விதைக் கரும்பு உற்பத்தி!

விதைக் கரும்பு Sugarcane iStock

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021

வித்தைப் பொறுத்து விளைச்சல் என்பதும், விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதும் சான்றோர் மொழிகள். இவற்றின் மூலம், விவசாயத்தில் அதிக மகசூலுக்கு அடிப்படையாக அமைவது விதை தான் என்பதை அறிய முடியும். கரும்பு விவசாயத்தில் விதை என்பது, விதைக் கரணைகளைக் குறிக்கும். நல்ல விதைக் கரணைகளை நட்டு, சீரிய முறையில் சிறந்த தொழில் நுட்பங்களைக் கடைப்பிடித்தால் 10-15% மகசூல் கூடுதலாகக் கிடைக்கும்.

விதை முளைக்கும் திறனே ஒரு பயிரின் விளைச்சல் திறனுக்கு ஆதாரமாக விளங்குகிறது. கரும்பு நன்றாக முளைக்கத் தேவையான சத்து குளுக்கோஸ். இது 6-8 மாத இளங் கரும்பில் அதிகமாக இருக்கும். மேலும், வேர்த் துளைகள் இளமையாக இருப்பதால் நிலத்திலிருந்து நீரைக் கிரகித்து, பருக்கள் பழுதில்லாமல் விரைவில் முளைக்க ஏதுவாகும்.

மேலும், கரும்பு இரகங்கள், அவற்றின் மரபு, அவற்றிலுள்ள சத்துகளின் அளவு, கரணைகளில் பருக்கள் இருக்குமிடம், கரணை நீளம், கரணைகளை வெட்டியதில் இருந்து நடவு வரை உள்ள காலம், கரணையில் உள்ள இலையுறை, வெப்பநிலை, விதை நேர்த்தி, மண்ணின் ஈரப்பதம் மற்றும் காற்றோட்டம், கரணை நடப்பட்டுள்ள ஆழம், இரசாயன நீர்மக் கரைசலில் ஊற வைத்தல், பூச்சி, பூசணக்கொல்லி மற்றும் யூரியா, பொட்டாசியக் கரைசலில் விதை நேர்த்தி செய்தல் ஆகியன, கரும்பின் முளைப்புத் திறனைக் கூட்டுவதில் பெரும்பங்கு வகிக்கின்றன.

கரும்பில் அதிகளவில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும், செவ்வழுகல், கரிப்பூட்டை, கட்டைப்பயிர், குட்டை நோய் மற்றும் புல்தண்டு நோய் ஆகியன, பெரும்பாலும் விதைக்கரணை மூலமே பரவுகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த, நோயற்ற விதைக் கரணைகளை நட வேண்டும்.

தரமான கரணைகளுக்கான காரணிகள்

விதைக் கரணைகளை எடுக்கவுள்ள கரும்பின் வயது 6-8 மாதங்களுக்குள் இருக்க வேண்டும். பருக்கள் முளைக்கத் தேவையான ஈரப்பதம், அதாவது 65% ஈரப்பதம் விதைக் கரணைகளில் இருக்க வேண்டும். கரணைகளில் உள்ள பருக்கள் சிதையாமல் இருக்க வேண்டும். அதாவது, இடைக்கணுவில் பழுதான பருக்களின் எண்ணிக்கை, மொத்த பருக்களின் எண்ணிக்கையில் 5%க்கு மிகாமல் இருக்க வேண்டும். பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் இருக்கக் கூடாது.

இவ்வளவு முக்கியமான, தரமான கரணைகள் விவசாயிகளுக்குத் தொடர்ந்து கிடைக்க, மூன்றடுக்கு விதை நாற்றங்கால் உற்பத்தித் திட்டம் கையாளப்படுகிறது. இதில், முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை என மூன்று நிலைகளில் விதைக் கரணைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. எனவே, பூச்சித் தாக்குதலற்ற, விதைக்கரணை மூலம் பரவும் நோய்களற்ற, புறத்தூய்மை மற்றும் இரகத்தூய்மை மிக்க கரணைகள் விவசாயிகளுக்குக் கிடைக்கும்.

