வீடுகளில் செல்லப் பறவைகளை வளர்க்கும் முறைகள்!

செல்லப் பறவை love birds pictures lgjg4jqzm6hqfby1

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2018

ப்போது செல்லப் பறவைகள் வளர்ப்பு மனித வாழ்வின் அங்கமாக மாறியுள்ளது. முற்காலத்தில் இருந்தே தனக்கு ஒத்தாசையாக இருக்கும் வகையில், விலங்குகளைப் பழக்கப்படுத்தி வருவதைப் போல, பறவைகளையும் பழக்கப்படுத்தி வருகிறோம். ஏனெனில், பறவைகளின் குட்டிச் சிணுங்கல்கள் மற்றும் நடவடிக்கைகள் நம்மை வெகுவாகக் கவர்கின்றன.

செல்லப் பறவைகள்

புறா, வாத்து, அமேசான் கிளி, பச்சைக்கிளி, கேனரி, மேக்காவ், காக்கடூ, பின்சஸ், காதல் பறவைகள், பட்ஜரிகார்ஸ். இவற்றில் சிறிய உடலமைப்பைக் கொண்ட பட்ஜரிகார்ஸ் பறவைகள், கேனரி, நடுத்தர எடையுள்ள பச்சைக்கிளி, பெரிய உடலமைப்பைக் கொண்ட அமேசான் கிளி மற்றும் காக்கடூ பறவை இனங்கள் செல்லப் பறவைகளாக வளர்க்கப் படுகின்றன.

அனேகச் செல்லப் பறவைகள், குறிப்பாகக் கிளி வகைகள் மனிதர்களைப் போலவே பேசக்கூடியவை. பேசுவதோடு, சீட்டியடிக்கவும் பாடவும் செய்யும். மேலும், கதவு திறக்கும் ஓசை, பேருந்து, வாகன ஒலி மற்றும் வீட்டில் மிக்சி ஓசையையும் கூடக் கிளிகள் எழுப்பும்.

செல்லப் பறவைகளுக்கான உணவுகள்

எல்லாப் பறவைகளும் ஒரே மாதிரியான உணவுத் தேவையைக் கொண்டிருப்பதில்லை. கிளியினங்களின் உணவு முறையைப் பொறுத்து ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம். அவையாவன: விதை மற்றும் தானியங்களைத் தின்பவை, பழவகைகளைத் தின்பவை, பழம் மற்றும் பூக்களைத் தின்பவை, பூச்சியினங்களைத் தின்பவை, புழுக்கூடுகளைத் தின்பவை.

செல்லப் பறவைகளுக்கு வீட்டில் தயாரிக்கும் மற்றும் இயற்கை உணவு வகைகளைக் கொடுப்பதே சிறந்தது. கடைகளில் கிடைக்கும் கலப்புத் தீவனம் என்றால், மொத்த உணவில் 65-80%, காய்கறி  மற்றும் பழவகைகளை 15-30%, மற்றவற்றை விதை மற்றும் தானியங்களாகக் கொடுக்க வேண்டும். அனைத்துப் பழங்கள், காய்கறிகள், விதைகள் மற்றும் நீரை நிறையக் கொடுக்க வேண்டும்.

கொடுக்கக் கூடாத உணவுகள்

சாக்லெட், அதிகக் கொழுப்புள்ள உணவு, காபி, தேனீர், உப்பு, வெங்காயம், சாராயம், ஆப்பிள் விதைகள், காளான்கள். காட்டிலுள்ள பறவைகள் ஒருநாளில் முக்கால் பொழுதை உணவுக்காகவே செலவிடுகின்றன. அவற்றைக் கூண்டுகளில் அடைத்து வளர்த்தால் அவை, மனம் மற்றும் உடலளவில் சோர்வடையும். எனவே, காலையில் சூரியன் உதித்த அரை மணிக்குள்ளும், மாலையில் 5-6 மணிக்குள்ளும் உணவளிக்க வேண்டும்.

உணவு, குடிநீர்ப் பாத்திரங்களை நன்கு கழுவிப் பயன்படுத்த வேண்டும். எந்த உணவும் 24 மணி நேரத்துக்கு மேல் கூண்டில் இருக்கக் கூடாது. ஏனெனில், அழுகும் உணவினால் உடல் நலம் பாதிக்கும். விதை மற்றும் பழ வகைகளை, சிறிய விளையாட்டுப் பொருள்கள் அல்லது சிறிய பாத்திரங்களில் கொடுக்கலாம். இப்படிச் செய்தால் தான், செல்லப் பறவைகளுக்கு உணவைத் தேடியுண்ணும் பழக்கம் வளரும்.

