கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2014
பயிர்களின் தேவையறிந்து உரமிட்டால் தான் விவசாயத்தில் எதிர்பார்க்கும் மகசூலை அடைய முடியும். தேவைக்கு அதிகமாக உரமிடுவதால் செலவுதான் அதிகமாகும். குறைவாக இட்டால் மகசூல் இழப்புத் தான் ஏற்படும். எனவே, தேவையான நேரத்தில் சரியான அளவில் உரமிடுதல் அவசியமாகும். இங்கே காய்கறிப் பயிர்களுக்குத் தேவையான உர அளவுகளைப் பார்ப்போம்.
தண்டுக்கீரை
எக்டருக்கு 25 டன் தொழுவுரத்தை இட வேண்டும். அசோஸ்பயிரில்லம் 2 கிலோ, பாஸ்போபாக்டீரியா 2 கிலோ, தழைச்சத்து 75 கிலோ, மணிச்சத்து 50 கிலோ, சாம்பல்சத்து 25 கிலோ ஆகியவற்றை அடியுரமாக இட வேண்டும்.
செடி முருங்கை
செடி ஒன்றுக்கு 45 கிராம் தழைச்சத்து, 16 கிராம் மணிச்சத்து, 30 கிராம்சாம்பல் சத்து ஆகிய உரங்களை விதைத்த 3-வது மாதத்தில் இட்டு நீரைப் பாய்ச்ச வேண்டும். மேலும் 6-வது மாதத்தில் செடிக்கு 45 கிராம் என்ற அளவில் தழைச்சத்து உரத்தை இட வேண்டும்.
சாம்பல் பூசணி
குழி ஒன்றுக்கு 10 கிலோ தொழுவுரம், 6:12:12 என்ற கணக்கில் தழை, மணி, சாம்பல் சத்து அடங்கிய கலப்பு உரத்தைக் குழிக்கு 100 கிராம் இட்டு நீரைப் பாய்ச்ச வேண்டும். 30 நாட்கள் கழித்து, மேலுரமாகக் குழிக்கு 10 கிராம் யூரியாவை இட வேண்டும்.
குழந்தை மக்காச்சோளம்
அடியுரமாக எக்டருக்கு 12.5 டன் மட்கிய தொழுவுரம், 75 கிலோ தழைச்சத்து, 60 கிலோ மணிச்சத்து, 20 கிலோ சாம்பல்சத்து ஆகிய உரங்களை இட வேண்டும். அசோஸ்பயிரில்லத்தை எக்டருக்கு 2 கிலோ இட்டால், தழைச்சத்தில் 25 சதத்தைக் குறைத்து இடலாம். மேலுரமாக, விதைத்த 25-வது நாளில் 75 கிலோ தழைச்சத்து, 20 கிலோ மணிச்சத்து உரங்களை இட வேண்டும். மேலுரத்தை இடுவதற்கு முன்பாகக் களையை எடுத்து விட வேண்டும்.
பீட்ரூட்
அடியுரமாக, எக்டருக்கு 20 டன் மக்கிய தொழுவுரம், 60 கிலோ தழைச்சத்து, 160 கிலோ மணிச்சத்து, 100 கிலோ சாம்பல்சத்து ஆகியவற்றை இட வேண்டும். 30 நாட்கள் கழித்து, 60 கிலோ தழைச்சத்தை மேலுரமாக இட வேண்டும்.
பெல்லாரி வெங்காயம்
கடைசி உழவின்போது, எக்டருக்கு 25 டன் மட்கிய தொழுவுரம், 50 கிலோ துத்தநாக சல்பேட் ஆகியவற்றைக் கலந்து இட வேண்டும். நடவுக்கு முன், எக்டருக்கு 2 கிலோ அசோஸ்பயிரில்லம், 2 கிலோ பாஸ்போபாக்டீரியா, 50 கிலோ தழைச்சத்து, 150 கிலோ மணிச்சத்து, 75 கிலோ சாம்பல்சத்தைத் தரக்கூடிய இரசாயன உரங்களை இட வேண்டும். நடவு செய்து 30 நாட்களுக்குப் பின் 50 கிலோ தழைச்சத்தை இட வேண்டும்.
வெண்டை
அடியுரமாக, எக்டருக்கு 25 டன் மட்கிய தொழுவுரம், 20 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து, 30 கிலோ சாம்பல்சத்து ஆகிய உரங்களை இட்டு மண்ணுடன் நன்கு கலந்து விட வேண்டும். நட்ட 30 நாட்கள் கழித்து மேலுரமாக, 20 கிலோ தழைச்சத்தை இட வேண்டும். 2 கிலோ அசோஸ்பயிரில்லம் அல்லது பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிர்க் கலவையை நன்கு மட்கிய 100 கிலோ தொழுவுரத்துடன் கலந்து நேரடியாக மண்ணில் இட்டு, தழைச்சத்தின் தேவையைக் குறைத்துக் கொள்ளலாம்.
பாகற்காய்
ஒவ்வொரு குழிக்கும் 10 கிலோ தொழுவுரத்தை இட வேண்டும். இத்துடன் 6:12:12 என்ற அளவிலான தழை, மணி, சாம்பல்சத்துக் கலவையைக் குழிக்கு 100 கிராம் இட வேண்டும். மேலுரமாக, பூக்கும் தருணத்தில் குழிக்கு 10 கிராம் தழைச்சத்தை இட வேண்டும்.
சுரைக்காய்
ஒவ்வொரு குழிக்கும் மட்கிய தொழுவுரம் 10 கிலோ இட வேண்டும். இத்துடன் அடியுரமாகக் குழிக்கு 6:12:12 என்ற அளவிலான தழை, மணி, சாம்பல்சத்துக் கலவையை 100 கிராம் இட வேண்டும். பூக்கும் தருணத்தில் மேலுரமாக ஒவ்வொரு குழிக்கும் 10 கிராம் தழைச்சத்தை இட வேண்டும்.
கத்தரி
அடியுரமாக எக்டருக்கு 25 டன் மட்கிய தொழுவுரம், 50 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து, 30 கிலோ சாம்பல்சத்தை இட வேண்டும். 30 நாட்கள் கழித்து, 50 கிலோ தழைச்சத்தை மேலுரமாக இட வேண்டும். நடவின்போது எக்டருக்கு 2 கிலோ அசோஸ்பயிரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியாவை இட வேண்டும்.
பட்டை அவரை
அடியுரமாக, எக்டருக்கு 25 டன் மட்கிய தொழுவுரம், 50 கிலோ மணிச்சத்து, 25 கிலோ சாம்பல்சத்தை இட வேண்டும். விதைத்த 20-25 நாட்கள் கழித்து 25 கிலோ தழைச்சத்து மற்றும் 25 கிலோ சாம்பல்சத்தையும் 40-45 நாட்கள் கழித்து 25 கிலோ தழைச்சத்தையும் இட வேண்டும்.
பாகற்காய்
குழிக்கு 10 கிலோ வீதம் தொழுவுரத்தை இட வேண்டும். இத்துடன் 6:12:12 என்னும் அளவிலான தழை, மணி, சாம்பல் சத்துக் கலவையைக் குழிக்கு 100 கிராம் வீதம் இட வேண்டும். மேலுரமாக, பூக்கும் தருணத்தில் குழிக்கு 10 கிராம் தழைச்சத்தை இட வேண்டும்.
சுரைக்காய்
குழிக்கு 10 கிலோ வீதம் மட்கிய தொழுவுரத்தை இட வேண்டும். இத்துடன் அடியுரமாகக் குழிக்கு 6:12:12 என்னும் அளவிலான தழை, மணி, சாம்பல் சத்துக் கலவையை 100 கிராம் வீதம் இட வேண்டும். பூக்கும் தருணத்தில் மேலுரமாக ஒவ்வொரு குழிக்கும் 10 கிராம் தழைச்சத்தை இட வேண்டும்.
கத்தரி
அடியுரமாக எக்டருக்கு 25 டன் மட்கிய தொழுவுரம், 50 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து, 30 கிலோ சாம்பல் சத்தை இட வேண்டும். 30 நாட்கள் கழித்து, 50 கிலோ தழைச்சத்தை மேலுரமாக இட வேண்டும். நடவின் போது எக்டருக்கு 2 கிலோ அசோஸ்பயிரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியாவை இட வேண்டும்.
பட்டை அவரை
அடியுரமாக, எக்டருக்கு 25 டன் மட்கிய தொழுவுரம், 50 கிலோ மணிச்சத்து, 25 கிலோ சாம்பல் சத்தை இட வேண்டும். விதைத்த 20-25 நாட்கள் கழித்து 25 கிலோ தழைச்சத்து மற்றும் 25 கிலோ சாம்பல் சத்தையும் 40-45 நாட்கள் கழித்து 25 கிலோ தழைச்சத்தையும் இட வேண்டும்.
முட்டைக்கோசு
முட்டைக்கோசை மலைப்பகுதியில் சாகுபடி செய்தால் எக்டருக்கு 30 டன் மட்கிய தொழுவுரம், தழை, மணி, சாம்பல் சத்து உரங்களை 90 கிலோ வீதம் இட வேண்டும். நடவு செய்த 30-45 நாட்கள் கழித்துத் தழை, மணி, சாம்பல் சத்து உரங்களை 45 கிலோ வீதம் இட வேண்டும்.