முதல் நிலை: வல்லுநர் விதைக்கரணை உற்பத்தி

இந்த விதைக் கரணைகள், கரும்பு ஆராய்ச்சி நிலையங்களில் விஞ்ஞானிகளின் நேரடிப் பார்வையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. முதல் நிலை கரணை உற்பத்திக்குத் தேவையான விதைக் கரணைகளை, பூச்சி, நோய்கள் தாக்காத, பிற இரகங்களின் கலப்பு இல்லாத மற்றும் முன்பே பரு முளைக்காத, வீரியமான கரு விதையில் இருந்து எடுக்க வேண்டும்.

முதல் நிலை விதைக்கரணை உற்பத்தியில் விதைக்கரணை மூலம் பரவும் நோய்க்காரணிகளை அழிக்கும் வகையில் வெப்பச் சிகிச்சை செய்யப்படுகிறது. இதற்கான கருவியில் உள்ள உலோகக் கூடைகளில் விதைக் கரணைகள் அடுக்கி மூடப்படும். பிறகு, இந்தக் கருவிக்குள் காற்றுக் கலந்த நீராவி, குழாய்கள் மூலம் செலுத்தப்படும். உட்புற வெப்பம் வெப்பமானி மூலம் அளக்கப்படும்.

ஒரு மணி நேரத்துக்கு 50 டிகிரி செல்சியஸ் வெப்பம் கரணைகளில் செலுத்தப்படும். அடுத்து, 200 கிராம் பவிஸ்டின், ஒரு கிலோ நீர்த்த சுண்ணாம்புக் கரைசல், ஒரு கிலோ யூரியா, 200 மில்லி பாலத்தியான் கலந்த 100 லிட்டர் நீரில், ஒரு ஏக்கருக்குத் தேவையான கரணைகள் 5-10 நிமிடங்கள் ஊற வைத்த பிறகு நடப்படும்.

இந்தக் கரணைகளை, கரும்பு சாகுபடி செய்யப்படாத, வேறு பயிர் இருந்த வளமான, வடிகால் வசதியுள்ள வளமான மண்ணில் நட வேண்டும். நட்டதில் இருந்து 25-30 நாட்களில் அதே இரகத்தைச் சேர்ந்த கரணைகளை மட்டுமே வைத்துப் போக்கிடங்களை நிரப்ப வேண்டும்.

அதைப்போல, 5-6 மாதங்களில், அதாவது, கரும்பின் நிறம் நன்கு தெரியத் தொடங்கியதும், நிறம் மற்றும் பிற முக்கிய வெளிப்புற அடையாளங்களைக் கொண்டு வேறு இரகக் கரும்புகளைக் கண்டறிந்து அறவே நீக்க வேண்டும். அதைப்போல, நோயுற்ற கரும்புகளையும் தூருடன் வெட்டியெடுத்து எரித்துவிட வேண்டும். இதனால், இரகத்தூய்மையைக் காக்கலாம்.

இரண்டாம் நிலை: ஆதார விதைக்கரணை உற்பத்தி

கரும்பு ஆராய்ச்சி நிலையங்களில் இருந்து 6-8 மாதங்களில் வெட்டி எடுக்கப்படும் முதல் நிலை விதைக் கரணைகள் தான், இரண்டாம் நிலை விதைக்கரணை உற்பத்திக்காக, சர்க்கரை ஆலைகளைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகளின் நிலங்களில் நடப்படும். முதல் நிலை விதைக்கரணை உற்பத்தியில் கடைப்பிடித்த அனைத்து உத்திகளையும், இரண்டாம் நிலையிலும் கடைப்பிடிக்க வேண்டும். கலவனை அகற்ற வேண்டும். பூச்சி, நோய்கள் தாக்கிய கரும்புகளை வெட்டியெடுத்து எரிக்க வேண்டும். இரண்டாம் நிலை விதைக் கரணைகளில் வெப்பச் சிகிச்சை செய்வதில்லை.

மூன்றாம் நிலை: சான்று விதைக்கரணை உற்பத்தி

இரண்டாம் நிலை விதைக்கரணை உற்பத்தி நிலங்களில் இருந்து பெறப்படும் கரணைகள் தான், மூன்றாம் நிலை விதைக்கரணை உற்பத்திக்காக, சர்க்கரை ஆலை விவசாயிகளின் நிலங்களில் நடப்படும். இங்கேயும் விதைக் கரணைகளை வெப்பச் சிகிச்சை செய்வதில்லை. ஆனால், பூசணக்கொல்லி மூலம் விதைநேர்த்தி செய்யப்படும்.

இங்கேயும், இரண்டாம் நிலை விதைக்கரணை உற்பத்தியில் பின்பற்றிய  அத்தனை உத்திகளையும் கடைப்பிடிக்க வேண்டும். இங்கு உற்பத்தியாகும் கரும்புகள் தான், ஆலை அரவைக் கரும்பு விவசாயிகள் நடுவதற்குத் தரப்படுகின்றன.

இப்படி, மூன்று நிலைகளில் உற்பத்தியாகும் கரணைகள், தரமாக, வீரியமாக, இரகத்தூய்மை மிக்கதாக, பூச்சி, நோய்த் தாக்குதல் இல்லாமல் இருக்கும். எனவே, இவற்றை நடும்போது, அந்தந்த இரகத்தின் சக்திக்கு ஏற்ப, மகசூலும் சர்க்கரையும் கிடைக்கும்.

தரமான விதைக்கரணையின் குணங்கள்

சீரான பருமனும், அதிக முளைப்புத் திறனும் கொண்டிருக்கும். விதையின் புறத்தூய்மை மற்றும் அகத்தூய்மை அதிகமாக இருக்கும். பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் இருக்காது. ஈரப்பதம் கூடவோ குறைவாகவோ இல்லாமல் போதுமான அளவில் இருக்கும். அனைத்துக் கரணைகளும் ஒரே நேரத்தில் சீராக முளைத்து, நீரையும் உரத்தையும் எடுத்துச் சிறந்த மகசூலைத் தரும்.

தரம் குறைந்த, கட்டைக் கரும்பை நட்டால் முளைப்புத்திறன் பாதிக்கும். பயிர் எண்ணிக்கை குறையும். இனத்தூய்மை இல்லாமல் இருந்தால் சரியான காலத்தில் விளைந்து அறுவடைக்கு வராது. விளைபொருளின் தரமும் குறைவதால், மகசூலும் சர்க்கரைக் கட்டும் குறையும்.

முதிராத கரும்புகள் தான் விதைக் கரணைக்கு ஏற்றவை. ஏனெனில், இவற்றில் தான் குளுக்கோசும், நீரும், தழைச்சத்தும் அதிகமாக இருக்கும். பருக்கள் நன்கு முளைக்க, தழைச்சத்தும் நீர்ச்சத்தும் மிக முக்கியம். மேலும், முற்றிய கரும்புகளில் பருக்களை மூடியுள்ள செதில்கள் காய்ந்து இருக்கும். எனவே, பருக்கள் முளைப்பதில் தாமதமாகும்.

கரணைத் தேர்வில் கவனிக்க வேண்டியவை

6-8 மாதக் கரும்புகளைத் தான் கரணைக்குப் பயன்படுத்த வேண்டும். பூச்சி, நோய்த் தாக்குதல் இருக்கக் கூடாது. பூச்சி, நோய்கள் தாக்கிய தூர்கள் இருந்தால், அவற்றில் இருந்து 10-20 மீட்டர் தள்ளியுள்ள கரும்புகளைத் தான் வெட்டியெடுக்க வேண்டும். இடைக்கணுவின் மத்தியில் வெட்டிக் கரணைகளை எடுக்க வேண்டும். இதனால், பருக்கள் பாதிக்கப்படுவதில்லை.

கரணைகளின் வெட்டு முனைகள் செங்குத்தாக அமைய வேண்டும். வெட்டு முனையில் விரிசல் இருக்கக் கூடாது. ஏனெனில், பருக்கள் சேதமடையும். சரியான முறையில் வெப்பச் சிகிச்சை செய்த முதல் நிலை விதைக் கரணைகளைத் தான் நட வேண்டும். இவற்றை, பூசணக்கொல்லி, பூச்சிக்கொல்லி மற்றும் யூரியா மூலம் விதைநேர்த்தி செய்து தான் நட வேண்டும்.

டிசம்பர் ஜனவரியில் வரும் முன் பட்டத்தில் நடும்போது பனியும் குளிரும் இருப்பதால், பருக்களின் மேல் லேசாக மண் மூடியிருக்க நட வேண்டும். ஆனால், ஏப்ரலில் வரும் பின்பட்டத்தில் நடும்போது வெப்பமும், வறட்சியும் நிலவுவதால், பருக்களின் மேல் 2 செ.மீ. கனத்தில் மண் மூடியிருக்க நட வேண்டும். மேலும், பருக்கள் பக்கவாட்டில் அமையும்படி நட வேண்டும்.

நடவு செய்ததில் இருந்து 30 நாட்களில் அதே இரகக் கரணைகள் மூலம் அல்லது நாற்றுகள் மூலம் வெற்றிடங்களை நிரப்ப வேண்டும். இட வேண்டிய மணிச்சத்து முழுவதையும் அடியுரமாக இட வேண்டும். தழை மற்றும் சாம்பல் சத்தை மூன்று பாகங்களாகப் பிரித்து, கரும்பை நட்டதில் இருந்து 30, 60, 90 நாட்களில் இட வேண்டும்.

தழைச்சத்து இழப்பு ஏற்படாமல் இருக்க, வேப்பம் புண்ணாக்கைக் கலந்து இடுவது சிறந்தது. கடைசி உரத்தைத் தூரிலிருந்து 10 செ.மீ. தள்ளி, குழியுரமாக இட்டு, நன்றாக மண்ணை அணைத்து விட வேண்டும். விதைக்கரணைக் கரும்பில் எக்காரணம் கொண்டும் தோகைகளை உரிக்கக் கூடாது. உரித்தால் முளைப்புத்திறன் குறையும். விதைக்கரணைக் கரும்புள்ள நிலம், பிற கரும்பு நிலங்களில் இருந்து குறைந்தது 5 மீட்டர் தூரம் தள்ளியிருக்க வேண்டும். இதனால், பிற இரகக் கரணைகள் கலப்பதைத் தவிர்க்கலாம்.

நட்டதில் இருந்து 45-60 நாட்களில், 120-130 நாட்களில் மற்றும் கரணை வெட்டுவதற்கு 15 நாட்களுக்கு முன், கலவன்கள் அல்லது பூச்சி, நோய்கள் தாக்கிய தூர்கள் இருந்தால், அவற்றைத் தூருடன் அகற்றி எரிக்க வேண்டும். பாசனக்குறை இருக்கக் கூடாது. ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளைச் சரியாகக் கடைப்பிடித்து, பூச்சி, நோய்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.

இறுதியாக, கரணைக்காக வெட்டும் கரும்புகளை, தோகைகளை உரிக்காமல் முழுக் கரும்பாக நடவு நிலத்துக்குக் கொண்டு சென்று, அங்கே தான் தோகைகளை உரித்து, கரணைகளாக நறுக்க வேண்டும். இதுவரை கூரியுள்ள உத்திகளைச் சரியாகக் கடைப்பிடித்தால், தரமான விதைக் கரணைகளையும் அவற்றின் மூலம் அதிக மகசூலையும் பெறலாம்.


விதைக் கரும்பு Shanmuganathan e1614655247236

முனைவர் மு.சண்முகநாதன்,

முனைவர் வே.இரவிச்சந்திரன், கரும்பு ஆராய்ச்சி நிலையம், கடலூர்-607001.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!