வேலைக் கஷ்டம் இல்லீங்க; நிரந்தரமான விலை கிடைக்குதுங்க!

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வட்டாரம், எஸ்.புதுப்பாளையம் விவசாயி சு.சந்திரசேகர், தன் நிலத்தில் இப்போது ஆமணக்கைத் தனிப் பயிராக சாகுபடி செய்துள்ளார். அவரிடம் ஆமணக்கு சாகுபடி அனுபவம் குறித்துக் கேட்டபோது அவர் கூறியதாவது:

“நமக்கு ஒரு பத்து ஏக்கரா நெலம் இருக்குங்க. இதுல ஆறேழு ஏக்கரா மானாவாரி பூமிங்க. பொதுவாவே நம்ம பக்கம் வறட்சி கொஞ்சம் அதிகம்ங்க. கெணத்துல தண்ணி சுமாரா தான் இருக்குங்க. ரெண்டு போரு இருக்குங்க. அதுல கெடைக்கிற தண்ணிய வச்சு தான் வெவசாயம் பண்றோம்ங்க. தண்ணிய வீணாக்காம சிக்கனமா விடணும்ன்னு, சொட்டுநீரு பாசன வசதியை செஞ்சிருக்கோம்ங்க. இது வேளாண்மைத் துறை மூலமா மானியத்துல போட்டதுங்க.

பருத்தி, நெலக்கடல, கொட்டைமுத்து தான் பயிர் பண்ணுவோம்ங்க. இப்போ ஒரு மூனு ஏக்கராவுல கொட்டை முத்துச் செடிகள் இருக்குங்க. இது, ஆடிப் பட்டத்துல விதைப்புச் செஞ்சதுங்க. சொட்டுநீரு குழாய் மூலம் தான் கொட்டை முத்துச் செடிகளுக்குத் தண்ணி குடுக்குறோம்ங்க. சிக்கனமா விடுறதுனால நாலு நாளைக்கு ஒருமுறையாவது தண்ணி குடுக்கணும்ங்க.

சாணிக் குப்பையை அடியுரமா போட்டு, நெலத்தை மூனு நாலு முறை நல்லா உழுகணுங்க. இல்லேன்னா புல்லும் களைச்செடிகளும் ஏகமா முளச்சு, கொட்டைமுத்துச் செடிகள கலகலன்னு வளர விடாதுங்க. நெலத்தை தயார் பண்ணிட்டு வரிசைக்கு வரிசை செடிக்குச் செடி ஆறடி இடைவெளியில விதைகள நடணும்ங்க. ஏக்கராவுக்கு ரெண்டு கிலோ விதைகள் போதும்ங்க. கிலோ 350 ரூபான்னு ஏத்தாப்பூர் இரகத்தை தான் வாங்கிட்டு வந்து சாகுபடி செஞ்சிருக்குங்க.

இந்த விதைக முளச்சு ஒரு அரையடி அளவுக்கு வளர்ந்ததும் இடையுழவு ஓட்டி, களைகள அழிக்கணும்ங்க. செடிகள சுத்தி இருக்குற களைகள கொத்தி விடணும்ங்க. அப்பத்தான் செடிகள் தொந்தரவு இல்லாம நல்லபடியா வளரும்ங்க.

களையை எடுத்ததும் முதல் மேலுரம் குடுப்போம்ங்க. நம்ம பக்கம் 10:10:26ன்னு ஒரு உரம் இருக்குங்க. இதைத் தான் நம்ம பக்கத்து விவசாயிக கொட்டைமுத்துச் செடிக்குக் குடுப்பாங்க. அதனால, இந்த உரத்தை வாங்கி வந்து செடிகளைச் சுத்திப் போட்டு விட்டு, தண்ணிய விடுவோம்ங்க. அடுத்து, ஒரு பதினஞ்சு இருபது நாள் கழிச்சு திரும்பவும் இந்த உரத்தைத் தான் ரெண்டாம் உரமா குடுப்போம்ங்க. இதோட உரம் குடுக்குறத நிறுத்திருவோம்ங்க.

கொட்டைமுத்துச் செடிகள்ல செம்பேனுக விழுகும்ங்க. அப்புறம் இந்தக் கொட்டைப் புழுவும் தாக்கும்ங்க. தை, மாசிப் பட்டத்துல அசுவினி விழுகும்ங்க. இதுகள கவனமா பார்த்துக் கட்டுப்படுத்தணும்ங்க. குயினால்பாஸ் மருந்து கொட்டைப் புழுக்கள நல்லா கட்டுப்படுத்தும்ங்க. நம்ம பக்கம் நல்லா அனுசரணையா பழகக்கூடிய விவசாய அதிகாரிக இருக்காக. அவங்ககிட்ட கேட்டா, இன்ன மருந்தை வாங்கி அடிங்கன்னு சொல்லுவாக. அதுப்படி செய்வோம்ங்க.

அம்பது அறுபது நாளுக்கு மேல செடிகள்ல குலைகள் வரும்ங்க. இதுக காய்களாகி முதல் அறுவடைக்கு வர்றதுக்கு ஒரு மாசம் ஆகிரும்ங்க. அடுத்து, மாசம் ஒருமுறை அறுவடை செய்யலாம்ங்க. மொத்தத்துல நாலஞ்சு முறை அறுவடை பண்ணலாம்ங்க.

ஏக்கருக்கு ஐநூறு கிலோவுக்குக் குறையாம மகசூல் வரும்ங்க. சூழ்நிலை நல்லா அமஞ்சுட்டா இன்னும் கூடுதலாவும் மகசூல் கிடைக்கும்ங்க. இன்னிக்கு நிலையில ஒரு கிலோ கொட்டைமுத்து வெலை எழுபது ரூபாங்க.

கொட்டைமுத்து சாகுபடியில தண்ணிச் செலவு குறைவுங்க. வேலையாள் தேவை குறைவுங்க. வேலைக் கஷ்டமும் இல்லீங்க. கொட்டை முத்துக்கு நிரந்தரமான விலை கிடைக்குதுங்க’’ என்றார்.


பசுமை

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!