கூட்டின் அமைப்பும் பராமரிப்பும்

பறவைகளின் உடல் எடை மற்றும் அவற்றின் பறக்கும் தன்மைக்கு ஏற்பக் கூண்டுகளை அமைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, மூக்கிலிருந்து வால் வரையில் 10 செ.மீ. நீளமுள்ள பறவைக்கு, 1,000 ச.செ.மீ. இடம் வேண்டும். கூண்டின் உயரம் 35 செ.மீ. இருக்க வேண்டும். கூடுதலாகக் கூண்டுக்குள் விடப்படும் பறவைக்கு 500 ச.செ.மீ. இடம் கூடுதலாகத் தேவைப்படும். மரங்கள் நிறைந்த இடங்களிலும் செல்லப் பறவைகளை வளர்க்கலாம்.

கூண்டின் அமைப்பில் கவனிக்க வேண்டியவை

நீண்ட நாள்கள் தாங்கக்கூடிய தரமான பொருள்களால் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு பறவைக்கும் போதிய இடவசதியளிக்க வேண்டும். கிளிகளுக்கான கம்பிவலை 1.6 மி.மீ. அளவில் இருக்க வேண்டும். வளைக்கூடானது, சிறிய பறவைக்கு 12 மி.மீ.க்கு 12 மி.மீ. அளவிலும், பெரிய பறவைக்கு 12 மி.மீ.க்கு 25 மி.மீ. அளவிலும் இருக்க வேண்டும். பறவைகள் உட்கார்ந்து ஓய்வெடுக்க, மரக்கிளைகள் அல்லது துணியாலான கயிறு, வளையங்களைப் பயன்படுத்தலாம்.

கூண்டில் கண்ணாடிகளை வைக்கக் கூடாது. ஏனெனில், பெரிய பறவைகள் அவற்றை எளிதில் உடைத்து விடும். இதைப்போல், மணியைப் போன்ற விளையாட்டுப் பொருள்களையும் பெரிய பறவைகள் இருக்கும் கூண்டில் வைக்கக் கூடாது. சிறிய பந்துகள், பொம்மைகள், மாட்டு எலும்புகள் மற்றும் சிறிய பாத்திரங்களைக் கூண்டில் வைக்கலாம்.

செல்லப் பறவைகள் மூலம் மனிதர்க்குப் பரவும் நோய்கள்

செல்லப் பறவைகளின் வயிற்றில்  சால்மோனெல்லா என்னும் நுண்ணுயிரிகள் உள்ளன. குறிப்பாக, அவற்றின் எச்சத்தைத் தவறுதலாக மனிதன் உண்ணும் போதோ, உணவில், குடிநீரில் கலக்கும் போதோ டைபாய்டு ஏற்படும். இதனால் மனிதர்களில், குறிப்பாகக் குழந்தைகளில் பேதி, உடல் வெப்பம், வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்படும்.

கிளமைடோபைலா சிட்டாஸி நுண்ணுயிரியால் உண்டாகும், சுட்டகோஸிஸ் என்னும் நோய், கிளி, மக்காவ், காக்கடைல் போன்ற பறவைகள் மூலம் பரவும். செல்லப் பறவைகளின் உலர்ந்த எச்சமானது, காற்றிலுள்ள தூசியில் கலந்து மனிதனுக்குப் பரவுகிறது. இதனால், உடல் வெப்பம், தலைவலி, உடல் வலி மற்றும் வறண்ட இருமல் ஏற்படும்.

செல்லப் பறவை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை

பறவைகள், கூண்டு, உணவுப் பாத்திரம் மற்றும் எச்சத்தைக் கையாளும் போது கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும். கூண்டுகளைக் காற்றோட்டமுள்ள இடங்களில் வைக்க வேண்டும். புகை மிகுந்த மற்றும் உருவாகக்கூடிய சமயலறையில் வைக்கக்கூடாது. பறவைகளை முத்தமிடுதல், முகத்திற்கு அருகில் வைத்துக் கொஞ்சுதல் கூடாது. தேவையான உணவு மற்றும் நீரை அளிக்க வேண்டும். கூண்டில் உள்ள எச்சம் மற்றும் உண்ணாமல் விட்ட உணவுகளை அகற்றுதல் மிகவும் அவசியம்.


Pachai boomi Venkatesan

மரு.மா.வெங்கடேசன்,

மரு.கோ.ஜெயலட்சுமி, மரு.ப.செல்வராஜ்,

கால்நடை மருத்துவக் கல்லூரி, ஒரத்தநாடு, தஞ்சாவூர் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!