பஞ்சகவ்யா தயாரிப்பும் பயன்களும்!

Panjakavya

செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி.

ழங்காலத்தில் விவசாயம் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்திச் செய்யப்பட்டு வந்தது. பிறகு, பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியைப் பெருக்க, இரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டன. இப்படி, அதிகமான இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட்டினால், மண்வளம் பெரிதாகக் குறைந்துள்ளது. எனவே, இத்தகைய வளமற்ற நிலங்களை வளமாக மாற்றுவதிலும், பூச்சிக் கொல்லிகள் அற்ற உணவுப் பொருள்களை உற்பத்தி செய்வதிலும், இயற்கை உரமான பஞ்சகவ்யா பெரும்பங்கு வகிக்கிறது.

பஞ்சகவ்யா உற்பத்தி

அங்கக வேளாண்மையில் பயிர்கள் மற்றும் மரங்களுக்கு இட வேண்டிய உரங்கள், பயிர் வளர்ச்சி ஊக்கிகள் இயற்கையைச் சார்ந்து இருக்க வேண்டும். இவ்வகையில் அடங்குவது தான் பஞ்சகவ்யா. பஞ்சகவ்யா ஓர் அங்ககப் பொருளாகும். பசு மாடுகளில் இருந்து கிடைக்கும் ஐந்து முக்கியப் பொருள்களான, சாணம், கோமியம், பால், தயிர், நெய் ஆகியன பஞ்சகவ்யா தயாரிப்புக்குப் பயன்படுகின்றன. இவற்றுடன், வெல்லம் அல்லது கரும்புச்சாறு, இளநீர், வாழைப்பழம், நீர் ஆகிய பொருள்களும் சேர்க்கப்படுகின்றன.

செய்முறை

பசுஞ்சாணம் ஐந்து கிலோவுடன் ஒரு லிட்டர் பசு நெய்யைக் கலந்து மண்பானை அல்லது பிளாஸ்டிக் வாளியில் வைக்க வேண்டும். இந்தக் கலவையை மூன்று நாட்களுக்கு, காலை மாலையில் நன்கு கலக்கிவிட வேண்டும். நான்காம் நாள் இந்தக் கலவையுடன், பசுவின் கோமியம் 5 லிட்டர், பசும்பால் 2 லிட்டர், 2 புளித்த தயிர் 2 லிட்டர், கரும்புச்சாறு 3 லிட்டர் அல்லது வெல்லம் 3 கிலோ, இளநீர் 3 லிட்டர், பூவன் வாழைப் பழங்கள் 12 ஆகிய பொருள்களுடன் நீரைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

இந்தக் கரைசலை அவ்வப்போது கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும். அடிக்கடி கலக்கி விட்டால், அதிகளவில் காற்றோட்டம் ஏற்பட்டு நுண்ணுயிர்களின் செயல் திறன் அதிகமாகும். எனவே, நிழல் மற்றும் காற்று நன்கு கிடைக்கும் இடத்தில் இக்கலவையை வைத்து, தினமும் 2-3 முறை கலக்கி விட வேண்டும். இக்கலவையைத் தினமும் கலக்கி வந்தால் ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை

பஞ்சகவ்யாவை மூன்று சதவீதக் கரைசலாகப் பயன்படுத்த வேண்டும். அதாவது, நூறு லிட்டர் நீருக்கு மூன்று லிட்டர் பஞ்சகவ்யா வீதம் கலந்து பயிர்களுக்குக் கொடுக்க வேண்டும். பஞ்சகவ்யா கரைசலை எக்டருக்கு ஐம்பது லிட்டர் வீதம் பாசன நீருடனும் கலந்து விடலாம். இதற்குச் சொட்டுநீர்ப் பாசன வசதி அல்லது பாய்வுப் பாசனமுறை நிலத்தில் இருக்க வேண்டும்.

நெற்பயிருக்கு, நடவு செய்த 10, 15, 30, 50 ஆகிய நாட்களில் தெளிக்க வேண்டும். காய்கறிப் பயிர்களுக்கு, விதைத்த, 30, 45, 60, 75 ஆகிய நாட்களில் பயன்படுத்த வேண்டும். ரோஜா, மல்லிகைக்குப் பூப்பிடிக்கும் போது தெளிக்க வேண்டும்.

நன்மைகள்

இயற்கை உரமாக விளங்கும் பஞ்சகவ்யா, பயிர் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் திரவமாக விளங்குகிறது. பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதல்களை எதிர்த்து வளரும் ஆற்றலைப் பயிர்களுக்குக் கொடுக்கிறது. பஞ்சகவ்யாவில் பெருஞ் சத்துகளும், நுண் சத்துகளும் அதிகளவில் உள்ளன. அதனால், பயிர்களில் கூடுதல் மகசூல் கிடைக்கிறது. பூக்கள் உதிர்வது குறைகிறது. விளை பொருள்களின் தரம் கூடுகிறது. மண்வளம் மற்றும் சுற்றுச்சூழல் காக்கப்படுகிறது.

பஞ்சகவ்யாவில் இருக்கும் காரணிகளால், பசியார்வம், செரிப்புத் திறன் அதிகமாகிறது. நச்சுத் தன்மை உடலிலிருந்து அகற்றப்படுகிறது. மலச்சிக்கல் அகல்கிறது. உடல் எடை கூடுவதால், ஆடுகள், மாடுகள், பன்றிகளுக்கு நாள்தோறும் 10-20 மில்லி வரையில் கொடுக்கலாம். இதுமட்டுமின்றி, பஞ்சகவ்யாவைக் கரைசலாக அல்லது மாத்திரை வடிவில் மனிதர்களும் உட்கொள்ளலாம். இதனால், நீடித்த நோயாளிகளுக்குச் சிறந்த பலன் கிடைத்துள்ளது.


பஞ்சகவ்யா Dr Kumaravel

முனைவர் பா.குமாரவேல், முனைவர் காயத்ரி சுப்பையா, கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை – 600 007.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!