களில் மதிப்புக்கூட்டல் போன்ற பொருள்களில் பல பயிற்சிகளைச் சிறப்பாக நடத்தியுள்ளது.

பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் ஆராய்ச்சி

அத்தியந்தல் சிறுதானிய மகத்துவ மையத்தில், நான்காயிரத்துக்கும் மேற்பட்ட சிறுதானியப் பயிர்க் கருவூலங்களைப் பகுத்தும் தொகுத்தும், அப்பயிர்களின் மேம்பாட்டுக்காக, இனக்கலப்பில் பயன்படுத்தப் படுகின்றன.

கேழ்வரகு, சாமை, தினை, குதிரைவாலி மற்றும் பனிவரகுப் பயிரில் இனக்கலப்புகளைச் செய்து, சந்ததிகளைப் பல்வேறு நிலைகளில் ஆராய்ந்து; வறட்சி, நோய் மற்றும் பூச்சித் தாக்குதல்களைத் தாங்கி அதிக விளைச்சலைத் தரும் இரகங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன.

நீடித்த, நிலைத்த, உயர் மகசூலைத் தருவதற்குச் சாத்தியமான வளர்ப்புகள் பல்வகை இடப் பரிசோதனைக்காக, பல ஆராய்ச்சி நிலையங்களில்  ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், கேழ்வரகு, தினை போன்ற குறுந்தானியப் பயிர்களின் DUS ஆய்வுக்கான ஒருங்கிணைப்பு மையமாக, அத்தியந்தல் சிறுதானிய மகத்துவ மையம் விளங்கி வருகிறது.

வெளியிடப்பட்ட இரகங்கள்

இந்தச் சிறுதானிய மகத்துவ மையம் மூலம், சாமை அத்தியந்தல் 1, பனிவரகு அத்தியந்தல் 1, தினை அத்தியந்தல் 1 ஆகிய இரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தரமான விதை உற்பத்தி

அத்தியந்தல் சிறுதானிய மகத்துவ மையம் ஆண்டுதோறும் வல்லுநர் விதைகள், ஆதார விதைகள் மற்றும் சான்று விதைகளை உற்பத்தி செய்து, வேளாண் அலுவலர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.

மேலும், சாகுபடி உத்திகள், புதிய இரகங்கள், தரமான விதை உற்பத்தி மற்றும் சேமிப்புக் குறித்துப் பயிற்சிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.

வயல்வெளி விவசாய ஆலோசனை

திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளின் வயல்வெளி தொடர்பான பிரச்சனைகள் மற்றும் ஐயங்களுக்கு; நேரடி வயலாய்வு மற்றும் தொலைபேசி வழியாகவும், துறை சார்ந்த வல்லுநர்கள் மூலமும் ஆலோசனைகள் தரப்படுகின்றன.

தொழில் நுட்பக் கையேடு மற்றும் விதை விற்பனை

இந்த மைத்துக்கு வருகை தரும் விவசாயப் பெருமக்களுக்கு, சிறுதானிய சாகுபடி உத்திகள் அடங்கிய கையேடுகள் வழங்கப்படுகின்றன. மேலும், விவசாயிகளுக்குத் தேவையான விதைகள், விற்பனைக்கூடம் மூலம் விற்கப்படுகின்றன.

கட்டமைப்புகள்

வேளாண் அலுவலர்கள் மற்றும் விவசாயப் பெருமக்கள் பயனடையும் வகையில் 60 பேர் அமர்ந்து கலந்துரையாடும் வகையில் கருத்தரங்கக் கூடம், 30 பேர் அமரும் வகையில் பயிற்சிக்கூடம், 25 பேர் பயிற்சி பெறும் வகையில் சிறுதானியச் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சிறுதானிய விதைகள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களின் காட்சியரங்கு ஆகிய வசதிகள் உள்ளன.

செயல்கள்

வானொலி, தொலைக்காட்சி மூலம் ஆலோசனை: தமிழ்நாட்டிலுள்ள அனைத்துச் சிறுதானிய சாகுபடி விவசாயிகள் பயனடையும் நோக்கில், சிறுதானியங்களில் நவீன சாகுபடி உத்திகள்,

பயிர்ப் பாதுகாப்பு முறைகள், உர நிர்வாகம், பயிர்களுக்கு ஏற்ற பட்டங்கள், சிறுதானிய இரகங்கள் மற்றும் இயற்கை முறையில் சிறுதானிய சாகுபடி குறித்த விளக்க உரைகள், சென்னை, புதுச்சேரி வானொலி நிலையங்கள் வாயிலாகவும், தொலைக்காட்சி மூலமும் வழங்கப்பட்டு வருகின்றன.

தொழில் நுட்பக் கூட்டம் மூலம் பயிற்சியளித்தல்: வேளாண்மை விரிவாக்க அலுவலர்களுக்கான மண்டலத் தொழில் நுட்பக் கூட்டம், மாவட்ட வேளாண்மைத் துறையுடன் இணைந்து மாதந்தோறும் நடத்தப்படுகிறது.

