மறுதாம்புப் பயிருக்கு உரமாக அமையும் கரும்புத் தோகை!

sugarcane

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021

ணப் பயிராக விளங்கும் கரும்பின் அனைத்துப் பாகங்களும் பயனுள்ளவை. எனவே தான் இதனை நம் முன்னோர்கள் கற்பகத் தருவாகக் கருதினர்.  கரும்புத் தோகையை இரும்புத் தங்கம் என்றே குறிப்பிடலாம். கரும்புத் தோகை மட்கும் போது மண்வளத்தைக் கூட்டும் சிறந்த உரமாக அமையும். ஒரு ஏக்கரில் 10-12 டன் கரும்புத் தோகைக் கிடைக்கும்.

அறுவடைக்குப் பின் கரும்புக் கட்டைகளும் தோகைகளும் தீயிட்டுக் கொளுத்தப்படுகின்றன. இப்படிச் செய்வதால், அறுவடை எளிதாகவும், தோகை அகற்றும் செலவு குறைவதாகவும், பூச்சி, நோய் மற்றும் எலிகள் கட்டுப்படுவதாகவும் தவறான கருத்து இருக்கிறது. பெரும்பாலும் நடவுக் கரும்பை விட, மறுதாம்புப் பயிரில் அதிக மகசூல் பெற்று வந்த விவசாயிகள், காலப்போக்கில் மகசூல் குறைவதாகவும், அறுவடைச் செலவு கூடுவதாகவும் கருதி, மறுதாம்புக்கு விடும் பழக்கத்தைக் குறைக்கத் தொடங்கினர். இது, தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடிப் பரப்புக் குறைவதற்குக் காரணமாகும்.

அறுவடையின் போது கிடைக்கும் கரும்புத் தோகையில் 1.5% தழைச்சத்தும், 0.23% மணிச்சத்தும், 0.55% சாம்பல் சத்தும் இருப்பதாக உள்ளன. இவை மட்டுமின்றி, கரிமச்சத்தும் நுண் சத்தும் இருப்பதால், கரும்பு வளர்ச்சிக்கான நல்ல உரமாகப் பயன்படுகிறது. மேலும், நுண்ணுயிர்கள் பன்மடங்கு பெருகி வளரும் சூழலும் கரும்புத் தோகையால் உருவாகிறது.

கரிமவளத்தை மேம்படுத்துவதோடு, வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், மண் சார்ந்த உயிரி நொதிகளும் சுரக்கக் காரணமாகி மண்வளத்தைக் காக்கிறது. சிலிக்கா சத்து மிகுந்த கரும்புத் தோகை மண்ணில் மட்கும் போது, பேசில்லஸ் நுண்ணுயிரிகள், சிலிக்காவை மோனோசிலிசிக் அமிலம் அல்லது ஆர்த்தோசிலிசிக் அமிலமாக மாற்றி, பயிர்கள் உறிஞ்சும் வடிவத்தில் கொடுக்கின்றன.

இவை யாவும் மறுதாம்புப் பயிரில் கரும்பின் வலிமைக்கும், வளர்ச்சிக்கும் முக்கியக் காரணிகளாக அமைகின்றன. மேலும், கரும்புத் தோகையை மூடாக்காக இடுவதால் இளம் குருத்துப் புழுவின் தாக்குதலும் குறைகிறது, நீரைச் சேகரித்து வைத்துச் சிறிது சிறிதாகக் கரும்புக்குத் தருவதால், கோடைக்கால வறட்சியைத் தாங்கி வளர்கிறது. இத்துடன் தோகை மூடாக்கால் களை முளைப்பும் குறைகிறது.

மறுதாம்புக் கரும்பில் செய்ய வேண்டியவை 

அறுவடைக்குப் பிறகு, கூர்மையான கத்தியால், கரும்புக் கட்டைகளைத் தரை மட்டத்தில் அறுத்து விடும் வேலையை 8-10 நாட்களில் செய்ய  வேண்டும். பத்து நாட்களுக்குள், நன்றாகக் கிளைத்துள்ள தூர்களில் இருந்து பயிர்களைப் பிரித்து எடுத்து இடைவெளியை நிரப்ப வேண்டும். இப்படிச் செய்வதால் தேவையற்ற பழைய கட்டைகள் அகற்றப்படும்; புதிய கட்டைகள் எளிதாக முளைக்கும்.

கங்குகளை அறுத்து விட்டுப் புதிய வேர்கள் உருவாகச் செய்ய வேண்டும். ரட்டுன் மேனேஜர் இயந்திரம் அல்லது கூப்பர் உழவுக் கலப்பையால் பாத்திகளின் கடினத் தன்மையை உடைத்து விட்டால், பழைய வேர்கள் அறுபட்டுப் புதிய வேர்கள் உருவாகும். இதன் பிறகு தேவையான அளவில்  அடியுரத்தை இட வேண்டும்.

