கால்நடைகளுக்குத் தீவனமாகும் பயறுவகைப் பயிர்கள்!

பயறுவகை cotton horse gram scaled

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021

யறு வகைத் தீவனப் பயிர்கள் கால்நடைகளின் உடல் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கருதப்படுகிறது. மற்ற சத்துகளோடு ஒப்பிடும் போது, பயறுவகைத் தீவனப் பயிர்களில் உள்ள புரதச்சத்து, கால்நடைகளுக்கு மிகவும் தேவையான ஒன்றாகும்.

எடுத்துக்காட்டாக, வேலிமசால். தீவனத் தட்டைப் பயறு, முயல் மசால், குதிரை மசால், நரிப் பயறு, கொள்ளு, பில்லிபெசரா போன்றவை 15-25% புரதச்சத்தைக் கொண்டுள்ளன. வயல் வரப்புகள் மற்றும் வேளாண் காடுகளில் ஒருங்கிணைத்து வளர்க்கக் கூடிய தீவன மரங்களான, அகத்தி, சூபாபுல், கல்யாண முருங்கை, கொடுக்காய்ப்புளி, கிளைரிசிடியா, முருங்கை, வெள்வேல் போன்றவற்றில் 19-27% புரதம் உள்ளது.

இவற்றில், வேலிமசால், முயல் மசால், குதிரை மசால் ஆகியவற்றைப் பல்லாண்டுப் பயிராக வளர்க்கலாம். தீவனத் தட்டைப்பயறு, நரிப்பயறு, கொள்ளு, பில்லிபெசரா, கலப்பக்கோணியம் போன்றவை, வெப்ப, மிதவெப்ப மண்டலம் மற்றும் குளிர்ச்சியான பகுதியில் ஆண்டுப் பயிராக வளர்க்கலாம்.

மற்ற பயிர் சாகுபடியுடன் ஒப்பிடும் போது, தீவனப்பயிர் சாகுபடிக்குக் குறைந்த செலவே ஆகும். களை நிர்வாகம் மற்றும் பூச்சி, நோய்த் தாக்குதல் நிர்வாகச் செலவு குறைவு, விரைவாக வளரும் தன்மை, குறுகிய காலத்தில் அறுவடை போன்றவற்றால் உற்பத்திச் செலவு குறைகிறது.

தீவனத் தட்டைப்பயறு

இறவையில் பயிரிடும் போது பசுந்தீவன விளைச்சல் கூடுவதுடன், அதிக வேர் முடிச்சுகள் மூலம் தழைச்சத்தை நிலைநிறுத்தி, மண்வளம் மேம்படவும் துணை செய்கிறது. இறவையில் பாத்தி முறையில், 30×30 செ.மீ. அல்லது 45×45 செ.மீ. இடைவெளியில் விதைக்கலாம்.

மானாவாரி மற்றும் மழைக் காலத்தில் ஒருமுறை உழுது, ஏக்கருக்கு எட்டு கிலோ விதைகளைச் சீராகத் தூவலாம். விதைகள் 3-4 நாட்களில் முளைக்கத் தொடங்கும். பச்சைத் தீவனத்துக்காகப் பயிரிடும் போது, தொழுவுரத்தை மட்டும் அடியுரமாக இட்டால் போதும். விதை உற்பத்திக்குச் சரியான அளவில் உரங்களை இட வேண்டும்.

மானாவாரியில் விதைக்கும் போது, ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் ரைசோபியம் வீதம் எடுத்து விதைநேர்த்தி செய்து விதைத்தால், வறட்சியைத் தாங்கும் தன்மை பயிருக்குக் கிடைக்கும். விரைவாகப் பரந்து வளர்ந்து 20-25 நாட்களில் நிலத்தை மூடி விடுவதால், களை வளர்வது கட்டுப்படும்.

தீவனத்துக்காக உருவாக்கப்பட்ட கோ.எஃப்.சி.8, 9 ஆகிய இரகங்களைப் பயிரிடலாம். பயிர்கள் ஒரு மாதத்துக்குப் பிறகு கொடிவிடத் தொடங்கும் நிலையில் அல்லது 40-45 நாட்களில் அறுவடை செய்யலாம். இந்தத் தழைகளில் 23-26% புரதம் உள்ளது. ஒவ்வொரு ஆட்டுக்கும் 500-1000 கிராம் கொடுக்கலாம்,

நரிப்பயறு-கல்லுப்பயறு

உயர் விளைச்சலைத் தரும் டி.எம்.வி.1 இரகம் மானாவாரிக்கு ஏற்றது. ஆண்டுக்கு 500-750 மி.மீ. மழையுள்ள பகுதிகளிலும் வறட்சியைத் தாங்கி வளரும். தீவன மகசூல் அதிகமாக இருக்கும். வெள்ளை ஈ, காய்த் துளைப்பான், மஞ்சள் தேமல் நோய் ஆகியவற்றை மிதமாகத் தாங்கி வளரும். அனைத்து மண் வகைகளிலும் பயிரிடலாம். எனினும், நீர்த் தேங்காத வளமான களிமண் கலந்த வண்டல் மண் உகந்தது.

