கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021
பயறு வகைகளில் அதிகச் சத்து மதிப்பு இருப்பதால் இவை, சீரான உணவில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தப் பயறுவகைப் பயிர்களில் காய்களைத் துளைக்கும் ஹெலிகோவர்பா ஆர்மிஜரா புழு அதிக மகசூல் இழப்பு மற்றும் சேதத்தை ஏற்படுத்துகிறது. இதைக் கட்டுப்படுத்துவதில் இனக்கவர்ச்சிப் பொறி வடிவமைப்பின் தாக்கத்தை அறிதல், பூச்சி நிர்வாகம் சிறப்பாக அமையப் பயன்படும்.
ஆராய்ச்சி முறை
பொறி விறைப்பு முறைகள்: புதுக்கோட்டை மாவட்டம், வம்பனில் உள்ள தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையப் பண்ணையில் பயிரிடப்பட்டிருந்த துவரையில் புனல் இனக்கவர்ச்சிப் பொறிகள் நிறுவப்பட்டன. இவற்றில் உள்ள பிளாஸ்டிக்கின் நுனிப்பகுதி, பிடிபட்ட பூச்சிகள் வெளியேறாமல் இருக்கும் வகையில் கயிற்றால் குச்சியுடன் இணைத்துக் கட்டப்பட்டது.
இக்கயிற்றை வாரந்தோறும் அகற்றிப் பிடிபடும் பூச்சிகளின் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டது. இனக்கவர்ச்சிப் பொறிகளின் மையப் பகுதியில் ஹெலிலூர் என்னும் கவர்ச்சிப் பொருள் பொருத்தப்பட்டது. இந்த லூர் 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றப்பட்டது.
டெல்டா பொறிகள்: முக்கோண வடிவத்தில் பொறிகள் மடிக்கப்பட்டன. பொறிகளின் கீழ்ப்பகுதியில் பசை அட்டை வைக்கப்பட்டது. பசை அட்டையின் மையத்தில் லூர் பொருத்தப்பட்டது. அதில் கொடுக்கப்பட்ட கயிறு மூலம் தரையை எதிர்கொள்ளும் வகையில் லூர் கட்டப்பட்டது. ஒவ்வொரு முறையும் எண்ணிக்கை எடுக்கப்பட்ட போது லூர் அகற்றி, பசை அட்டையில் உள்ள அந்துப் பூச்சிகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது.
நீர் பேசின் பொறி: பெயர் குறிப்பிடுவது போல, இது ஒரு பெரிய புனல் வடிவப் பொறியாகும். புனலின் மையத்தில் லூர் பொருத்தப்பட்டது. புனலின் அடிப்பகுதி மூன்று பிளவுகளுள்ள ஒரு குழாய்க் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டு குச்சியுடன் பொறி பொருத்தப்பட்டது. புனலில் நீர் நிரப்பப்பட்டது. வாரந்தோறும் நீரில் மிதக்கும் அந்துப் பூச்சிகள் எண்ணப்பட்டன.
முடிவுகள்
பொறி வடிவமைப்புத் தேர்வு முறை: பச்சைப்புனல் பொறிகளில் அதிகளவில் அந்துப் பூச்சிகள் பிடிப்பட்டன. அதன் பிறகு, மஞ்சள் புனல் பொறிகளில் அதிகளவில் அந்துப் பூச்சிகள் பிடிப்பட்டன. இரண்டாவதாக அதிகளவு அந்துப் பூச்சிகள் சிவப்புப் புனல் பொறிகளில் பதிவு செய்யப்பட்டன.
அதன் பிறகு துளையுள்ள டெல்டா பொறிகளில் அதிகளவில் அந்துப் பூச்சிகள் பதிவு செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து குறைந்தளவு அந்துப் பூச்சிகள் துளை இல்லாத டெல்டா பொறிகளில் காணப்பட்டன. மிகக் குறைந்த அந்துப் பூச்சிகள் நீர் பேசின் பொறிகளில் மற்றும் ஒட்டும் டெல்டா பொறிகளில் பதிவு செய்யப்பட்டன.
முடிவுரை
இனக்கவர்ச்சிப் பொறியின் வடிவமும் நிறமும்; ஈர்க்கப்பட்ட அந்துப் பூச்சிகளின் எண்ணிக்கை மீது தாக்கத்தை ஏற்படுத்துவது, இந்த ஆய்வின் மூலம் உறுதியானது.
ரா.மௌனிகா,
ச.லேகா பிரியங்கா, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்,
கோயம்புத்தூர்-641003.