தமிழகம் மீன்வளம் நிறைந்த மாநிலம். இங்கு 1,076 கி.மீ. கடற்கரை இருப்பதால், கடல் மீன்கள் நிறையக் கிடைக்கின்றன. இவ்வகையில், 2017-18 ஆம் ஆண்டில், தமிழகம் 6,55,000 டன் கடல் மீன்களைப் பிடித்தது.
இவற்றில் 3.5 சதம் இறால்கள். இறால்களில் இருந்து மதிப்புமிகு பொருள்களைத் தயாரிப்பது அதிகமாகி வருகிறது. இறால் மூலம் சுவையான ஊறுகாயைத் தயாரிக்கலாம்.
இறால் ஊறுகாய்
தேவையான பொருள்கள்: இறால் சதை ஒரு கிலோ,
இஞ்சி 200 கிராம்,
பூண்டு 200 கிராம்,
பச்சை மிளகாய் 50 கிராம்,
கறிவேப்பிலை 5 கிராம்,
கடுகு 25 கிராம்,
சீரகம் 25 கிராம்,
வெந்தயம் 5 கிராம்,
பெருங்காயம் 10 கிராம்,
மிளகாய்த்தூள் 30 கிராம்,
மஞ்சள் தூள் 10 கிராம்,
கறிமசாலாத் தூள் 10 கிராம்,
உப்பு 50 கிராம்,
வினிகர் 250 கிராம்,
சுத்தமான எண்ணெய் 400 கிராம்,
சிட்ரிக் அமிலம் 10 கிராம்,
சோடியம் பென்சோயேட் 5 கிராம்.
செய்முறை: புதிதாகப் பிடிக்கப்பட்ட இறால்களைக் கொண்டு தான் ஊறுகாயைத் தயாரிக்க வேண்டும். முதலில், இறால் ஓடு மற்றும் குடலை நீக்கிச் சுத்தம் செய்ய வேண்டும்.
பிறகு, ஒரு லிட்டர் நீருக்கு 30 கிராம் உப்பு, 20 கிராம் சிட்ரிக் அமிலம் வீதம் கலந்த கரைசலில், இறால்களைப் பத்து நிமிடம் வேக வைக்க வேண்டும்.
பிறகு, நீரை வடித்து விட்டு இறால்களை எடுத்து, எண்ணெய்யில் பொன்னிறமாகப் பொரிக்க வேண்டும்.
அடுத்து, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தோல் நீக்கிய இஞ்சி, பூண்டு ஆகியவற்றைச் சுத்தம் செய்து, தனித் தனியாக அரைக்க வேண்டும்.
பிறகு, கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம் ஆகியவற்றை, சிறிது எண்ணெய் விட்டு, தனித் தனியாக வறுத்துப் பொடித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து, இறாலைப் பொரித்த பிறகு மீதமாக இருக்கும் எண்ணெய்யில், இஞ்சி, பூண்டு மசாலாவை, மிதமான சூட்டில் பொன்னிறமாக வேக வைக்க வேண்டும்.
அடுத்து, வற்றுத்துப் பொடித்து வைத்துள்ள கடுகு, சீரக, வெந்தயப் பொடி மற்றும் உப்பை இதில் சேர்த்து, ஐந்து நிமிடம் வரை நன்றாகக் கிளறி விட வேண்டும்.
அடுத்து, இந்தக் கலவையில், மிளகாய்த் தூள், கறிமசாலாத் தூள், மஞ்சள் தூள், சிட்ரிக் அமிலம் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கிளற வேண்டும். பிறகு, சூட்டைக் குறைத்து வினிகரை இதில் சேர்க்க வேண்டும்.
கடைசியில், பொரித்து வைத்துள்ள இறால் துண்டுகளை இதில் சேர்த்து, பத்து நிமிடம் வரையில் நன்கு கிளறி விட்டு, அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.
ஊறுகாயின் சூடு 40 டிகிரி சென்டிகிரேட் அளவில் குறைந்ததும், சோடியம் பென்சோயேட்டைச் சேர்த்து 24 மணி நேரம் வரை அப்படியே வைத்திருக்க வேண்டும்.
பிறகு, சோப்பு நீர் மற்றும் அரைமணி நேரம் கொதிநீரில் இட்டுச் சுத்தம் செய்து, வெய்யிலில் நன்கு உலர்த்திய கண்ணாடிப் புட்டியில், கழுத்துக்குக் கீழே 2.5 செ.மீ. காலியாக இருக்கும் வகையில் ஊறுகாயை நிரப்ப வேண்டும்.
இந்த ஊறுகாய்க்கு மேல், ஒரு செ.மீ. வரை எண்ணெய் மிதக்க வேண்டும். இப்படித் தயாரிக்கும் ஊறுகாய், ஆறு மாதம் வரையில் கெடாமல் இருக்கும்.
