கட்டுரை வெளியான இதழ்: மே 2021
முந்திரி தரிசு நிலத்தின் தங்கமாகும். இது, தென் அமெரிக்காவில் உள்ள பிரேசிலில் இருந்து போர்ச்சுக்கீசியர்கள் மூலம், 16 ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டு, முதன் முதலில் கோவா கடற்கரைப் பகுதியில் நடப்பட்டது. உலகளவில், இந்தியா, பிரேசில், வியட்நாம், தான்சானியா, மொசாம்பிக், இந்தோனேசியா, இலங்கை போன்ற இருபத்து ஐந்துக்கும் மேற்பட்ட நாடுகளில் முந்திரி விளைகிறது. மொத்த உற்பத்தியில் ஆசியாவும், உற்பத்தித் திறனில் ஆப்பிரிக்காவும், பரப்பளவில் இலத்தீன் அமெரிக்காவும் முன்னிலையில் உள்ளன.
இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சிமலை, மேற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில், கேரளம், கர்நாடகம், கோவா, மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரம், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பெருமளவில் விளைகிறது. தமிழ்நாட்டில், கடலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெருமளவில் விளைகிறது. ஆயினும், நமது மாநிலத்தில் முந்திரி உற்பத்தித் திறன் குறைவாகவே உள்ளது.
இரகங்களின் சிறப்புகள்
வி.ஆர்.ஐ.1: இந்த இரகம் 1981 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இந்த மரங்கள் அடக்கமான, சுமாரான உயரத்தில் இருக்கும். 5-7 பழங்களைக் கொண்டு கொத்துக் கொத்தாகக் காய்க்கும். கொட்டை 5 கிராம் இருக்கும். உடைப்புத் திறன் 28 சதமாகும். பருப்பின் மேல் தோல் எளிதாக உரியும். எக்டருக்கு 1,450 கிலோ மகசூல் கிடைக்கும்.
வி.ஆர்.ஐ.2: இந்த இரகம் 1985 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. கொட்டையின் எடை 5.15 கிராம் இருக்கும். மிகவும் முன் பருவத்தில் பூத்து நீண்ட நாட்கள் வரையில் காய்க்கும். உடைப்புத் திறன் 28 சதமாகும். பருப்பின் எடை 2.05 கிராம் இருக்கும். எக்டருக்கு 2,000 கிலோ மகசூல் கிடைக்கும்.
வி.ஆர்.ஐ.3: இந்த இரகம் 1991 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. ஏற்றுமதிக்கு ஏற்ற தரமான பருப்புகள் கிடைக்கும். கொட்டையின் சராசரி எடை 7.18 கிராம் இருக்கும். மிகவும் முன் பருவத்தில் பூத்து நீண்ட நாட்கள் வரையில் காய்க்கும். உடைப்புத் திறன் 29.1 சதமாகும். பருப்பின் எடை 2.05 கிராம் இருக்கும். எக்டருக்கு 2,700 கிலோ மகசூல் கிடைக்கும்.
வி.ஆர்.ஐ.4: இந்த இரகம் 2000 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. ஏற்றுமதிக்கு ஏற்ற தரமான பருப்புகள் கிடைக்கும். கொட்டையின் சராசரி எடை 6.63 கிராம் இருக்கும். மிகவும் முன் பருவத்தில் பூத்து நீண்ட நாட்கள் வரையில் காய்க்கும். உடைப்புத் திறன் 28.5 சதமாகும். எக்டருக்கு 3,500 கிலோ மகசூல் கிடைக்கும்.
வி.ஆர்.ஐ. எச்.1: இது வீரிய ஒட்டு இரகமாகும். 2009 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இந்த மரங்கள் அடக்கமான சுமாரான உயரத்தில் (5.5 மீ.) இருக்கும். தமிழ்நாட்டில் முந்திரி விளையும் பகுதிகளுக்கு ஏற்றது. உயர் விளைச்சல் மற்றும் ஏற்றுமதிக்கு ஏற்ற தரமான பருப்புகள் கிடைக்கும். ஜனவரி கடைசி வாரம் முதல் ஏப்ரல் முதல் வரையில் பூக்கும்.
ஏப்ரல் முதல் ஜூன் வரையில் காய்க்கும். 6-10 பழங்களைக் கொண்டு கொத்துக் கொத்தாகக் காய்க்கும். கொட்டையின் எடை 7.2 கிராம் இருக்கும். பருப்பின் எடை 2.2 கிராம் இருக்கும். இதன் மகசூல் எக்டருக்கு 2900 கிலோவாகும். உடைப்புத் திறன் 30.5 சதமாகும். பருப்பின் மேல் தோல் எளிதாக உரியும்.
வி.ஆர்.ஐ. 3 மற்றும் வி.ஆர்.ஐ. எச்.1 இரகப் பருப்புகளை (W-210) ஏற்றுமதியாளர்கள் விரும்பி வாங்குவதால், தமிழக விவசாயிகள் அமைக்கும் புதிய முந்திரித் தோப்புகளில் நடுவதற்கு, இந்த இரகக் கன்றுகள் அரசு துறைகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
இங்கே கூறப்பட்டுள்ள எல்லா இரகங்களும், மரத்துக்கு 8 கிலோவுக்கு மேல் காய்க்கும். இவ்வகையில், எக்டருக்கு 1-1.5 டன் மகசூல் கிடைக்கும். நடவு செய்து மூன்று ஆண்டுகளில் முந்திரி மரங்கள் காய்க்கத் தொடங்கினாலும், வளர்ப்பு முறையைப் பொறுத்து, 8-10 ஆண்டுகளில் முழு மகசூல் கிடைக்கும்.
முனைவர் க.செ.விஜய் செல்வராஜ்,
முனைவர் அ.பாரதி, முனைவர் ப.சிவக்குமார், முனைவர் அ.வேலாயுதம்,
வேளாண்மைக் கல்லூரி, ஈச்சங்கோட்டை, தஞ்சாவூர்.