காடுகளை உருவாக்கும் விதைப் பந்துகள் குறித்து தெரிஞ்சுக்கலாமா?

காடு DZicl97U0AIb3oV 1

விதைப்பந்து என்பது, வளமான மண், மாட்டுச்சாணம், மரவிதைகள் ஆகியவை கலந்த உருண்டையாகும். வெவ்வேறு வகையான விதைகள் களிமண்ணில் உருட்டப்பட்டு இந்த உருண்டைகள் செய்யப்படுகின்றன.

பொதுவாக, செம்மண் களிமண் கலவையில் தயாராகும் இந்த உருண்டைகளில், ஊட்டச்சத்தைத் தரவல்ல மட்கு உரமும் சேர்க்கப்படுகிறது. இறுதியாக, தூக்கியெறியும் போது உடைந்து விடாமலிருக்க, விதைப்பந்துகளில் பருத்தி நூல் அல்லது திரவத்தாள் பயன்படுத்தப்படுகிறது.

விதைப்பந்தின் வரலாறு

விதைப்பந்து நுட்பமானது ஜப்பானிய இயற்கை வழி விவசாயத்தில் கண்டறியப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பானில் உண்டான உணவுப் பற்றாக்குறையைச் சமாளிக்க, மலைப்பகுதிகளில் அந்நாட்டு விஞ்ஞானிகளால் இந்த நுட்பம் கொண்டு வரப்பட்டதாக ஆய்வு கூறுகிறது.

இந்த நுட்பம், எகிப்திலுள்ள நைல் நதியால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக ஏற்பட்ட உணவுப்பஞ்சத்தைப் போக்குவதற்கும், விளைநிலங்களைச் சரிப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டது.

விதைப்பந்து தயாரிப்பு

தேவையான பொருள்கள்: நன்கு தூளாக்கப்பட்ட களிமண், மட்கிய தொழுவுரம், தேவையான மர விதைகள், பருத்தி நூல் அல்லது திரவத்தாள்.

அளவு: களிமண் தூள் 5 பங்கு, தொழுவுரம் 3 பங்கு, விதை ஒரு பங்கு.

செய்முறை: களிமண்ணையும் தொழுவுரத்தையும் நீர் சேர்த்துக் கலந்து மாவு உருண்டையைப் போலப் பிசைந்துகொள்ள வேண்டும். பிறகு உருண்டையின் நடுவில் விதையை வைத்து மூடி, பருத்திநூல் அல்லது திரவத்தாளால் சுற்றி,  முதலில் நிழலில் உலர்த்த வேண்டும்.

அடுத்து வெய்யிலில் காயவைக்க வேண்டும். நன்கு காய்ந்த பிறகு தேவையான இடங்களில் போட்டு விடலாம். மழை பெய்ததும் இந்த உருண்டைகள் நனைந்து விதைகளை முளைக்க வைக்கும். விதைப்பந்து மூலம் முளைக்கும் விதைகளுக்கு அந்த மண்ணில் இருக்கும் ஈரமே போதுமானது.

நாம் மெனக்கெட்டு நீரை ஊற்றத் தேவையில்லை. விதைப்பந்துகளைப் பயன்படுத்தித் தரிசு நிலங்களில் காடுகளை உருவாக்கலாம். எவ்விதப் பராமரிப்பும் இதற்குத் தேவையில்லை. இம்முறையில் மரங்களை எளிதாக வளர்க்கலாம். வேம்பு, புங்கன், கொடுக்காய்ப்புளி, புளி, இலவம் போன்ற நாட்டுமர விதைகளே சிறந்தவை.

தமிழ்நாட்டில் விதைப்பந்தின் நிலை

கடந்தாண்டு தமிழகத்தில் ஏற்பட்ட வார்தா புயலில் ஏகப்பட்ட மரங்கள் வேருடன் சாய்ந்து விட்டதை நாம் அறிவோம். இந்த இழப்பை ஈடுகட்ட, நிறைய இடங்களில் விதைப்பந்துகள் போடப்பட்டன. விதைப்பந்துகளை முறையாகத் தயாரித்த ஒருசில அரசு பள்ளிகள், மாணவர்களைக் கொண்டு அவற்றைத் தூவி வருகின்றன.

தமிழ்நாட்டிலுள்ள சில தன்னார்வ நிறுவனங்கள், தேங்காய்க்குப் பதிலாக விதைப்பந்துகளை மஞ்சள் பைகளில் இட்டுத் திருமணங்களுக்கு வரும் மக்களிடம் கொடுத்து விதைக்கச் செய்து வருகின்றன. இதைப்போலச் சுற்றுலாப் பயணிகள் மூலமும் விதைப்பந்துகள் வீசப்படுகின்றன.

விவசாயம் மற்றும் இயற்கை வளத்தைக் காக்கும் நோக்கத்தில் ஈரோடு மாவட்டம் பெருந்துறைப் பகுதியிலுள்ள சில தன்னார்வ நிறுவனங்களும், இளைஞர்களும் விதைப்பந்துகளைத் தயாரித்து விதைத்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும் தமிழகம் முழுவதும் விதைப்பந்து தொழில்நுட்ப விழிப்புணர்வை உண்டாக்குவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றான.

எவ்வளவுதான் அறிவியல் வளர்ந்தாலும், கரியமிலக் காற்றை ஆகிஸிஜன் என்னும் நல்ல காற்றாக மாற்றும் ஆற்றல் மரங்களுக்கு மட்டுமே உண்டு. எனவே, அழிந்து போன மரங்களை, காடுகளை உருவாக்க விதைப்பந்துகள் தொழில்நுட்பம் மிகவு அவசியமாகும்.


காடு Poonguzhali 1 e1613020168251

முனைவர் சு.பூங்குழலி,

முனைவர் சுசித்ரா ராகேஷ், பா.சரண்யா, தந்தை ரோவர் வேளாண்மைக் கல்லூரி, பெரம்பலூர்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading