உயிர் உரங்கள்!

உயிர் உரங்கள் உயிர் உரங்கள்

பூமியின் மேற்புறத்தில் காணப்படும் ஒரு கிராம் மண்ணில் ஒரு இலட்சம் நுண்ணுயிர்களும், ஆழப்பகுதியில், அதாவது, பயிர்களின் வேர்ப் பகுதியிலுள்ள ஒரு கிராம் மண்ணில் 10 இலட்சம் நுண்ணுயிர்களும் உள்ளன.

இவற்றில், பயிர்களால் கிரகிக்க இயலாத சத்துகளைத் தமது உயிர்வினை மூலம் எளிதில் கிரகிக்கும் சத்துகளாக, குறிப்பாக, தழை மற்றும் மணிச்சத்தை மாற்றியளிக்கும் நுண்ணுயிர்கள் உள்ளன. நன்மை செய்யும் இந்த நுண்ணுயிர்களைக் கண்டறிந்து, அவை செயற்கை முறையில் வளரும் சூழ்நிலைகளில் தயார் செய்யப்படும் உரங்கள், உயிர் உரங்களாகும்.

உயிர் உரங்கள், தழைச்சத்தை நிலை நிறுத்தும் உயிர் உரங்கள், மணிச்சத்தைக் கரைத்துப் பயிர்களுக்கு அளிக்கும் உயிர் உரங்கள் என இரண்டு வகைப்படும். பயறுவகைப் பயிர்களில் தழைச்சத்தை நிலை நிறுத்தும் உயிர் உரம் ரைசோபியம். மற்ற பயிர்களில் தழைச்சத்தை நிலை நிறுத்தும் உயிர் உரம் அசோஸ் பயிரில்லம்.

அசோஸ்பயிரில்லம்

இது, காற்றிலுள்ள தழைச்சத்தை மண்ணில் நிலைபெறச் செய்யும் பாக்டீரியம். காற்றோட்டம் இருந்தாலும் வளரும்; இல்லா விட்டாலும் வளரும். இது, தாவரங்களின் வேர்ப்பகுதியின் உள்ளும் புறமும் காணப்படுகிறது. பயிருடன் இணைந்து வாழும் வகையைச் சேர்ந்தது.

பயிர்களின் வேர்களில் இருந்து வெளியாகும் வேர்க்கசிவால் கவர்ந்து இழுக்கப்படும் அசோஸ் பயிரில்லம் அதற்கு உணவாகப் பயன்படுகிறது. மேலும், நைட்ரோஜினேஸ் என்னும் நொதியைப் பயன்படுத்தி, காற்றிலுள்ள தழைச் சத்தைக் கிரகித்துப் பயிர்களுக்குக் கொடுக்கிறது.

அசோஸ்பயிரில்லம் லிப்போபெர்ம் என்னும் உயிர் உரத்தை, நெல் பயிருக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். அசோஸ் பயிரில்லம் பிரேசிலென்ஸ் என்னும் உயிர் உரத்தை, நெல்லைத் தவிர்த்து, வேர்முடிச்சு இல்லாத எல்லாப் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.

ரைசோபியம்

பயறுவகைப் பயிர்களில் தழைச்சத்தை நிலை நிறுத்துவது ரைசோபியம். இது, பயறுவகைப் பயிர்களின் வேர்களில் முடிச்சுகளைத் தோற்றுவித்து இணை வாழ்க்கை நடத்தும் ஒருவகை பாக்டீரியம். மண்ணில் வாழும் இது, பயிர்களின் வேர்களில் இருந்து வெளியாகும் வேர்க்கசிவால் கவரப்பட்டு, சல்லி வேர்கள் வழியாக உள்ளே சென்று வேர் முடிச்சுகளை உருவாக்குகிறது.

இந்த வேர் முடிச்சுகளில் உள்ள நைட்ரோஜினேஸ் என்னும் நொதிப் பொருளின் மூலம் காற்றிலுள்ள தழைச்சத்தை நிலை நிறுத்துகிறது. இதன் காரணமாகவே பயறுவகைப் பயிர்கள் பயிர்ச் சுழற்சி முறையில் சாகுபடி செய்யப்படுகின்றன. ரைசோபியத்தில் நிலக்கடலைக்கு எனவும், நிலக்கடலை தவிர்த்த மற்ற பயிர்களுக்கு எனவும் இரண்டு வகைகள் உள்ளன.

பாஸ்போபாக்டீரியா

இது, மணிச்சத்தைக் கரைத்துப் பயிர்களுக்கு அளிக்கும் உயிர் உரமாகும். இந்த மணிச்சத்து மண்ணில் பல்வேறு வேதியியல் மாற்றங்களுக்கு உட்பட்டு பயிர்களுக்குக் கிட்டாத நிலைக்குச் சென்று விடுகிறது. அதாவது, அமிலவகை மண்ணில் இந்த மணிச்சத்து, இரும்பு மற்றும் அலுமினிய அயனிகளுடன் இணைந்து, அவற்றின் பாஸ்பேட்டுகளாக மாறி விடுகிறது.

அதேபோல் காரவகை மண்ணில் கால்சியம் மற்றும் மக்னீசியத்துடன் இணைந்து, அவற்றின் பாஸ்பேட்டுகளாக நிலை நிறுத்தப்படுகிறது. இத்தகைய பாஸ்பேட்டுகளைப் பயிர்களால் நேரடியாக எடுத்துக் கொள்ள முடியாது. இது போன்ற சூழ்நிலைகளில், மணிச்சத்தைக் கரைத்துத் தருவதில் பாஸ்போ பாக்டீரியா முக்கியப் பங்கு வகிக்கிறது.

இந்த நுண்ணுயிரிகள் தங்களின் செல்களிலிருந்து சுரக்கும் ஃப்யூமாரிக், சக்ஸீனிக் போன்ற அங்கக அமிலங்கள் மூலம், பயிர்களுக்குக் கிடைக்காத நிலையிலும், கரையாத நிலையிலும் மண்ணிலுள்ள மணிச்சத்தைக் கரைத்துப் பயிர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்கின்றன. மேலும், பாஸ்படேஸ் என்னும் நொதிப்பொருளைச் சுரந்து மணிச்சத்தைக் கரைத்துப் பயிர்களுக்குத் தருகின்றன.

பயன்படுத்தும் முறைகள்

விதை நேர்த்தி செய்தல்: ஒரு ஏக்கருக்குப் பரிந்துரை செய்யப்படும் உயிர் உரத்தை, தேவையான நீரில் கலந்து அதில் விதைகளை ஊற வைக்க வேண்டும். பின் 30 நிமிடங்கள் நிழலில் உலர்த்தி 24 மணி நேரத்தில் விதைக்க வேண்டும். நீருக்குப் பதிலாகக் குளிர்ந்த அரிசிக் கஞ்சியை ஒரு பொட்டல உரத்துக்கு அரை லிட்டர் வீதம் பயன்படுத்தலாம்.

நாற்றங்காலில் இடுதல்: ஒரு ஏக்கருக்குப் பரிந்துரை செய்யப்படும் நான்கு பொட்டல உயிர் உரத்தை, நன்கு மட்கிய 20 கிலோ தொழுவுரம், 10 கிலோ மணலில் கலந்து நாற்றங்காலில் தூவ வேண்டும்.

வேரை நனைத்தல்: நாற்றங்காலின் ஒரு பகுதியில் சிறிய வரப்பைக் கட்டித் தேவையான அளவு நீரைத் தேக்கி, அதில் நான்கு பொட்டல உயிர் உரத்தைக் கரைத்து, நாற்றுகளின் வேர்களை அரைமணி நேரத்துக்குக் குறையாமல் அதில் நனைத்து உடனடியாக நட வேண்டும்.

வயலில் இடுதல்: ஒரு ஏக்கருக்குப் பரிந்துரை செய்யப்படும் நான்கு பொட்டல உயிர் உரத்தை, நன்கு மட்கிய 20 கிலோ தொழுவுரம் மற்றும் 10 கிலோ மணலில் கலந்து, நடவு அல்லது விதைப்புக்கு முன்போ பின்போ வயலில் தூவ வேண்டும்.

அசோலா

இது நெல் வயல், நீர் நிலையில் வளரும் பெரணிவகை நீர்த்தாவரம். அசோலாவின் இலைத் திசுக்களில் அனபீனா என்னும் நீலப்பச்சைப்பாசி இணைந்து இயங்கி, தழைச்சத்தைச் சேர்க்கிறது. அசோலாவை இரு முறைகளில் நெற்பயிருக்குப் பயன்படுத்தலாம். அசோலாவைத் தனியாக வளர்த்து அதை நடவுக்கு முன் வயலில் அடியுரமாக இடலாம். அல்லது நெல் நாற்றை நட்டு ஒரு வாரத்துக்குப் பின், அசோலாவையும் வளர விட்டால் விரைவில் வயல் முழுவதும் நன்கு பரவித் தழையுரமாகக் கிடைக்கும்.

