கோழிகளைத் தாக்கும் சுவாச நோய்!

கோழி

செய்தி வெளியான இதழ்: 2017 ஜனவரி.

ளி நோய் என்பது, பல நுண்ணுயிரிகள் மற்றும் நச்சுயிரிகளால் உண்டாகும் கொடிய நோயாகும். இந்நோய் உண்டாக நிறையக் காரணங்கள் இருந்தாலும், மிக முக்கியமாகக் கருதப்படுவது மைக்கோபிளாஸ்மா என்னும் நுண்ணுயிரி தான்.

தாய்க்கோழிப் பண்ணை, இறைச்சிக் கோழிப்பண்ணை, நாட்டுக்கோழிப் பண்ணை ஆகியவற்றில், இக்கிருமி அதிகப் பாதிப்பை ஏற்படுத்துவதால், மிகப்பெரிய பொருளாதார இழப்பை உண்டாகிறது.

கோடைக்காலத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். வெளிப்புறச் சூழ்நிலைகளில் இவ்வுயிரி அதிகமாக உயிர் வாழ்வதில்லை. அதனால், சளிநோய்க்கு உள்ளான கோழிகள் மூலமாகவே மற்ற கோழிகளுக்கும் அதிகளவில் பரவுகிறது. மைக்கோபிளாஸ்மா, மற்ற நோய்களுடன் சேர்ந்து தாக்கும் சமயத்தில், கோழிகள் அதிகளவில் இறப்பதாலும், பொருளாதார இழப்பு ஏற்படுவதாலும், இது சைலண்ட் கில்லர் என அழைக்கப்படுகிறது.

பறவை இனங்களின் சுவாச மண்டலம் மிகவும் தனித் தன்மையும் சிறப்பும் மிக்கது. இது, மூக்கு, தொண்டை, சுவாசக்குழல், நுரையீரல் மட்டுமின்றி, காற்றுப் பைகள் மற்றும் வாயு எலும்புகளை உள்ளடக்கியது. இந்த வாயு எலும்புகள் தான், பறவை உடலை உயர்த்தவும், பறக்கவும் உதவுகின்றன. பறவை இனங்களின் மற்ற உறுப்புகளைக் காட்டிலும், சுவாச மண்டலம் தான் அதிக நோய்த் தொற்றுக்கு உள்ளாகிறது. அவற்றுள் முக்கியமானது நாள்பட்ட சுவாச நோயாகும்.

இந்த நோயானது மைக்கோபிளாஸ்மா என்னும் நுண்ணுயிரி மூலம் ஏற்படுகிறது. இந்தக் கிருமி, கோழி மற்றும் வான்கோழிகளைத் தாக்கி, சுவாசச் சிக்கலையும், புண்களையும் உண்டாக்கும் தொற்றுக் கிருமியாகும். இது, வெள்ளைக் கழிச்சல், இ.கோலை மற்றும் பிற சுவாச நோய்களுடன் சேர்ந்து அதிகமான சிக்கல்களை ஏற்படுத்துவதால், நாட்பட்ட சுவாச நோய் கோழிகளில் உருவாகிறது.

பெரும்பாலும் மைக்கோபிளாஸ்மா, கோழிகளில் இறப்பை உண்டாக்காது. பிற நுண்ணுயிரி, நச்சுயிரிகளுடன் இணைந்து தான், நாட்பட்ட சுவாச நோயை உருவாக்கி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

பரவுதல்

செங்குத்துப் பரவல். அதாவது, தாய்க்கோழி மற்றும் தந்தைச் சேவலின் மூலமாகச் சந்ததிக்குப் பரவுதல். கிடைமட்டப் பரவல். அதாவது, நோயுற்ற கோழியின் மூலமாகப் பண்ணையின் பிற கோழிகளுக்கு அல்லது பிற பண்ணைகளுக்குப் பரவுதல்.

மேலும், பண்ணையில் உள்ள உபகரணங்கள், வேலையாட்கள், வாகனங்கள், தீவன மூட்டைகள் மூலமும், ஆழ்கூளங்கள் மூலமும், கிடைமட்டப் பரவல் வழியாக மற்ற பண்ணைகளுக்குப் பரவுகிறது.

