கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020
தரமான பயிர் வளர்ச்சிக்கு, அதிக மகசூலுக்கு நல்ல நாற்றுகளே ஆதாரம். அதனால், நிலத்தில் நாற்றுகளை உற்பத்தி செய்யும் நிலை மாறி வருகிறது. தகுந்த வெப்பத்தைத் தரும் நைலான் வலைக்குள் நெகிழித் தட்டுகளில், சிறந்த முறையில், வணிக நோக்கில் நாற்றுகளை உற்பத்தி செய்கிறார்கள்.
நாற்றுத் தட்டுகளின் நன்மைகள்
விதைகள் உறுதியாக முளைக்கும் வகையில் குழிக்கொரு விதையிருக்கும். அதனால், விதைகள் சேதமாதல், நாற்றழுகல், சாய்தல் போன்ற சிக்கல்கள் குறைவு. ஒரே தரத்தில் நாற்றுகள் கிடைக்கும். இவற்றை எளிதாக எடுத்துச் செல்லலாம். வேர் விடுவது எளிதாகவும் விரைவாகவும் நடக்கும். நடவின் போது நாற்றுகள் சாய்வதில்லை.
பாதுகாப்பான நாற்றங்கால்
நைலான் குடில் அல்லது பாலித்தீன் கூடாரத்தில் நாற்றங்கால் தட்டுகளை வைக்க வேண்டும். காய்கறி நாற்றுகளைக் குறைந்தளவில் தயாரிக்க இது போதும். பத்தடி உயரமுள்ள கற்களை ஐந்தடி இடைவெளியில் ஊன்றிக் கூடாரத்தை அமைக்கலாம். கூடாரம் 8 அடி உயரம் இருக்க வேண்டும். கூரையின் பக்கவாட்டில் கட்டப்படும் வலை 40 துளைகளையும், மேற்கூரை வலை 50 துளைகளையும் கொண்டு, பூச்சிகள் நுழையா வகையில் இருக்க வேண்டும்.
வெய்யிலைக் கட்டுப்படுத்தும் வலையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஊதாக் கதிர்கள் பாதிக்காத 40 துளையுள்ள, கெட்டியான பிளாஸ்டிக், நைலான் பொருள்கள் கெடுவதில்லை. கோடையில், இந்த நைலான் வலைக்கு மேல் 25 சத ஊதாக் கதிர்களைத் தாங்கும் வலையை விரிப்பதால், கூடாரத் தட்ப வெப்பம் பயிர்களின் வளர்ச்சிக்கு ஏற்றதாக இருக்கும். மழைக்காலத்தில் நைலான் வலைக்கு மேல், பாலித்தீன் பாயை மூடி, மழைநீர் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதைப் போன்ற நாற்றங்காலை அமைக்க, சதுர மீட்டருக்கு 80-100 ரூபாய் செலவாகும்.
நாற்றங்கால் தட்டுகள்
இந்த ரப்பர் தட்டுகள், சமமாக அல்லது சிறு குழிகளுடன் அல்லது பெருங் குழிகளுடன் கிடைக்கும். 98 குழியுள்ள தட்டை, தக்காளி, கத்தரி, மிளகாய், பாகல், முட்டைக்கோசு, காலிப்பிளவர் நாற்று உற்பத்திக்குப் பயன்படுத்தலாம். இந்தத் தட்டு 50×20 செ.மீ. அளவில் இருக்கும். குழி 4 செ.மீ. ஆழமிருக்கும். தட்டுகளை அடிக்கடி கழுவிப் பயன்படுத்தலாம். குழிகள் சரியான தூரம், ஆழத்தில் இருப்பதால், நாற்றுக்கு வேண்டிய ஒளியும் காற்றும் கிடைப்பதுடன், நீர் தேங்காது கீழுள்ள துளை வழியே வெளியேறி விடும்.
தட்டில் இட வேண்டிய பொருள்
நோய்கள் தாக்காத வகையில் இடுபொருள்களைத் தயாரித்து இட வேண்டும். தென்னைநார்க் கழிவைச் சரியாகத் தயாரித்தால், அனைத்துச் சத்துகளையும் தரும் இயற்கை உரமாகப் பயன்படும். இதைத் தவிர, மண்புழு உரத்தைத் தனியாக அல்லது நார்க்கழிவுடன் 1:1 என்னுமளவில் கலந்து வைக்கலாம்.
நாற்றுத் தயாரிப்பு
நாற்றுகள் வளர்வதற்கான பொருள்களை குழிகளில் இட வேண்டும். குழிகளின் நடுவில் கைவிரல் அல்லது இன்னொரு தடையை வைத்து அழுத்தி, 0.5 செ.மீ. அளவில் பள்ளத்தை ஏற்படுத்த வேண்டும். பிறகு, குழிக்கு ஒரு விதையை இட்டு மூட வேண்டும். நார்க்கழிவு ஈரமாக இருந்தால் நீர் தேவையில்லை. விதைகள் முளைக்கும் வரையில் தட்டுகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கலாம். விதைகள் முளைத்த பிறகு, தட்டுகளை மேடையில் வைக்க வேண்டும். தினமும் சரியான அளவில் பூவாளி மூலம் நீரைத் தெளித்து, நோய் வராமல் பார்க்க வேண்டும். பூசணக்கொல்லி கலந்த நீரில் தட்டுகளை நனைக்க வேண்டும்.
