நிலக்கடலையில் வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்த ஆலோசனை!

நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) மோகன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் வட்டாரத்தில் சித்திரை, வைகாசிப் பட்டத்தில் பரவலாக நிலக்கடலை பயிரிடப்பட்டு உள்ளது. சாகுபடிக்கான விதைகளை, நாமக்கல் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானிய விலையில் வாங்கி விதைத்து உள்ளனர்.

தற்போது பெய்யும் தொடர் மழையால், நிலக்கடலைச் செடிகளை வேரழுகல் நோய் தாக்க வாய்ப்புள்ளது.

ஒருவகைப் பூசணம் வேர்க்கடலைச் செடிகளைத் தாக்குவதால் வேரழுகல் நோய் ஏற்படுகிறது. இந்த நோயால் 60 முதல் 100 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படும். மண் மற்றும் செடிகளின் சருகுகளில், பூசண வித்துகள் வெகு நாட்களுக்கு உறக்க நிலையில் இருக்கும். இந்த வித்துகள், பாசனநீர், கால்நடைகள், மனிதர்கள் மூலம் பரவிப் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதைக் கட்டுப்படுத்த, பயிர்க்கழிவு நன்கு மட்கு வகையில் ஆழமாக உழவு செய்ய வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி வீதம் கலந்து விதை நேர்த்தி செய்யலாம். இல்லையெனில் ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் வீதம் கார்பன்டாசிம் என்னும் பூசணக்கொல்லி மூலம் விதை நேர்த்தி செய்து விதைக்கலாம்.

எக்டருக்கு 2-5 டிரைக்கோடெர்மா விரிடி வீதம் எடுத்து, 50 கிலோ தொழு உரத்தில் கலந்து மண்ணில் இடலாம். எக்டருக்கு 500 கிலோ ஆமணக்குப் புண்ணாக்கு அல்லது வேப்பம் புண்ணாக்கு வீதம் எடுத்து நிலத்தில் இடலாம். ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் கார்பன்டாசிம் வீதம் கலந்து, வேர்ப்பகுதி நனையும்படி ஊற்றி, வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.


வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், நாமக்கல்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!