கால்நடைகளிடம் இருக்கும் வேண்டாத பழக்கங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2021

ந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்னும் பழமொழிக்கு ஏற்ப, சில பழக்க வழக்கங்களை முளையிலேயே கிள்ளியெறியா விட்டால், எதிர்காலத்தில் அவற்றால் கெடுதல்கள் நிகழும். இப்படியான செயல்கள் மனிதர்களிடம் மட்டுமின்றி, கால்நடைகளிடமும் உள்ளன. அவற்றைத் தொடக்கத்திலேயே கவனித்து ஒழிக்க வேண்டும்.

கன்றுகள் பால் குடிக்கலாம். ஆனால், பசுவே தன் மடியிலுள்ள பாலைக் குடிக்கலாமா? ஒரு சில கறவை மாடுகள் தமது மடியிலுள்ள பாலைக் குடிக்கும். இதனால் தொற்று நோய்கள் பரவும். கிருமிகள் மடியில் பரவி மடிநோயை உண்டாக்கும். இந்தப் பழக்கமுள்ள மாடுகளைப் பிரித்துத் தனியாக வளர்க்க வேண்டும். வாய்க்கூடு போட்டு இப்பழக்கத்தை நிறுத்தலாம். நாளாக நாளாக, பாலைக் குடிக்கும் பழக்கத்தை மாற்றிக் கொள்ளும்.

இதைப்போல, தனது சிறுநீரைத் தானே குடிக்கும் கெட்ட வழக்கம் காளைக் கன்றுகளிடம் இருக்கும். தாதுப்புக் குறையே இதற்குக் காரணம். தீவனத்தில் புரதம் குறைவாக இருந்தாலும் இத்தகைய பழக்கம் வரும். மேலும், வயிறு சார்ந்த நோய்கள் இருந்தாலும் இப்பழக்கம் ஏற்படும். இவற்றில் எதனால் இந்தப் பழக்கம் ஏற்பட்டது என்பதை, கால்நடை மருத்துவர் மூலம் அறிய வேண்டும்.

பெரும்பாலான கிடேரிகள் தங்களுடைய முதல் ஈற்றில் கன்றை ஈன்ற பிறகு, பால் கறவைக்கு ஒத்துழைக்காமல் உதைக்கும். இதற்கு, கறவையாளர் கையாளும் கறவை முறை தான் முக்கியக் காரணம். மடியில் அல்லது காம்புகளில் உண்டான காயத்தின் வலியால் கூட இப்படி உதைக்கலாம். இப்படி இல்லாமல் இயற்கையாகவே உதைக்கிறது என்றால், இதைக் கட்டுப்படுத்த, கறவையின் போது மாட்டின் தலையை உயர்த்திக் கட்ட வேண்டும்.

பாலைக் குடிக்கும் பருவத்திலுள்ள சில கன்றுகள், பக்கத்திலுள்ள கன்றுகளை நாக்கால் நக்கும். இதனால், அந்தக் கன்றின் முடிகள், நக்கும் கன்றின் வயிற்றுக்குள் சென்று விடும். தொடர்ந்து நக்குவதால் நிறைய முடிகள் வயிற்றில் உருண்டையாகத் திரண்டு பந்தைப் போல ஆகி விடும். இதனால், கன்றுகளுக்குப் பாதகமான விளைவு உண்டாகும். இப்பழக்கத்தைக் கட்டுப்படுத்த, தாதுப்புக் கட்டியைக் கன்றுகளுக்கு முன்னால் கட்டித் தொங்கவிட வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சமையல் உப்பு அல்லது தாதுப்புக் கலவையைச் சிறிதளவு எடுத்து, பாலைக் குடித்து முடித்த பிறகு, கன்றின் நாக்கில் தடவிவிட வேண்டும். இதைத் தொடர்ந்து சில நாட்களுக்குச் செய்து வந்தால், நக்கும் பழக்கத்தைக் கன்றுகள் மறந்து விடும்.

எனவே, கால்நடைகளிடம் இருக்கும் கூடாத பழக்கங்களைக் கட்டுப்படுத்தி வளர்த்தால், நலமும் வளமும் உள்ள பண்ணையாக அமையும். அதனால், வருமுன் காப்போம்; வளமாகக் கால்நடைகளை வளர்ப்போம். 


மரு.வி.இராஜேந்திரன்,

முன்னாள் இணை இயக்குநர், கால்நடைப் பராமரிப்புத் துறை, நத்தம்-624401, திண்டுக்கல்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!