பால் உற்பத்தியைப் பெருக்கும் வழிகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி.

பாலில்லாப் பசுக்கள் மழையில்லா மேகங்களுக்கு ஒப்பாகும். இன்றைய சூழலில், கறவை மாடுகளில் முக்கியச் சிக்கல், பால் உற்பத்தியை அதிகரிப்பது எப்படி என்பது தான். எனவே, குறைந்த செலவில் பால் உற்பத்தியைப் பெருக்கும் முறைகளைப் பற்றி இங்கே காணலாம்.

பொதுவாகக் கவனிக்க வேண்டியவை

கறவை மாடுகளுக்குத் தீவனம் மிகவும் முக்கியம். இதற்குப் பசுந் தீவனத்தையும், உண்ணும் அளவுக்கு உலர் தீவனம் அல்லது வைக்கோலை அளிக்கலாம். கறவை மாட்டுக்குத் தீவனம் அளிப்பது குறைந்தால், கறக்கும் பாலின் அளவு குறையும். எனவே, 2.5 லிட்டருக்கு மேல் கூடுதலாகக் கறக்கும் ஒவ்வொரு 2 லிட்டர் பாலுக்கும் ஒரு கிலோ கலப்புத் தீவனத்தைக் கட்டாயம் கொடுக்க வேண்டும்.

கறவை மாடுகளை மென்மையாகக் கையாள வேண்டும். மாடுகள் பயந்தால் பால் உற்பத்திக் குறையும். கன்றை ஈன்ற 16 நாளிலேயே கறவை மாட்டின் சூடு வெளிப்படும். அதை அலட்சியம் செய்யாமல், அதற்கு ஏற்றவாறு பராமரிக்க வேண்டும். கரு அழிந்தால் இவ்வாறு நேரலாம்.

சரியான நேரம் பார்த்து அடுத்த கருத்தரிப்புக்குத் தயார் செய்ய வேண்டும். பால் உற்பத்தி அளவை ஒவ்வொரு முறையும் பதிவேட்டில் குறித்து வைக்க வேண்டும். இதனால், கறவை மாட்டின் உற்பத்தித் திறனை அறிந்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு மாட்டுக்கும் தனித்தனிப் பதிவேடு இருக்க வேண்டும். பாலைக் கறந்த பிறகு அடர் தீவனத்தைப் அளித்தல் சிறந்தது. சீரான இடைவெளியில் குடிநீரை வழங்க வேண்டும். வைக்கோல் போன்ற உலர் தீவனம் பால் உற்பத்தியை அதிகமாக்கும். நாள்தோறும் பாலைக் கறக்க வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று முறை கறந்தால் பால் உற்பத்தி அதிகமாகும். கறக்காமல் மடியிலேயே விடப்படும் பாலால், அதிகமாகப் பால் சுரப்பது குறையும்.

முடிந்த வரையில் முழுக் கையையும் பயன்படுத்தி, பாலைக் கறக்க வேண்டும். இரண்டு விரல், அதாவது, பெருவிரல் அல்லது ஆள்காட்டி விரலைக் கொண்டு கறப்பது, சீராக இல்லாமல் காம்புகளில் அழுத்தத்தைக் கொடுக்கும். இதனால், காம்புகளில் வலி உண்டாகும். கன்று குடிக்காமலே பாலைக் கறக்கும் வகையில் மாடுகளைப் பழக்க வேண்டும். அப்போது தான், பசுவிடம் இருந்து கன்றை விரைவில் பிரிக்க முடியும்.

திறந்தவெளிக் கொட்டில் அமைப்பே கறவை மாடுகளைச் சுதந்திரமாக உணர வைக்கும். பாலைக் கறப்பதற்கு முன், எருமை மாடுகளை நன்கு கழுவினால் சுத்தமான பால் கிடைக்கும். நாள்தோறும் எருமை மற்றும் பசுமாடுகளைக் குளிப்பாட்டுதல், உதிர்ந்த முடிகளை நீக்க உதவும். ஏதேனும் மாற்றம் இருந்தால் அதையறிந்து நீக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, அடிக்கடி உதைத்தல், நக்குதல் போன்றவை இருப்பின், அவற்றைச் சரி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு கறவைப் பருவத்துக்கும் இடையே 60-90 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும். அப்படி இல்லையெனில், பாலைத் தரும் நாட்கள் குறையும். சரியான நேரத்தில் தடுப்பூசிகளைப் போட வேண்டும். கறவை மாடுகளுக்குத் தனித்தனியாக அடையாள எண்ணை இட்டு, அவற்றின் கறக்கும் அளவு, கொழுப்புச் சத்தின் அளவு, உணவு உண்ட அளவு, கன்றை ஈனும் பருவங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.

தீவனப் புற்களின் அவசியம்

பால் உற்பத்தியைப் பெருக்குவதற்குத் தமிழகத்தில் நிறையளவில் கறவை மாடுகளை வளர்க்க வேண்டும். நிறைய மாட்டுப் பண்ணைகள் உருவாக வேண்டும். அதனால் தான், தமிழக அரசு மாடுகள் வளர்ப்புக்கு அதிக முக்கியத்தை அளித்து வருகிறது. இலவசமாகவும், மானியத்திலும் கறவை மாடுகள் வழங்கப்படுகின்றன.

