பருத்தி எடுக்க அருமையான கருவி இருக்கு!

Pachai boomi - SIMA Kapas Plucker

கட்டுரை வெளியான இதழ்: மே 2020

முக்கியப் பணப் பயிரான பருத்தி, இந்தியாவில் 112.70 மில்லியன் எக்டரில் சாகுபடி செய்யப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் ஆடி மற்றும் மாசிப் பட்டத்தில் 7,000 எக்டரில் பயிரிடப்படுகிறது. இப்போது மாசிப்பட்டப் பருத்தி அறுவடையாகி வருகிறது. இன்றளவும் கைகளால் தான் எடுக்கப்படுகிறது. காலையில் இருந்து மாலை வரையில், ஒருவரால் 6-8 கிலோ பருத்தியைத் தான் எடுக்க முடிகிறது. இதற்குத் தீர்வாகப் பருத்தி எடுக்கும் கருவி அமைகிறது.

இக்கருவியை இயக்க ஒருவர் மட்டுமே போதும். ஒருநாளில் 10-15 கிலோ பருத்தியை எடுக்கலாம். எடுக்கப்படும் பருத்தி, இலைதழைகள் இல்லாமல் சுத்தமாக இருக்கும். மேலும், பணமும் நேரமும் மிச்சமாகும். இக்கருவி 600 கிராம் எடையே இருப்பதால் பெண்களும் எளிதாகப் பயன்படுத்தலாம். கருவியின் விலை 8,500 ரூபாயாகும்.

பயன்படுத்தும் முறை

பாட்டரி மற்றும் பஞ்சைச் சேகரிக்கும் பையை இடுப்பில் கட்டிக்கொள்ள வேண்டும். பிறகு, இந்தப் பையின் வாய்ப்பகுதியைக் கருவியுடன் இணைக்க வேண்டும். பிறகு, கருவியை பாட்டரியுடன் இணைக்க வேண்டும். அடுத்து, கருவியிலுள்ள சுவிட்சைப் போட்டால் கருவியின் முன் பகுதியிலுள்ள பல் போன்ற அமைப்பு சுழலத் தொடங்கும்.

பிறகு, பருத்திச் செடியில் விரிந்துள்ள பஞ்சின் அருகே கருவியைக் கொண்டு போனால், கருவியிலுள்ள பல், பஞ்சைக் கவ்வியெடுத்து, பின்னுக்குத் தள்ளி, பஞ்சுப் பைக்கு அனுப்பி வைக்கும். பஞ்சுப்பை நிறைந்ததும் அதன் அடியிலுள்ள வாயைத் திறந்து சாக்குகளில் மாற்றிக் கொள்ளலாம். நன்கு மலர்ந்த பருத்தியை மட்டும் எடுப்பதால், சரியான ஈரப்பதத்தில் பஞ்சு இருக்கும்.

இந்தக் கருவியுடன், 1.2 AH அளவுள்ள பாட்டரி, சார்ஜர், பாட்டரியை வைப்பதற்கான பை, இடுப்பில் கட்டிக்கொள்ளும் வசதியுள்ள பஞ்சு சேமிப்புப் பை ஆகியன வழங்கப்படும். கருவியின் எடை 600 கிராம். மோட்டாரின் ஆற்றல் 11 வாட்ஸ், வோல்டேஜ் 12, சுழலும் வேகம் 5,400 ஆர்.பி.எம்.

கருவி கிடைக்கும் இடம்

தென்னிந்தியப் பஞ்சாலைகள் சங்கம், கோயமுத்தூர்-641048. இணையதளம்: www.simacrda.org மின்னஞ்சல்: info@simacrda.org தொலைபேசி: 0422 4225333, 98422 24022, 99524 12329.


பருத்தி AROKIYA MARRY

முனைவர் .ஆரோக்கியமேரி,

முனைவர் செல்வி ரமேஷ், முனைவர் கி.ஆனந்தி,

வேளாண்மை அறிவியல் நிலையம், மதுரை-625104.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!