மாடித் தோட்டத்தில் அவரைக்காய் சாகுபடி!

மாடித் தோட்டம் என்பது, விவசாய நிலம், இல்லாதவர்களுக்கும், விவசாயம் செய்ய ஆர்வம் உள்ளவர்களுக்கும், தங்கள் குடும்பம் நலமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தேவையான ஒன்றாகும்.

தேவையான பொருள்கள்

வீட்டில் பயனில்லாமல் கிடக்கும் டப்பாக்கள், கூடைகள், காலி பேட்டரி பெட்டிகள், பிளாஸ்டிக் வாளிகள், மண் தொட்டிகள், காலி பெயின்ட் டின்கள், சாக்குப் பைகள் ஆகியவற்றை இதற்குப் பயன்படுத்தலாம். முதலில் அடியுரமாக இட மணல், மட்கிய தென்னைநார்க் கழிவு, மண்புழு உரம், செம்மண், உயிர் உரங்கள், வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

தொட்டிகள்: தேங்காய்நார்க் கழிவு இரண்டு பங்கு, மாட்டுச்சாணம் ஒரு பங்கு, சமையலறைக் கழிவு ஒரு பங்கு என இட்டுத் தொட்டியை நிரப்ப வேண்டும். அடுத்து 8 முதல் 12 நாட்கள் கழித்து, நோயற்ற, தரமான விதைகளை விதைக்க வேண்டும், அவரையில், செடியவரை, கொடியவரை என உள்ளன. ஒரு தொட்டியில் மூன்று செடியவரை விதைகளை ஊன்றலாம், கொடியவரை எனில் நான்கு விதைகளை வரை ஊன்றலாம்.

நீர்: விதைகளை விதைத்ததும் பூவாளியால் நீரைத் தெளிக்க வேண்டும். இப்படி, மூன்று நாட்களுக்கு ஒருமுறை செய்ய வேண்டும்.

பந்தல் அமைக்கும் முறை: மாடித் தோட்டத்தில் பந்தல் போடுவது மிக எளிதான வேலை. இதற்கு நான்கு சாக்குப் பைகள் தேவை. இந்தப் பைகளில் மணலை நிரப்பி, ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மூங்கில் கம்பை ஆழமாக ஊன்றி, மூலைக்கு ஒன்றாக, நான்கு மூலைகளில் வைக்க வேண்டும். இந்த பந்தலில், கொடிகளைப் படர விட வேண்டும். செடியவரைக்குப் பந்தல் அமைக்கத் தேவையில்லை.

உரங்கள்: செடிகளைக் காக்கும் இயற்கைப் பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணெய்யை, மாதம் இரண்டு முறை தெளிக்க வேண்டும். காய்ந்த வேப்பிலை அல்லது எட்டிக் காய்களைத் தூளாக்கி, செடிக்கு 30 கிராம் வீதம் செடியின் அடிப்பகுதியில் போட்டு, மண்ணைக் கிளறிவிட வேண்டும், அடியுரமாகவும், பூச்சி விரட்டியாகவும் விளங்கும் இது, வேரழுகலில் இருந்து செடிகளைக் காப்பாற்றி விடும்.

பாதுகாப்பு: கொடியவரையில் வளரும் நுனிக் கிளைகளைக் கவாத்து செய்தால், அதிக கிளைகள் தோன்றும். செடியைச் சுற்றியுள்ள அடி மண்ணை 15 நாட்களுக்கு ஒருமுறை கிளறி விட வேண்டும். பூச்சித் தாக்குதலைத் தடுக்கப் பத்து நாட்களுக்கு ஒருமுறை, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகிய மூன்று பொருள்களை இடித்துத் தூள் செய்து வடிகட்டி, நீரில் கலந்து காலை நேரத்தில் செடிகளில் தெளித்து வந்தால், பூச்சி மற்றும் நோய்களில் இருந்து காப்பாற்றி விடலாம். இது வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படும்.

அறுவடை: செடிக்கு 10-15 காய்கள் காய்க்கும். இந்தக் காய்களைச் சரியான பருவத்தில் இரு நாட்களுக்கு ஒருமுறை பறித்தல் வேண்டும். இப்படி, 3-4 மாதங்கள் வரை பலன் தரும்.


முனைவர் பி.ஜெய்சங்கர், உதவிப் பேராசிரியர், தோட்டக்கலைத் துறை, பா.ஆட்லின் ஷைனி, .அபிஷா, முதலாண்டு மாணவிகள்,

புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரி, புதுக்கோட்டை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!