சரியான விளைச்சலுக்கு உதவும் நேரடி நெல் விதைப்புக் கருவி!

Direct paddy seeder

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020

ம் நாட்டில் நாற்று விட்டு நடும் முறையில் தான் நெல் சாகுபடி நடந்து வருகிறது. ஆனால், நீர் மற்றும் வேலையாட்கள் பற்றாக்குறை மற்றும் அதிகக்கூலியால், சரியான பருவத்தில் நெல்லைப் பயிரிட முடிவதில்லை. எனவே, மாற்று முறைகளைக் கையாள வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனர். இதற்குத் தீர்வாக அமைவது நேரடி நெல் விதைப்பு முறையாகும். இதில், சேற்று வயலில் விதைப்பது, நஞ்சைப் புழுதியில் விதைப்பது, இறவை நஞ்சைப் புழுதியில் விதைப்பது ஆகிய முறைகள் உள்ளன.

இவ்வகையில், மானாவாரி மற்றும் மேட்டுப்பகுதி நிலங்களில், புழுதிக்கால் வர விதைப்பு முறையிலும், பாசன வசதியுள்ள நன்செய் நிலங்களில் சேற்றில் முளை கட்டிய விதைகளை, கையால் மற்றும் உருளை விதைப்புக் கருவி மூலமும் விதைக்கப்படுகிறது.

நிலம் தயாரித்தல்

கோடையுழவு செய்தால் மண் பொலபொலப்பாக இருக்கும். இது நெல் விதைப்புக்கு மிகவும் ஏற்றது. எனவே, மழையைப் பயன்படுத்தி 2-3 முறை நன்கு உழ வேண்டும். மண் இறுக்கமாக இருந்தால், கடைசி உழவின் போது, ஏக்கருக்கு 400 கிலோ ஜிப்சத்தை இட வேண்டும். இதனால், இறுக்கம் குறைந்து, நெற்பயிர் நன்கு வளர்ந்து அதிக விளைச்சலைத் தரும். கட்டியின்றிப் புழுதி புரள உழுது அல்லது லேசர் இயந்திரம் மூலம் வயலைச் சமப்படுத்த வேண்டும். சேற்று வயல் விதைப்புக்கு, சேற்றுழவு செய்து நாற்றங்காலைப் போல வயலைச் சமப்படுத்த வேண்டும்.

விதையளவு

கையால் விதைப்பதற்கு ஏக்கருக்கு 30-40 கிலோ விதை தேவைப்படும். ஆனால், டிராக்டரால் இயங்கும் இயந்திரம் அல்லது உருளை விதைப்புக் கருவி மூலம் விதைக்க, ஏக்கருக்கு 12-15 கிலோ விதை போதும்.

விதை நேர்த்தி

பயிர்கள் வறட்சியைத் தாங்கி வளர, விதையைக் கடினப்படுத்த வேண்டும். அதற்கு, ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் பொட்டாசியம் குளோரைடு வீதம் கலந்த கலவையில் நெல் விதைகளை 18-20 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, நீரை வடித்து விட்டு நிழலில் உலர்த்த வேண்டும். பிறகு, காலை நேர இளம் வெய்யிலில் உலர்த்த வேண்டும். கடும் வெய்யிலில் காய வைக்கக் கூடாது.

விதைக்கும் முறை

விதைகளை குறிப்பிட்ட ஆழத்தில் விதைத்தால் முளைப்புத்திறன் சிறப்பாக இருக்கும். இதற்கு 2.5-5 செ.மீ. ஆழத்தில் விதைக்க வேண்டும். கை விதைப்பில், வயலின் மேலாக விதைகள் விழுவதால் முளைப்புத்திறன் பாதிக்கும். மேலும், சில இடங்களில் அதிகமாகவும், சில இடங்களில் குறைவாகவும் விழுவதால், சீரான இடைவெளியில் பயிர்கள் இருக்காது. எனவே, பயிர் எண்ணிக்கை சரியாக இருக்க, நெருக்கமாக முளைத்துள்ள நாற்றுகளைப் பறித்து, பயிர்கள் இல்லாத இடங்களில் நட வேண்டும். இவற்றைத் தவிர்க்க, விதைப்புக் கருவி மூலம் விதைப்பதே சிறந்தது. விதையும் குறைவாகவே தேவைப்படும்.