சமவெளிப் பகுதியில் சாகுபடி செய்தால் எக்டருக்கு 20 டன் மட்கிய தொழுவுரம், 2 கிலோ அசோஸ்பயிரில்லம், 50 கிலோ தழைச்சத்து, 125 கிலோ மணிச்சத்து, 25 கிலோ சாம்பல் சத்து உரங்களை இட வேண்டும். நடவு செய்த 30 நாட்கள் கழித்து 50 கிலோ தழைச்சத்தை இட்டு மண்ணை அணைத்து விட வேண்டும்.
குடை மிளகாய்
கடைசி உழவின்போது எக்டருக்கு 25 டன் தொழுவுரம், 40:60:30 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து உரங்களை இட வேண்டும். நடவு செய்த 30, 60, 90 நாட்களில் 40 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து உரங்களை இட வேண்டும்.
கேரட்
எக்டருக்கு 30 டன் தொழுவுரத்தை அடியுரமாக இட வேண்டும். பிறகு, 90 கிலோ தழைச்சத்து, 90 கிலோ மணிச்சத்து, 90 கிலோ சாம்பல் சத்தை இட வேண்டும். இதனுடன் 25 கிலோ துத்தநாக சல்பேட்டையும் இட வேண்டும்.
காலிஃப்ளவர்
மலைப் பகுதியில் சாகுபடி செய்தால், எக்டருக்கு 30 டன் தொழுவுரத்தை அடியுரமாக இட வேண்டும். பிறகு, தழை, மணி, சாம்பல் சத்து ஆகிய உரங்களை 90 கிலோ வீதம் அடியுரமாக இட வேண்டும். நட்ட 45 நாட்கள் கழித்து 45:45:45 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து உரங்களை இட வேண்டும்.
சமவெளிப் பகுதியில் சாகுபடி செய்தால், எக்டருக்கு 15 டன் தொழுவுரம், 50:100:50 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து உரங்களை அடியுரமாக இட வேண்டும். பிறகு, நட்ட 45 நாட்கள் கழித்து 50 கிலோ தழைச்சத்தையும், இரசாயனம் கலக்காத வகையில் 2 கிலோ காய்கறி நுண்ணூட்டக் கலவையையும் இட வேண்டும்.
மிளகாய்
அடியுரமாக, எக்டருக்கு 25 டன் தொழுவுரம், 30:60:30 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து உரங்களை அடியுரமாக இட வேண்டும். மானாவாரி என்றாலும் இறவை என்றாலும் 30, 60, 90 நாட்களில் 30 கிலோ வீதம் தழைச்சத்து உரத்தை இட வேண்டும்.
செளசெள
கொடிகள் பூக்கும் போதும், கவாத்து செய்த பிறகும் குழிக்கு 250 கிராம் வீதம் யூரியாவை இட்டு நீரைப் பாய்ச்ச வேண்டும்.
கொத்தவரை
கடைசி உழவின்போது எக்டருக்கு, மட்கிய தொழுவுரம் 25 டன், அசோஸ்பயிரில்லம் 2 கிலோ, பாஸ்போபாக்டீரியா 2 கிலோ, தழைச்சத்து 25 கிலோ, மணிச்சத்து 50 கிலோ, சாம்பல் சத்து 25 கிலோவை அடியுரமாக இட வேண்டும். நடவு செய்த 30 நாளில் 25 கிலோ தழைச்சத்தை மேலுரமாக இட வேண்டும்.
சிறு கிழங்கு அல்லது கூர்க்கன் கிழங்கு
நடவு செய்த 30 நாளில் மண்ணை அணைக்கும் போது 30 கிலோ தழைச்சத்து மற்றும் 2 கிலோ அசோஸ்பயிரில்லத்தை இட வேண்டும். நடவு செய்து 2 மாதங்கள் கழித்து எக்டருக்கு 30:60:150 கிலோ தழை, மணி, சாம்பல் சத்தைக் கொடுக்கும் இரசாயன உரங்களை இட வேண்டும்.
கருணைக் கிழங்கு
கடைசி உழவின்போது எக்டருக்கு மட்கிய தொழுவுரம் 25 டன் இட வேண்டும். மேலும், தழைச்சத்து 20 கிலோ, மணிச்சத்து 30 கிலோ, சாம்பல் சத்து 60 கிலோ இட வேண்டும். மேலும், நடவு செய்த 45 நாளில் 20:30:60 கிலோ தழை, மணி, சாம்பல்சத்து உரங்களை இட வேண்டும்.
வெள்ளரி
அடியுரமாக, எக்டருக்கு 40 டன் தொழுவுரத்தையும், விதைத்த 30 நாளில் 35 கிலோ தழைச்சத்தையும் இட வேண்டும்.
முனைவர் க.வேல்முருகன்,
இணைப் பேராசிரியர், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம்-603203.