அயிலை மீன் ஊறுகாய்
தேவையான பொருள்கள்: அயிலை மீன் சதை ஒரு கிலோ,
இஞ்சி 200 கிராம்,
பூண்டு 200 கிராம்,
பச்சை மிளகாய் 50 கிராம்,
கறிவேப்பிலை 5 கிராம்,
கடுகு 25 கிராம்,
சீரகம் 25 கிராம்,
வெந்தயம் 5 கிராம்,
பெருங்காயம் 10 கிராம்,
மிளகாய்த் தூள் 30 கிராம்,
மஞ்சள் தூள் 10 கிராம்,
கறிமசாலாத் தூள் 10 கிராம்,
உப்பு 50 கிராம்,
வினிகர் 250 கிராம்,
சுத்தமான எண்ணெய் 400 கிராம்,
சிட்ரிக் அமிலம் 10 கிராம்,
சோடியம் பென்சோயேட் 5 கிராம்.
செய்முறை: முதலில், மீனைச் சுத்தமாகக் கழுவி, தலை, குடல், செதில், துடுப்பு, செவிள் ஆகியவற்றை நீக்க வேண்டும். பிறகு, பாத்திரத்தில் மீனை இட்டு நீரை விட்டு நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும்.
அடுத்து, கொஞ்சம் உப்பு, மஞ்சள் தூளைப் போட்டு நன்றாகக் கலக்க வேண்டும். பிறகு, இந்த மீனை, துளைகள் உள்ள தட்டு அல்லது கம்பிவலைத் தட்டில் வைத்து, உப்பு, மஞ்சள் கலந்த கொதிநீரில் ஒரு நிமிடம் வரை மூழ்க விட்டு வேக வைக்க வேண்டும்.
அடுத்து, மீனின் வாலிலிருந்து தொடங்கி, சதையை இரண்டு பாகமாகப் பிரித்து, நடுமுள்ளை நீக்க வேண்டும். அடுத்து, இந்தச் சதையைக் கொஞ்ச நேரம் நிழலில் உலர்த்திப் பொரிக்க வேண்டும்.
அடுத்து, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தோல் நீக்கிய இஞ்சி, பூண்டு ஆகியவற்றைத் தனித்தனியாக அரைக்க வேண்டும்.
பிறகு, கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம் ஆகியவற்றையும் சிறிது எண்ணெய் விட்டுத் தனித் தனியாக வறுத்து எடுத்துப் பொடித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து, இறாலைப் பொரித்த பிறகு மீதமாக இருக்கும் எண்ணெய்யில், இஞ்சி, பூண்டு மசாலாவை, மிதமான சூட்டில் பொன்னிறமாக வேக வைக்க வேண்டும்.
அடுத்து, வறுத்துப் பொடியாக்கி வைத்துள்ள கடுகு, சீரக, வெந்தயப் பொடி மற்றும் உப்பை இதில் சேர்த்து, ஐந்து நிமிடம் வரை நன்றாகக் கிளறி விட வேண்டும்.
அடுத்து, இந்தக் கலவையில், மிளகாய்த் தூள், கறிமசாலாத் தூள், மஞ்சள் தூள், சிட்ரிக் அமிலம் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கிளற வேண்டும். பிறகு, சூட்டைக் குறைத்து வினிகரை இதில் சேர்க்க வேண்டும்.
கடைசியில், பொரித்து வைத்துள்ள மீன் துண்டுகளை. இதில் சேர்த்துப் பத்து நிமிடம் வரையில் நன்கு கிளறி விட்டு, அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.
ஊறுகாயின் சூடு 40 டிகிரி சென்டிகிரேட் அளவில் குறைந்ததும், சோடியம் பென்சோயேட்டைச் சேர்த்து 24 மணி நேரம் வரை அப்படியே வைத்திருக்க வேண்டும்.
பிறகு, சோப்பு நீர் மற்றும் அரைமணி நேரம் கொதிநீரில் இட்டுச் சுத்தம் செய்து வெய்யிலில் நன்கு உலர்த்திய கண்ணாடிப் புட்டியில், கழுத்துக்குக் கீழே 2.5 செ.மீ. காலியாக இருக்கும் வகையில் ஊறுகாயை நிரப்ப வேண்டும்.
இந்த ஊறுகாய்க்கு மேல் ஒரு செ.மீ. வரை எண்ணெய் மிதக்க வேண்டும். இப்படித் தயாரிக்கும் ஊறுகாய், ஆறு மாதம் வரையில் கெடாமல் இருக்கும்.
இந்த ஊறுகாய்களை வணிக நோக்கில் தயாரித்தால், 200 கிராம், 500 கிராம் புட்டிகளில் அடைத்து, அதன் மேல், இந்த ஊறுகாய்த் தயாரிப்பில் பயன்படுத்திய பொருள்கள், தயாரிப்பு நாள், எடை, விலை, கெடாமல் இருக்கும் காலம், ஊறுகாயில் உள்ள சத்துகள் விவரம் ஆகிய தகவல் குறிப்பை ஒட்டி விற்பனை செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு: சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளரை 04365 246266 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
முனைவர் ஆ.மதிவாணன், யூ.ஹினோ பெர்னாண்டோ, முனைவர் அ.கோபால கண்ணன், முனைவர் இரா.ஜெயராமன், முனைவர் சுக.பெலிக்ஸ், வேளாண்மை அறிவியல் நிலையம், சிக்கல், நாகை மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!