புதிய விலையில் நெல் கொள்முதல்!

நெல் Paddy 10 Ideas

நெல் விவசாயிகளின் நலன் கருதி, நடப்பு 2024-2025 ஆண்டிலும், 1.9.2024 முதல், புதிய விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என்று, தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், 2002-2003 காரிஃப் பருவம் முதல், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், முகவராகச் செயல்பட்டு ஒவ்வொரு பருவத்திலும், அக்டோபர் 1-ஆம் தேதி முதல், நெல்லைக் கொள்முதல் செய்து வந்தது.

இந்நிலையில், நெல் விவசாயிகளின் நலன் கருதி, தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி அனுமதி பெற்றுத் தந்ததால், 2022-2023 காரிஃப் பருவத்தில் இருந்து, செப்டம்பர் 1-ஆம் தேதி முதல், நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 2023-2024 காரிஃப் பருவத்தில், 31.7.2024 வரை, 3,200 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம், 3,85,943 விவசாயிகளிடம் இருந்து, 33,24,166 டன் நெல்லைக் கொள்முதல் செய்து, அந்த விவசாயிகளுக்கு 7,277.77 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.

நடப்பு 2024-2025 காரிஃப் பருவத்தில், சன்னரக நெல்லுக்கு, அறிவிக்கப்பட்டு உள்ள குறைந்தளவு ஆதார விலையான 2,320 ரூபாயுடன், தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத் தொகையான 130 ரூபாயைச் சேர்த்து, குவிண்டாலுக்கு 2,450 ரூபாய் விலையில், நெல் கொள்முதல் செய்யப்படும்.

பொதுரக நெல்லுக்கு அறிவிக்கப்பட்டு உள்ள குறைந்தளவு ஆதார விலையான 2,300 ரூபாயுடன், தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத் தொகையான 105 ரூபாயைச் சேர்த்து, குவிண்டாலுக்கு 2,405 ரூபாய் விலையில், நெல் கொள்முதல் செய்யப்படும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில், விவசாயிகளுக்குத் தேவைப்படும் இடங்களில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து, நெல் கொள்முதல் செய்யப்படும். ஆகவே, 1.9.2024 முதல், புதிய கொள்முதல் விலையில், விவசாயிகள் தங்களின் நெல்லை, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்றுப் பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


செய்தி வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading