எருமைப் பண்ணையம் அருமைப் பண்ணையம்!

எருமை Murrah buffalo scaled

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2014

ந்தியா விவசாய நாடாகும். நம் நாட்டில் 70% மக்கள் விவசாயத்தை சார்ந்துள்ளனர். வேளாண்மையில் கால்நடை வளர்ப்புப் பெரும்பங்கு வகிக்கிறது. நாளுக்கு நாள் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நாம், விலங்குப் புரத உணவின் உற்பத்தியைப் பெருக்க வேண்டியுள்ளது.

அதாவது, பால், இறைச்சி, முட்டையின் தேவை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே உள்ளது. அவ்வகையில், எருமையானது பால் மற்றும் இறைச்சி உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கிறது. இந்தியாவின் மொத்தப் பால் உற்பத்தியில் 54% எருமையாகும்.

பால், இறைச்சி மற்றும் உழுதல் என முப்பெரும் பயன்களைத் தரும் எருமைகளில் 98%க்கு மேல் ஆசிய கண்டத்தில் மட்டும் உள்ளன. அதிலும், உலகின் மொத்த எருமைகளில் 50%க்கு மேல் இந்தியாவில் உள்ளன.

ஆனால், தமிழகத்தில் எருமைகளின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.

இதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், நாம் நவீன அறிவியலின் புரிதலோடு கையாண்டால் எருமை வளர்ப்பு இலாபகரமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியாவில் 12 வகையான எருமை இனங்கள் உள்ளன.

அதிலும் இயற்கையின் பரிசாக இந்திய எருமை இனமான முர்ரா, உலகளவில் சிறந்த எருமை இனமாக விளங்குகிறது.

எருமைப் பாலின் சிறப்புகள்

எருமைப் பாலானது பசும்பாலை விட அதிகப் பால் கொழுப்புச் சத்தும், குறைந்த கொலஸ்ட்ராலும் கொண்டது. அதாவது, எருமைப் பாலில் 0.65 எம்ஜி/ஜி கொலஸ்ட்ராலும் பசும்பாலில் 3.14 எம்ஜி/ஜி கொலஸ்ட்ராலும் உள்ளது.

அதிக அளவில் புரதம், வைட்டமின்கள், மெக்னிசியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற முக்கியத் தாதுச் சத்துகளும் உள்ளன. எனவே, எருமைப்பால் சத்து மிகுந்த நல்ல உணவாகும்.

பாலில் இருந்து கிடைக்கும் தயிர், வெண்ணெய், பன்னீர், பால் பவுடர், சீஸ், யோகாட், கோவா போன்ற மதிப்புக் கூட்டிய பால் பொருள்களைத் தயாரிக்க எருமைப் பாலே சிறந்தது. எருமைப்பாலில் இருந்து தயாரிக்கப்படும் இப்பொருள்கள் மிகுந்த சத்துகள் நிறைந்து, கொலஸ்ட்ரால் குறைந்த நல்ல உணவுப் பொருள்களாக இருக்கும்.

இத்தகைய மதிப்புக் கூட்டிய பொருள்களைத் தயாரித்து விற்பதன் மூலம் எருமைப் பாலால் கிடைக்கும் வரும் வருவாயை இரட்டிப்பாக்கலாம்.

எருமை வளர்ப்பிலுள்ள சவால்கள்

கன்று இறப்பு. எருமைக் கன்றுகள் பருவமடையக் குறைந்தது 3 ஆண்டுகள் ஆவது. எளிதில் சினைப் பிடிக்காமல் இருத்தல். பசுவைவிட எருமைகள் குறைவான பால் கொடுத்தல் மற்றும் அதிகத் தீவனம் உட்கொள்ளல். எருமைப் பாலுக்கு உரிய விலை கிடைக்காத நிலை.

இந்தச் சவால்களைச் சரியான முறையில் எதிர்கொண்டால் எருமை வளர்ப்பை இலாபமுள்ள தொழிலாக மாற்ற முடியும்.

கன்று இறப்புக்கான காரணங்கள்

குடற் புழுக்கள்: பிறந்த எருமைக் கன்றுகள் ஆஸ்காரியாசிஸ் என்னும் குடற் புழுக்களால் அதிகமாகப் பாதிக்கப்பட்டு இறக்கின்றன. அந்தக் கன்றுகளுக்குத் நாற்றத்துடன் கூடிய சாம்பல் நிற மலம் (வயிற்றுப்போக்கு) வெளியாகும்.

கன்று பிறந்து மூன்றாம் நாள் பிப்ரசின் மருந்தும், 21 ஆம் நாள் அல்பன்டசோல் மற்றும் முதலாண்டில் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை குடற்புழு மருந்தும் கொடுத்துக் குடற்புழு நீக்கம் செய்தால் கன்றுகளில் இறப்பைத் தவிர்க்கலாம்.

அதிகப் பால் குடித்தல்: பலர், கன்றுகளை அதிகமாகப் பாலைக் குடிப்பதற்கு விட்டு விடுகின்றனர். அதனால், சரியான முறையில் செரிமானம் ஏற்படாமல் வயிற்றுக் கோளாறு மற்றும் கழிச்சலால் கன்றுகள் இறக்கின்றன. இதைத் தடுக்க, கன்றுகளுக்கு அவற்றின் உடல் எடையில் 10% அளவு பால் மட்டும் கொடுக்க வேண்டும்.

எருமைக் கன்றுகள் தேர்வு

வளர்ப்புக் கன்றுகளின் தாய்கள் சிறந்த குணங்களைக் கொண்டிருக்க வேண்டும். அதாவது, எளிதில் சினைப் பிடித்தல், அதிக நாள்கள் அதிகப் பால் கொடுத்தல், குறைந்தளவில் தீவனம் உண்ணல் போன்ற சிறப்புகளைக் கொண்டிருக்க வேண்டும். மேலும், முர்ரா எருமை இனக் கன்றுகளை வளர்ப்பது சிறப்பு.

எளிதில் சினைப் பிடிக்காமைக்கான காரணங்கள்

பருவத்தில் இருப்பதை எளிதில் கண்டறிய முடியாத நிலை, சத்துக் குறைகள், மாறி வரும் தட்ப வெப்ப நிலை ஆகியன, எருமைகள் எளிதில் சினைப் பிடிக்காமைக்கான காரணங்களாகும். பொதுவாக எருமைகள் பருவத்தில் இருப்பதை எளிதில் வெளிப்படுத்தாமல் அமைதியாக இருக்கும்.

ஆனால், 17-24 நாட்களுக்கு ஒருமுறை பருவத்துக்கு வரும். அதிகாலை, அந்திமாலை மற்றும் இரவு நேரத்தில் தான் எருமைகள் பருவ அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

நாம் வளர்க்கும் எருமைகளின் குணங்களை நன்கு அறிவதன் மூலமும், அவற்றின் செயல்பாட்டில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் பருவச் சுழற்சியை நன்கு அறிந்து, முதல் பருவத்திலிருந்து அடுத்த பருவம் வரக்கூடிய நாளைக் கணித்து வைத்துக் கொள்வதன் மூலமும், சினை அறிகுறிகளை எளிதில் கண்டறியலாம்.

எருமை இனங்கள் தீவனத்தை அதிகமாக உண்பதால், தீவனச் செலவு அதிகமாக இருக்கும். பெரும்பாலும் உலர்ந்த தட்டை, வைக்கோல், கரும்புத் தோகை போன்றவற்றை மட்டுமே கொடுப்பதால், எருமைகளுக்குத் தேவையான சத்துகள் கிடைப்பது இல்லை.

தீவனச் செலவைக் குறைத்து, சத்தான தீவனத்தை எருமைக்குக் கொடுக்க, ஊர்ப் பொதுவில் மேய்ச்சல் நிலத்தைப் பராமரிக்கலாம்.

புரதச்சத்து மிகுந்த அசோலாவை வீட்டிலேயே உற்பத்தி செய்வதன் மூலம் தீவனச் செலவில் 50% குறைக்கலாம். கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி, எருமையின் உற்பத்தித் திறனுக்கு ஏற்ப அளவான தீவனத்தையும், சத்துக் கலவையையும் கொடுக்கலாம்.

எருமை உணர்ச்சியற்ற விலங்கு என அனைவராலும் அழைக்கப்படுகிறது. ஆனால், அது உண்மையல்ல. சத்துகளில் சிறிதளவு குறைந்தாலும் வெளிச் சூழலில் அதிக வெப்பம் இருந்தாலும் அதன் இயல்பான செயல்திறன் பாதிக்கப்படும். அதிக வெப்பத்தைச் சமாளிக்க எருமைக்கு வியர்வைச் சுரப்பிகள் அதிகம் இல்லை.

அதனால், தன் உடல் வெப்பத்தைத் தணிக்கவே, நீரிலும் சேற்றிலும் படுத்துக் கொள்கிறது. அதற்கு ஏதுவாக எருமைகள் அதிகமுள்ள இடங்களில் நீர்த் தொட்டிகளை அமைப்பதன் மூலம் அல்லது நீர்த் தெளிப்பான்களை அமைப்பதன் மூலம் எருமைகளின் உடல் வெப்பத்தைத் தணிக்கலாம்.

எருமைச் சாணத்தைக் கொண்டு மண்புழு உரத்தைத் தயாரிப்பதன் மூலம் அதிக வருவாயை ஈட்ட முடியும். இதுவரை கூறிய முறைகளின்படி எருமை வளர்ப்பை மேற்கொண்டால் எருமைப் பண்ணையம் அருமைப் பண்ணையம் ஆகும்.


எருமை Malarmathy

மரு. மு.மலர்மதி,

மரு. அ.யசோதா, மரு. வ.செ.வடிவு, கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!