இயற்கை முறையில் களை நீக்கம்

நேரடி நெல் விதைப்பில், அதிக மகசூலுக்குச் சவாலாக இருப்பது களைகள் தான். ஏனெனில், நெல்லும் களையும் ஒரே சமயத்தில் முளைத்து வளரும். களைகளால் நெல் விளைச்சலில் 10-70% பாதிப்பு ஏற்படும். நடவு வயலைப் போல நிலத்தைப் பண்படுத்தாமல், விதைகளை நேரடியாக விதைப்பதால் களைகள் அதிகமாக முளைக்கும். ஆனால், நேரடி விதைப்பில் அதிக மகசூலைப் பெற, விதைத்து 15-45 நாட்கள் வரை, வயலில் களைகள் இருக்கக்கூடாது.

லேசர் இயந்திரம் மூலம் வயலைச் சமப்படுத்தினால் களைகள் ஓரளவு கட்டுப்படும். விதைத்து 15-20 நாளில் வயலில் ஈரம் இருந்தால், கொரு கலப்பையால் குறுக்கும் நெடுக்குமாக உழுது, களைகள் மற்றும் அளவுக்கு மேல் முளைத்துள்ள நாற்றுகளை அகற்றி விடலாம். பயிர்கள் முளைத்து 15-21 நாட்களில் முதல் களை எடுக்க வேண்டும். இரண்டாம் கைக்களையை 30-45 நாட்களில் எடுக்கலாம். பயிர் எண்ணிக்கை சரியாக இருந்தால் களைகள் கட்டுக்குள் இருக்கும். எனவே, பயிரற்ற இடங்களில் நாற்றுகளை நட வேண்டும். பயிரின் பருவத்துக்கு ஏற்ப நீரைக் கட்டினால் களைகளைக் கட்டுப்படுத்தலாம்.

இரசாயன முறையில் களை நீக்கம்

பயிர்கள் முளைத்து 3-5 நாட்களில் ஏக்கருக்கு 1.2 லிட்டர் பென்டிமெத்தலின் அல்லது 450 மில்லி பிரிட்டிலாகுளோர் சேப்னர் களைக்கொல்லியைக் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம். அல்லது வயலில் நல்ல ஈரமிருந்தால் 10 கிலோ மணலுடன் கலந்து தூவலாம். பின்புறம் நடந்து தான் தெளிக்கவும் தூவவும் வேண்டும். இதைச் செய்து இரண்டு நாட்களுக்கு வயலில் நடப்பதோ, பாசனம் செய்வதோ, வடிப்பதோ கூடாது. அல்லது நெல் முளைத்த 5-8 நாட்களில், ஏக்கருக்கு 80 கிராம் பைரசோசல்ப்யூரான் ஈதைல் அல்லது ஒரு லிட்டர் பூட்டாகுளோர் அல்லது 500 மில்லி பிரிட்டிலாகுளோரைத் தெளிக்கலாம்.

களைகள் 4-5 இலைகளுடன் இருக்கும் போது, அதாவது, விதைத்து 15-20 நாட்களில் களைகளின் வகைக்கேற்ப, ஏக்கருக்கு 100-120 மில்லி பிஸ்பைரிபேக் சோடியம் 10 எல்சி அல்லது 500 கிராம் 2,4 டி சோடியம் உப்பு அல்லது 4 கிலோ பிரிட்டிலாகுளோர் பென்சல்ப்யூரான் குருணையைத் தெளிக்கலாம். ஆனாலும், 30-35 நாட்களில் கைக்களை எடுக்க வேண்டும்.

பின்செய் நேர்த்திகள்

ஏக்கருக்கு 800 கிராம் அசோஸ்பைரில்லம், 800 கிராம் பாஸ்போபாக்டீரியா அல்லது 1,600 கிராம் அசோபாசுடன், 10 கிலோ தொழுவுரம், 10 கிலோ மண்ணைக் கலந்து, முதல் மழை பெய்ததும் தூவ வேண்டும். மேலும், ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாசை 10 கிலோ மட்கிய தொழுவுரத்தில் கலந்து தூவினால், குலைநோயும் செம்புள்ளி நோயும் கட்டுப்படும்.

ஏக்கருக்கு 200 லிட்டர் நீர், 500 பிபிஎப்எம் வீதம் கலந்து, தூர் கட்டும் பருவம், தண்டு உருளும் பருவம் மற்றும் பூக்கும் பருவத்தில் தெளித்தால், வறட்சியிலிருந்து நெற்பயிரைக் காக்கலாம். மிகவும் வறட்சியாக இருந்தால், ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி சைகோசல் வீதம் கலந்து தெளிக்கலாம். வறட்சிக் காலத்தில் நீரின் தேவையைக் குறைக்க, 3% கயோலின் கரைசல் அல்லது 1% பொட்டாஷ் கரைசலைத் தெளிக்க வேண்டும்.

உரம்

மானாவாரி விதைப்பு: மண்ணாய்வுப்படி உரமிட வேண்டும். இல்லையெனில், பொதுப் பரிந்துரைப்படி, மானாவாரி நேரடி விதைப்புக்கு ஏக்கருக்கு 20:10:10 கிலோ தழை, மணி, சாம்பல் சத்தைத் தரவல்ல, 44 கிலோ யூரியா, 63 கிலோ சூப்பர் பாஸ்பேட், 17 கிலோ பொட்டாசை இட வேண்டும்.  மணிச்சத்து முழுவதையும் அடியுரமாக இட வேண்டும். இதை, 300 கிலோ தொழுவுரத்தில் கலந்து ஊட்டமேற்றி இட்டால் அதிக மகசூல் கிடைக்கும். தழைச்சத்தையும் சாம்பல் சத்தையும் இரண்டாகப் பிரித்து, பயிர்கள் முளைத்த 20-25 நாட்களிலும், 40-45 நாட்களிலும் இட வேண்டும்.

தழைச்சத்தை மேலுரமாக மட்டுமே இடுவதால், உரம் வீணாகாது என்பதுடன், தொடக்கநிலை களைகளும் கட்டுக்குள் இருக்கும். துத்தநாகப் பற்றாக்குறை உள்ள வயலில், 10 கிலோ துத்தநாக சல்பேட்டை மணலில் கலந்து விதைக்க வேண்டும். இரும்புச்சத்துப் பற்றாக்குறை இருந்தால், 20 கிலோ பெரஸ் சல்பேட்டை மணலில் கலந்து இட வேண்டும். இலைவழி உரமாக, 1% யூரியா, 2% டிஏபி மற்றும் 1% பொட்டாஷ் கரைசலை, பூங்குருத்து உருவாகும் போதும், அடுத்துப் பத்து நாட்கள் கழித்தும் தெளித்தால் கூடுதல் மகசூல் கிடைகும்.

சேற்று விதைப்பு: சேற்றில் நேரடியாக விதைப்பதற்கு, நடவு முறையில் இடப்படும் உர அளவைப் பின்பற்ற வேண்டும். அதாவது, குறுவைக்கால இரகங்களுக்கு 60:20:20 கிலோ தழை, மணி, சாம்பல் சத்தைத் தரவல்ல, 130 கிலோ யூரியா, 125 கிலோ சூப்பர் பாஸ்பேட், 34 கிலோ பொட்டாசை இட வேண்டும். ஒட்டு இரகங்களுக்கு 70:24:24 கிலோ தழை, மணி, சாம்பல் சத்தைத் தரவல்ல, 152 கிலோ யூரியா, 150 கிலோ சூப்பர் பாஸ்பேட், 40 கிலோ பொட்டாசை இட வேண்டும்.

பாசனம்

விதை முளைத்த 30-35 நாட்களில் பாசனம் அவசியம். ஒவ்வொரு பாசனத்தின் போதும் 1-2.5 அங்குல நீரை நிறுத்தினால் போதும். நீர் மறைய நீர் கட்ட வேண்டும்.

நன்மைகள்

நாற்றங்கால் தேவையில்லை. அதனால், நேரமும் கூலியும் மிச்சமாகும். நாற்றங்கால் தயாரிப்பு, நாற்றுப் பறிப்பு, நடவு ஆகிய பணிகள் இல்லாததால், சாகுபடிச் செலவில் 20-25% குறையும். நடவு முறையில் நாற்றுகளை ஒரு இடத்திலிருந்து பிடுங்கி மற்றொரு இடத்தில் நடும்போது உண்டாகும் அதிர்ச்சி தவிர்க்கப்படுவதால், நெற்பயிரின் வயது 7-10 நாட்கள் குறையும். பாசனநீர் 20-30% மிச்சமாகும்.


நேரடி நெல் விதைப்பு RAJA RAMESH N

முனைவர் இராஜா.ரமேஷ்,

உதவிப் பேராசிரியர், தேசிய பயறுவகை ஆராய்ச்சி நிலையம்,

வம்பன், புதுக்கோட்டை மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!