கரும்புத் தோகையை உரமாக மாற்றுவது எவ்வாறு?

sugarcane husk

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020

ந்தியாவில் சுமார் 4.2 மில்லியன் எக்டரில் கரும்பு விளைகிறது. பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் ஓராண்டில் கரும்பு சாகுபடி மூலம் 190 இலட்சம் டன் கரும்புத்தோகை கிடைக்கிறது. இதில், 28.6% கரிமச்சத்தும், 0.35-0.15% மணிச்சத்தும், 0.50-0.42% சாம்பல் சத்தும் உள்ளன. இப்படிச் சத்துமிக்க கரும்புத் தோகையை நிலத்திலேயே விவசாயிகள் எரிக்கிறார்கள். மேலும், மண் போர்வையாகப் பயன்படுத்துவதும் வழக்கத்தில் உள்ளது.

அவசியம்

கரும்புத் தோகையை மட்கிய உரமாக மாற்றுவதன் மூலம் சுமார் ஒரு இலட்சம் டன் தழைச்சத்து, அரை இலட்சம் டன் மணிச்சத்து, 2 இலட்சம் டன் சாம்பல் சத்து கிடைக்கும். இதை மட்க வைக்கும் போது, ராக் பாஸ்பேட் மற்றும் ஜிப்சத்தைச் சேர்த்தால், மட்கும் திறன் அதிகமாகும். கரும்புத் தோகையில், சிலிக்கா, செல்லுலோஸ், கெமிசெல்லுலோஸ், லிக்னின் போன்ற வேதிப்பொருள்கள் இருப்பதால், இது மட்குவதற்கு அஸ்பர்ஜில்லஸ், பெனிசீயம், டிகைக்கோடெர்மா போன்ற நுண்ணுயிர்கள் உதவுகின்றன.

தயாரிப்பு முறை

உலர்ந்த கரும்புத் தோகையைச் சிறிய துண்டுகளாக்கி மண்ணில் பரப்ப வேண்டும். கருவியைப் பயன்படுத்தினால், அதிகளவில் தோகைகளை நறுக்க முடியும். ஒரு டன் தோகைக்கு 50 கிலோ சாணம் 100 லிட்டர் நீர், 5 கிலோ ராக் பாஸ்பேட், 2 கிலோ பயோமினரலைசர் வீதம் எடுத்துத் தோகையுடன் கலக்க வேண்டும். ராக் பாஸ்பேட்டைக் கலந்தால் மணிச்சத்துக் கூடும். பிறகு, நான்கடி உயரத்தில் குவித்து வைக்க வேண்டும். அடுத்து, இக்குவியலை 15 நாட்களுக்கு ஒருமுறை கிளறிவிட வேண்டும். இதனால் வேகமாக மட்கும். இதில் 60% ஈரப்பதம் இருக்கும் வகையில் நீரைத் தெளித்து வர வேண்டும்.

கொள்ளளவு குறைதல், மண்வாசம், பழுப்புக் கலந்த கருப்பு நிறமாக மாறுதல் ஆகிய அறிகுறிகள் மூலம் கழிவு மட்குவதை அறியலாம். அசட்டோபாக்டர், அசோஸ்பயிரில்லம், பாஸ்போபாக்டீரியா, சூடோமோனாஸ் ஆகியவற்றைக் கலப்பதால் இக்கழிவில் இன்னும் ஊட்டம் அதிகமாகும். 20 நாட்களில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகமாகும். செறிவூட்டப்பட்ட இந்த உரத்தை எக்டருக்கு 5 டன் வீதம் இடலாம்.

உலர்ந்த தோகையை மண்ணுடன் கலப்பதால் நிலவளம் மேம்படும். மண்ணின் மின்கடத்தல் திறன் குறைந்து, நீரைத் தக்க வைக்கும் திறன் கூடும். மண்ணின் நுண் துளைகளின் கட்டமைப்பு அதிகமாகும்.


DR.A.SUGANYA

முனைவர் .சுகன்யா,

முனைவர் ர.பரிமளாதேவி, முனைவர் நா.மணிவண்ணன்,

தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையம், வம்பன், புதுக்கோட்டை-622303.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!