மாடுகளை அதிகளவில் வளர்ப்பதற்கு மேய்ச்சல் நிலம் தேவை. ஆனால், மேய்ச்சல் நிலங்கள் காணாமல் போய் விட்டன. இதனால், மாடுகளுக்கான தீவனப்புல் கிடைப்பதில் பெருமளவு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

கறவை மாடுகளுக்குக் கால்பங்கு வைக்கோல், அரைப்பங்கு பசுந்தீவனம், கால்பங்கு கடைகளில் கிடைக்கும் ஏனைய தீவனம் கொடுக்கப்பட வேண்டும். இப்படிச் செய்தால், மாடுகள் நலமாக, வளமாக இருந்து, நிறையப் பாலைத் தரும். பராமரிப்புச் செலவும் குறையும்.

பால் உற்பத்தியில் தீவனப் பயிர்கள் முக்கியமாக விளங்குகின்றன. ஐந்து மாடுகளுக்கு மேல் இருந்தால், அவசியம் தீவனப் பயிர்களை வளர்க்க வேண்டும். அல்லது வீட்டுக்கு இரண்டு மாடுகளை வைத்திருக்கும் ஐந்து பேர்கள் சேர்ந்து, தீவனப் பயிர்களை வளர்க்கலாம்.

தீவனப் பயிர்களை வளர்க்க, கால்நடைப் பராமரிப்புத் துறையானது நிறைய மானியம் வழங்குகிறது. தீவன மக்காச்சோளம், தீவனச் சோளம், தீவனக்கம்பு, கினியாப்புல், தீவனத் தட்டைப்பயறு, கம்பு நேப்பியர் புல் ஆகியன முக்கியமான தீவனப் பயிர்களாகும்.

தானுவாசு தாதுப்புக் கலவை

கறவை மாடுகளின் தீவனத்தில் தாதுப்புக் கலவையைச் சேர்க்கா விட்டால், பால் உற்பத்திக் குறைவதுடன், கறவை மாடுகள் அடுத்துச் சினைக்கு வருவதும் தாமதமாகும். எனவே, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், கறவை மாடுகளின் பால் உற்பத்தித் திறனை மேம்படுத்த, தானுவாசு தாதுப்புக் கலவையைத் தயாரித்து உள்ளது. இந்தத் தாதுப்புக் கலவையில், கால்சியம் 23 சதம், பாஸ்பரஸ் 12 சதம், மெக்னீசியம் 6.5 சதம் மற்றும் இதர தாதுப்புகள் உள்ளன.

இந்தக் கலவை, மாவட்டங்களில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்களில் கிலோ 65 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்தக் கலவையை நாள்தோறும் கால்நடைகளுக்குக் கொடுக்க வேண்டும். கன்றுக்கு 5 கிராம், கிடேரிக்கு 15-20 கிராம், கறவைமாடு மற்றும் காளைக்கு 40-50 கிராம், பாலில்லாக் கறவைக்கு 25-30 கிராம் வீதம் கொடுக்க வேண்டும்.

தானுவாசு கிரான்ட் டானிக்

கலப்பினக் கறவை மாடுகளுக்கு அரிசிக்கஞ்சி மற்றும் சோற்றைத் தரும் போது, அமிலத் தன்மை அதிகமாகிறது. இதனால், பால் உற்பத்திக் குறைகிறது. இந்த நிலையை மாற்றிப் பால் உற்பத்தியைப் பெருக்குவதில் தானுவாசு கிரான்ட் டானிக் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த டானிக்கில், மாடுகளின் வயிற்றிலுள்ள நன்மை பயக்கும் நுண்ணுயிர்களுக்குத் தேவையான நைட்ரஜன், கந்தகம், கோபால்ட், தாமிரம் போன்ற சத்துகள் உள்ளன.

இந்த மருந்தைத் தீவனத்தில் கலந்து மாடுகளுக்கு அளித்தால், மாடுகளின் வயிற்றில் நன்மை பயக்கும் நுண்ணுயிரிகள் பெருகும். இதனால், மாடுகள் உண்ணும் தீவனம் நன்கு செரிப்பதால், பால் உற்பத்தி அதிகமாகும். இந்தச் சத்து மருந்து, 10 மில்லி அளவில் நெகிழிப் பைகளில் கரைசலாகக் கிடைக்கும். இது மாவட்டங்களில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்களில், 50 பைசாவுக்குக் கிடைக்கிறது.

ஆகவே, கறவை மாடுகளை வளர்ப்போர் இதுவரை கூறியுள்ள நுட்பங்களைச் செயல்படுத்தி, பால் உற்பத்தியைப் பெருக்கி வளமாக வாழலாம்.


மருத்துவர் அ.இளமாறன், முனைவர் செசிலியா ஜோசப், சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை – 600 007.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!