நாற்றுகள் வளமாக இல்லையெனில், 0.3% நீரில் கரையும் உரத்தை, 12, 20 ஆகிய நாட்களில் கரைத்து ஊற்ற வேண்டும். மழையின் போது, பாலித்தீன் பாயை மூடிப் பாதுகாக்க வேண்டும். நாற்றுகளைப் பறிக்குமுன் 2-3 நாட்களுக்கு நீரை விடாமல் கடினப்படுத்த வேண்டும். நாற்றுகள் முளைத்து 10 நாளில், ஒரு லிட்டர் நீருக்கு 0.2 மி.லி. இமிடோகுளோபிரிட் மருந்தைத் தெளித்து நோயைப் பரப்பும் பூச்சிகளைக் குறைக்கலாம். 21-42 நாட்களில் நாற்றுகள் நடவுக்குத் தயாராகி விடும்.
பெரு நாற்றங்கால்
குறுகிய காலத்தில், அதிகளவில் நாற்றுகளைத் தயாரிக்கும் இயந்திரங்களை, பெங்களூரு இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் உருவாக்கியுள்ளது. நாற்றுத்தட்டு இடுபொருள்களைச் சலிக்கும் இயந்திரம், அவற்றைக் கலக்கும் இயந்திரம், தட்டுகளில் இடுபொருள்களை நிரப்பும் இயந்திரம், விதைக்கும் கருவி, கையால் இயக்கப்படும் விதைக்கருவி, காற்றை வெளிப்படுத்தி விதைக்கும் கருவி போன்றவற்றின் மூலம், ஒரு மணி நேரத்தில் 200 நாற்றுத் தட்டுகளைத் தயாரிக்கலாம்.
மேடை நாற்றங்கால்
ஒரு எக்டருக்குத் தேவையான நாற்றுகள் உற்பத்திக்கு, 10-15 மீட்டர் பரப்பு தேவை. இதில் நாற்று மேடைகளை, 9×1 மீட்டரில் 15 செ.மீ. உயரத்தில் அமைக்க வேண்டும். கட்டிகள் இல்லாமல் பண்படுத்தி, மேடைக்கு 15 கிலோ தொழுவுரம் வீதம் இட வேண்டும். மேடைக்கு, தழை:மணி:சாம்பல் சத்தை 100:100:100 கிராம் வீதம் இட வேண்டும்.
ஒரு சதுர மீட்டருக்கு 3 கிராம் ட்ரைக்கோகிராம், 100 கிராம் வேப்பம் புண்ணாக்கு வீதம் கலந்து இட வேண்டும். 8×2 செ.மீ. இடைவெளியில் விதைகளை நேராக இட்டு, மட்கிய உரத்தால் மூட வேண்டும். மேலும், காய்ந்த புல்லால் நாற்றங்காலை மூட வேண்டும். எறும்பு, கரையான் தொல்லை போக, மேடைக்கு 50-100 கிராம் பூச்சிக்கொல்லி மருந்தை வைக்க வேண்டும். விதை முளைத்ததும், 0.3% தாமிரப் பூசணக்கொல்லி மூலம் நாற்றங்காலை நனைக்க வேண்டும்.
விதைகள் முளைத்த பத்து நாளில், வைரஸ் நோய்களைப் பரப்பும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 0.2 மில்லி இமிடா குளோபிரிட் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். வைரஸ் நோய்களைப் பரப்பும் பூச்சிகளிலிருந்து நாற்றுகளைக் காப்பாற்ற, நைலான் வலையைப் பயன்படுத்த வேண்டும். நடுவதற்குச் சில நாட்கள் முன்பு, நீரை நிறுத்தி, நாற்றங்காலைக் கடினப்படுத்தி, நாற்றைப் பக்குவப்படுத்த வேண்டும். 25-42 நாட்களில் நாற்றுகள் தயாராகி விடும்.
நைலான் வலையின் பயன்
நாற்றுகளைப் பூச்சி, நோய்கள் தாக்காமல் இருக்க, 40-50 துளையுள்ள நைலான் பாய்களைப் பயன்படுத்த வேண்டும். ஒரு எக்டருக்கு, 150 சதுர மீட்டர் பாய் தேவைப்படும்.
நாற்றங்கால் பாதுகாப்பு
நெகிழிப் பாயால் மேடையை மூடி வெய்யிலால் கிடைக்கும் வெப்பத்தைக் கூட்ட வேண்டும். இதனால், பூச்சி, நோய்கள், களைகள் கட்டுக்குள் இருப்பதுடன், போதியளவில் நாற்றுகளுக்குச் சத்துகளும் கிடைக்கும்.
சூரிய வெப்பம்
தொழுவுரத்தை இட்டு நாற்றங்காலைத் தயாரிக்க வேண்டும். நீரைப் பாய்ச்சி ஈரப்படுத்தி, தடித்த நெகிழிப் பாயால் மேடையை இறுக்கி மூட வேண்டும். நாற்றங்கால் 30-40 நாட்கள் இருந்தால் வெப்பம் 52 டிகிரி வரை உயரும். மூடிய பாய் கிழியாமல் இருக்க வேண்டும். நாற்பது நாட்கள் கழித்து, பாயை நீக்கிவிட்டு விதைக்கலாம். மேலும் விவரங்களுக்கு 97863 79600.
முனைவர் பு.அழகுக்கண்ணன்,
இராஜா ஜோஸ்லின், இராஜ்கலா, திருமலைவாசன், அசோக்குமார், சோபனா,
வேளாண்மை அறிவியல் நிலையம், அரியலூர்.