கீழ்சாத்தம்பூர் கிராமத்தில் அங்கக வேளாண்மைப் பயிற்சி!

கீழ்சாத்தம்பூர் training 5d855b117cc2ceb0f8f7f724cccf99f2

நாமக்கல் மாவட்டம், கீழ்சாத்தம்பூர் கிராமத்தில், அட்மா திட்டத்தின் கீழ், அங்கக வேளாண்மை என்னும் இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சி நடைபெற்றது. இந்தப் பயிற்சியில், கீழ்சாத்தம்பூரைச் சேர்ந்த நாற்பது விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இந்தப் பயிற்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற, நாமக்கல் வேளாண்மைத் துணை இயக்குநர் (மத்திய திட்டம்) பேபிகலா, இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம், இயற்கை வேளாண்மை உத்திகள், பயிர்ச்சுழற்சி முறைகள், பாரம்பரியப் பயிர்களைத் தேர்வு செய்தல், கலப்பு மற்றும் ஊடுபயிர் சாகுபடி, விதை நேர்த்தி முறைகள், இயற்கை முறையில் மண்வளத்தை மேம்படுத்துதல் மற்றும் மண்ணில் நுண்ணுயிர்களைப் பெருக்குதல் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.

நாமக்கல் வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா, அங்கக வேளாண்மை என்பது, இயற்கையுடன் இணைந்த உயிரியல் சுழற்சி, உயிரியல் செயல்பாடுகள், அங்ககக் கழிவுகள் ஆகியவற்றைக் கொண்டு, சுற்றுச்சூழலைக் காக்கும் பயிர் வளர்ப்பு முறையாகும். இயற்கைச் சூழலைப் பாதுகாக்கும் வகையிலான உழவியல், உயிரியல், இயந்திர முறைகளைப் பின்பற்றுதல் இதன் தனித்தன்மையாகும் என, விளக்கிக் கூறினார்.

அங்கக வேளாண்மைச் சான்று பெற்ற, மோகனூர் விவசாயி வேலுசாமி, இந்தப் பயிற்சியில், சிறப்புப் பயிற்சியாளராகக் கலந்து கொண்டார். அப்போது அவர், செயற்கை ஊக்கிகள், உரம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றை முடிந்தளவில் தவிர்த்து விட்டு, பயிர்ச் சுழற்சி, இயற்கை மற்றும் அங்கக உரங்களைப் பயன்படுத்தினால், பயிர்ப் பாதுகாப்பும் மண்வளமும் கிடைக்கும். இதுதான் அங்கக வேளாண்மை என்று, தனது பண்ணை அனுபவங்களுடன் எடுத்துக் கூறினார்.

வேளாண்மை அலுவலர் மோகன், பண்ணையில் கிடைக்கும் கழிவுகளைக் கொண்டு, இயற்கை உரம் தயாரிக்கும் முறைகள், மண்புழு உர உற்பத்தி முறைகள், அங்கக முறையில், பூச்சி மற்றும் நோய்கள் கட்டுப்பாடு ஆகியவற்றைப் பற்றியும், வேளாண்மைத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துக் கூறினார்.

இந்தப் பயிற்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்த, அட்மா திட்ட வட்டாரத் தொழில் நுட்ப மேலாளர் இரமேஷ், உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர், உதவி வேளாண்மை அலுவலர் மாலதி ஆகியோர், பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு நன்றி கூறினர்.


செய்தி: நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading