விரால் மீன் வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ்: ஏப்ரல் 2017.

லகின் பழைமையான தொழில்களில் நன்னீர் மீன் வளர்ப்பும் ஒன்றாகும். நமது நாட்டில் நன்னீர் மீன் வளர்ப்பு ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. நன்னீர் மீன் வளர்ப்பில், கெண்டை மீன்களைக் கொண்டு வளர்க்கப்படும் கூட்டு மீன் வளர்ப்பு, விரால் மீன் வளர்ப்பு, கெளுத்தி மீன் வளர்ப்பு, அலங்கார மீன் வளர்ப்பு ஆகியன அடங்கும். அனைத்து நன்னீர் மீன் வளர்ப்புகளும் நல்ல வருவாயைத் தரும் என்றாலும், விரால் மீன் வளர்ப்புத் தரும் வருமானம், மற்றவற்றை விட அதிகமாகும்.

இதற்குக் காரணம், சிறு கிராமங்கள் முதல் பெரிய நகரங்கள் வரையுள்ள மீன் சந்தைகளில் இம்மீன்களுக்குக் கிடைக்கும் கூடுதல் விலையே ஆகும். மேலும், விரால் மீன்கள், வெளிக்காற்றைச் சுவாசிக்கும் தன்மையைக் கொண்டவை என்பதால், குறைந்தளவு நீரிலும் இவற்றைப் பலமணி நேரம் உயிருடன் வைத்திருக்க முடியும். இதனால், இவற்றை உயிருடன் விற்க முடியும்.

வளர்ப்புக்கு ஏற்ற விரால் மீன்கள்

நமது நாட்டில் காணப்படும் விரால் மீன்களில் ஒன்பது வகைகள் உள்ளன. அவற்றில் வளர்ப்புக்கு ஏற்றவையாக மூன்று வகைகள் மட்டுமே உள்ளன. அவையாவன: சன்னா மருலியஸ் என்னும் பூ விரால், சன்னா ஸ்டிரையேட்டஸ் என்னும் வரி விரால், சன்னா பன்ங்டேட்டஸ் என்னும் புள்ளி விரால். இவற்றில் பூ விரால் மற்ற இனங்களை விட வேகமாக வளரும்.

விரால் மீன்கள் காற்றைச் சுவாசிக்கும் தன்மையைக் கொண்டுள்ளதால், குளத்தின் ஆழம் அதிகமாக இருக்கத் தேவையில்லை. நீரின் ஆழம் 60 முதல் 80 செ.மீட்டரும், அதன் மேல்வெற்றுப் பரப்பு 30 செ.மீட்டரும் என மொத்தம் 100 செ.மீ. ஆழத்தில் குளத்தை அமைத்துக் கொள்ளலாம். 12 சென்ட் முதல் 25 சென்ட் அளவுள்ள சிறிய குளங்கள், மேலாண்மைக்கு ஏற்றவையாக இருக்கும். ஈரப்பகுதியை நோக்கி விரால் மீன்கள் ஊர்ந்து செல்வதைத் தடுக்க, குளக்கரையின் உட்பக்கச் சாய்வில், பனை ஓலைகளால் மிக நெருக்கமாக வேலியை அமைக்க வேண்டும்.

வளர்ப்பு முறை

கெண்டை மீன்களைப் போலல்லாமல், விரால் மீன்கள் மாமிசப் பொருள்களையே விரும்பி உண்ணும். மேலும், அவற்றுக்கு ஏற்ற உணவு தரவில்லை என்றால், ஒன்றையொன்று அடித்துத் தின்னும் நிலை உண்டாகும். எனவே, விரால் மீன் வளர்ப்பில், இயற்கை முறை உணவளித்தல் சிறந்ததாகும்.

எனவே, நீரில் களை மீன்களையும், இதர சிறிய உயிரினங்களையும் உற்பத்தி செய்வது நல்லது. மேலும், வளர்ப்புக் குளங்களின் கரையோரத்தில் கோரை மற்றும் பிற புற்களைப் போன்ற நீர்த் தாவரங்களை வளர்ப்பதால் உற்பத்தியாகும், நீர்ப்பூச்சிகள், தவளைக் குஞ்சுகள் ஆகியன, விரால் மீன்களுக்கு உணவாக அமையும்.