முதல் களை எடுக்கும் போது சேற்றில் மிதித்து விட்டால் பத்து நாட்களில் மட்கித் தழைச்சத்தாகப் பயிருக்குக் கிடைக்கும். மீதமுள்ள அசோலா மீண்டும் 10 – 15 நாளில் நன்கு வளர்ந்து மேலும் ஒருமுறை தழையுரமாகும். இப்படி நெல் பயிருடன் அசோலாவைச் சேர்த்து வளர்த்தால், எக்டருக்கு 30-40 கிலோ தழைச்சத்துக் கிடைக்கும். இதனால் மண்ணின் வளமும் மகசூலும் கூடும்.

உயிர் உரங்களின் நன்மைகள்

காற்றிலுள்ள நைட்ரஜனைத் தழைச்சத்தாக மாற்றிப் பயிர்களுக்கு அளித்தல். மண்ணில் கரையாத மணிச்சத்தை நீரில் கரையும் மணிச்சத்தாக மாற்றிப் பயிர்களுக்கு வழங்குதல். மண்வளத்தைக் காத்தல். வேர் வளர்ச்சியை அதிகரித்தல். 25 சதவீதத் தழைச்சத்தை, 20-25 சதவீத மணிச்சத்தைக் குறைத்து இடலாம். இதனால், இரசாயன உரச்செலவும் பயன்பாடும் குறைதல்.

பயிர் வளர்ச்சி ஊக்கிகளான இன்டோல் அசிட்டிக் அமிலம், ஜிப்ரலின், வைட்டமின் சத்துகளான பயோட்டின், வைட்டமின் பி ஆகியவற்றை உற்பத்தி செய்து இளம் பயிர்கள் செழித்து வளர உதவுதல். விதைகளின் முளைப்புத் திறன், பயிர்களின் வளர்ச்சி, பூப்பிடித்தல் போன்றவற்றைக் கூட்டுதல். வறட்சியைத் தாங்கும் சக்தியைப் பயிர்களுக்கு அளித்தல். மண்ணின் இரசாயன, பெளதிகப் பண்புகளை உயர்த்தி 20-25 சதம் கூடுதல் மகசூலைத் தருதல்.

மண்ணில் பூசண நோய்க்கொல்லிகள் உருவாகக் காரணமாக இருந்து பயிர்களில் நோயெதிர்ப்பை உருவாக்குதல். சுற்றுச்சூழலுக்கு ஆதரவாக இருத்தல். கெடுப்பதில்லை. மண்வளத்தைப் பாதுகாத்து நீடித்த, நிலையான வேளாண்மைக்கு உதவுதல்.

கவனிக்க வேண்டியவை

உயிர் உரத்தில் நேர்த்தி செய்த விதைகளில், பூச்சி, பூசணக்கொல்லி மருந்துகளைக் கலக்கக் கூடாது. உயிரியல் பூசணக் கொல்லியில் விதை நேர்த்தி செய்யும் போது, நுண்ணுயிர் உரத்தைக் கடைசியில் கலக்க வேண்டும். உயிர் உரங்களை எந்த இரசாயன உரத்துடனும் கலக்கக் கூடாது. விதை நேர்த்திக்கு ஆறிய அரிசிக் கஞ்சியைப் பயன்படுத்த வேண்டும். நிலம் ஈரமாக இருக்கும் போதே உயிர் உரங்களை இட வேண்டும்.

சூரிய ஒளி, வெப்பம், அதிக ஈரப்பதமுள்ள இடங்களில் உயிர் உரங்களை வைக்கக் கூடாது. நுண்ணுயிர் உரங்கள் நன்கு செயல்பட ஏதுவாக, தொழுவுரம் மற்றும் அங்ககப் பொருள்களை நிலத்தில் நிறைய இட வேண்டும். உயிர் உரங்களைத் தொழுவுரத்தில் கலந்து இட வேண்டும்.


முனைவர் இராஜா ரமேஷ், உதவிப் பேராசிரியர், தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையம், வம்பன், புதுக்கோட்டை மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!