வறட்சி மற்றும் பனியைத் தாங்கி வளரும் என்பதால், வறண்ட மற்றும் பாசன வசதி குறைந்த பகுதியிலும் பயிரிடலாம். கார அமிலத் தன்மை 4-10 என, மிதமான அமிலமும் மிதமான உவருமுள்ள மண்ணில் பயிரிடலாம். பயிர் வளர்ச்சிக் காலம் 65-70 நாட்களாகும். ஊடுபயிருக்கு உகந்தது.

இறவையில் ஜுன், ஜுலையிலும், மானாவாரியில் நவம்பர், டிசம்பரிலும் விதைக்கலாம். தீவனமாக 50-55 நாளில் அறுவடை செய்யலாம். எக்டருக்கு 10 டன் பசுந்தீவனம் கிடைக்கும். இந்தத் தீவனத்தை நிழலில் சிறிது நேரம் உலர்த்திக் கால்நடைகளுக்குக் கொடுக்கலாம். இதில் 6-6.5% புரதம் உள்ளது. இதைக் காய வைத்தால் 2-2.5 டன் உலர் தீவனம் கிடைக்கும்.

கொள்ளு

இது, மானாவாரியில் வறட்சியைத் தாங்கி வளரும் பயறு வகையாகும். ஆண்டுக்கு 300-600 மி.மீ. மழையுள்ள பகுதிகளிலும் வளரும். அக்டோபர் நவம்பரில் விதைக்கலாம். பையூர் 2 இரகம், வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பயிரிட ஏற்றது. தேவையான உரங்களை இட்டு ஊடுபயிராக வளர்த்தால், 45-55 நாட்களில் எக்டருக்கு 3.1-3.6 டன் பசுந்தீவனம் கிடைக்கும். இதில், 2.06% புரதமும், 7.2% நார்ச்சத்தும், .08% கொழுப்புச் சத்தும், 4.7% சாம்பல் சத்தும் உள்ளன.

பில்லிபெசரா

ஆந்திரத்தில் பரவலாகப் பயிரிடப்படும் இப்பயிர், கால்நடைத் தீவனமாகவும் பசுந்தாள் உரமாகவும் பயன்படுகிறது. அடர்த்தியாக 1.5 அடி வரை வளர்ந்து கொடி விடும். பசுந்தாள் உரமாகப் பயிரிட்டால், நிலத்தில் மடக்கி உழுவதற்கு முன், இருமுறை அறுவடை வரை செய்யலாம். அனைத்துப் பருவங்களிலும் பயிரிடலாம். எனினும், விதை உற்பத்திக்காக மார்ச், ஏப்ரலில் விதைக்கலாம். ஏக்கருக்கு 4-8 கிலோ விதை தேவைப்படும்.

நெல் அறுவடைக்குப் பிறகு களிமண் வயலில் பயிரிடலாம். 30×10 செ.மீ. இடைவெளியில் வரிசையாக விதைக்கலாம். அறுபது நாளில் பசுந்தாள் உரமாக மண்ணில் மடக்கி உழலாம். இறவையில் ஏக்கருக்கு 2.5 டன் பசுந்தீவனம் கிடைக்கும். இதை 45-55 நாட்களில் அறுவடை செய்யலாம்.

அதிக இடைவெளியில் பயிரிடப்படும், ஆமணக்கு, பருத்தி, துவரை போன்ற பயிர்களில் ஊடுபயிராகவும் பில்லிபெசராவைப் பயிரிடலாம். 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் இதைப் பருத்தியில் ஊடுபயிராக இட்டபோது, எக்டருக்கு 2.7-3.0 டன் பசுந்தீவனம் கிடைத்துள்ளது. இதில், 18-19% கச்சாப் புரதமும், 2-3% நார்ச்சத்தும், .06% கொழுப்பும், 3.1-3.3% சாம்பல் சத்தும் உள்ளன.

இத்தகைய புரதம் மிகுந்த மற்றும் குறைந்த காலத்தில் விளையும் பயறுவகைப் பசுந்தீவனத்தை மற்ற பசுந்தீவனங்களுடன் கலந்தும் தரலாம். மொத்தப் பசுந்தீவனத்தில் கால் பங்கு அல்லது ஐந்தில் ஒரு பங்கு அளவில் இந்தத் தீவனத்தைத் தரலாம்.


DAISY

முனைவர் மா.டெய்சி,

முனைவர் ந.அகிலா, வேளாண்மை அறிவியல் நிலையம், முனைவர் கி.செந்தில் குமார்,

கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல்-637002.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!