இதில், திருவண்ணாமாலை மாவட்டத்தில் ஏற்படும் சாகுபடி இடர்களைக் களைவதற்கான ஆலோசனைகள், தொழில் நுட்பங்கள், வேளாண் விஞ்ஞானிகளால் சிறப்பாக வழங்கப்படுகின்றன.

மேலும், வேளாண்மை சார்ந்த தொழில் நுட்பச் செய்திகள் அடங்கிய கையேடுகளைத் தயாரித்து, வேளாண்மைத்துறை மூலம் வழங்கப்படுவதால், விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள்.

வேளாண்மைத் துறையின் மூலம் நடத்தப்பட்டு வரும் அட்மா திட்டத்தில், விவசாயிகளுக்கான பயிற்சியில் விஞ்ஞானிகள் அனைவரும் கலந்து கொண்டு, புதிய தொழில் நுட்பங்களை அளித்து வருகிறார்கள்.

இதன் மூலம் விவசாயிகள், சிறுதானியங்களில் புதிய இரகங்கள் மற்றும் உத்திகளை அறிந்து பயனடைந்து வருகிறார்கள். 

முதல்நிலை செயல் விளக்கத் திடல்கள் மற்றும் வயல்விழா: வேளாண்மை சார்ந்த துறைகளில் வெளியிடப்பட்ட புதிய இரகங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை விவசாயிகளிடம் பரப்பும் நோக்கில், அவர்களின் வயல்களில் உயர் விளைச்சல் இரகங்கள் மற்றும் தொழில் நுட்பங்கள் மூலம், முதல்நிலை செயல்விளக்கத் திடல்கள் அமைக்கப்படுகின்றன.

தொழில் முனைவோரை உருவாக்கும் திட்டம்: தமிழ்நாடு அரசின் வேளாண்மை ஆராய்ச்சி நிதியுதவியில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின், பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறையின் மூலம், அத்தியந்தல் சிறுதானிய மகத்துவ மையத்தில், தமிழ்நாடு சிறுதானியத் தொழில் முனைவோரை உருவாக்கும் திட்டம் 2017 முதல் 2020 வரை செயல்படுத்தப்பட்டது.

இதன்மூலம், திருவண்ணாமலை வட்டார மற்றும் கலசப்பாக்கம் மக்களுக்காக, சிறுதானியச் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

மேலும், திருவண்ணாமலையில் விக்னேஸ்வரா சிறுதானிய உற்பத்திக் குழுவும், கலசப்பாக்கத்தில் காமாட்சி சிறுதானிய உற்பத்திக் குழுவும் தொடங்கப்பட்டு, மிகச் சிறப்பாக இயங்கி வருகின்றன. இவ்வகையில், திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள்.

மலைவாழ் மக்கள் திட்டம்: இந்த மையத்தின் மூலம், சிறுதானியத்துக்கான அனைத்திந்திய ஒருங்கிணைந்த ஆய்வுத் திட்டத்தின் கீழ், கேழ்வரகு, தினை, சாமை, வரகு, பனிவரகு, குதிரைவாலி சாகுபடிப் பரப்பையும் உற்பத்தியையும் கூட்டுவதற்கான உத்திகள், மலைவாழ் மக்களுக்கு வழங்கப்படுகின்றன.

மேலும், இத்திட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள சித்தேரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாது மலைவாழ் மக்களுக்காக, அதிக உற்பத்தித் திறனுள்ள சிறுதானிய விதைகள்,

உரங்கள், நுண்ணுயிர் உரங்கள், எதிர் நுண்ணுயிரிகள் மற்றும் கதிர் அரிவாள், கைக்கொத்து, கடப்பாறை, மண்வெட்டி, மண்தட்டு, கோடரி ஆகிய விவசாயக் கருவிகள் முழு மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன.

இதனால், அவர்களின் இடுபொருள் செலவு குறைந்து, உற்பத்தியும், நிகர இலாபமும் கூடியுள்ளன.

படிப்புகள்: அத்தியந்தலில், சிறுதானிய சாகுபடி மற்றும் மதிப்புக் கூட்டுதல் குறித்த ஆறுமாதச் சான்றிதழ்ப் படிப்பும், வேளாண் இடுபொருள்கள் குறித்த ஓராண்டுப் பட்டயப் படிப்பும் வழங்கப்பட்டன.

இதனால், திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள், சிறுதானிய சாகுபடி பற்றியும், பூச்சிக்கொல்லி மருந்து விற்பனையாளர்கள், உரங்கள், நோய்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பற்றியும் அறிந்து பயனடைந்தார்கள்.


சிறுதானிய ANANDHI 1 e1629362269234

முனைவர் கி.ஆனந்தி,

முனைவர் கு.சத்தியா, முனைவர் அ.நிர்மலாகுமாரி, முனைவர் மா.இராஜேஷ்,

முனைவர் வெ.மணிமொழிச்செல்வி, சிறுதானிய மகத்துவ மையம், அத்தியந்தல், திருவண்ணாமலை.

பகிருங்கள்:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!