பச்சை மற்றும் வெள்ளை சௌசௌ சாகுபடி!

Chow Chow

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020

திக வெப்பம் நிலவும் கடலோரமும், மற்றும் குளிர்ச்சியான மலைகளிலும் சௌசௌவைப் பயிரிடலாம். கடல் மட்டத்திலிருந்து 1200-1500 மீட்டர் உயரமுள்ள பகுதியில் நன்கு வளரும். நல்ல வடிகால் வசதியும், ஈரத்தைத் தக்க வைக்கும் மண்ணும் இருக்க வேண்டும். நிலத்தின் கார அமிலத் தன்மை 5.5-6.5 வரையும், வெப்பநிலை 180-240 செல்சியசும் இருந்தால் பயிர் சிறப்பாக வளரும்.

பயிர்ப் பெருக்கம்

முளைவிட்ட காய்கள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. காய்கள் கொடியில் இருக்கும் போதே அவற்றுள் இருக்கும் விதைகள் முளைக்கத் தொடங்கி விடும். குருத்து 13-15 செ.மீ. வளர்ந்ததும் நடவு செய்யலாம். இதைத் தவிர தண்டையும் துண்டுகளாக நறுக்கி நடலாம்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை 2-3 முறை உழுது பண்படுத்த வேண்டும். பிறகு, 45 செ.மீ. சதுரக் குழிகளை 2.5×1.8 மீட்டர் இடைவெளியில் எடுத்து, குழிக்கு 10 கிலோ தொழுவுரம், 250 கிராம் யூரியா, 500 கிராம் சூப்பர் பாஸ்பேட் உரங்களை மேல் மண்ணுடன் நன்கு கலந்து இட வேண்டும்.

பருவம்

மலைப் பகுதியில் ஏப்ரல் மேயிலும், சமவெளியில் ஜூலை, ஆகஸ்ட்டிலும் நடலாம். நன்கு முளைக்க, முளையிட்ட காய்களை, குழிக்கு 2-3 வீதம் நட்டு நீரை ஊற்ற வேண்டும்.

பின்செய் நேர்த்தி

முளைத்து வெளிவரும் கொடிகளைக் கயிறுடன் இணைத்துக் கட்டி, ஆறடி உயரப் பந்தலில் படரவிட வேண்டும். குழிகளில் முளைக்கும் களைகளை நீக்க வேண்டும். விதைத்த 3-4 மாதங்களில் கொடிகள் பூக்கத் தொடங்கும். அப்போது குழிக்கு 250 கிராம் யூரியா வீதம் இட்டுப் பாசனம் செய்ய வேண்டும். மழை பெய்யும் பகுதியில் பாசனம் தேவையில்லை. பிற பகுதிகளில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பாசனம் அவசியம்.

கவாத்து

அறுவடை முடிந்ததும் தரையில் இருந்து 60 செ.மீ. உயரத்தில் கொடிகளை அறுத்து விட்டால், குழிகளில் பக்கக் கிளைகள் உருவாகிப் பந்தலில் படரத் தொடங்கும். இப்படிக் கவாத்து செய்தால், 4-5 ஆண்டுகள் வரை கொடிகளை நன்றாகக் காய்க்க வைக்கலாம். கொடிகளை அறுத்து விட்டதும் முறைப்படி, தழை, மணி மற்றும் சாம்பல் சத்தை இட வேண்டும். ஜனவரியில் கவாத்து செய்தால் ஜூலை முதல் டிசம்பர் வரையில் காய்கள் கிடைக்கும்.

பயிர்ப் பாதுபாப்பு

மாவுப்பூச்சி, அசுவினி: இவை இலைகள் மற்றும் பிஞ்சுகளில் சாற்றை உறிஞ்சிச் சேதப்படுத்தும். இவற்றைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி டைமெத்தோயேட் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

பழ ஈக்கள்: இவற்றைக் கட்டுப்படுத்த, பாதிக்கப்பட்ட காய்களைச் சேகரித்து அழிக்க வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு இரண்டு மில்லி மாலத்தியான் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். வேர் முடிச்சு நூற்புழுக்களின் தாக்குதல் இருந்தால், பியூரிடான் குருணையைக் குழிகளைச் சுற்றி இட வேண்டும்.

அறுவடை

விதைத்த 5-6 மாதங்களில் அறுவடைக்குத் தயாராகி விடும். சாதாரண வெப்ப நிலையில் 2-4 வாரங்கள் வரையில் காய்கள் கெட்டுப் போகாமல் சேமித்து வைக்கலாம். எக்டருக்கு 25-35 டன் காய்கள் கிடைக்கும். நன்கு வளர்ந்த ஒரு கொடியிலிருந்து ஆண்டுக்கு 25-30 கிலோ காய்களைப் பறிக்கலாம். 


ALAGU KANNAN

முனைவர் பு.அழகுக்கண்ணன்,

இராஜா ஜோஸ்லின், இராஜ்கலா, திருமலைவாசன், அசோக் குமார்,

சோபனா, வேளாண்மை அறிவியல் நிலையம், அரியலூர் மாவட்டம்-612902.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!