செங்காந்தள் பூச்செடிகளைத் தாக்கும் பூச்சிகள்!

senganthan

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021

செங்காந்தள் மலருக்கு, காந்தள் மலர், கார்த்திகைப்பூ என்னும் பெயர்களும் உண்டு. ஆப்பிரிக்க, ஆசிய கண்டங்களில் காணப்படும் இந்த மலர் தமிழ்நாட்டின் மாநில மலராகும். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு உள்ளிட்ட சங்க இலக்கியங்களிலும் செங்காந்தள் மலர் இடம் பெற்றுள்ளது.

மருத்துவக் குணங்கள் நிறைந்த செங்காந்தள் மலர், தமிழகத்தில் மூலனூர், திருப்பூர், ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, மார்க்கம்பட்டி, ஜெயங்கொண்டம், வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் மட்டுமே பயிரிடப்படுகிறது.

இதன் தாவரவியல் பெயர் Gloriosa superba என்பதாகும். செங்காந்தள் மலர்ச் செடியின் அனைத்துப் பாகங்களிலும் கோல்ச்சிசின் (Colchicine) என்னும் அல்கலாய்டுகள் அதிகமாக உள்ளன. கார்த்திகை மாதத்தில் பூக்கும் இந்தப்பூ, வேலிகளில் மட்டுமின்றி, சாலையோரங்கள் மற்றும் காடுகளிலும் படர்ந்து வளர்ந்து கிடக்கும். குறிப்பாக, மலைகள் மற்றும் சரிவுகளில் காணப்படும் இம்மலர், அழகிய விரல்களைப் போலவும், சுடர்களைப் போலவும் காட்சியளிக்கும்.

காந்தள் மலர்ச் செடியின் வேர்ப்பகுதியைக் கண்வலிக் கிழங்கு, கலப்பைக் கிழங்கு, வெண்தோன்றிக் கிழங்கு, கார்த்திகைக் கிழங்கு என்று கூறுவர். இத்தகைய சிறப்புமிக்க, செங்காந்தள் மலர்ச் செடியைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்துப் பார்க்கலாம்.

லில்லிப் புழு: பாலிடெல்லா கிலோரியோசா

அறிகுறிகள்: இளம் புழுக்கள் இலைகளின் பச்சையத்தைச் சுரண்டித் தின்னும். நன்கு வளர்ந்த புழுக்கள், செடியின் கடினத் தண்டுப் பகுதியை மட்டும் விட்டுவிட்டு மற்ற பகுதிகளை அதிவேகமாக உண்ணும். சில நேரங்களில் நாற்றாங்காலில் இருக்கும் நாற்றுகளின் இலைகள் முழுவதையும் உண்டு சேதத்தை விளைவிக்கும். இப்படி, செடி முழுவதையும் உண்டு அழித்து விடும்.

பூச்சியின் விவரம்: வெள்ளை நிறத்தில் சிறியளவில் முட்டைகளை இடும். இவற்றில் இருந்து வெளிவரும் புழுக்களின் வயிறு கறுப்பாகவும், தலை அடர் பழுப்பாகவும் இருக்கும். கூட்டுப் புழுவிலிருந்து வெளிவரும் பூச்சிகளின் முன் இறக்கைகள், நீல நிறத்தில் வெள்ளைப் புள்ளிகளுடன் இருக்கும்.

கட்டுப்படுத்துதல்: 0.5% வேப்ப எண்ணெய்க் கரைசல் அல்லது 5% வேப்பங் கொட்டைக் கரைசலைத் தெளிக்க வேண்டும்.

சிவப்புக் கம்பளிப்புழு: அம்சாக்டா லாக்டீனியா

அறிகுறிகள்: இப்புழுக்கள் இலைகளை அதிவேகமாகத் தின்னும். இதனால் செடிகள், ஆடு மாடுகள் மேய்ந்ததைப் போலக் காணப்படும். பருவ மழைக்குப் பிறகு அந்துப் பூச்சிகள் வெளிவரும்.

கட்டுப்படுத்துதல்: முட்டைகள் மற்றும் புழுக்களைக் கைகளால் சேகரித்து எரிக்க வேண்டும். கோடையுழவு செய்ய வேண்டும். எக்டருக்கு 2.5 கிலோ கார்பரில் வீதம் எடுத்து 625 லிட்டர் நீரில் கரைத்துத் தெளிக்க வேண்டும். நச்சுப் பொறியை வைக்க வேண்டும்.

காவடிப் புழு: ப்ளுசியா சிக்னேட்டா

அறிகுறிகள்: இந்தப் புழுக்கள் இலைகளைத் தின்னும். அதனால், இலைகள் உதிரும்.

பூச்சியின் விவரம்: புழுவானது பச்சை நிறத்தில், உடல் முழுவதும் பழுப்புப் புள்ளிகளுடன் காணப்படும். பூச்சியானது நடுத்தரமாக இருக்கும். இதன் முன் இறக்கைகள் பழுப்பு நிறத்தில் வெண் புள்ளிகளுடன் காணப்படும்.

கட்டுப்படுத்துதல்: தாக்குண்ட பயிரின் பகுதிகளைச் சேகரித்து அழிக்க வேண்டும். புழுக்களைக் கைகளில் எடுத்து அழிக்க வேண்டும். 0.5% வேப்ப எண்ணெய்க் கரைசல் அல்லது 5% வேப்பங் கொட்டைக் கரைசலைத் தெளிக்க வேண்டும்.

புகையிலை வெட்டுப்புழு: ஸ்போடோப்டீரா லிட்யுரா

அறிகுறிகள்: புழுக்கள் இலைகளை வெட்டி உண்ணும். அதனால், இலைகள் உதிரும்.

கட்டுப்படுத்துதல்: முட்டைக் குவியல் மற்றும் புழுக்களைக் கைகளால் சேகரித்து அழிக்க வேண்டும். 0.5% வேப்ப எண்ணெய்க் கரைசல் அல்லது 5% வேப்பங் கொட்டைக் கரைசலைத் தெளிக்க வேண்டும்.


Muruga Sridevi

முனைவர் கா.முருக ஸ்ரீதேவி,

உதவிப் பேராசிரியை, தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மைக் கல்லூரி, பெரம்பலூர்-621 212.

ச.லேகா பிரியங்கா, ஆராய்ச்சி மாணவி, பூச்சியியல் துறை,

தமிழ்நாடு வேளாண்மைக் கல்லூரி, கோயம்பத்தூர்-641 003.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!