இனப்பெருக்கப் பன்றிகளைத் தேர்வு செய்வது எவ்வாறு?

pigs

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2018

ரியான சூழலில் திட்டமிட்டுச் செய்தால் வெண்பன்றி வளர்ப்பு இலாபமிக்க தொழிலாக அமையும். பன்றி இறைச்சிக்கு உள்ளூர்ச் சந்தை வாய்ப்பு, ஏற்றுமதி வாய்ப்புகள் நிறைய இருப்பதால், படித்து விட்டு வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பவர்கள் பன்றி வளர்ப்பைச் சிறப்பாகச் செய்ய முடியும். இதற்கான பயிற்சிகள், தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவப் பல்கலைக் கழக ஆராய்ச்சி நிலையங்கள், வேளாண்மை அறிவியல் நிலையங்கள் மூலம் வழங்கப்படுகின்றன. இங்கே இனப்பெருக்கத்துக்கான பன்றிகளைத் தேர்வு செய்வது குறித்துப் பார்க்கலாம்.

பன்றிகளைத் தேர்வு செய்தல்

இனப் பெருக்கத்துக்குச் சிறந்த ஆண் மற்றும் பெண் பன்றிகளைத் தேர்வு செய்தால் நல்ல குட்டிகளைப் பெற முடியும். எனவே, இனப்பெருக்கப் பன்றிகள், அதிக எண்ணிக்கையில் குட்டிகளை ஈனுதல்; பாலூட்டும் திறன்; சிறப்பான வெளிப்புறத் தோற்றம் மற்றும் கால் அமைப்புகள்; மரபியல் அடிப்படையிலான குறைகள் இல்லாமல் இருத்தல்; தாய் நெடுநாட்கள் வாழ்தல் ஆகிய தன்மைகளைப் பெற்றிருக்க வேண்டும். 

பன்றிகள் ஆண்டுக்கு இருமுறை ஈனும். குறிப்பாக, ஒரு ஈற்றில் அதிகக் குட்டிகளைக் கொண்ட குழுவிலிருந்து ஆண் பன்றிக் குட்டியையும், அதிக எடை கொண்ட பெண் பன்றிக் குட்டிகளையும் இனப் பெருக்கத்துக்குத் தேர்வு செய்ய வேண்டும். அவற்றின் வெளித்தோற்ற அமைப்பு மற்றும் பண்புகள், மரபுவழிப் பண்புகள், சிறந்த தீவன மாற்றுத்திறன், உடல் வளர்ச்சி மற்றும் நோயற்ற பன்றிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வளர்க்கப் போகும் இடம் மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு பன்றிகளைத் தேர்வு செய்ய வேண்டும். சிறந்த முறையில் தேர்வு செய்த ஆண், பெண் பன்றிகளை நான்கு வயது வரையிலும் இனப்பெருக்கத்துக்குப் பயன்படுத்தலாம்.

ஆண் பன்றிகளைத் தேர்வு செய்தல்

இனப் பெருக்கத்துக்குச் சிறந்த ஆண் பன்றிகளைத் தேர்வு செய்தல் மிகவும் முக்கியம். ஏனெனில், ஆண் பன்றி தான் அதிகக் குட்டிகளை உற்பத்தி செய்யும். மேலை நாடுகளில் ஆறு மாதத்தில் 65-70 கிலோ எடையுடனும், 100 செ.மீ. நீளத்திலும் இருக்கும் ஆண், பெண் பன்றிகளைத் தான் இனவிருத்திக்குத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், நமது நாட்டில் சிறந்த முறையில் பேணும் பண்ணைகளில் கூட அந்த அளவை அடைய முடியவில்லை. ஆதலால், நமது நாட்டில் தேர்வு செய்யும் முறை சிறிது மாற்றமுடையதாகும்.

குட்டிகளைத் தாயிடமிருந்து பிரிக்கும் நேரத்திலேயே ஆண் குட்டிகளைத் தேர்வு செய்வது மிகவும் முக்கியம். மேலும், ஒரு ஈற்றில் அதிகக் குட்டிகளை ஈன்றும், அனைத்துக் குட்டிகளும் ஒரே மாதிரியான வளர்ச்சி நிலையிலும் உள்ள குழுவிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும். தாயிடமிருந்து பிரிக்கும் போது, 8-10 கிலோ அல்லது அதற்கு மேலான வளர்ச்சியைப் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்த குட்டிகளை மூன்று மாதங்களுக்கு நன்கு கவனிக்க வேண்டும். அவற்றின் எடை வளர்ச்சி ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 250 கிராம் இருக்க வேண்டும். 180 நாட்களில் அதிகளவு எடையை அடைய வேண்டும். மேலும், ஆண் குட்டி வளரும் போது அதை நடக்க வைத்துக் கீழ்க்கண்ட பண்புகளை உற்றுக் கவனிக்க வேண்டும்.

உடல் அமைப்பு, நடக்கும் விதம், கால் குளம்புகளின் வளர்ச்சி, படுத்துவிட்டு எழுந்திருக்கும் தன்மை, தீவனம் உண்ணும் விதம் ஆகியவற்றைக் கவனிக்க வேண்டும். ஆண் பன்றிகளின் வெளிப்புற விதையின் அளவு சமமாகவும், சீராகவும் இருக்க வேண்டும். ஆண் பன்றிகளை, இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமே மரபு சார்ந்த குறைகளைத் தடுக்க முடியும்.

பெண் பன்றிகளைத் தேர்வு செய்தல்

தரமான பன்றிப் பண்ணையை உருவாக்கச் சிறந்த பெண் பன்றிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பன்றி வளர்ப்பின் முக்கிய நோக்கமே குட்டி ஈனும் தன்மையும் எண்ணிக்கையும் தான். எனவே, அதிகக் குட்டிகளை ஈனும் திறன் கொண்ட, பிறந்த குட்டிகளின் இறப்பு விகிதம் குறைவாக உள்ள, விரைவாக வளரும் தன்மை கொண்ட, குட்டிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றாற் போல் பால் கொடுக்கும் திறன் மிக்க, குட்டிகளை நன்கு பேணிக் காக்கும் தன்மை ஆகிய பண்புகள் தாய்ப்பன்றிகளிடம் இருக்க வேண்டும். மேலும், குட்டிகளில் பிறப்பு எடை 1.2-1.4 கிலோவும், தாயிடமிருந்து பிரிக்கும் போது உடல் எடை 7-10 கிலோவும், மூன்று மாத உடல் எடை 20-25 கிலோவும், ஆறு மாத உடல் எடை 50-55 கிலோவும், எட்டு மாத உடல் எடை 70-75 கிலோவும் இருக்க வேண்டும்.

எட்டு மாதத்தில் 80 கிலோ எடையை அடைந்திருந்தால் மிகவும் நல்லது. மேலும், குறைந்தது 12 பால் காம்புகள் இருக்க வேண்டும். அனைத்துக் காம்புகளும் சீரான இடைவெளியில், செயல் புரியும் தன்மையுடன் இருக்க வேண்டும். நான்கு கால்களும் சம அளவில் இருக்க வேண்டும். பன்றியை நடக்க விட்டுப் பார்க்கும் போது, அதன் பின்னங் கால்கள் ஒன்றோடு ஒன்று மோதாமல் இருக்க வேண்டும். நான்கு கால்களின் குளம்புகளும் சரியான அளவில் இருக்க வேண்டும். பெண் பன்றியின் வெளிப்புற இனப்பெருக்க உறுப்பில் எந்தக் குறையும் இல்லாமல் இருக்க வேண்டும்.


DR BALASUBRAMANYAM

முனைவர் .பாலசுப்ரமணியம்,

இரா.இளவரசி, கு.மஞ்சு, முனைவர் ஹ.கோபி, பன்றி இனவிருத்திப் பிரிவு,

கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம்,

காட்டுப்பாக்கம்-603203, காஞ்சிபுரம் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading