வேப்ப மரம்!

வேப்ப மரம்!

செய்தி வெளியான இதழ்: 2019 நவம்பர்.

வேப்ப மரத்தின் அறிவியல் பெயர் அசாடிராக்டா இன்டிகா. இது இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட, சமய முக்கியம் வாய்ந்த மரம். பச்சைப் பசேலென்று இருக்கும் இம்மரம், மருந்துத் தயாரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

மஞ்சள் கலந்த பச்சையாக இருக்கும் வேப்பம் பழத்தைப் விரும்பிச் சாப்பிடும் பறவைகள், விதையை எச்சமாக வெளியேற்றி விடும். பறவைகள் மூலமே இம்மரம் பெருவாரியாக இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

வேப்ப மரம் – பண்புகள்

எல்லா மண்ணிலும் வேப்ப மரம் வளரும். கரிசல் மண்ணில் நன்றாக வளரும். 42.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் வரையில் தாங்கி வளரும் இம்மரம், 450-1100 மி.மீ. மழை பெய்யும் பகுதிகளில், கடல் மட்டத்தில் இருந்து 1000 மீ. உயரத்தில் உள்ள பகுதிகளில், மலைப்பாங்கான நிலப் பகுதிகளில் நன்கு வளரும்.

ஆனால், அதிக ஒளி விரும்பியான இம்மரம், அதிகப் பனியைத் தாங்குவதில்லை. வேர்கள் ஆழமாகச் செல்வதால், எத்தகைய வறட்சியிலும் வேப்ப மரம் பசுமையாக இருக்கும்.

வேப்ப மரம் – இனப்பெருக்கம்

விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. முறையாக வளர்ப்பதற்கு, கன்றுகளை உற்பத்தி செய்து நடலாம். பறவைகள் வேப்பம் பழங்களைச் சாப்பிட்டு விட்டு, கொட்டைகளை ஆங்காங்கே எச்சமாக இடுவதன் மூலம், பொது வெளிகளில் இம்மரங்கள் ஏராளமாக வளர்கின்றன.

ஒருமுறை வெட்டி விட்டால் மறுதாம்பாகவும் இம்மரம் செழித்து வளரும். கால்நடைகள், குறிப்பாக வெள்ளாடுகள் வேப்பந் தழைகளை விரும்பி உண்ணும். அதனால் வேப்பங் கன்றுகள் மரங்களாக வளரும் வரை, அந்த ஆடுகளிடம் இருந்து காப்பது அவசியம்.

விதைச் சேகரிப்பு

இம்மரம், ஜூன் ஆகஸ்ட் காலத்தில் காய்க்கும். அப்போது பழங்களைச் சேகரித்துத் தோலை நீக்கி, விதைகளைக் காய வைத்துச் சேமிக்க வேண்டும். ஒரு கிலோ எடையில் சுமார் 5,000 விதைகள் வரை இருக்கும்.

கன்று உற்பத்தி

20×10 செ.மீ. அளவுள்ள நெகிழிப் பைகளில், மண் மற்றும் தொழுவுரத்தைக் கலந்து நிரப்பி, அவற்றில் விதைகளை ஊன்றலாம். ஒரு வாரத்தில் விதைகள் முளைக்கத் தொடங்கி விடும்.

நடவுமுறை

ஓராண்டுக் கன்றுகளை நடவு செய்யலாம். மழைக்காலம் தொடங்கும் ஜூலைக்கு மேல் நடலாம். இதற்கு, 10 மீட்டர் இடைவெளியில், ஒன்றரை அடி நீள அகல ஆழத்தில் குழிகளை எடுத்து, ஒருவாரம் ஆறப்போட வேண்டும்.

பிறகு, இந்தக் குழிகளில் குழியின் மேல் மண்ணுடன், 5 கிலோ தொழுவுரம், 50 கிராம் டிஏபியைக் கலந்து இட்டு, கன்றுகளை நட்டு, பாசனம் செய்ய வேண்டும். நேரடியாக விதைகளை நட்டும் இனப்பெருக்கம் செய்யலாம்.

பராமரிப்பு

வறட்சியில் பத்து நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்ய வேண்டும். கன்றுகள் நன்கு மரங்களாகி விட்டால் பாசனம் தேவையில்லை. நிலத்தில் களைகள் இருக்கக் கூடாது. அவ்வப்போது உழுவது, வேர் வளர்ச்சிக்கு உதவும்.

இயற்கையாக முளைத்த மரங்களின் இடைவெளியைச் சரியாகப் பராமரிக்க வேண்டும். நெருக்கமாக இருக்கும் மரங்களை அகற்றி விடலாம். வேப்ப மரங்களுக்கு இடையில், காய்கறிகள், பயறு வகைகள், நிலக்கடலை போன்றவற்றை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.

பயன்கள்

வேப்ப மரத்தில் அனைத்து மரவகைப் பொருள்களையும் செய்யலாம். 12-30 சதம் புரதமுள்ள இதன் தழை கால்நடைகளுக்குத் தீவனமாகிறது. விதையில் 20-30 சதம் எண்ணெய்ச் சத்து உள்ளது. இந்த எண்ணெய் மருத்துவத்திலும், பயிர்ப் பாதுகாப்பிலும் பயன்படுகிறது. புண்ணாக்குச் சிறந்த உரமாகிறது.

இன்றைய நிலையில், ஒரு ஏக்கரில் முறையாக வேப்ப மரங்களை வளர்த்தால், ஒரு விவசாயக் குடும்பம் நலமாக வாழலாம்.


பசுமை

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!