நோய்த்தொற்று ஏற்பட்ட 4 முதல் 21 நாட்களில் கோழிகளில் அறிகுறிகளைக் காணலாம். நாள்பட்ட சுவாச நோயின் அறிகுறிகள் சில வாரங்கள் முதல் சில மாதங்கள் வரையில் இருக்கும். கோழிகளை ஒருமுறை தாக்கும் மைக்கோபிளாஸ்மா, அந்தக் கோழிகளின் வாழ்நாட்கள் முழுவதும் அவற்றின் சுவாச மண்டலத்தில் நிரந்தரமாக இருக்கும்.

நோய்த் தொற்றுக் காரணிகள்

மிகக் கடுமையான பருவநிலை மாற்றம். அதிக ஈரத்தன்மை கொண்ட ஆழ்கூளம் மற்றும் அதன் அளவு. காற்றோட்டம் இல்லாத சூழல். சுகாதாரமற்ற முறையில் கோழிகளை வளர்த்தல். போதிய இடவசதி இல்லாமை. போதிய இடைவெளி இல்லாமல் நெருக்கமாக அருகிலேயே கோழிப் பண்ணைகள் அமைதல்.

சுத்தமில்லாத உபகரணங்கள். அதிகமாக அம்மேபனியா உற்பத்தியாதல். இப்படி இருக்கும் பண்ணைகள் மற்றும் பராமரிப்புக் குறைகள் உள்ள பண்ணைகளில் இதன் தாக்குதல் சற்று அதிகமாகக் காணப்படும்.

நோயின் அறிகுறிகள்

மூக்கில் இருந்து தடிப்பான சளி வெளியேறுதல் மிகவும் முக்கியமான மற்றும் முதல் அறிகுறியாகும். விழி வெண்படல அயர்ச்சி மற்றும் கண்ணில் வீக்கம். கடினமான மற்றும் சத்தமான சுவாசம். மண்டை வீக்கம் மற்றும் உடல் எடைக்குறைவு. நாள்பட்ட சுவாசக் கோளாறுகள். முட்டைக் கோழிகளில் முட்டை உற்பத்திக் குறைதல்.

கோழிகளில் மூட்டு வீக்கம் மற்றும் உற்பத்திக் குறைதல். பின்னங்கால் மூட்டுகள் மற்றும் கால் பட்டைகளில் வீக்கம். மார்பில் கொப்புளங்கள் வருதல். வைரஸ் நோய்க்குத் தடுப்பூசி அளித்த 10-14 நாட்களுக்குப் பிறகு மற்றும் கோடையில் இந்த அறிகுறிகள் அதிகமாகத் தென்படும்.

பிரேதப் பரிசோதனையின் கண்டுபிடிப்புகள்

மூக்கு, தொண்டை, சுவாசக்குழல், நுரையீரல் மட்டுமின்றி, காற்றுப் பைகளில் நீர்மமான அல்லது திடமான கோழை போன்ற சளி படர்ந்திருக்கும். தொடக்கக் காலத்தில் காற்றுப் பைகள், தொற்றின் மூலம் சோப்பு நுரையைப் போல நுரைத்துக் காணப்படும். பிறகு, இந்த நுரையானது பால் கட்டியைப் போலக் கடினத் தன்மையாக மாறும்.

மைக்கோபிளாஸ்மா சைனோவியா நோய்த் தொற்றால், மூட்டுகளில் உள்ள திரவத்தில் மாறுதல் ஏற்படும். நெஞ்செலும்பு மற்றும் கால் பட்டைகளில், மூட்டுகளில் வீக்கம் மற்றும் வாதம் ஏற்படும். மேலும், மைக்கோபிளாஸ்மா மற்றும் இ.கோலை சேர்ந்து, இதயப்பை அயர்ச்சி, கல்லீரல் அயர்ச்சி நோய்களை உருவாக்கும்.

நோய்த் தொற்றை உறுதி செய்தல்

சேவல்கள் மற்றும் கோழிகளில் மூச்சுக்குழல் மற்றும் காற்றுப் பைகளில் இருந்து மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு உட்படுத்துதல். இரத்த மாதிரிகளை எடுத்து எலைசா அல்லது துரித ஊநீர்த் திரட்சி சோதனையைச் செய்து கண்டறிதல். திசுக்களை 10 விழுக்காடு பார்மலினில் பதப்படுத்தி, நோய்க்குறியியல் துறை வல்லுநர்களின் உதவியுடன் ஆய்வுக்கு உட்படுத்தி நோயைக் கண்டறிதல். பண்ணையில் காணப்படும் அறிகுறிகள் மற்றும் பிரேதப் பரிசோதனையின் கண்டுபிடிப்புகள் மூலம் கண்டறிதல்.

சிகிச்சை மற்றும் கட்டுப்படுத்தல்

அறிகுறிகள் தெரிந்ததும் என்ட்ரோபிளாக்சின் என்னும் மருந்தை, ஒரு கிலோ எடையுள்ள கோழிக்கு 10 மில்லி அளிக்கலாம். அல்லது ஒரு லிட்டர் நீருடன் 2 மில்லி மருந்தை கலந்து அளிக்கலாம்.

என்ட்ரோசின் பி.எச். என்னும் மருந்தை, ஒரு லிட்டர் நீருக்கு 1-2 மில்லி கலந்து அளிக்கலாம். இயற்கை முறையில், பூண்டு அல்லது சின்ன வெங்காயத்தை அல்லது இவற்றின் சாற்றைக் கோழிக்கு அளித்துக் கட்டுப்படுத்தலாம்.

அமினோ கிளைகோசைட்ஸ், குயினலோன், டெட்ராசைக்ளின், மேக்ரோலைட், புளுரோ மெட்டலின் வகை மருந்துகளை, உணவிலோ, நீரிலோ கலந்து தரலாம். தாய்க்கோழிகள் பாதிக்கப்பட்டு இருந்தால், இரண்டிலும் கலந்து வாரத்துக்கு மூன்று நாட்கள் கொடுத்துக் கட்டுப்படுத்தலாம். பெனிசிலின் மற்றும் செபலோஸ்டோரின் வகை மருந்துகள் பயனளிக்காது.

வைட்டமின் சி மற்றும் ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் மருந்தைக் கொடுத்து, நோயெதிர்ப்பு ஆற்றலைக் கூட்டலாம். அதிகமாகப் பாதிக்கப்பட்ட கோழிகளைத் தனியாய்ப் பிரித்து வைப்பதன் மூலம் அல்லது கருணைக் கொலை செய்வதன் மூலம், நோய்த் தாக்கம் இல்லாத கோழிகளைக் காப்பாற்ற முடியும்.

நோய்த் தடுப்பு

தூசி மற்றும் அம்மோனியாவைக் குறைத்து, பண்ணையில் காற்றின் தரத்தை உயர்த்த வேண்டும். நல்ல உயிரி பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும். நோய்த்தொற்று இல்லாத சேவல்கள் மற்றும் கோழிகளில் இருந்து புதிய சந்ததியைப் பெற வேண்டும். சேவல்கள் மற்றும் தாய்க்கோழிகளுக்குத் தடுப்பூசியைப் போட வேண்டும்.

சுகாதாரமான பண்ணைகளில், நோய் எதிர்ப்பாற்றல் உள்ள மருந்துகள் மற்றும் தீவனங்களை அளிக்க வேண்டும். கறிக்கோழி மற்றும் வணிக அடிப்படையில் வளர்க்கும் நாட்டுக்கோழிப் பண்ணைகளில் ஆழ்கூளமாகப் பயன்படும் தேங்காய் நார்களை, நல்ல காற்றோட்டம் உள்ள காலை, மாலையில் கிளறி விட வேண்டும். மேலும், தேங்காய் நார்கள் ஈரமில்லாமல் இருந்தால், நோய்த்தொற்றைக் குறைக்கலாம்.

மேலும், கோடைக்காலப் பராமரிப்பும் முக்கியம். ஏனெனில், கோடை வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், தீவனத்தைக் குறைவாக எடுப்பதாலும், நோய் எதிர்ப்பாற்றல் குறைந்து சளிநோய் உருவாகும்.


நா.அருளானந்தம், பா.பாலமுருகன், கு.செல்வமணி, அ.செந்தில்குமார், உழவர் பயிற்சி நிலையம், தேனி.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!