இருப்புச் செய்தல் மற்றும் குஞ்சு வளர்ப்பு

இயற்கை நீர் நிலைகளில் அல்லது குஞ்சுப் பொரிப்பகங்களில் இருந்து பெறப்பட்ட விரால் குஞ்சுகளை வளர்ப்புக் குளத்தில் நேரடியாக இருப்புச் செய்வதை விட, நாற்றங்கால் குளத்தை அமைத்து அதில் 45 முதல் 60 நாட்கள் வரையில் வளர்ப்பதால் மீன் குஞ்சுகளின் பிழைப்புத் திறன் அதிகமாகும்.

இப்படி, ஒரு ஏக்கர் குளத்தில் 2,50,000 முதல் 3,50,000 விரால் மீன் குஞ்சுகளை இருப்பு வைக்கலாம். நாற்றங்கால் குளத்தில் மீன்தூள், அரிசித் தவிடு ஆகியவற்றை மேலுணவாக அளிக்கலாம்.

இயற்கை உணவான மிதவை உயிரினங்களை விரால் குஞ்சுகள் விரும்பி உண்ணும். அதனால், நாற்றங்கால் குளத்தில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை, சதுர மீட்டருக்கு ஒரு கிலோ வீதம், மாட்டுச் சாணத்தைக் கரைத்துவிட வேண்டும். விரால்மீன் குஞ்சுகள் 50 முதல் 60 கிராம் எடையை அடையும் வரை, நாற்றங்கால் குளத்தில் வளர்க்கப்பட வேண்டும்.

வளர்ப்புக் குளத்தில் உணவு மேலாண்மை

ஓர் எக்டர் அளவுள்ள வளர்ப்புக் குளத்தில் 40,000 முதல் 50,000 விரால் குஞ்சுகளை இருப்புச் செய்யலாம். வளர்ப்புக் குளத்தில் இக்குஞ்சுகளை விடுவதற்கு முன், அவற்றுக்கு உணவாகப் பயன்படும் இரை மீன்களான திலேப்பியா, சிறிய கெண்டை மீன்கள் போன்றவற்றைச் சினை மீன்களாக எக்டருக்கு 1,200 முதல் 1,500 வரையில் விடலாம்.

இவ்வகைக் களை மீன்கள் தொடர்ந்து இனப்பெருக்கம் செய்யும். அதனால், விரால் மீன்களுக்குத் தேவையான உயிருணவு கிடைத்துக் கொண்டே இருக்கும். இதைத் தவிர, மேலுணவாக, மீன்தூள், அரிசித்தவிடு அல்லது கோதுமைத் தவிடு, கடலைப் புண்ணாக்குத் தூள், மாட்டிறைச்சிக் கழிவு அல்லது கோழியிறைச்சிக் கழிவு ஆகியவற்றைத் தனித் தனியாகவோ, கலந்தோ கொடுக்கலாம்.

நீர்த்தரப் பராமரிப்பு மற்றும் உற்பத்தி

விரால் மீன்கள் எவ்விதச் சூழல் மாற்றத்தையும் தாங்கி வளர்வதால், வளர்ப்புக் குளத்து நீரின் தரம் பெரிதாகக் கருதப்படுவதில்லை. வளர்ப்புக் குளத்தின் வெப்பம், நீரின் ஆழத்தைப் பொறுத்து அமைவதால், வெப்பம் அதிகமாக இருக்கும் நாட்களில், நீரின் ஆழத்தை அதிகப்படுத்தியும், குளிர்ச்சியான நாட்களில் நீரின் ஆழத்தைக் குறைத்தும், குளத்தைப் பராமரிக்க வேண்டும். இரவில், குளக்கரையில் விளக்குகளை எரியச் செய்வதன் மூலம், குளத்தில் பூச்சிகளை விழச்செய்தும் விரால் மீன்களுக்கு உணவாகக் கொடுக்கலாம்.

விரால் மீன்களை 7-8 மாதம் வரை வளர்க்க வேண்டும். வளர்ப்புக் காலத்தில் சரியான முறையில் உணவை அளித்தால், 500 முதல் 700 கிராம் வரையில் விரால்கள் வளரும். நன்கு உணவளிக்கும் குளத்தில், மீன்களின் பிழைப்புத் திறன் 50 முதல் 60 சதம் வரை இருக்கும். இதனால், ஒரு எக்டரில் ஏறத்தாழ 1.5 டன் மீன்களை உற்பத்தி செய்யலாம். இதன் மூலம், இரண்டு முதல் மூன்று இலட்ச ரூபாய் வரை வருமானம் பெறலாம்.


முனைவர் கி.சிவக்குமார், முனைவர் க.வேல்முருகன், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் – 603 203.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!