மனித வாழ்வில் பூனை!

பூனை Cat03

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020

லகளவில் பெரும்பாலான மக்கள் செல்லப் பிராணியாக, உற்ற தோழனாக, வீட்டுக் காவலாளியாக நாய்களையே வளர்க்கின்றனர். பூனைகளை வளர்ப்போர் மிகக் குறைவே. இதற்கு முக்கியக் காரணம், பூனையைப் பார்த்து விட்டுச் சென்றால் காரியம் நடக்காது என்னும் மூட நம்பிக்கை தான். ஆனால், பூனையை வளர்த்தால் நாம் நலமாக வாழலாம் என்பது அறிவியல் உண்மை.

இதய நோய் குறையும்

பூனையுடன் பழகினால் பதற்றம் குறையும். இதனால், இதய நோய் ஏற்படும் வாய்ப்பும் குறையும். முப்பது சத இதய நோய்கள், குறிப்பாகப் பக்கவாதம் வருவது கட்டுப்படும். நம்முடன் பூனை இருந்தால், அமைதியைத் தரும் வேதிப்பொருள் நம் உடலில் சுரந்து நமது கோபத்தைத் தணிக்கும். மாரடைப்பு அல்லது இதய நோயை உண்டாக்கும் கெட்ட கொழுப்புக் குறையும்.

சோர்வு, எலும்பு முறிவு குணமாகும்

பூனையின் மெல்லிய சப்தம், அது மகிழ்ச்சியாக, பாதுகாப்பாக இருப்பதைக் குறிக்கும். 20-140 ஹெட்ஸ் அலைக்கற்றை அதிர்வுள்ள இந்தச் சப்தம், மனிதர்களுக்கு ஏற்படும் எலும்பு மற்றும் தசைப் பாதிப்பைக் குணப்படுத்தும். 18-35  ஹெட்ஸ் அலைக்கற்றை ஓசை, மூட்டு மற்றும் தசைக்காயத்தைக் குணமாக்கும் என்பது அறிவியல் உண்மை. பூனையின் மியாவ் சப்தம், நம்முடன் பேசவும், குட்டிகளை அழைக்கவும் எழுப்பப்படுவதாகும்.

நல்ல உறக்கம்

பூனைகளுடன் உறங்குவதை பெண்கள் மிகவும் விரும்புவது ஓர் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. 41% பெண்கள், பூனைகளுடன் ஆழ்ந்து தூங்கியதாக அந்த ஆய்வின் போது கூறியுள்ளனர்.

சகிப்புத் தன்மை வளரும்

சிறு குழந்தைகள் செல்லப் பிராணிகளுடன் வளர்ந்தால், பிற்காலத்தில் அவர்கள் சகிப்புத் தன்மையுடன் இருப்பார்கள். மேலும், பூச்சி, தூசு போன்றவற்றால் ஏற்படும் ஒவ்வாமையும் அவர்களை அண்டாது. பூனை அல்லது பூனை சார்ந்த படங்களைப் பார்த்து வந்தாலே, நம்மிடம் நல்ல எண்ணங்கள் இருக்கும். ஆட்டிஸம், அல்சீமரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், இந்தச் சமூகத்தில் தங்களை நிலைநாட்டிக்  கொள்ளும் நம்பிக்கை, பூனை வளர்ப்பின் மூலம் உருவாகும்.

பூனையை வளர்ப்போர் பெரும்பாலும் அமைதியாக, மற்றவர்கள் மீது நம்பிக்கை உள்ளவர்களாக இருப்பார்கள். பூனையுடன் பழகுவோரின் இரத்தழுத்தம் மிதமாகவும், பழகாதோரின் இரத்தழுத்தம் மிகுந்தும் இருப்பது ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. பூனை சிறந்த துணையாக இருப்பதால் தனிமை அகலும். நம் வரவை எதிர்பார்ப்பதும், தன் தேவையை அடைய நம்மை அணுகுவதும் பூனையின் சிறப்புகளாகும்.

நோயெதிர்ப்புத் தன்மை மிகும்

இரைக்காகவும் மற்ற விலங்குகளுடன் பழகவும் வெளியே சென்று வரும். அப்போது நோய்க்கிருமிகளும் இதனுடன் சேர்ந்து வரலாம். இதனால், நமக்கு  நோயெதிர்ப்புத் தன்மை கூடும்.

எலிகளைக் கட்டுப்படுத்தும்

வீட்டில் எலிகள் இருந்தால் அவற்றின் புழுக்கை மற்றும் சிறுநீர் மூலம், எலிக்காய்ச்சல் பரவும். இந்த எலிகளைப் பூனைகள் உணவாகக் கொள்வதால், வீடு தூய்மையாகவும், உணவுப் பொருள்கள் பாதுகாப்பாகவும் இருக்கும். பெரும்பாலும் பூனைகள் சுத்தமாகவே இருக்கும் என்பதால், அவற்றைப் பராமரிப்பது மிகவும் எளிதாகும். இத்தகைய பூனை நாள், உலகளவில் ஆண்டுதோறும் அக்டோபர் 18 அன்று கொண்டாடப்படுகிறது.


PB_VENKATESAN

மா.வெங்கடேசன்,

கோ.ஜெயலட்சுமி, மு.வீரசெல்வம், நா.பிரேமலதா, 

கால்நடை மருத்துவக் கல்லூரி, ஒரத்தநாடு, தஞ்சாவூர்-614625.

பகிருங்கள்:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!