ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் வாத்து வளர்ப்பு!

Pachaiboomi - Duck

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020

லகளவிலான முட்டை உற்பத்தியில் இந்தியா மூன்றாம் இடமும், கோழி இறைச்சி உற்பத்தியில் ஐந்தாம் இடமும், வாத்து வளர்ப்பில் ஆறாம் இடமும் வகிக்கிறது. மொத்த முட்டை உற்பத்தியில் 6-7% முட்டைகள் வாத்துகளின் பங்களிப்பாகும். சன்னியாசி, கீரி, ஆரணி, காக்கி கேம்பல், இந்தியன் ரன்னர் ஆகிய நாட்டின வாத்துகளுடன் மீன்களையும் சேர்த்து நெல் வயலில் வளர்க்கலாம். 

நெல் வயல், மீன் குளத்தில் வாத்து வளர்ப்பு

மீன் குளத்திலும் வாத்துகளை வளர்க்கலாம். ஒரு ஏக்கர் குளத்தில் 100 வாத்துகளை விடலாம். குளத்தில் மீன்கள் 10 செ.மீ. அளவில் இருக்க வேண்டும். குளத்தில் கிடைக்கும் புழு, பூச்சிகள் வாத்துகளின் புரதச்சத்தாக அமையும். வாத்துகளின் எச்சம் மீன்களுக்கு உணவாகும். நெல் வயலில் வாத்துகளை வளர்த்தால் களைகள் கட்டுப்படும். இதனால் பயிர் வளர்ச்சியும் மண்வளமும் கூடும்.

வாத்து வளர்ப்பின் பயன்கள்

கோழி முட்டையை விட வாத்து முட்டை 15-20 கிராம் கூடுதலாக இருக்கும். வாத்துகள் மூன்று ஆண்டுகள் வரை முட்டையிடும். குறைந்தளவில் தீவனம் இருந்தால் போதும். வாத்துகளைத் தாக்கும் நோய்கள் குறைவு. வாத்து வளர்ப்புச் செலவு குறைவு. வாத்து வளர்ப்பால் உரச்செலவு குறையும்.

தீவனம்

இறைச்சி வாத்துகள் ஏழு வாரத்தில் 2.2-2.5 கிலோ எடையை அடையும்.  ஒரு வாத்துக்கு முதல் 20 வாரங்களில் 12.5 கிலோ தீவனம் தேவைப்படும். ஒரு நாளைக்கு 120-170 கிராம் தீவனம் வீதம் ஆண்டுக்கு 60 கிலோ தீவனம் தேவைப்படும். மேய்ச்சல் முறையில் வளரும் வாத்துகள், அறுவடையான நிலங்களில் சிந்திக் கிடக்கும் தானியங்கள், புழு, பூச்சி, நத்தை போன்றவற்றை உணவாகக் கொள்ளும்.

வாத்துகள் அதிகளவில் முட்டைகளை இட, இவ்வகைத் தீவனம் போதாது. ஆகவே மேய்ச்சலுக்கு முன்னும் மேய்ச்சலுக்குப் பின்னும் நெல் போன்ற தானியங்கள் அல்லது வாத்துத் தீவனத்தைக் கொடுக்க வேண்டும். குச்சித் தீவனம் எனில், தினமும் 50-100 கிராம் கொடுக்கலாம். இதனால், வாத்துகள் தொடர்ந்து முட்டைகளை இடும்.

குடற்புழு நீக்கம்

தட்டைப்புழு, உருண்டைப் புழு, நாடாப்புழு ஆகியன வாத்துகளைத் தாக்கும். இதனால் முட்டை உற்பத்திக் குறையும். எனவே, வாத்துகள் அதிகளவில் முட்டைகளை இட, 2-3 மாதங்களுக்கு ஒருமுறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.

தாக்கும் நோய்கள்

வாத்துகளைக் காலரா, பிளேக் ஆகிய நோய்கள் தாக்கும். காலராவில் இருந்து காக்க, 3-4 வார வாத்துக் குஞ்சுகளுக்கும், பிளேக்கில் இருந்து காக்க, 8-12 வார வாத்துகளுக்கும் தடுப்பூசியைப் போட வேண்டும்..

முட்டை இடுதல்

அதிக முட்டைகளைப் பெற, காக்கி கேம்பல், இண்டியன் ரன்னர் வாத்துகளை வளர்க்கலாம். ஆறு மாதத்தில் முட்டையிடத் தொடங்கும். பெரும்பாலும் இரவிலும் அதிகாலையிலும் தான் முட்டையிடும். எனவே, இரவில் வாத்துப்பட்டியின் ஓரங்களில் வைக்கோலைப் போட்டு வைத்தால் முட்டை சேதமாதல் குறையும். நல்ல வாத்து ஓராண்டில் 200-300 முட்டைகளை இடும். முட்டையின் எடை 60-85 கிராம் இருக்கும்.

உரமாகும் எச்சம்

வளர்ந்த வாத்து தினமும் 150 கிராம் எச்சத்தை இடும். 200-250 வாத்துகள் மூலம் ஓராண்டில் 10,000-12,000 கிலோ எச்சம் கிடைக்கும். இது ஒரு எக்டருக்குப் போதும்.

மீன் குட்டை வாத்து வளர்ப்பில் நீர் செறிவடைவதால், மீன்கள் நன்கு வளரும். நெல் வயல் வாத்து வளர்ப்பில் களை குறைவதால், பயிர்கள் நன்கு வளரும். எனவே, ஒருங்கிணைந்த முறை வாத்து வளர்ப்பால், மகசூலும் மண்வளமும் கூடும்.


DR.A.RAJESH KUMAR

முனைவர் .இராஜேஸ்குமார்,

வேளாண்மை அறிவியல் நிலையம், நீடாமங்கலம், திருவாரூர்-614 404.

முனைவர் மு.பாலுசாமி மற்றும் முனைவர் சி.ஜெயந்தி, உழவியல் துறை,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயமுத்தூர்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!