மறுதாம்புப் பயிருக்குத் தழைச்சத்து உரத்தை 25% அதிகமாக இட வேண்டும். முதல் மேலுரம் 25 ஆம் நாள், இரண்டாம் மேலுரம் 45-50 ஆம் நாள், மூன்றாம் மேலுரம் 75 ஆம் நாள் இட வேண்டும். பதினைந்தாம் நாளில் ஏக்கருக்கு 2.5 கிலோ வீதம் பெர்ரஸ் சல்பேட்டை இலைகளில் தெளிக்க வேண்டும்.

ஏக்கருக்கு, மட்கிய தொழுவுரம் 10 கிலோ, தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து முறையே 125, 30, 75 கிலோ தேவைப்படும். 50 ஆம் நாளில் ஒரு பக்கத்தில் பாதி மண்ணை அணைத்து விட வேண்டும், 90 நாளில் இரு பக்கமும் நன்கு மண்ணை அணைத்து விட வேண்டும்.

கரும்புத் தோகையை வயலிலேயே மட்க வைத்தல்

அறுவடை முடிந்ததும் தீயிட்டுக் கொளுத்தும் வழக்கத்தை முதலில் கைவிட வேண்டும். இறுகியிருக்கும் மண், வளமான, பொலபொலப்பான மண்ணாக மாற, கரும்பு அறுவடைக்குப் பிறகு கிடைக்கும் கட்டை மற்றும் தோகையைத் தீயிட்டுக் கொளுத்தாமல், மறுதாம்புப் பயிருக்கு இடையில் பரப்பி, நுண்ணுயிர்கள் மூலம் முறையாக மட்க வைக்க வேண்டும். இந்த மட்குரம் கரிம வளத்தைத் தருவதுடன், நீரைச் சேர்த்து வைத்து, சிறுகச் சிறுகப் பயிருக்குக் கொடுக்கும் வேலையையும் செய்யும்.

மட்காத தோகை அகண்ட கார்பன்:நைட்ரஜன் விகிதம் கொண்டதாக, அதாவது, 100:1 என இருக்கும். இதைக் குறுக்கி 16:1 என்னும் விகிதத்தில் கொண்டு வந்தால் மட்டுமே பயிருக்கு உரமாக அமையும். இல்லையேல் கடின மண்ணாக மாறி, சத்தை உறிஞ்சும் தன்மையைக் குறைக்கும். இதனால் மண்வளம் குன்றும். எனவே, தோகையை மட்க வைக்க வேண்டும்.

இதற்கு, தோகையை எரிக்காமல் இயந்திரம் மூலம் நொறுக்கிப் பயிர்களுக்கு இடையில் நன்றாகப் பரப்பி, பத்து நாட்களுக்குப் பிறகு, ரோடோ இன் கார்ப்பரேட்டர் இயந்திரம் மூலம் மண்ணோடு மண்ணாகக் கலந்து விட வேண்டும். தோகையை நிலத்திலேயே மட்க வைத்துப் பாசனம் செய்யும் போது, அது உரமாக மாறி மண்வளத்தைப் பெருக்கும்.

தோகையைப் பரப்பிப் பாசனம் செய்ய வேண்டும். இதன் மேல் ஏக்கருக்கு பிரஸ்மட் என்னும் கரும்பாலைக் கழிவை 1.5-2.0 டன் இட வேண்டும். இதன் மேல் 100 கிலோ சாணத்தை நீரில் கலந்து தெளிக்க வேண்டும். இதனால் நுண்ணுயிர்கள் பெருமளவில் பல்கிப் பெருகும்.

மேலும் மட்கும் தன்மையை அதிகரிக்க, புளுரோட்டஸ், டிரைக்கோடெர்மா, சூடோமோனாஸ், அசட்டோபேக்டர், அஸ்பர்ஜில்லஸ் ஆகியவற்றை, ஏக்கருக்கு 8-10 கிலோ வீதம் எடுத்துத் தோகைகளில் பரப்பி விட வேண்டும்.

மேலும், கரிமம்:தழைச்சத்து விகிதம் குறுக, 30 கிலோ தழைச்சத்தை யூரியா வடிவில் கொடுக்கலாம். இதைச் செய்து விட்டு மண்ணில் ஈரம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

இப்படி, மறுதாம்புப் பயிரில் தோகையைப் பயன்படுத்தும் போது, மண்வளம் அதிகரிப்பதால் நினைத்த விளைச்சலைப் பெறலாம். எருவிட்ட பயிர் எகிறி விளையும் என்பது பழமொழி. நுண்ணுயிர்கள் மூலம் மட்கிய கரும்புத் தோகை, எருவைப் போலப் பயன்பட்டு அதிக விளைச்சலைக் கொடுக்கும்.


Pachai boomi DR GAYATHIRI

முனைவர் கு.காயத்ரி,

முனைவர் மு.சண்முகநாதன், கரும்பு ஆராய்ச்சி நிலையம், கடலூர்-607001.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading